PS for 2K கிட்ஸ் - 5 | பொன்னியின் செல்வன் - வந்தியத்தேவனையே கலாய்க்கும் பூங்குழலி எப்படிப்பட்டவள்?

By ஆ.மதுமிதா

"அலைகடலும் ஓய்ந்திருக்க
அகக்கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில்
நெஞ்சங்கந்தான் பதைப்பதுமேன்"

பொன்னியின் செல்வனை பொறுத்தவரையில் இக்கதாபாத்திரத்தை மட்டும்தான் பிடிக்கும் என ஒருவரைக் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணத்திற்காக பிடிக்கும். ஆனால், இப்பாடலை பாடிய பூங்குழலியை பிடிக்காதவர் யாரேனும் உண்டோ?

2022-ல் இருந்து டைம் மெஷினில் பொன்னியின் செல்வன் கதை நிகழும் காலம் சென்று அங்கேயே தங்கிவிட்ட ஒரு புதுமைப்பெண்ணாகவே பூங்குழலியை என்னால் பார்க்க இயல்கிறது.

முதலில் பூங்குழலியை ஆசிரியர் கல்கியின் மொழியிலே பார்த்துவிடலாம்.

"கரை ஓரத்தில் கடலில் ஒரு சிறிய படகு மிதந்தது. கடலின் மெல்லிய அலைப் பூங்கரங்கள் அந்தப் படகைக் குழந்தையின் மணித் தொட்டிலை ஆட்டுவது போல மெள்ள மெள்ள அசைத்தன. அந்தப் படகில் ஓர் இளம் பெண் இருந்தாள். அவளைப் பார்த்ததும் சேந்தன் அமுதன் தன் மாமன் மகளைக் குறித்து வர்ணனை செய்தது நமக்கு நினைவு வருகிறது. ஆம்; அவள் பூங்குழலியாகத்தான் இருக்க வேண்டும். பெயருக்குத் தகுந்தாற் போல் இவள் கூந்தலில் ஒரு தாழம்பூவின் இதழ் அழகு பெற்றுத் திகழ்ந்தது. நீண்ட கரிய கூந்தல் சுருண்டு சுருண்டு விழுந்து அவளுடைய கடைந்தெடுத்த தோள்களை அலங்கரித்தன. கடல் அலைகள் கரையில் ஒதுக்கும் சங்குகள், சிப்பிகள் முதலியவற்றை ஆரமாக்கி அவள் அணிந்து கொண்டிருந்தாள். ஆனால் இவையெல்லாம் அவளுடைய மேனியில் பட்டதனால் தாங்களும் அழகு பெற்றனவேயன்றி, அவளை அலங்கரித்ததாகச் சொல்ல முடியாது. அழகே ஒரு வடிவம் தாங்கி வந்தால், அதற்கு எந்த ஆபரணத்தைக் கொண்டு அழகு செய்ய முடியும்?"

இப்படித்தான் கல்கியின் வர்ணனையில் பூங்குழலி மிளிர்கிறாள்.

அழகான பெண்தான், ஆனால் இதில் என்ன புதுமையை நான் கண்டேன் என்பதை தங்களுடன் பகிர்கிறேன். கோடியக்கரையில் இருந்து இலங்கையின் பூதத்தீவு வரையில் படகில் வலம்வரும் ஓடக்காரப் பெண்தான் நம் பூங்குழலி. கடற்கரையில் அடர்ந்து மண்டியிருக்கும் காட்டினுள் துணையின்றி சுற்றித்திரிவது அவள் வழக்கம். மனிதர்களை கண்டால் கடுமையும் வெறுப்பும் பற்றிக் கொள்ளும் கோபக்காரப் பெண்மணியாக திகழ்கிறாள்.

குந்தவை, நந்தினி, வானதி, மணிமேகலை ஆகிய பிற பெண் கதாபாத்திரங்கள் அரச குலத்தோடு தொடர்புபட்டிருக்க , பூங்குழலி நம் கதையில் ஒரு சாதாரண பெண்ணாக அமைக்கப்பட்டிருக்கிறாள். ஆனால், பொன்னியின் செல்வனில் வரும் வேறு எந்தப் பெண்ணிடமும் காணப்படாத துணிவும், வலிமையும், துடிப்பும், பூங்குழலியிடம் காணப்படுகிறது.

தனக்கு பிடிதவர்களை காக்க எதையும் செய்யும் பூங்குழலியிடம் தனக்கு பிடிக்காதவர் எவரேனும் சிக்கினால் அவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

தஞ்சை சிவாலயத்திற்கு ஆலயத் திருப்பணிகள் செய்து வரும் தனது அத்தை மகன் சேந்தன் அமுதனிடத்து அவளுக்கு முன்னதாக காதல் இல்லை எனத் தெரிந்துகொண்ட சாமர்த்தியசாலி வந்தியத்தேவன், அந்த இடத்திற்கு தானும் ஒரு விண்ணப்பம் போடுகிறான். ஆனால், அவளுக்கு ஏனோ ஈடுபாடில்லை. குந்தவை மற்றும் மணிமேகலையின் மனதைக் கொள்ளைக் கொண்ட வந்தியத்தேவனையே "உன் மூஞ்சி ஆந்தை மூஞ்சி மாதிரியே இருக்கிறது" என்று கலாய்த்துவிடுகிறாள் என்றால் பாருங்களேன்!

நடு இரவில் கொப்பளம் கொப்பளமாக வெடித்திருக்கும் "கொள்ளிவாய் பிசாசுகள்" தான் அவளின் காதலர்கள் என்று அவளே அறிமுகப்படுத்துகிறாள்.

எத்தனை குறும்புக்காரி. எவ்வளவு வித்தியாசமானவள் இந்த பூங்குழலி.

மான்கள், குயில், ஆந்தை ஆகியவையிடத்தில் இருக்கும் பரிவு ஏனோ அவளுக்கு மனிதர்களிடத்து இல்லை. அது ஏன்? தனது ஊமை அத்தையான இலங்கை மாதரசி மந்தாகினியின் துயரவாழ்வு அவளை வெகுவாக காயப்படுத்திருக்க வேண்டியிருக்கும் என்று நாம் யூகித்துக் கொள்ளலாம். தன் அத்தையின் காதலர் சுந்தர சோழரால் கைவிடப்பட்டதாக கருதுகிறாள். அதை எண்ணி எண்ணியே மந்தாகினியால் ஏற முடியாத அரியணையில் தான் ஏறி ஒரு நாட்டின் ராணி ஆவதாக சபதம் செய்து கொள்கிறாள்.

இருப்பினும், இப்பெண்ணின் மனத்தில் உள்ள சோகத்தின் காரணம் இளவரசர் அருள்மொழிவர்மனே. ஆம், சோழ நாட்டின் பெண்கள் அனைவரும் கண்டு மயங்கும் பொன்னியின் செல்வனயே இவளும் காதலிக்கிறாள். இலங்கைக்கு அருள்மொழிவர்மனை அடிக்கடி கடல் வழியே அழைத்துச் செல்கிறாள். தனக்கு இளவரசர் "சமுத்திரக்குமாரி" என்ற பெயர் வைத்ததை வந்தியத்தேவனிடம் சொல்லி பெருமைக் கொள்கிறாள்.

அருள்மொழிவர்மனுக்கும் பூங்குழலியை பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் பூங்குழலியுடன் யானையில் பயணிக்கையில் நம் இருவருக்கும் அதுபோன்ற பைத்தியக்கார எண்ணம் இல்லை என்று சொல்லி, அவர்கள் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

அமுதனுக்கு கடவுளிடம் பக்தி அதிகமா, இல்லை... பூங்குழலியிடம் காதல் அதிகமா என்று கேட்டால் "சிவலோகமே கிடைத்தாலும், பூங்குழலியோடு மண்ணுலகில் வாழ்வதையே விரும்புவேன்" என்பதும், பூங்குழலி அரச குலத்தவரை மணக்க எண்ணி வாழ்வதை அறிந்து அரச குலத்தவரின் அல்லல்பாடுகளையும், அதற்கு மாறாக சிவபக்தியில் மனதைச் செலுத்தி வாழ்வோம் எனக் கூறுவதும் பூங்குழலிக்கு தன் அத்தான் தன்மேல் வைத்துள்ள காதலை உணர்த்துகிறது.

இறுதியாக சேந்தன் அமுதனும் பூங்குழலியும் மணம் புரிந்து கொள்கின்றனர். மணந்தால் ஒரு அரசனை தான் கரம் பிடிப்பேன் என்று சொன்னவள் ஏன் சேந்தன் அமுதனை மணந்தால்? அவளது ராணியாகும் ஆசை நிறைவேறியதா என்பதெல்லாம் கதையின் மிகப்பெரிய ஆச்சர்ய முடிச்சுகள். அதை நான் சொல்ல விரும்பவில்லை.

குறும்புக்காரனான வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன் போன்ற வீரர்கள், சேந்தன் அமுதன் போன்ற பக்திமணி ஆகிய அனைவரையும் கவர்ந்த பூங்குழலி நம்மையும் கவர்ந்து இழுக்கவே வாய்ப்பு அதிகம்.

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி (‘ஜெகமே தந்திரம்’ நாயகி) பூங்குழலியாக நடித்துள்ளார்.

| தொடரும்... |

முந்தைய அத்தியாயம்: PS for 2K கிட்ஸ் - 4 | பொன்னியின் செல்வன் - வந்தியத்தேவன் ‘எவர்கிரீன் ஹீரோ’ ஆனது எப்படி?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்