பிரிட்டிஷ் நாவலாசிரியர்
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் நாவலாசிரியரும், ஆப்பிரிக்கப் பெண் உரிமை, சமத்துவத்துக்கு குரல் கொடுத்தவருமான டோரிஸ் லெஸ்ஸிங் (Doris Lessing) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ஈரானின் கெர்மான்ஷா நகரில் (1919) பிறந்தார். இயற்பெயர் டோரிஸ் மே டெய்லர். பெற்றோர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். தந்தை முதல் உலகப் போரில் பங்கேற்று ஊனமுற்றவர். வங்கியில் குமாஸ்தாவாகப் பணிபுரிந்தார்.
* அதிக பணம் சம்பாதிப்பதற்காக ஜிம்பாப்வேயில் குடியேறியது குடும்பம். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. தனது குழந்தைப் பருவம் முழுவதுமே ஏதோ கொஞ்சம் மகிழ்ச்சி, நிறைய துயரங்களுடன் கழிந்ததாகவே பின்னாளில் கூறியுள்ளார்.
* பெண் குழந்தையான லெஸ்ஸிங்கை மிகுந்த கட்டுப்பாட்டுடன் வளர்த்தார் தாய். சிறந்த கான்வென்ட் பள்ளியில் இவரைச் சேர்த்தனர். பிறகு சாலஸ்பரியில் உள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனால், 13-வது வயதிலேயே படிப்பை நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது.
* கல்வி கற்கும் வாய்ப்பு இல்லாதுபோனாலும், மிகுந்த புத்திசாலியான இவர், தானாகவே பல நூல்களைக் கற்று அறிவை வளர்த்துக்கொண்டார். லண்டனில் இருந்து கட்டுக்கட்டாக புத்தகங்களை வரவழைத்துப் படித்தார். அது இவரது கற்பனைத் திறனை வளர்த்தது.
* பரந்து விரிந்த உலகம் தனக்காக காத்திருப்பதாக நம்பினார். 15 வயதில் வீட்டைவிட்டு வெளியேறிய இவருக்கு, தாதி வேலை கிடைத்தது. முதலாளி இரவலாகக் கொடுத்த புத்தகங்களையும் படித்தார்.
* விரைவில் கதைகள் எழுதத் தொடங்கினார். 1937-ல் சாலஸ்பரியில் குடியேறினார். அங்கு தொலைபேசி ஆபரேட்டராக பணிபுரிந்தார். கம்யூனிஸ சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்ட இவர், ‘லெஃப்ட் புக் கிளப்’ என்ற குழுவில் இணைந்தார்.
* பின்னர் அதில் நம்பிக்கை இழந்து, 1954-ல் லண்டனில் குடியேறினார். அதே ஆண்டில் ‘தி கிராஸ் ஈஸ் சிங்கிங்’ என்ற தனது முதல் நாவலை வெளியிட்டார். பிறகு, முழுநேர எழுத்தாளராக மாறினார். துயரமான குழந்தைப் பருவ அனுபவங்கள்தான் பல புனைகதைகளுக்கு கருவாக இருந்தன என்று கூறியுள்ளார்.
* இவரது படைப்புகள் பெரும்பாலும் சுயசரிதை வடிவிலேயே இருந்தன. அவற்றில் இவரது குழந்தைப் பருவ, அரசியல் மற்றும் பிற சமூக ஈடுபாடுகள் தொடர்பான அனுபவங்களே பிரதானமாக இருந்தன. கலாச்சார மோதல், இனப் பாகுபாடு, சமூக ஏற்றத் தாழ்வுகள், பெண்கள் முன்னேற்றம், பெண் உரிமை, ஆணாதிக்கம் ஆகியவை குறித்தும் எழுதினார்.
* 1950, 60-களில் வெளிவந்த இவரது கதைகள், நாவல்கள் அனைத்தும் ஆப்பிரிக்காவை கதைக்களமாகக் கொண்டிருந்தன. ஆப்பிரிக்க பெண் உரிமை, சமத்துவத்துக்கு குரல் கொடுத்தார். இவரது ‘தி கோல்டன் நோட்புக்’ என்ற புதினம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. 50-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். இவர் சிறந்த நாடகாசிரியரும்கூட. பல நாடகங்களை எழுதியுள்ளார்.
* டேவிட் கோஹென் வாழ்நாள் சாதனையாளர் விருதை 2001-ல் பெற்றார். சாமர்செட்மாம் விருது, ஆஸ்திரேலிய அரசு விருது உட்பட ஏராளமான விருதுகள், பரிசுகள் வென்றதோடு, 2007-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசையும் பெற்றார். உலகம் போற்றும் எழுத்தாளராகத் திகழ்ந்த டோரிஸ் லெஸ்ஸிங் 94-வது வயதில் (2013) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago