தமிழ் கவிஞர், கட்டுரையாளர்
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரும் ‘கவித்தென்றல்’ எனப் புகழப்பட்டவருமான அரங்க சீனிவாசன் (Aranga Srinivasan) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*பர்மாவின் பெகு மாவட்டம், சுவண்டி என்ற சிற்றூரில் பிறந்தவர் (1920). தாய் மங்கம்மாள், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி ராணி படைப்பிரிவின் வீராங்கனை. தனது 10 வயதிலேயே ‘சுதேச பரிபாலினி’, ‘பர்மா நாடு’, ‘பால பர்மர்’, ‘சுதந்திரன்’, ‘ஊழியன்’ உள்ளிட்ட இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்தன.
*14-வது வயதில் ‘தேசிய கீதம்’, ‘சரஸ்வதி துதி’ ஆகிய நூல்களையும் 15-வது வயதில், ‘வடிமலை சீனிவாச மாலை’, ‘மணவாள சதகம்’ ஆகிய பிரபந்தங்களையும் இயற்றினார். பக்கிரிசாமிப் பிள்ளை என்ற பரிபூரணானந்த சுவாமிகளிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
*1942-ல் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில் பர்மாவிலிருந்து கால்நடையாகவே இந்தியா வந்தார். வழியில் பல இன்னல்களை எதிர்கொண்டார். கவுஹாத்தி மருத்துவமனையில் பல மாதங்கள் தங்கி சிசிச்சை பெற்றார். கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்க உறுப்பினராகவும் தமிழ் எழுத்தாளர் சங்க நிறுவனராகவும் பணிபுரிந்தார்.
*கல்கத்தா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பட்டப்படிப்பு மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார். அங்கிருந்து வெளிவந்த ‘ஜோதி’ மாத இதழில் பணியாற்றினார். பின்னர் தமிழகம் வந்த இவர் திண்டுக்கல் அருகே கோவிலூரில் வாழ்ந்து வந்தார். ‘சங்கரன்கோவில் கோமதி நான்மணிமாலை’ நூலை இயற்றி அரங்கேற்றமும் செய்தார். தமிழ், இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்.
*‘மனித தெய்வம் காந்தி காதை’ என்ற நூல் எழுதுவதற்காக இந்தியா முழுவதும் பயணித்து, தகவல்களைச் சேகரித்தார். ஐந்து காண்டங்கள், 77 படலங்கள், 5,183 பாடல்களைக் கொண்ட காவியம் இது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் சில தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
*இவரது ‘காவடிச் சிந்தும், கவிஞன் வரலாறும்’ என்ற ஆய்வு நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது. வங்கப் போரைப் பற்றிய இவரது ‘வங்கத்துப் பரணி’ என்ற நூல் பட்டப் படிப்பில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
*ராஜா சர் முத்தையா செட்டியார் நிறுவிய தமிழ் - சமஸ்கிருத ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி முனைவராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் சென்னை ரத்தினவேல் சுப்பிரமணியம் செந்தமிழ்க் கல்லூரியில் சிறப்பு பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
*‘தினமணி’ நாளிதழில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் நூல் மதிப்புரைகளையும் எழுதியுள்ளார். சென்னை தமிழ் வளர்ச்சி மன்றத்தின் அவைக் கவிஞராகவும் செயல்பட்டுள்ளார். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராகி, ‘தமிழ்க் கலைக் களஞ்சியம்’ உருவாக ஒத்துழைத்தார்.
*‘வைணவத் தத்துவ அடிப்படைகள்’, ‘தியாக தீபம்’, ‘வழிகாட்டும் வான்சுடர்’, ‘சுதந்திரப் போரின் எழுச்சிக் களம்’, ‘அகமும் புறமும்’, ‘தாகூர் அஞ்சலி’, ‘சுய சரிதை நூல்’, ‘தேசிய கீதம்’, ‘நீலிப்பேயின் நீதிக்கதைகள்’, ‘திருவரங்கத் திருநூல்’ உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
*எளிமையும் அடக்கமும் மிகுந்தவர். காந்தியத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். ஆசுகவி, சித்ரகவி, மதுரகவி, வித்தாரக்கவி என்றெல்லாம் போற்றப்பட்டவர். தமிழ்ப் படைப்புலகில் மகத்தான பங்களிப்பை வழங்கிய அரங்க சீனிவாசன் 1996-ம் ஆண்டு 76-ம் வயதில் மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago