கனவுகளின் சிற்பி!

By வெ.சந்திரமோகன்

எளிய குடும்பத்தில் பிறந்து பல உயரங்களைத் தொட்ட சாதனையாளர் கலாம்

இளம் வயதிலேயே லட்சியங்களை வகுத்துக்கொண்டதன் மூலம் வாழ்வின் திசையை வெற்றிப்படிகளை நோக்கித் திருத்தியமைத்துக்கொண்டவர் அப்துல் கலாம். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டப்படிப்பை முடித்த பின்னர், வானூர்தி பொறியியல் படிக்க வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக இறங்கினார். எம்.ஐ.டி-யில் வானூர்தி பொறியியல் படிப்பை முடித்தவுடன் டிஆர்டிஓவில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணிபுரிந்த அப்துல் கலாமுக்கு ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் எஸ்டாப்ளிஷ் மெண்ட்டிடமிருந்து அழைப்பு வந்தது. அதில் பணிபுரிந்துகொண்டிருந்த சமயத்தில், இஸ்ரோவில் பணிபுரியும் வாய்ப்பும் அவரைத் தேடிவந்தது. இம்முறை அவருக்கு அழைப்பு விடுத்தது இந்திய விண்வெளித் துறையின் தந்தை என்று அழைக்கப்படும் விக்ரம் சாராபாய். நம்ப முடியாத ஆச்சரியத்துடன் அவரைச் சந்தித்த அப்துல் கலாம், அவரைத் தனது வழிகாட்டிகளில் ஒருவராகவே கருதத் தொடங்கினார்.

இஸ்ரோ பணிகளில் ஒன்றாக கேரளத்தின் தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த அப்துல் கலாம், அமெரிக்க விண்வெளித் துறையான நாஸாவில் ஆறு மாத காலப் பயிற்சிக் காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பாக நாஸாவில் கற்றுக்கொண்ட பயிற்சியைத் தவிர, வெளிநாடுகளில் அவர் வேறு எந்த பயிற்சியையும் எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அவரது திறமை, உழைப்பு மற்றும் ஆர்வத்தால் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன.

இந்தியாவின் பெருமை

அமெரிக்கர்களின் கடும் உழைப்பும் அறிவியல் ஆர்வமும் விண்வெளித் துறையில் சாதனைகளுக்கு வழிவகுத்தது குறித்த வியப்பு அப்துல் கலாமுக்கு இருந்தது. அதேசமயம், ராக்கெட் தொழில்நுட்பத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவும் ஈடுபட்டிருந்ததைக் காட்டும் ஓவியம் நாஸா ஆய்வுக்கூடம் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அப்துல் கலாம் ஆச்சரியத்தில் உறைந்து நின்றார். பிரிட்டிஷ் படைக ளுக்கு எதிராகப் போரிட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளின் ஓவியம் அது. விண்வெளித் துறையில் அமெரிக்காவுக்கு இணையாக இந்தியாவும் வெற்றிகளைக் குவிக்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்குள் நிலைபெற்றதும் அப்போதுதான்.

இந்தியா திரும்பிய அப்துல் கலாமுக்கு மற்றொரு மகத்தான வாய்ப்பை வழங்கினார் விக்ரம் சாராபாய். எஸ்.எல்.வி. ராக்கெட் திட்டத்தின் தலைவராக அப்துல் கலாமை நியமித்தார். 1971-ல் விக்ரம் சாராபாய் மறைவுக்குப் பிறகு, இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்ற சதீஷ் தாவனும் அப்துல் கலாமின் திறமை மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார். அப்துல் கலாமை, எஸ்.எல்.வி. ராக்கெட் திட்டத்தின் பொறுப்பாளராகத் தேர்ந்தெடுத்தார் சதீஷ் தாவன். கடும் சவால் நிறைந்த பணியில் ஆரம்பக் கட்ட தோல்விக்குப் பிறகு, உலக அரங்கில் விண்வெளித் துறையில் இந்தியாவைத் தலைநிமிரச் செய்தார் அப்துல் கலாம்.

அக்காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட அனுபவங்களை அவர் பதிவுசெய்திருக்கிறார். 1979-ல் எஸ்.எல்.வி.3. ராக்கெட்டை ஏவும் பணி ஹரிகோட்டா ஏவுதளத்தில் நடந்து கொண்டிருந்தபோது, கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையும் பொருட்படுத்தாமல், ராக் கெட்டைச் செலுத்துமாறு உத்தரவிட்ட தாகவும், ஆனால் அந்த ராக்கெட் புவிவட்டப் பாதையில் நிலைகொள் வதற்குப் பதிலாக வங்காள விரிகுடாவில் விழுந்துவிட்டதைப் பிற்பாடு பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார் அப்துல் கலாம்.

“தவறு என்னுடையதாக இருந்தாலும் அணியின் தோல்வியை இஸ்ரோ தலைவராக இருந்த சதீஷ் தாவன் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டார். விமர்சனங்களையும் அவரே எதிர் கொண்டார். ஆனால், 1980 ஜூலை 18-ல் ரோஹிணி செயற்கைக் கோள் எஸ்.எல்.வி.3 ராக்கெட் மூலம் வெற்றிகர மாக விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்திக்க என்னை அனுப்பினார் சதீஷ் தாவன்” என்று அப்துல் கலாம் நினைவுகூர்ந்தார்.

பிற்காலத்தில், மாபெரும் கூட்டு முயற்சியும் அர்ப்பணிப்பும் தேவைப்படும் அறிவியல் உலகில் சாதிக்க நினைப் பவர்களுக்கு உதவும் பணியை முனைப் புடன் செய்தார் அப்துல் கலாம். 2002-ல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு, அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபடுபவர் களைக் கவுரவிக்கத் தொடங்கினார். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும், அறிவியல் துறையின் புதுமையாளர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை கவுரவித்து வருவது குறிப்பிடத் தக்கது.

லேசான மனது!

அமெரிக்க செயற்கைக்கோள்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தியது, அக்னி, பிரித்வி ஏவுகணை களை உருவாக்கியதன் மூலம் இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரித்தது என்று பல்வேறு சாதனைகளைப் புரிந்த அப்துல் கலாம், 400 கிராம் எடை கொண்ட லேசான செயற்கைக் கால்களை உருவாக்கியதுதான் தனது உண்மையான வெற்றி என்று குறிப்பிட்டிருக்கிறார். “4 கிலோ எடை கொண்ட செயற்கைக் கால் களைத் தூக்கி நடக்க முடியாமல் குழந் தைகள் சிரமப்பட்டனர். எனது அணியினர் தயாரித்திருக்கும் இந்த இலகு ரக செயற்கைக் கால்களை அணிந்து குழந் தைகள் ஓடி விளையாடுவதைப் பார்க்க அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று நெகிழ்வுடன் கூறியவர் அவர்.

மக்களின் நாயகன்

உயர் பதவிகளில் இருப்பவர்கள் அதிகார மட்டத்திலும் வெளிநாட்டுத் தலைவர்களின் மத்தியிலும் வளைய வருபவர்களாகவே இருப்பார்கள் என்ற பிம்பத்தை உடைத்தவரும் அப்துல் கலாம்தான். இளம் தலைமுறையினரிடம் பிரபலமாக இருந்த தலைவர் அவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்று சொல்லலாம். திரைப்படப் பாடல்களிலும், மக்கள் மேடைகளிலும் உச்சரிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் அவர் ஒருவர்தான்.

தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி களின்போது அரங்கில் இருப்பவர்களிடம் ஆக்கபூர்வமான மனநிலையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்து வதிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார். ஒழுக்கம், நற்பண்பு, உழைப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் வாசகங் களை வாசித்துக் காட்டுவதுடன், அரங்கில் இருப்பவர்கள் அவற்றைத் திரும்பக் கூறும்படி சொல்வதும் அவரது வழக்கம்.

எதிரில் இருப்பவர்கள் குழந்தைகளானாலும், பெரியவர்களானாலும் அதைச் செய்தாக வேண்டும் அவருக்கு. அந்த நேரத்தில் அது வேடிக்கையாகத் தெரிந்தாலும் அவரது வார்த்தைகளைத் திரும்பச் சொல்லும் கணத்தில் ஒவ்வொரு மனதிலும் நல்லொழுக்கம், கடின உழைப்புகுறித்த சிந்தனைகள் வலுப்பெறுவதையும் மனம் தெளிவு பெறுவதையும் அவர் பங்கேற்ற கூட்டங்களில் கலந்துகொண்டவர்களால் உணர்ந்திருக்க முடியும்.

தன் வாழ்நாளின் ஒவ்வொரு கணத்தையும் குழந்தைகள், இளைஞர்கள், மாணவர்களுக்காகவே செலவிட்ட அந்த மாபெரும் மனிதர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்வதுதான் அவருக்கு நாம் செய்யும் உண்மையான நன்றிக்கடனாக இருக்கும்!

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

| தி இந்து - சுவடுகள் |

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்