இந்தியா @ 75: இந்திய அரசியலில் பெண்கள்

By செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் பெண்கள் வாக்குரிமைக்காக போராடிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த மதராஸ் மாகாணத்தில் 1921 ஆம் ஆண்டே பெண்களும் ஓட்டளிக்கலாம் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பெண்களின் சொத்துகளின் அடிப்படையில்தான் அந்த வாக்குரிமை வழங்கப்பட்டது.

அதன் பின்னர் இங்கிலாந்தில் 1928-ம் ஆண்டுதான் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து பிரான்ஸும், இத்தாலியும் பெண்களுக்கான ஓட்டுரிமையை அளித்தனர்.

ஆனால், சுதந்திர இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் தேர்தலிலே இந்திய பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதற்கு முக்கியக் காரணம், நமது நாட்டின் மக்கள் தொகை. சுதந்திர இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அப்போதைய இந்திய மக்கள் தொகை 36 கோடியாக இருந்தது. 1000 ஆண்களுக்கு 946 பெண்கள் வீதம் இருந்தனர். இதன்பொருட்டு பெண்களுக்கு முதல் தேர்தலிலேயே வாக்குரிமையை இந்தியா அளித்தது.

உலகளவில் பெண்கள் மூன்று கட்டங்களில் தங்களை அரசியலில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். ஒன்று தேர்தலில் வாக்களிப்பது. இதன் மூலம் நாட்டின் குடிமகளாக ஆளும் அரசை தேர்வு செய்யும் வாய்ப்பு பெண்களுக்கு கிடைக்கிறது. இதுவே பெண்களின் அரசியலுக்கான முதல் படியும் கூட. இரண்டாவது தேர்தலில் போட்டியிடுவது. தேர்தலில் போட்டியிட்டு தங்களை மக்கள் பிரதிநிதியாக முன்னிறுத்தி, வெற்றி பெறுவதன் மூலம் அரசியலில் தங்களுக்கான இடத்தை பெண்கள் நிலைநிறுத்தி கொள்கிறார்கள்.

மூன்றாவது ,அரசியல் அதிகாரத்தில் இடம். தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்தில் இடம்பெறுவதன் மூலம் தீர்மானங்களில் முடிவெடுக்கும் இடத்தில் பெண்கள் அமர்கிறார்கள்.

இந்த படிகளிலிருந்துதான், நாம் கடந்த 75 ஆண்டுகளில் இந்திய அரசியலில் பெண்களின் பாதையை பார்க்க இருக்கிறோம். அதன்படி, சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஆளுநராக இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அறியப்பட்ட சரோஜினி நாயுடு அறிவிக்கப்பட்டார். இந்தியாவில் நீண்ட காலம் ஆளுநராக பத்மஜா நாயுடு இருந்துள்ளார். சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை சுமார் 24 பெண்கள் மாநில ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோல் சுதந்திர இந்தியாவின் முதல் பெண் முதல்வராக காங்கிரஸை சேர்ந்த சுசேதா கிருபளானி உத்தரப் பிரதேச முதல்வராக 1963 ஆம் ஆண்டு பதவி ஏற்றார். சுதந்திர இந்தியாவில் 16 பெண்கள் இதுவரை மாநில முதல்வராக பதவியேற்றுள்ளார்கள். இதில் டெல்லியில் முதல்வராக இருந்த காங்கிரஸின் ஷீலா திக்‌ஷித் இந்தியாவில் தொடர்ச்சியாக நீண்ட ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்த பெண். உத்தரப் பிரதேசத்தின் மாயாவதி, தமிழகத்தின் ஜெயலலிதா, மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி போன்றோர் அதிகமுறை பொதுத் தேர்தல்கலில் வெற்றி பெற்று முதல்வரானவர்கள்.

அடுத்தது குடியரசுத் தலைவர். நாடு விடுதலை அடைந்து இதுவரை 15 குடியரசுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதில் 2 பெண்கள் குடியரசுத் தலைவர்களாக தேந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அதில் 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதிபா பாட்டீல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு தற்போது 2022-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இந்தியாவின் மிக அதிகாரமிக்க பதவியாக கருதப்படும் பிரதமர் பதவியில் 75 ஆண்டுகளில் இதுவரை ஒரே ஒரு பெண் மட்டுமே அங்கம் வகித்திருந்திருக்கிறார். அவர், இந்தியாவின் ஐயன் லேடி என அழைக்கப்படும் இந்திரா காந்தி. இந்திரா காந்திக்கு பிறகு எந்த ஒரு பெண்ணுக்கும் பிரதமர் பதவியில் அமரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கான வாய்ப்பு வருங்காலங்களில் அமையும் என எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு கடந்த 75 வருடங்களில் இந்திய பெண்களின் அரசியல் பயணம் அமைந்திருக்கிறது. அரசியல் அதிகாரமிக்க இடங்களில் பெண்களை அமர்த்துவதற்கு கடந்த ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் முற்போக்கான முயற்சிகளை நாம் காண முடிகிறது. உதாரணத்துக்கு ஓடிசா, மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை மாநில கட்சிகள் கொடுத்து வருவது நிச்சயம் ஆரோக்கியமான பாதைக்கு நம்மை அழைத்து செல்லும்.

வீடியோவை இங்கு காணலாம்:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE