கர்னாடக இசை மேதை
சிறந்த சங்கீத வித்வானும், பல கீர்த்தனைகளை இயற்றியவருமான மைசூர் வாசுதேவாச்சார் (Mysore Vasudevachar) பிறந்த தினம் இன்று (மே 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# கர்நாடக மாநிலம் மைசூரில் இசை பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் (1865) பிறந்தார். இயல்பாகவே இசை ஞானமும், ஆர்வமும் கொண்டிருந்தார். மைசூர் மகாராஜா சமஸ்கிருதக் கல்லூரியில் காவியங்கள், இலக்கணம், நாடகம், அலங்காரம், தர்க்க சாஸ்திரம், இதிகாசம், புராணங்களை கற்றுத் தேர்ந்தார்.
# சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னட மொழிகளில் புலமை பெற்றிருந்தார். மைசூர் வீணை பத்மபநாபய்யாவிடம் சிறு வயதிலேயே இசை பயின்றார். இவரது இசை ஆற்றலை அறிந்த மைசூர் மகாராஜா, இவரை திருவையாறுக்கு அனுப்பி, பட்டணம் சுப்பிரமணிய ஐயரிடம் இசை கற்க ஏற்பாடு செய்தார். அங்கு இவரது குருகுல வாசம் தொடங்கியது.
# சில சமயம், பாடல் வரிகள் இயற்றுவதற்கு குரு தனது சீடரை உதவிக்கு அழைப்பார். நாளடைவில் சுயமாக பாடல் வரிகள் எழுதும் திறன் பெற்றார் வாசுதேவாச்சார். இசை பயின்று மைசூர் திரும்பியவர், மைசூர் அரண்மனையின் ஆஸ்தான வித்வானாக நியமிக்கப்பட்டார்.
# விரைவில் சிறந்த பாடல் ஆசிரியராக, பாடகராகப் புகழ்பெற்றார். பத வர்ணங்கள், தாள வர்ணங்கள், கிருதிகள், தில்லானாக்கள், ராகமாலிகைகள், ஸ்லோகங்கள் என 200-க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். இவரது பல பாடல்கள் ராம பக்திப் பாடல்கள். பெரும்பாலும் சமஸ்கிருதம், தெலுங்கில் எழுதினார்.
# வழக்கமான ராகங்களுடன் மேகரஞ்சனி, புஷ்பலதிகா போன்ற அரிய ராகங்களையும் பயன்படுத்தினார். ‘ப்ரோச்சே வாரெவரு ரா’ ‘ஸ்ரீ ராமசந்திரா’, ‘ஸ்ரீ மஹாலஷ்மிம்’ போன்ற பாடல்கள் பிரசித்தம்.
# ‘‘பாடுவதற்கு இனிமை, பக்தி, பாவம் (உணர்ச்சி வெளிப்பாடு) இந்த மூன்றும் மிகவும் அவசியம். பாடல்களை நேர்த்தியாகவும், அர்ப்பணிப்பு உணர்வோடும் பாட வேண்டும்’’ என்பார். திரைப்பட பாடல்களையும் ஆர்வத்துடன் கேட்கும் பழக்கம் கொண்டவர்.
# ‘சீதா கல்யாணம்’ நாட்டிய நாடகத்துக்கு இசையமைத்தார். ‘நெனபுகலு’ என்ற சுயசரிதை, தான் சந்தித்த இசைக் கலைஞர்கள் பற்றிய ‘நா கண்ட கலாவிதரு’ என்ற நூல் ஆகியவற்றையும் எழுதினார். தான் இயற்றிய கீர்த்தனைகளை ‘வாசுதேவ கீர்த்தன மஞ்சரி’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.
# சங்கீதம் குறித்து பல நுணுக்கமான விவரங்களை அறிந்தவர். ஏராளமான சிஷ்யர்களுக்கு இசை கற்பித்தார். சமஸ்கிருத மொழியை வளர்க்கப் பாடுபட்டார். சமஸ்கிருதம், இசை குறித்த ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார். இறுதிக்காலத்தில் ருக்மணி அருண்டேலின் அழைப்பை ஏற்று கலாஷேத்ராவில் சேர்ந்தார். விரைவில் அதன் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
# இவரது இசைப் பயணம் 60 ஆண்டுகாலம் தொடர்ந்தது. பல அரசர்கள், மடாதிபதிகளால் போற்றப்பட்டார். பத்ம பூஷண், சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருது, மைசூர் ஆஸ்தான சங்கீத சாஸ்திர ரத்தினம், சங்கீத சாஸ்திர விஷாரத், சரஸகான சிரோன்மணி என பல விருதுகளைப் பெற்றவர்.
# தென்னிந்தியாவின் தலைசிறந்த கர்நாடக இசை நட்சத்திரமாகப் பிரகாசித்தவரும் சமஸ்கிருதம், இசை ஆராய்ச்சி, வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவருமான மைசூர் வாசுதேவாச்சார் 96-வது வயதில் (1961) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago