M.G.R. நடனக் காட்சிகளில் தூள் கிளப்புவார். அவரது ஆட்டத்தில் புயலின் வேகமும் தென்றலின் சுகமும் இருக்கும். திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களையும் ஆடவைப்பது அவரது ஆட்டத்தின் சிறப்பு.
‘மதுரை வீரன்’ படத்தில், ‘ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா?...’, ‘ராஜா தேசிங்கு’ படத்தில், ‘கானாங்குருவி காட்டுப் புறா...’ ஆகிய பாடல்களில் பத்மினியுடன் எம்.ஜி.ஆர். ஆடும் நடனங்கள், ‘மன்னாதி மன்னன்’ படத்தில் பத்மினியுடன் ஆடும் போட்டி நடனம், ‘கலங்கரை விளக்கம்’ படத்தில், ‘பல்லவன் பல்லவி பாடட் டுமே…’ பாடலில் அவரது பரத நாட்டிய அபிநயங் கள், ‘மீனவ நண்பன்’ படத்தில், ‘பட்டத்து ராஜாவும்…’ பாடலுக்கு அவர் போடும் ஸ்டெப்ஸ் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
சுருக்கமாக, படங்களில் எம்.ஜி.ஆர். ஆடிய எல்லா நடனக் காட்சிகளுமே ‘டாப்’ என்று சொல்லிவிடலாம். என்றாலும், இரண்டு நடனக் காட்சிகள் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாதவை. ‘அன்பே வா’ படத்தில் ‘நாடோடி, நாடோடி…’ பாடலிலும், ‘குடியிருந்த கோயில்’ படத்தில் ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு…’ பாடலிலும் அமர்க்களப்படுத்தியிருப்பார்.
எம்.ஜி.ஆரின் மிகப் பெரிய பலமே தனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் அடக்கத்தோடு இருப் பதுதான். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை பத்மபிரியா, ‘‘உங்களை தாழ்த்திக் கொண்டே உயர்ந்து விடுகிறீர்கள்’’ என்று கூறுவார். இந்த வசனம் எம்.ஜி.ஆருக்கு முற்றிலும் பொருந் தும். வழக்கம் போல, தனது இந்த அடக்க குணம் காரணமாக முதலில் ‘அன்பே வா’ படத்தின் பாடலுக்கு ஆட எம்.ஜி.ஆர். மறுத்துள்ளார்.
இயக்குநர் திருலோகசந்தரை எம்.ஜி.ஆர். அழைத்து, ‘‘நாடோடி, நாடோடி… பாடலுக்கு நவீன ஆங்கில இந்திய ‘கதக்’ பாணி களில் நடன அசைவுகளை நடன இயக்குநர் சோப்ரா அமைத்துள்ளார். என் னால் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். யாராவது நடனக்காரப் பையனை ஆடச் சொல்லி படமாக்கிவிடுங்கள். என் ‘குளோஸ் அப்’களை அங் கங்கே சேர்த்துக் கொள்ள லாம்’’ என்றார்.
ஆனால், திருலோகசந்தருக்கு எம்.ஜி.ஆரின் திறமை தெரியும். இருந்தாலும் எம்.ஜி.ஆர். சொல்லும்போது உடனே மறுத்தால் மரியாதை இல்லை என்பதால் அப்போதைக்கு சரி என்றார். அவர் சொன்னபடியே, ஒரு இளைஞரை வைத்து நடனக் காட்சியில் சில ஷாட்களை எடுத்தார். அவர் மனதில் வேறொரு திட் டம் இருந்தது. பின்னர், பாடல் காட்சியை படமாக்க வேண்டிய நாள் வந்தது. திருலோகசந்தரிடம் எம்.ஜி.ஆர். ‘‘அந்த இளைஞர் ஆடிய நடனக் காட்சிகளைப் பார்க்கலாமா?’’ என்றார்.
திருலோகசந்தர் ஏற்கெனவே போட்டு வைத்திருந்த திட்டப்படி, ‘‘எடிட்டர் ஊரில் இல்லை. அந்த ஷாட்களை எங்கே வைத்திருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நான் படமாக்கிய காட்சிகள் நினைவில் இருக்கின்றன. இப்போது உங்களை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்துவிடுவோம்’’ என்றார்.
திருலோகசந்தரும் நடன இயக்குநர் சோப்ரா வும் கேமராமேன் மாருதி ராவும் ஏற்கெனவே பேசி வைத்துக் கொண்டபடி வேலையைத் தொடங் கினர். எம்.ஜி.ஆர். அட்டகாசமாக ஆடினார். ‘ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள்..’ என்று அந்தப் பாடலில் வரும் வரியின்போது அதற்கேற்ற மூவ்மென்ட்களை ஊதித் தள்ளினார். பாடலுக்கு ஆடிய நடனக் கலைஞர்கள் உட்பட யூனிட்டில் இருந்த எல்லோரும் அசந்து போய் நின்றனர்.
பின்னர், எம்.ஜி.ஆரிடம் திருலோகசந்தர் உண் மையைக் கூறி, ‘‘இளைஞர் ஆடிய ஷாட்களை பார்க்கிறீர்களா?’’ என்று கேட்டு போட்டுக் காட்டினார். எம்.ஜி.ஆர். ஆடியதில் பத்தில் ஒரு பங்கு கூட அந்த இளைஞர் ஆடவில்லை என்பது தெரிய வர, திருலோகசந்தரின் தோளைத் தட்டி, சிரித்தபடியே எம்.ஜி.ஆர். எழுந்துவிட்டார்.
இதேபோலத்தான், ‘குடியிருந்த கோயில்’ படத் தில், ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு...’ பாடலுக்கும் நடனமாட முதலில் எம்.ஜி.ஆர். மறுத்தார். பாடலில் அவருடன் கூட ஆடுபவர் எல்.விஜயலட்சுமி என்ற நடிகை. மிகப்பெரிய டான்ஸர். ‘பஞ்சாப் பாங்க்ரா’ நடனக் காட்சி இடம் பெற்ற பாடல் அது. ‘‘மூவ் மென்ட் தவறினால் தப்பா இல்ல ஆயிடும்’’ என்று எம்.ஜி.ஆர். தயங்கினார். ‘‘அண்ணே, உங்க திறமை எனக்குத் தெரியும். டான்ஸ் மாஸ்டர் சொல்றதை அப்படியே நீங்க ஆடணும்னு இல்லை. உங்களுக்கு பிடிக்கலைன்னா அப்புறம் தூக்கிடுவோம்’’ என்றார் இயக்குநர் கே.சங்கர்.
நடனத்துக்காக பயிற்சி எடுத்துக் கொண்டு மிகச் சிறப்பாக ஆடி முடித்தார் எம்.ஜி.ஆர்.! இன்றும் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் பாடல் காட்சி அது. அதன் பின்னர், பல படங்களிலும் ‘பஞ்சாப் பாங்க்ரா’ நடனக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்றாலும், எம்.ஜி.ஆரின் நடனம் போல அமையவில்லை.
‘இதயக்கனி’ படத்தில் ‘அழகை வளர்ப்போம் நிலவில் மயங்கி...’ என்று தொடங்கும் கவிஞர் நா.காமராசனின் அருமையான பாடல். கதைப் படி, போலீஸ் அதிகாரியான எம்.ஜி.ஆர்., மாறுவேடத்தில் வில்லன் கோஷ்டியினர் இடத்துக்குச் செல்வார். அங்கு அளிக்கப்படும் விருந்தின்போதுதான் இந்தப் பாடல் காட்சி.
இந்தப் பாடலிலும் நடிகைகள் ராதா சலூஜா, ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா ஆகியோருக்கு ஈடு கொடுத்து ஆடி எம்.ஜி.ஆர். அசத்தியிருப்பார். பாடல் முடிந்ததும், வில்லியாக நடிக்கும் நடிகை ராஜசுலோசனாவும் அவரது கையாளாக வரும் நடிகர் ஆர்.எஸ். மனோகரும் எம்.ஜி.ஆரிடம் ‘‘பிரமாதமாக ஆடினீர்கள்’’ என்று பாராட்டுவார்கள்.
அதற்கு, வில்லன் கோஷ்டியை கிண்டல் செய்யும் வகையிலும் அப்போதைய சூழலில் தனது அரசியல் எதிரிகளுக்கு பதில் சொல்லும் வகையிலும் எம்.ஜி.ஆர். கூறும் பதிலால் தியேட்டரே அதிரும். தனது ஆட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்ட வில்லன் கோஷ்டிக்கு எம்.ஜி.ஆரின் பதில் இது...
‘‘நீங்க போட்ட ஆட்டத்தை விடவா?’’
- தொடரும்...
படங்கள் உதவி: ஞானம்
நடிகர்களைக் கூத்தாடிகள் என்று சமூகம் கேவலமாக பேசிய காலம் இருந்தது. நடிகர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கக்கூட யோசிப்பார்கள். அதை மாற்றி நடிகர்களுக்கு மரியாதையும் சமூக அந்தஸ்தும் கிடைக்க எம்.ஜி.ஆர்.காரணமாக இருந்தார். படங்களில் பாடி, ஆடி நடிக்க மட்டுமல்ல, நடிகனுக்கு நாடாளவும் தெரியும் என்பதை முதன்முதலில் உலகுக்கு நிரூபித்தவர் எம்.ஜி.ஆர்.!
முந்தைய தொடர்களை வாசிக்க: >எம்ஜிஆர் 100
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago