PS for 2K கிட்ஸ் - 7 | பொன்னியின் செல்வன் - அருள்மொழிவர்மன் ‘மாஸ்’ ஹீரோ இல்லையா?

By ஆ.மதுமிதா

சோழ நாட்டு சக்கரவர்த்தியான சுந்தர சோழரின் கடைக்குட்டிச் செல்வப் புதல்வர், பழையாறை அரண்மனைகளில் வாழ்ந்த ராணிமார்களுக்கெல்லாம் செல்லக் குழந்தை, பத்தொன்பது வயதில் ஈழப்போருக்குத் தலைமை வகித்து சென்றவர், தென் திசைச் சோழ சைன்யத்தின் 'மாதண்ட நாயகர்', ஆதித்த கரிகாலன் மற்றும் குந்தவையின் அருமைத் தம்பி, குந்தவையின் உயிரினும் மேலானவர், சோழ நாட்டுக்கே அவர்தான் செல்லப் பிள்ளை. ஒரு கதாநாயகனாக இருக்க இதையெல்லாம் விட வேறு என்ன தகுதி ஒருவருக்கு வேண்டும்? யாரைப் பற்றி கூறுகிறேன் என்று நீங்கள் யூகித்திருப்பீர்கள். நம் பொன்னியின் செல்வரே தான்!

பொதுவாக இப்புதினத்தை படித்த பலரும் தங்களது ஃபேவரிட் ஹீரோவாக வந்தியத்தேவன் அல்லது ஆதித்த கரிகாலனையே கூறுவர். வந்தியத்தேவனும் அருள்மொழியும் சந்திக்கும் காட்சியில் 'கதாநாயகன்' என்று வந்தியத்தேவனை தான் கல்கியும் கூட குறிப்பிடுகிறார். கதையில் வரும் கரிகாலர் மாபெரும் வீரர், பாண்டிய மன்னன் தலைகொண்ட பெருமைக்குரியவர், போர்க்களத்தில் எவரும் மிஞ்ச முடியாத 'வடதிசைச் சைன்யத்தின் மாதான்ட நாயகர்' ஆவார். நந்தினியின் சதி அறிந்தும் தன் காதலை மறக்க இயலாமலும், பாண்டியனைக் கொன்று அவளுக்கு துரோகம் செய்து விட்டோமே என்று எண்ணிக் கொண்டும் தன்னைத் தானே கவலையினால் வாட்டிக் கொள்கிறார். இவர் படும் துன்பங்களால் சிலசமயம் இவரைப் பார்க்க பாவமாகவே இருக்கும். ஆனால், கரிகாலர் முன்கோபக்காரர், தான் நினைத்ததை செய்பவர், மற்றவர் சொல்லைக் கேட்காமல் தானே முடிவெடுப்பவராகவே காட்டப்படுவார்.

மற்றொரு ஹீரோவான வந்தியத்தேவனோ குறும்புத்தனமும் விளையாட்டுத்தனமும் கொண்ட துடிப்பு மிக்க இளம் வீரன், தன் கால் போன போக்கிலே செல்பவன், வலுச் சண்டைக்குச் செல்பவன். ஆனால் பிரச்சினை என்றால் அறிவுடன் செயல்பட்டு வருகின்ற ஆபத்தை தவிர்க்க பார்ப்பவன். ஆனால் கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களில் இருந்தும், வந்தியத்தேவனிடமும் கூட இருந்து, தனித்து திகழ்பவர் நம் அருள்மொழிவர்மன்.

மற்ற கதாபாத்திரங்கள் தனக்கென நிறை குறைகளைக் கொண்டிருக்க, அருள்மொழிவர்மர் ஒரு குறையும் கூற முடியாத வீரராக நம்மையும் கவர்கிறார். அப்பா மற்றும் வயதில் பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது, அக்கா பேச்சுக்கு மறுவார்த்தை கூற மாட்டார் போன்ற காரணங்களால் இவர் மாஸ் ஹீரோ இல்லை என்று நினைப்பவர்களை கன்வின்ஸ் செய்வதுதான் இப்போது என் வேலை.

நாம் புதிய ஊர் ஒன்றுக்கு சென்றால் அங்கு முதலில் சந்திப்பவருடன் மிகவும் நெருக்கமாவோம். அப்படி நாம் கதையின் தொடக்கத்தில் சந்தித்து இறுதி வரை பயணித்து நம் மனதுடன் நெருங்கிய 'எவர்கிரீன்' நாயகன் வந்தியத்தேவன். ஆனால், வந்தியத்தேவன் காஞ்சியிலிருந்து கடம்பூர் சென்று பின் தஞ்சை சென்று, கடல் கடந்து இலங்கை செல்வது அருள்மொழிவர்மரைக் கண்டு குந்தவை தந்த ஓலையை அவரிடம் தரத்தானே? அப்படியானால் அவர்தானே கதாநாயகன்?

பொன்னியின் செல்வன் பெயர் காரணம்: பொன்னி நதி பாயும் சோழ நாட்டின் செல்வன் என்றதால் அருள்மொழிவர்மர் என்கிற ராஜராஜ சோழனுக்கு அப்படியொரு பெயர். பொன்னியின் செல்வன் புதினத்தின்படி பொன்னி நதியில் (காவிரி நதி) படகில் செல்லும் போது குழந்தை அருள்மொழிவர்மன் தவறி ஆற்றிற்குள் விழுந்துவிட்டதாகவும் அனைவரும் பதறிய வேளையில், ஒரு பெண் குழந்தையை மீட்டு படகில் இருந்தவர்களிடம் கொடுத்ததாகவும், அப்படி வந்த அந்த பெண், தெய்வமான காவிரித்தாய் தான் என்று படகில் இருந்த அனைவரும் நம்பியதால் அன்றிலிருந்து அருள்மொழிக்கு 'பொன்னியின் செல்வன்' என்று பெயரிட்டதாக கல்கி தனது புதினத்தில் கூறியுள்ளார்.

கதையைப் படித்த நமக்கு வேண்டுமானால் வெவ்வேறு கதாபாத்திரங்களை பிடித்திருக்கலாம். ஆனால், கதையில் வரும் அணைவருக்கும் பிடித்தது நம் பொன்னியின் செல்வனைத்தான். நாட்டிலுள்ள சிறு குழந்தைகள், இளம்பெண்கள் முதல் பல் போன கிழவர் வரை அனைவருக்கும் விருப்பமுடையவர் அருள்மொழிவர்மன்.

சுந்தர சோழருக்குப் பிறந்த குழந்தைகள் எல்லாருமே அழகு மிக்கவர்கள்தான். ஆனால் கடைசியாக பிறந்த அருள்மொழி அழகில் அனைவரையும் விஞ்சி விட்டார். இளவரசர் மீது மற்றவர்களை விட அதிக பாசம் கொண்டவர் அவருடைய தமக்கை குந்தவைதான். தம்பியை வளர்க்கும் பொறுப்பைத் தன்னுடையதாக எண்ணி வளத்தார். அருள்மொழிவர்மனை, மூத்தவர்கள் இருவர் இருப்பினும் சோழ சிங்காதனத்தில் ஏற்றி விட வேண்டும் என்பது அவள் ஆசை. ஆனால், அண்ணன் தனக்கு ராஜ்ஜியம் வேண்டாம் என்று மனதுக்குள்ளேயே நினைத்துக்கொண்டு இருப்பது போலவே தம்பியும் நினைக்கின்றார். ஓவிய, சிற்ப கலைகளை அலாதியான விருப்பம் கொண்டவர் நம் இளவரசர். யானைகளின் மொழியை புரிந்துகொள்ளும் திறன் உள்ளதால், மதம் கொண்ட யானையை கூட இலகுவாக கட்டுப்படுத்துகிறார்.

இதை வைத்து இவர் மிகவும் சாது என்று முடிவெடுத்தது விட வேண்டாம். போர் புரிவதில் அண்ணனுக்கு சளைத்தவரில்லை. சோழ சாம்ராஜ்ஜியத்தை கடல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளில் நிலைநாட்ட வேண்டும் என்றே ஆசைப்படுகிறார். அதனால்தான் அக்கா தன்னை இலங்கைப் படைத் தலைவனாக போக சொன்ன போது 'அரண்மனை வாழ்விலிருந்தும் அந்தப்புர மாதரசிகளின் அரவணைப்பிலிருந்தும் தப்பித்தோம்!' என்று ஆர்வத்துடன் புறப்பட்டார்.

போர் புரிவதில் ஆர்வம் இருந்தாலும் தனக்கென்று ஒரு போர் தர்மத்தை கடைபிடித்தார். ஈழத்து போரில் உள்ள வீரர்களுக்கெல்லாம் சோழ நாட்டிலிருந்து கப்பல்களில் உணவு அனுப்பிவைக்க வேண்டும் என்பதுதான் அந்த போர் தர்மம். இதற்கு இளவரசர் அருள்மொழிவர்மர், 'படையெடுத்துச் சென்ற நாட்டில் நம் வீரர்களுக்கு வேண்டிய உணவுப் பொருளைச் சம்பாதிப்பது என்றால், அங்குள்ள குடிமக்களின் அதிருப்திக்கு உள்ளாக நேரிடும். ஈழத்து அரச குலத்தாரோடு நமக்குச் சண்டையே தவிர ஈழத்து மக்களோடு எவ்விதச் சண்டையும் இல்லை. ஆகையால் அவர்களை எவ்விதத்திலும் கஷ்டப்படுத்தக் கூடாது. அரச குலத்தாருடன் போராடி வென்ற பிறகு மக்களின் மனமார்ந்த விருப்பத்துடன் ஆட்சி நடத்த வேண்டும். ஆகையால் பணமும் உணவும் சோழ நாட்டில் இருந்து வர வேண்டும்" என்று காரணமும் கூறுகிறார்.



அதுமட்டுமன்றி போரினால் சிதலமடைந்த புத்த கோயில்கள் மீண்டும் சரிசெய்யப்பட்டன. மகிந்தராஜனுடைய போர்வீரர்களுடன் மட்டுமே சோழ போர்வீரர்கள் சண்டையிட்டனர். ஈழத்தில் மக்களின் வாழ்வில் எவ்வித இடையூரும் இந்தப் போரினால் ஏற்படவில்லை என்பதை இளவரசர் உறுதி செய்துக்கொண்டார். மண் மீதும் பெண் மீதும் ஆசை இல்லாத அருள்மொழிவர்மர் கடைசியில் கொடும்பாளூர் இளவரசி வானதியை காதலித்து கரம் பிடிக்கிறார். ஆனால், வானதியோ சோழ சிங்காதனம் ஏற மாட்டேன் என்று சபதம் செய்து கொண்டாள். ஆதித்த கரிகாலரோ கடம்பூர் மாளிகையில் மாண்டுவிட்டார். பழைய மதுராந்தகன் சக்கரவர்த்தியாக்கும் சதி திட்டமோ கரிகாலன் மரணத்தோடு பலரால் கைவிடப்பட்டது. ஆனால் மதுராந்தகன் விட்டபாடில்லை.

இன்னும் அருள்மொழிவர்மர் 'மாஸ் ஹீரோ' என்று ஒத்துக்கொள்ளாதவர் புதினத்தின் கடைசி பாகம் 'தியாகச் சிகரம்' என்று பெயரிடப்பட்டதற்கான காரணம் தெரிந்தால் ஒத்துக்கொள்வீர். மக்கள் விரும்பியபடி அருள்மொழிவர்மன் சிங்காதனம் ஏறினாரா? சோழ நாடு சதிகாரர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்டதா? அப்படியானால் வானதியின் சபதம் என்னவாயிற்று? - இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமானால் ஐந்தாம் பாகத்தில் வரும் மிகப்பெரிய சஸ்பென்ஸை, கல்கி தனது கதையின் சிகரமான நிகழ்ச்சி என்று கூறும் நிகழ்வினை சொல்ல வேண்டும்.

வழக்கம்போல் நான் சஸ்பென்ஸை உடைக்க விரும்பவில்லை. ஆகையால், நீங்களே புதினத்தைப் பார்த்து / படத்தைப் பார்த்தவுடன் பொன்னியின் செல்வன் மாஸ் ஹீரோ என்று ஒப்புக்கொள்வீர்கள்.

| தொடரும்... |

முந்தைய அத்தியாயம்: PS for 2K கிட்ஸ் - 6 | பொன்னியின் செல்வன் - பழுவேட்டரையர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE