எம்ஜிஆர் 100 | 65: ஏழைப் பங்காளர்!

By ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. ஏழைப் பங்காளராகவும் எளியோரின் துயர் துடைப்பவராகவும் படங்களில் நடிப்பார். அதற்குக் காரணம், அடிப்படையிலேயே அவர் ஏழை எளியோருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதனால், தனது குணநலனுக்கு ஏற்பவே, தான் நடிக்கும் பாத்திரங்களை தேர்வு செய்தார். அதோடு, சாதாரண மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர். பேசும் வசனங்கள் இன்றைய சூழலுக்கும் பொருந்துவதாக இருக்கும்.

எந்த விவசாயியும் உயிரே போனாலும் தன் நிலத்தைவிட்டுக் கொடுக்க மாட்டான். வெள்ளிவிழா படமான ‘உரிமைக்குரல்’ படத்தில் நிலத்துக்காக போராடி உரிமைக்குரல் கொடுக்கும் விவசாயியாக எம்.ஜி.ஆர். நடித்திருப் பார். கதைப்படி, கடனுக்காக நம்பியார் குடும்பத் திடம் எம்.ஜி.ஆரின் நிலம் அடகு வைக்கப்பட்டிருக் கும். அடகு வைக்கப்பட்ட நிலத்தை வஞ்சகமாக அபகரிக்க நம்பியார் முயற்சிப்பார். நிலம் ஏலத்துக்கு வரும். நகைகளை அடகு வைத்து பணத்தை எம்.ஜி.ஆர். கொண்டுவருவார்.

ஏலம் முடிவதற்குள் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் தனது கோபத்தைக் காட்டும் வகையிலும் ரேக்ளா வண்டியை வேகமாக ஓட்டி வந்து, வண்டியில் அமர்ந்தபடியே பணத்தை ஏலம் நடத்தும் அதிகாரியின் மேஜை மீது எம்.ஜி.ஆர். வீசும் ஸ்டைலே தனிதான்!

ஏலம் முடிந்துவிட்டதாகச் சொல்லி தனக்குத் தான் அந்த நிலம் சொந்தம் என்று நம்பியார் உரிமை கொண்டாடுவார். நிலத்தில் உழச் செல்லும் எம்.ஜி.ஆரையும் தன் அடியாட்களுடன் வந்து தடுப்பார். கிளைமாக்ஸ் சண்டையில் கலப்பையை சுழற்றியபடியே எம்.ஜி.ஆர். சண்டைபோடும் அந்த வேகத்தையும் லாவகத்தையும் அவரால்தான் காட்ட முடியும்.

அந்த சண்டைக்கு முன்பாக தனது நிலத்துக் காக உணர்ச்சிபூர்வமாக எம்.ஜி.ஆர். பேசுவார். படத்தில் நம்பியாரின் பெயர் துரைசாமி. வசனத்தைப் பேசுவதற்கு முன் நம்பியாரை கோபத்துடன் ‘டேய் துரைசாமி’ என்று அழைத்து ஆரம்பிப்பார். தனி வாழ்க்கையில் மட்டுமல்ல; பொதுவாக படத்திலும்கூட எம்.ஜி.ஆர். யாரையும் ‘வாடா, போடா’ என்று பேச மாட்டார். ஆனால், இந்தக் காட்சியில் நம்பியாரை அவரே ‘டேய்’ போட்டு பேசுகிறார் என்றால், தாயாக மதிக்கும் தனது நிலத்தை அபகரிக்க முயற்சிப்பவன் மீதான விவசாயியின் நியாயமான கோபம் அதில் தெரியும்.

‘உரிமைக்குரல்’ படத்தில் ரசிகர்களின் உற்சாக அலப்பறைகளுக்கிடையே, மானமுள்ள விவசாயியின் குரலாக ஒலிக்கும் எம்.ஜி.ஆரின் குரல் அப்படியே இங்கே….

‘‘எங்க பரம்பரைக்கே சோறு போட்டு வளர்த்த பூமி இது. மானம், மரியாதை உள்ள எவனும் உயிர் போனாலும் தன் நிலத்தை மத்தவங்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டான். என் தாய் எனக்கு பாலூட்டி வளர்த்தாங்க. இந்த நிலத்தாய் எனக்கு சோறூட்டி வளர்க்கறாங்கடா. இந்தத் தாயை விட்டுக் கொடுக்கற அளவுக்கு நான் கோழை இல்லடா.

ஒரு பிடி மண்ணுக்காக எந்த தியாகத்தையும் செய்யற பரம்பரையில வந்தவன்டா நான். நூறு என்ன? ஆயிரம் என்ன? லட்சம் பேரை கூட்டி வந்து படை எடுத்தாலும் இந்த மண்ணுலே இருந்து என்னைப் பிரிக்கவே முடியாதுடா. என் ரத்தம் வடிஞ்சா இந்த மண்ணில்தான் கலக்கும். என் உடல் கீழே விழுந்தால் இந்த மண்ணைத்தான் அணைக்கும். என் உயிர் போனாலும் இந்த மண்ணில்தான்டா போகும்.

ஆனா, அந்த நேரத்துல நான் எழுப்பற உரிமைக்குரல், இங்க மட்டுமில்ல, எங்கெங்கே உழைக்கிறவன் இருக்கானோ, எந்தெந்த மண்ணுல அவன் வியர்வைத் துளி விழுதோ, அங்கெல்லாம் என் உரிமைக்குரல் ஒலிச்சுக்கிட்டேதான்டா இருக்கும்.’’

அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய பின், 1974-ம் ஆண்டு வெளியான படம் ‘உரிமைக் குரல்’. அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். மீது தாக்குதல் முயற்சிகள் நடந்தன. மேலே உள்ள எம்.ஜி.ஆர். பேசும் வசனம், அதற்கு மறைமுகமாக அவர் பதில் சொல்வது போலவும் இருக்கும். அதோடு, இன்றைய சூழலுக்கும் அந்த வசனம் பொருந்தும். மீத்தேன் திட்டம், ஷேல் கேஸ் திட்டம், கெயில் நிறுவனத்தின் குழாய் பதிக்கும் திட்டம் ஆகியவற்றால் நிலம் பறிபோவதைக் கண்டு தர்மாவேசம் அடைந்த விவசாயி பேசுவதுபோலவே இருக்கும்.

அதுதான் எம்.ஜி.ஆர். படங்களுக்கு... இல்லை, இல்லை பாடங்களுக்கு உள்ள சிறப்பு.

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம்



எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, சுமார் ரூ.325 கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார். பாசனத்துக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்த, புதிதாக 3.31 லட்சம் பம்ப் செட்களுக்கு மின் இணைப்பு கொடுக்கச் செய்தார். மேலும் பயிர் பாது காப்பு இன்சூரன்ஸ் முறையை எம்.ஜி.ஆர். அமல்படுத்தினார்.

10-ம் தேதி ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் எம்.ஜி.ஆர் தொடரின் 61-ம் பாகத்தில், 1967-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி பெரியார் திடலில் நடந்த கூட்டத்தில் தந்தை பெரியார், எம்.ஆர்.ராதா ஆகியோர் பேசியதாக ‘ஆர்.எம்.வீ. ஒரு தொண்டர்’ என்ற நூலில் ஆர்.எம்.வீரப்பன் கூறியிருந்ததை மேற்கோள் காட்டியிருந்தோம்.

அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். குறித்து அவ்வாறு எதுவும் பேசப்படவில்லை என்றும் இதுபற்றி 2006-ம் ஆண்டு ‘விடுதலை’ நாளிதழில் மறுப்பு வெளியிடப்பட்டதாகவும் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தெரிவித்துள்ளார். ஆர்.எம்.வீரப்பன் அப்போதே தன்னை தொடர்பு கொண்டு, நூலின் அடுத்த பதிப்பில் திருத்தம் வெளியிடுவதாக கூறினார் என்றும் கலி.பூங்குன்றன் நமக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முந்தைய தொடர்களை வாசிக்க: >எம்ஜிஆர் 100

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்