"இந்தக் கள்ளும், பாட்டும், ரத்தமும், போர்க்களமும் எல்லாமே அதை மறக்கத்தான்... அவளை மறக்கத்தான்... என்னை மறக்கத்தான்..."
ஆதித்த கரிகாலனாக பொன்னியின் செல்வன் டீசரில் 'சியான்' விக்ரம் கூறும் வசனம் இது. 01: 21 நிமிடங்கள் ஓடும் டீசரில் 5 பாகங்கள், 50-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள், கிட்டத்தட்ட 250 அத்தியாயங்களைக் கொண்ட புதினத்தில் இருந்து இந்த ஒரு கதாபாத்திரம் பேசும் குறிப்பிட்ட வசனத்தை வைத்தது ஏன்? அவ்வளவு முக்கியமான கதாபாத்திரமா நம் ஆதித்த கரிகாலன்? - வாருங்கள், அறிய முற்படுவோம்.
பொன்னியின் செல்வன் கதையை மக்கள் கொண்டாடும் பல காரணங்களுள் ஒன்று கதாபாத்திரங்களுடன் நம்மை மிகவும் தொடர்புப்படுத்திப் பார்க்கக் கூடியதும் ஆகும். மனிதன் தன் பிறப்பு முதல் இறப்பு வரை பல காரியங்களைச் செய்கிறான். மனிதர்கள் தாம் வாழ்வில் செய்யும் தவறுகள் அனைத்தும் தெரிந்தே வேண்டுமென்று செய்வதாக இருப்பதில்லை. பெரும்பாலானவை கோபம், அறியாமை, பொறுமையின்மை, சந்தர்ப்ப சூழ்நிலையால் நிகழ்வதுண்டு.
ஊருக்கு தன்னை சகல செல்வாக்கும், நிம்மதியும் உடையவராக காட்டிக்கொண்டாலும், தன் வாழ்வின் கசப்பான நிகழ்வுகளையும், செய்த தவறுகளையும் எண்ணியே மனப்போராட்டம் நிகழ்த்திக் கொள்பவர்கள்தான் ஏராளம். அப்படி ஒரு சாமானியர் தொடர்புப்படுத்திப் பார்க்க இயலும் வீரர்தான் நம் ஆதித்த கரிகாலன்.
» PS for 2K கிட்ஸ் - 1 | பொன்னியின் செல்வன் - ஓர் அறிமுகமும் கதைச் சுருக்கமும்
» ‘லாடம் கட்டுவது’ முதல் தூங்க விடாமல் செய்வது வரை - காவல் நிலைய சித்ரவதைகள்
சுந்தர சோழரின் மகனும், குந்தவை மற்றும் அருள்மொழிவர்மரின் அண்ணனும், சோழ சாம்ராஜ்ஜியத்தின் பட்டத்து இளவரசருமானவர் ஆதித்த கரிகாலன். சிறுவயதிலேயே போர் புரியும் குணம் கொண்டவராகவும், தன்னந்தனியே எதிரியை எதிர்த்து நிற்கும் வீரராகவும் திகழ்கிறார். வீரபாண்டியன் தலைகொண்ட பெருமைக்குரியவராகப் போற்றப்படுகிறார்.
இத்தனை பராக்கிரமங்களுடைய இவர் அப்படி எண்ணி எண்ணி வருந்துமளவுக்கு என்னதான் தவறு செய்தார் என்று நீங்கள் கேட்கலாம். சோழ குலமும், மக்களும் கரிகாலரின் மிகப்பெரிய வீரதீர செயலாகக் கருதும் வீரபாண்டியனைக் கொன்ற செயலே தன் வாழ்வின் மிகப்பெரிய தவறாக எண்ணி வருந்துகிறார் ஆதித்த கரிகாலன்.
ஏன் என்று புரிந்துகொள்ள ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் சென்று வருவோம்.
இளம் வயதிலேயே நந்தினி என்ற மதுரையைச் சேர்ந்த அர்ச்சகர் வீட்டுப் பெண்மீது அளவற்ற காதல் கொள்கிறார் ஆதித்த கரிகாலன். காதல் ஒருபுறம் இருக்க, பகை ஒரு புறம் தலைக்கேறுகிறது. ஆதித்த கரிகாலன் தொடுத்த பாண்டியர்களுடனான போரில் வீரபாண்டியன் தப்பி ஒடுகிறார். பின் சிறிது காலத்தில் நந்தினியும் தன் ஊருக்குச் சென்று விடுகிறாள். நந்தினியை மறந்து, தப்பி ஓடிய பாண்டியனைப் பிடிக்க போர் வெறியில் சுற்றுகிறார் ஆதித்த கரிகாலன்.
ஒரு வழியாக பாண்டியன் ஒளிந்திருந்த இடத்தைக் கண்டறிந்து, அவனைக் கொன்று தீர்க்க உள்ளே சென்று பார்த்தால்... கயிற்றுக் கட்டிலில் காயங்களுடன் கிடக்கும் பாண்டியனுக்கு நந்தினி தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்து பணிவிடை செய்து கொண்டிருக்கிறாள். வீரபாண்டியன் தன் காதலன் என்று கரிகாலனிடம் அறிமுகப்படுத்துகிறார் நந்தினி. இதனைக் கேட்ட கரிகாலனுக்கு கோபம் பொங்குகிறது. "என் ராஜ்ஜியத்தை கைப்பற்றியிருந்தாலும் பரவாயில்லை; என் உள்ளத்தில் குடிகொண்ட பெண்ணரசியை அபகரித்து விட்டானே' என்ற கோபம், வெறி, ஆதித்த கரிகாலன் கண்ணை மறைக்கிறது. நந்தினியை காலால் உதைத்துத் தள்ளிவிட்டு பாண்டியன் தலையை வெட்டி வீழ்த்துகிறான்.
பாண்டியனை கொன்றுவிட்டு திரும்பும்போது நந்தினி தன்னை உற்றுப் பார்த்த ஒரு பார்வைதான் கரிகாலனின் மனப் போராட்டங்களுக்கு காரணமாகிறது. அந்தப் பார்வையின் அர்த்தம் விளங்காமலும், அந்தச் சம்பவத்தை மறக்கவும் முடியாமல் அவதிப்படுகிறான்.
ஆண்டுகள் பல கழிந்துபோக மீண்டும் நந்தினியை சந்திக்கிறான் கரிகாலன். ஆனால், பாண்டியனை காதலன் என்று சொன்ன நந்தினி அப்போது 60 வயது நிரம்பிய பெரிய பழுவேட்டரையரை மணந்து சோழநாடு வருகிறாள். நந்தினியை மறக்கவும் முடியாமல், கொன்று புதைக்கவும் முடியாமல், அவள் சோழநாட்டிற்கு எதிராக சதி தீட்டுகிறாள் என்பதை ஏற்கவும் முடியாமல், சாகவும் முடியாமல் அவதிப்படுகிறான் கரிகாலன். அவள் பழுவூர் இளையராணியாக தஞ்சையில் இருப்பதறிந்து தஞ்சை சென்று தந்தையைக் காணவும் இயலாமலிருக்கிறார்.
"இந்தக் கள்ளும், பாட்டும், ரத்தமும், போர்க்களமும்
எல்லாமே அதை மறக்கத்தான்... அவளை
மறக்கத்தான்... என்னை மறக்கத்தான்!"
- இப்படி ஆதித்த கரிகாலன் புலம்ப இப்போது காரணம் புரிந்ததா?
ஒரு நாள் கடம்பூர் சம்புவரையர் மாளிகை விருந்தில் சந்திக்குமாறு பெரிய பழுவேட்டரையர் மற்றும் நந்தினியிடமிருந்து ஓலை வருகிறது. இறுதியாக ஆதித்த கரிகாலனும் நந்தினியும் நேரில் பேசிக் கொள்கின்றனர். உணர்ச்சிப் பொங்க கரிகாலன் பேசி முடிக்க, திடீரென்று விளக்கு அணைகிறது. வெளிச்சம் வந்தபிறகு பார்த்தால், வீரர் ஆதித்த கரிகாலன் வாள் பாய்ந்து இறந்துக் கிடக்கிறான். இவர்கள் இருவர் இருந்த அறையில் வேறு சிலரும் இருந்ததையும் நம்மால் உணர முடியும்.
அப்படியென்றால்... 'ராஜ்ஜியத்திற்காக தம்பியால் அண்ணன் கொல்லப்பட்டார்' என்ற பழி அருள்மொழிவர்மன் மீது வரக்கூடாது என நன்பணைக் காக்க வந்த வந்தியத்தேவன், நந்தினியின் சதி அறிந்து அவளைக் கொல்ல வந்த பழுவேட்டரையர், தான் ஒருதலையாகக் காதலிக்கும் வந்தியத்தேவன் மீது பழி வராமல் தான் பழி ஏற்க வந்த சம்புவரையர் மகள் மணிமேகலை, பாண்டிய நாட்டு ஆபத்துதவி ரவிதாசன்... இவர்களில் யாரால் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டான்?!
தான் நினைத்தபடி பாண்டியனுக்காக நந்தினிதான் பழிவாங்கிவிட்டாளா? இல்லை, ஆதித்த கரிகாலன் யாரும் தொட இயலாத வீரனாக, தன் இத்தனைக் கால மனப்போராட்டம் முற்றுக்கு வர, தன்னை சூழ்ந்திருக்கும் சதியை அறிந்து தன்னைத்தானே மாய்த்துக்கொண்டானா?
கரிகாலன் வாழ்க்கையை நரகமாக்கிய நந்தினி யார்?
ஒரேசமயத்தில் பழுவூர் ராணியாகவும், பாண்டியன் காதலியாகவும், சோழ நாட்டு வாரிசாகவும் எப்படி இருக்க முடியும்?
உண்மையில் யாருடைய மகள் இந்த நந்தினி?
அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.
| தொடரும்... |
முந்தைய அத்தியாயம் > PS for 2K கிட்ஸ் - 1 | பொன்னியின் செல்வன் - ஓர் அறிமுகமும் கதைச் சுருக்கமும்
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago