மான்டேஜ் மனசு 16: மாரிகளின் தீராக் காதலால் வாடா பூவுலகு

By க.நாகப்பன்

''முன்னாடி மாசத்துக்கு ஒரு முறையாவது வீட்டுக்கு வருவே. இப்போ ரெண்டு மாசம் ஆனாலும் எட்டிக் கூடப் பார்க்க மாட்டேங்குறியே ராசா.''

''சீக்கிரம் வர்றேன் பாட்டிம்மா''.

''ஊர்ல மாரியம்மன் திருவிழா. ஒரு எட்டு வந்துட்டுப் போகலாம்ல.''

''சரிம்மா. அவசியம் வர்றேன்.''

பாட்டியிடம் போனில் பேசியதில் இருந்து எனக்கு ஊருக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. திருவிழா என்பதால் ரொம்ப நாளாய் பார்க்க முடியாத நண்பர்களையும் பார்த்துவிடலாம் என்ற நினைப்பில் ஊருக்குச் சென்றேன். தெருக்கூத்து நடந்து கொண்டிருந்தது. என் நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து இடம் பிடித்து அமர்ந்தோம்.

''நாட்டுக்கு சேவை செய்ய நாகரிக கோமாளி வந்தேனய்யா'' என்று கட்டியங்காரன் காமெடி பண்ணிக்கொண்டிருந்தான். அவன் செய்யும் சேட்டைகளைப் பார்த்து குழந்தைகள் உட்பட பெரியவர்களும் சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தனர்.

அங்கே வேணி அக்காவைப் பார்த்தது அதிசயமாக இருந்தது எனக்கு. காதல் கைகூடாமல் போன வேணி அக்காவை பக்கத்து ஊரில்தான் மணமுடித்துக் கொடுத்தார்கள். எப்போதும் வந்த சுவடே தெரியாமல் பிறந்தகம் வந்து செல்லும் வேணி அக்கா மூன்று வருடங்களுக்குப் பிறகு ஊர்த் திருவிழாவுக்கு வந்தது பெரிய ஆச்சர்யம்.

வேணி அக்காவைப் பற்றி சொல்லிவிடுகிறேனே!

வேணி அக்கா என்னை விட 4 வயது மூத்தவள். பெரிய திறமைசாலி. ஓவியம், பாட்டு, நடனம் என பின்னி எடுப்பாள். எந்த உதவி கேட்டாலும் செய்வாள். என்னை மாதிரி பொடிசுகளுக்கு ஆங்கிலம் கைவரப் பெற வேண்டுமென்ற நல்ல நோக்கத்தில் இலவசமாக டியூஷன் எடுத்தாள். ஏழு, எட்டாம் வகுப்புகளில் ஓவியம் வரையத் தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கும்போது வேணி அக்காதான் உதவினாள்.

தாமரையில் ஆரம்பித்து தலைவர்கள் படம் வரை வரைந்து கொடுத்தாள். அதற்கு உபகாரமாக எதையும் நான் செய்ததுமில்லை. அக்கா கேட்டதுமில்லை.

தமிழோ, ஆங்கிலமோ எதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்தால் அக்காவிடம் குட்டு நிச்சயம். டியூஷன் படிக்கும்போது மட்டும் செல்லமாய் கண்டிக்கும் அக்கா அதற்குப் பிறகு ஆளே மாறிவிடுவாள்.

மழைக் காலத்தில் கப்பல் செய்வது, தை மாதத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுவது என சகல சேட்டைகளும் நடக்கும்.

'குலை குலையா முந்திரிக்கா

நரியும் நரியும் சுத்தி வா

கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான்

கூட்டத்துல இருக்கான் கண்டுபிடி' என்ற பாடல் இருப்பதே வேணி அக்காவால்தான் எனக்கு தெரியும்.

வேணி அக்கா டீச்சர் ட்ரெய்னிங் படித்தாள். அக்காவின் உறவுப் பையன் சோழவேந்தன். எங்களுக்கு அண்ணன். கிரிக்கெட், கபடி என்று விளையாட்டுகளில் புகுந்துவிளையாடும் சோழன் மீது வேணி அக்காவுக்கு காதல்.

சோழன் வேணி அக்காவைக் காதலித்தாரா இல்லையா என்பது இதுவரையில் தெரியாது.

ஆனால், சின்ன வயதில் இருந்தே சோழனுக்கென்று எதையும் பார்த்து பார்த்து செய்வாள். ஐஸ் பால் விளையாடும்போது கூட சோழனைக் காட்டிக் கொடுத்ததில்லை. அவனுக்குப் பிடித்த பால் ஐஸ், இஞ்சி மிட்டாய் என வாங்கிக் கொடுப்பாள். வீட்டில் எள்ளு கொழுக்கட்டை செய்தால் அத்தனையையும் சோழனுக்குக் கொடுத்து அவள் பசியாறுவாள்.

அப்படிப்பட்டவள் காதலை சோழன் புரிந்துகொண்டானா இல்லையா என தெரியவில்லை. பிளஸ் 2 படித்த பிறகு ஓவியக் கல்லூரியில் படித்தான். அப்போதே சோழன் - வேணிக்கான அன்பின் தொடர்பு விடுபட்டது.

படித்து முடித்தவுடன், வீட்டில் கஞ்சி காய்ச்சக்கூட ஆளில்லை என்று சோழனின் அப்பா பிடிவாதமாய் அவனுக்கு கல்யாணம் செய்துவிட்டார். அம்மா இல்லாத குறையில் கண்டுக்காம விட்டுடக்கூடாது என்பதற்காகவே இப்படிச் செய்ததாக சோழன் அப்பா மாரியப்பன் திருப்திப்பட்டுக்கொண்டார்.

ஆனால், இந்த அவசர கல்யாண ஏற்பாட்டில் அதிகம் பாதிக்கப்பட்டது வேணிதான்.

முன்பொரு தருணத்தில் சோழனுக்கு வேணிதான் என்று ஊரும் உறவுகளும் சொன்னதை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட வேணி, சோழனை தன் கணவனாக நினைத்து வளர்ந்தாள். அப்படியே வாழ்ந்தாள்.

கடைசியில் சோழன் இன்னொருவளைக் கைப்பிடிக்க நேர்ந்தது. வேணிதான் மொத்தமாய் நொறுங்கிப் போனாள். சில மாதங்களில் வேணி பக்கத்து ஊருக்கு வாக்கப்பட்டுப் போனாள். டீச்சர் ட்ரெய்னிங் முடித்தவள் பாதி நேரம் நர்சரி பள்ளியிலும், மீதி நேரம் நெசவு வேலைக்காக நூல் இழைக்கும் மெஷினிலுமே நாட்களை நகர்த்தினாள்.

வேணி அக்கா கல்யாணமான பிறகும் சோழனை மறக்கவில்லை. மறக்கவும் நினைக்கவில்லை. 3 வருடங்கள் திருவிழாவுக்கே வராதவள் இந்த முறை மட்டும் வந்திருக்கிறாளே ஏன் என்று பார்த்தால், கூத்தில் சோழன் துரியோதனனாக தோள்கள் திமிர நிலமே அதிர கம்பீரமாக ஆடிக்கொண்டிருந்தான். அவன் வருகையை எல்லோரும் மிரட்சியுடன் பார்க்க, வேணி மட்டும் அதை இமை மூடாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

சோழன் எப்போது தெருக்கூத்து கலைஞராக மாறினார் என்பது தெரியாமல், ஊர் நண்பர்களிடம் விசாரித்தேன். திருமணங்களுக்கு புகைப்படம் எடுப்பது, ஆல்பம் போடுவது, ஓவியம் வரைவது, மன திருப்திக்காக தெருக்கூத்து ஆடுவது என்று விரும்பியபடி சோழன் அண்ணன் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டதாக முன்கதைச் சுருக்கம் சொன்னார்கள்.

கலை மீதான சோழனின் காதலைப் பற்றிச் சொன்னவர்கள், ஊருக்கு வந்தாதான் இதெல்லாம் தெரியும். வருஷத்துக்கு ரெண்டு முறை வந்தா இப்படிதான் என்று என்னையும் கொஞ்சம் அர்ச்சனை செய்தார்கள்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னொருவருடன் திருமணம் ஆன பிறகும், சோழன் மீதான காதல் இம்மியும் குறையாமல் வேணி அக்காவால் எப்படி இருக்க முடிகிறது? என்று ஆச்சர்யம் என்னை விட்டு அகலவில்லை.

சோழன் ஆடி முடிந்ததும் கீற்றுக்கொட்டகையில் வேஷம் கலைக்கும் நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்தேன். வேணி அக்காதான் சில வாண்டுகளோடு அங்கு வந்தாள். என்னைப் பார்த்தவள் நல்லா இருக்கியா தம்பி என்று கேட்டுவிட்டு, சோழனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். சோழன் முன்பக்கமாக பார்த்தபடி அணிகலன்களை கழட்டும் முயற்சியில் இருந்ததால் வேணியை கவனிக்கவில்லை.

சேலைத்தலைப்பை கைகளால் பிடித்தபடி, தயங்கிக்கொண்டிருந்தவள் மெதுவாக திரும்பிச் சென்றாள். அவள் கொண்டுவந்த காகிதம் மட்டும் கீழே விழுந்தது. அதைக் கவனித்து எடுத்துப் பார்த்தால் கடிதம்.

அன்புள்ள சோழனுக்கு... உன் வேணி பாசமுடன் வரையும் மடல். நான் இங்கு நலம். அதுபோல் உன் நலனையும், வனிதா, தென்றல்

நலனையும் அறிய ஆவல்.

நான் உனக்கு எழுதும் முதல் கடிதம் இது. அதனால்தான் நலம் விசாரிச்சேன். நீ எப்போது இந்தக் கடிதத்தைப் படித்தாலும் நான் உன்னை

நலம் விசாரிக்குற மாதிரியும், எல்லா காலத்துக்கு ஏற்றவாறு, யாருக்கும் உறுத்தாமலும் இருக்கணும்.

நான் உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சு பத்து வருஷங்கள் ஆகுது. உனக்கு கல்யாணம் ஆனபோதோ, எனக்கு கல்யாணம் ஆனபோதோ

கூட நான் உனக்கு கடிதம் எழுதலை. ஆனா, இந்த காலகட்டத்துல உனக்கும் எனக்கும் இடையில அழுகை, சோகம், கஷ்டம், குழப்பம்,

மகிழ்ச்சி, திருப்தி நிறைய கடந்து வந்திருப்போம்.

உனக்காகதான் கஷ்டப்பட்டு தமிழ்ல எழுதுறேன். இதுக்கு மேல கொஞ்சம் நார்மலா எழுதுறேன். தப்பு இருந்தா மன்னிச்சிக்கோ!

- என நீண்ட அந்தக் கடிதத்தை என்னால் படிக்க முடியவில்லை. வேணி அக்காவே வந்து அந்தக் கடிதத்தை வாங்கிச் சென்றாள்.

இந்த 10 வருடங்களில் சோழனை நினைக்காமல் வேணி அக்காவால் இருந்திருக்க முடியுமா?

வேணி அக்காவின் காதலையும், 'பூ' மாரியின் காதலையும் என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

2008-ல் சசி இயக்கத்தில் பார்வதி, ஸ்ரீகாந்த், ராமு நடிப்பில் வெளியான படம் 'பூ'. சினிமாவில் எல்லாவற்றுக்கும் ஒரு காலமும், அதிர்ஷ்டமும், சென்டிமென்டும் இருப்பதாகச் சொல்வார்கள். அப்படிப் பார்த்தால் இப்போதைய காலகட்டத்தில் 'பூ' படம் வெளியாகி இருந்தால் அதற்கான வரவேற்பு மிகப் பெரிய அளவில் இருந்திருக்கும். ஆனாலும், தமிழ் சினிமாவில் ஒரு பெண்ணின் காதலை கண்ணியமாக, நேர்மையாக, எந்த விகல்பமும், பூச்சும் இல்லாமல் உண்மையாகப் பதிவு செய்த படம் 'பூ'.

மளிகைக் கடை வைத்திருக்கும் கணவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் மாரி (பார்வதி). தன் பிறந்தகத்தின் கோயில் கொடைக்கு செல்வதற்காக கடையில் வேலையாக இருக்கும் கணவன் இனிகோ பிரபாகரிடம் அனுமதி கேட்கிறாள். அந்த சமயத்தில்

எடை பார்க்கும் ஒரு கல் மாரியின் காலைப் பதம் பார்க்கிறது.

இனிகோ பதறியபடி 'வலிக்கலையா?' என்று கேட்கிறார். 'இல்லை. ஊருக்கு போய் வரவா' என்று மீண்டும் ஆசையாக கேட்கிறாள்.

'ரெண்டு பேரும் ஒண்ணா போகலாம்'.

'நான் இப்பவே போறேன். நீ மறக்காம சாயங்காலம் வா'.

'சரி. புறப்படு'.

மளிகைக் கடையில் சில பொருட்களை தன் பையில் திணித்துவிட்டு, கடும் வெயிலில் செருப்பு கூட அணியாமல் பேருந்துக்காகக் காத்திருக்கிறாள். பேருந்தில் ஏறி அமர்ந்து வீடு வந்து சேர்கிறாள்.

மாரியின் அம்மா எங்கே மாப்பிள்ளை என்று கேட்கிறார். 'அவர் அப்புறம் வருவார். தங்கராசு மச்சான் வந்திருக்காம்ல. அதான் பார்க்க சீக்கிரம் வந்துவிட்டேன்' என்கிறாள்.

எதுவும் சொல்ல முடியாமல் அம்மா, சாப்பிட்டாவது வந்தியா என கேட்க, மதிய சாப்பாட்டை சாப்பிடுகிறாள் மாரி.

பொட்டல் பூமியில் இருக்கும் ரெட்டைப் பனமரத்துக்குப் பக்கத்தில் மாரி அமர ஃபிளாஷ்பேக் விரிகிறது.

தங்கராசு (ஸ்ரீகாந்த்) - மாரி (பார்வதி) அன்பின் ஆழத்தை காட்சிகள் விவரிக்கின்றன.

வகுப்பறையில் வாத்தியார், 'படிச்சு என்ன ஆகப் போறீங்க' என்று கேட்கிறார். பையன்களில் சிலர் சர்பத் கடை வைக்கப் போறேன். டக்கர் டிரைவர் ஆகப் போறேன் என்று சொல்கிறார்கள்.

பெண்கள் என்ன ஆகப் போகிறோம் என்று சொல்லத் தெரியாமல் அமைதி காக்கிறார்கள். என்ன ஆகப் போறோம்னு கூட தெரியாம இந்த பொட்டப் பசங்க இருக்காங்களே என்று வருத்தமும், விசனமுமாகப் பேசுகிறார் வாத்தியார்.

அப்போது மாரி எழுந்து தங்கராசுக்கு பொண்டாட்டியாகப் போறேன் என்று பெருமை பொங்கக் கூறுகிறாள்.

வாத்தியார் வேறு வகுப்பில் படிக்கும் தங்கராசுவை அழைத்துவரச் சொல்கிறார். ஆனால், தங்கராசு வாத்தியார் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் அழுகிறான். பொம்பளைப்புள்ள தைரியமா சொல்லுது. ஏன் அழற என்று வாத்தியார் கேட்கிறார். அப்போது மாரியின் மனசும், வெள்ளந்தித்தனமும் நம்மை ஈர்க்கிறது.

இரவில் பாயில் உறங்கும்போதே சிறுநீர் கழித்ததை ஊர் முழுக்க உரக்க சொல்வேன் என்று கங்கணம் கட்டும் அண்ணனைப் பார்த்து எல்லா பாடத்துலயும் முட்டை என எதிர் பேச்சு பேசும் மாரி, தங்கராசுவிடம் சொல்ல முற்படும்போது மட்டும் அழுது வடிந்து அண்ணன் காலில் விழுகிறாள். பெரிய பனைமரம் தங்கராசு. சின்ன பனைமரம் நான் என பெருமிதப்படுகிறாள். தங்கராசுவுடன் சேர்ந்து கள்ளிப்பழம் பறித்து சாப்பிடுகிறாள்.

வளர்ந்த பிறகும் தங்கராசு மீதான காதலை வளர்த்தே வருகிறாள் மாரி. தங்கராசு இன்ஜினீயரிங் படிக்க சென்னை செல்கிறான். மாரி வெடி ஆபிஸில் சரம் கோர்க்கிறாள். 'காட்டு வேலைக்குப் போனா கறுத்துப் போய்டுவேன். அப்புறம் என் மச்சான் தங்கராசுக்கு கட்டிக்க மாட்டேன்னு சொல்லிடக்கூடாது. அதான் வெடி ஆபிஸில் வேலை பார்க்கிறேன்' என்று தோழியிடம் சொல்கிறாள் மாரி.

காதலை சொல்லத் துடிக்கும் மாரியின் அடுத்தடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன. தங்கராசுவின் போன் நம்பரை மனதிற்குள் எழுதி வைத்த மாரி, போன் செய்ய தோழி சீனி (இன்பநிலா) உடன் செல்கிறார். ஆனால், மற்றொருவர் போனில் பேசும்போது சொல்லும் எண்களும், தங்கராசுவின் எண்களும் குழப்பி அடிக்க, ஏகப்பட்ட தவறான அழைப்புகள் சங்கடத்தை வரவழைக்கின்றன.

கருப்பசாமியை வணங்கும் மாரி, ஆண்டாள் - கிருஷ்ணன் காதல் கதை கேட்டு ஆண்டாளை வணங்குகிறாள். காதலுக்காக சாமியை மாற்றிக்கொள்கிறாள்.

தங்கராசு தங்கையின் திருமணத்துக்காக ஊருக்கு வரும்போது கேழ்வரகு தோசை சுட்டு, அந்த சூட்டில் அழுத்த முத்தம் பதித்து சாப்பிடத் தருகிறாள். கள்ளிப்பழம் சுவைக்கு இந்த ஆப்பிள் ஈடாகாது என்று சொன்ன தங்கராசுவுக்காக, நள்ளிரவில் குடுகுடுப்பைக்காரன், சோளக்காட்டு பொம்மை என பல பயங்களைக் கடந்து கள்ளிப்பழம் பறித்து தங்கராசுவிடம் கொடுக்க வீட்டுக்கு செல்கிறாள். அதற்குள் தங்கராசு படிப்பதற்காக சென்னைக்கு புறப்பட, வெறும் காலால் ஓடியும் கள்ளிப்பழம் கொடுக்க முடியாமல் கலங்குகிறாள்.

'நீ அழகா இருக்கே மாரி' என்று சொல்லும் தோழியிடம், 'என் தங்கராசுக்காக நான் எது செய்தாலும் அழகுதான்' என்று விளக்கம் தருகிறாள்.

கடிதம் மூலம் காதல் சொல்ல முயற்சிக்கும்போது தங்கராசுவுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் முடிவாகிறது. அப்போது மாரியின் அண்ணனும், அம்மாவும் கல்யாணத்துக்கு வரமுடியாது என்று முறுக்கிக்கொண்டு நிற்கிறார்கள். மாரியின் அம்மா தன் அண்ணன் ராமுவை சபிக்கிறாள்.

அந்தத் தருணத்திலும் கருப்பசாமியிடன் தங்கராசு நலம் பெற வேண்டி பிரார்த்திக்கிறாள். அண்ணனும், அம்மாவும் தங்கராசு திருமணத்துக்குப் போகமாட்டேன் என்று முரண்டு பிடிக்கும்போது, தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். 'நீங்கள் கல்யாணத்துக்குப் போகலைன்னா தற்கொலை செய்துப்பேன்' என பிடிவாதம் காட்டுகிறாள்.

'தங்கராசு கல்யாணம் முன்னாடி நீ பண்ணிக்கிறியா' என்று கேட்கும் அண்ணனிடம் 'பண்ணிக்கிறேன்' என்று சம்மதம் சொல்கிறாள். ஏற்கெனவே விற்ற ஆட்டைப் பார்த்து 'அடி கருப்பு குட்டீசு வாடி' என கொஞ்சுகிறாள். 'வித்துப்புட்டல்ல. அப்புறம் என்ன கொஞ்சல்' என கேட்கும் மேய்ப்பனிடம், 'அதுக்காக பழகுனதை எல்லாம் மறந்துடணுமா?' என்று கேட்கிறாள். படத்தின் மைய சரடு, ஜீவன் அந்தக் காட்சிதான்.

'இன்னும் தங்கராசுவை மறக்கலையா' என கேட்கும் தோழியிடம் 'நான் எதுக்கு மறக்கணும்?' என்கிறார்.

தங்கராசுவின் வீட்டுக்கு வருபவள் காரைப் பார்த்தும், டிவி, ஃபிரிட்ஜ், சமையல் பாத்திரங்கள் பார்த்து திகைத்துப் போகிறாள். தங்கராசு மனைவியிடம் நெளிஞ்சு குழைஞ்சு 'ரொம்ப அழகா இருக்கீங்க. மாசமா இருக்கியளா' என்று கேட்கிறார்.

'அது ஒண்ணுக்குதான் கேடு' என்று பொரியும் தங்கராசுவின் மனைவியைப் பார்த்து, நிலைகுலையும் மாரியின் காபி டம்ளர் எகிறுகிறது. அதைக் கழுவப் போகும்போது தங்கராசு தன் மனைவியிடம் பேசுகிறான். மனைவி வெடிக்கிறாள். சத்தம் போடாதே என கெஞ்சுகிறான்.

'ஏன் நான் சத்தம் போடக்கூடாது. என்னை கன்ட்ரோல் பண்ற வேலையெல்லாம் வேண்டாம்' என்கிறாள். அவமானத்தால் கூனி குறுகும் தங்கராசுவைப் பார்க்கக் கூடாது என்பதற்காக மாரி தன் சேலைத்தலைப்பை மறைந்து ஒடுங்கி உட்கார்கிறாள்.

அதற்குப் பிறகு அழுகையும் ஆற்றாமுமையாக ஓடி வரும் மாரியைப் பார்த்து தங்கராசுவின் அப்பா ராமு காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். 'உனக்கு ஒரு கனவு இருந்தது. எனக்கு ஒரு கனவு இருந்தது. அவனுக்கும் ஒரு கனவு இருந்தது. ஆனா அவளுக்கும் ஒரு கனவு இருக்கும்னு தெரியாமப்போச்சு. ஆனா இப்போ நாங்க நிம்மதியா இல்லை' என்கிறார்.

அங்கிருந்து ஓட்டமாக விரைந்த மாரி பொட்டல்காட்டில் தனியாய் அமர்ந்து மௌனமாய் அழுகிறாள். அந்த சமயத்தில் மாரியின் கணவர் இனிகோ வருகிறார். 'இங்கே என்ன உட்கார்ந்திருக்கே? கடையில் 48 தேங்கா வித்திடுச்சு. ஒரு மூட்டை வெல்லம் காலியாய்டுச்சு. நல்ல வியாபாரம்' என்கிறார். அப்போது பெருங்குரலெடுத்து அழுகிறாள் மாரி. அதற்கான அர்த்தத்தை மாரியின் கணவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்படி எத்தனை மாரிகள் நம் அக்காக்களாக, தங்கைகளாக, தோழிகளாக அழுது கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை.

முற்போக்காகவும், பெண்ணின் எதிர்பாராத அன்பின் அடர்த்தியை சொன்ன விதத்திலும் சசி மனதைக் கவர்கிறார். ச.தமிழ்ச்செல்வனின் வெயிலோடு போய் சிறுகதையை எந்த சிதைவும் இல்லாமல் படமாக்கிய விதம் அற்புதம்.

எஸ்.எஸ்.குமரனின் இசையில் சூச்சூ மாரி பாடல்கள் பள்ளிக்கூட பால்ய நாட்களின் கதகதப்பை உணர்த்துகின்றன. முத்தையாவின் கேமரா கரிசல் மண்ணை நமக்குள் கடத்துகிறது.

ஃபோர்மேன் பாத்திரத்தை வில்லனாக சித்தரிக்கும் வாய்ப்புகள் இருந்தும் அதை தவிர்த்த விதம் மென்மையானது.

'வணக்கம் ஐயா. நான் உங்ககிட்ட படிச்ச தங்கராசு' என்று சொல்லும்போது 'மாரியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டியா?' என்று வாத்தியார் கேட்கிறார். தங்கராசுவின் கல்லூரித் தோழி மாரி காதலிப்பதை தங்கராசுவிடம் சொல்கிறாள். இப்படி ஊருக்குள் இருக்கும் அத்தனை பேருக்கும் மாரியின் காதல் தெரியும்போது, தங்கராசு மட்டும் அதை எப்படி உணராமல் போனார்? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

அந்த காதலை உணர்ந்த பிறகு தன்னை உயிராய் நினைக்கும் மாரி, தன்னை மட்டுமே நம்பி இருக்கும் அப்பா என யார் பக்கம் நிற்பது என தெரியாமல் தவிக்கும் ஶ்ரீகாந்த் நடிப்பு கச்சிதம். ஸ்ரீகாந்த் கொஞ்சம் பெரிய கெஸ்ட்ரோல் பண்ணியிருக்கிறார். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் படம் ஆரம்பித்து 37 நிமிடங்களுக்குப் பிறகே ஸ்ரீகாந்த் என்ட்ரி ஆகிறார். ஆங்கிலம் பேச முடியாமல் தயங்கி நிற்பது, ஆசை, கனவுகளை சுமந்தபடி ஆயில் மில் உரிமையாளர் மகளை திருமணம் செய்ய மறுப்பது பின் அதே பெண்ணை மணம் முடித்து நிம்மதியில்லாமல் தவிப்பது வரை கதாபாத்திரத்துக்கான பங்களிப்பை நிறைவாக வழங்குகிறார். இப்படி ஒரு நாயகியை மையப்படுத்திய கனமான படத்தில் நடித்ததற்காகவே அவரைப் பாராட்டலாம்.

'என்னை எல்லோரும் பேனாக்காரர்னுதான் கூப்பிடுவாங்க' என்று சொல்லும் ராமுவை வண்டிக்காரன் என்று எழுதிக்கொடுத்த முதலாளியிடம் வேலையிலிருந்து விலகுகிறார். மரியாதை இல்லாத இடத்தில் அவரைப் பார்க்க முடியாது. 'உழைப்புக்குதான்யா கூலி. உதவிக்கு எதுக்குய்யா கூலி?' என்று கேட்கும் ராமு, மகனுக்கு சம்பந்தம் பேசி முடிப்பதன் மூலம் தன் குடும்பம் உயரும் என நினைக்கும் ஆயிரமாயிரம் தகப்பன்களின் சுமைகளை கண் முன் நிறுத்துகிறார்.

மாரி அண்ணன் பொன்னுகாளையாக வரும் ஆர்ட் டைரக்டர் வீரசமர் நேர்த்தியான பாத்திர வார்ப்பு. மச்சான் தங்கராசு வீட்டுக்குள் இருப்பது தெரிந்ததும், 'நான் கலர் வாங்கியாரேன் மாரி' என எஸ் ஆகும் விதமும், தங்கையை விட்டு, மகனுக்கு வேறு இடத்தில் சம்பந்தம் பேசிய தாய்மாமனிடம் எகிறும்போதும் பாசக்கார அண்ணாய் மனதில் பதிகிறார்.

டீக்கடைக்கு வருபவர்களையெல்லாம் ஹலோ என அழைத்துப் பேசும் கந்தசாமி கதையின் திருப்பத்துக்கு உதவுகிறார்.

இந்தப் படத்தின் உயிர்நாடி மாரிதான். 'உன் தங்கராசு உன்னை நேர்ல பார்க்க வரலை. லெட்டர் போடல. நாம அஜித், விஜய்க்கு ஆசைப்படலாம். ஆனா, நமக்கு அவங்ககூடவா கல்யாணம் நடக்கும்' என தோழி சீனி கேட்கும்போது எந்திரிச்சு போய்டு என எச்சரிக்கும் மாரி, கல்லை எடுத்து ஓங்கி அடிக்க சீனியின் மண்டை பிளக்கிறது. அதற்குப் பிறகு பேசாமலேயே திரியும் சீனியை பேச வைக்கும் விதம் அழகு. 'என் தங்கராசு மாதிரியே அதே பிரியம் உன் மேலயும் இருக்கு' என்கிறார்.

பாட்டியிடம் 'என் புருஷன் தங்கராசுக்கு கள்ளிப்பழம் கொண்டுவந்திருக்கேன்' என்கிறார். பெட்டிக்கடைக்காரர் 'என்னம்மா வேணும்' என கேட்க, 'தங்கராசு வேணும்' என்கிறார்.

தனியறையில் உடை மாற்றும் போது தோழி சீனியை கூட வெளியில் அனுப்பிவிடுகிறார். ஃபோர்மேன் எட்டிப்பார்த்ததாக கூறும்போது 'என் உடம்பை தங்கராசு தவிர வேற யாரும் பார்க்கக்கூடாதுன்னுதான் உன்னையே அனுப்பிச்சேன் சீனி' என மருகுகிறார்.

கோபத்தில் ஃபோர்மேனை அடித்து வெளுக்கும்போது அவர் கண்ணாடி அணியாவிட்டால் பார்வை தெரியாது என்ற தகவல் தெரிந்ததும் நிம்மதி அடைகிறார்.

'நான் செத்துப்போய்ட்டேன்னா தங்கராசு மனசு என்னாலதான் மாரி செத்தாள்னு முள்ளுமாதிரி உறுத்திக்கிட்டே இருக்கும். அவரை கஷ்டப்படுத்தக்கூடாது. நல்லா இருக்கணும். என் தங்கராசு அப்படி இப்படி இருந்தானா, கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வாக்கு கொடுத்து ஏமாத்தினானா எதுவும் இல்லை. நான் சோகப்பட்டா அவன் சுகப்படாம போயிடுமோன்னு பயமா இருக்கு' என்ற மாரியின் மனம் பரிசுத்தமானது. கதாபாத்திரத்துக்கான அத்தனை நுட்பங்களையும் நடிப்பில் கொண்டு வந்த பார்வதியை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

'என்னால மட்டும்தான் தங்கராசுவை நல்லா பார்த்துக்க முடியும்' என்ற மாரியின் எதிர்பார்ப்பில்லாத காதல் எதற்கும் நிகரில்லாமல் உயர்ந்து நிற்கிறது.

'தங்கராசு உனக்கு இல்லைனு ஆனபிறகும் அதே பாசத்தோடு உன்னால எப்படி இருக்க முடியுது?' மாரியின் தோழி கேட்கும் இந்த கேள்விக்கான விடையை காட்சிகளாக்கியிருப்பதுதான் 'பூ'-வின் ஆழம். ஆதாரம் எல்லாம்.

மாரியின் காதல் வெகுளித்தனம் நிரம்பியது. அரை வேக்காட்டுதனமானது அல்ல. ஆண்களின் புஜபல பராக்கிரமங்களையும், பல காதல்களையும் பட்டியலிட்டு சொன்ன காலகட்டத்தில் பெண்ணை மையப்படுத்தி, அவள் காதலின் மகோன்னதத்தை கவுரப்படுத்திய படம் 'பூ'.

- மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்...

க.நாகப்பன் - தொடர்புக்கு nagappan.k@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: >மான்டேஜ் மனசு 15 - நீரில் மூழ்கி காதலில் மீண்ட பறவை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்