சோமசுந்தர புலவர் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

இலங்கை தமிழறிஞர்

‘தங்கத் தாத்தா’ என்று போற்றப்பட்ட இலங்கை தமிழறிஞரான சோமசுந்தர புலவர் (Somasundara Pulavar) பிறந்த தினம் இன்று (மே 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலி என்ற ஊரில் (1878) பிறந்தார். தந்தையிடமும், நவாலியூர் அருணாசல உபாத்தியாயரிடமும் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் கற்றார். உறவினர் ராமலிங்க உபாத்தி யாயரிடமும் மானிப்பாய் மாரிமுத்து விடமும் ஆங்கிலம் கற்றார்.

# சிறு வயதிலேயே பேச்சாற்றலும், விவாதத் திறமையும் ஒருங்கே பெற்றி ருந்தார். ஏராளமான பாடல்கள் இயற்றினார். அட்டகிரி முருகன் பதிகம், அட்டகிரி முருகன் திருஊஞ்சல், சாவித்திரி கதை, பசுவின் கதை உள்ளிட்ட நூல்கள் இவர் இளம் வயதில் இயற்றியவை.

# ஆசிரியப் பணியிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். வட்டுக்கோட்டையில் இருந்த சின்னத்தம்பி ஆசிரியருடன் இணைந்து ஆங்கிலப் பாடசாலை தொடங்கினார். அங்கு 40 ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், இதிகாசம் கற்பித்தார். ‘சைவ வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, சமயப் பாடங்களைக் கற்பித்தார்.

# ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும்கூட, மாணவர்களுக்கு சைவ சித்தாந்தம் உள்ளிட்ட இலக்கிய வகுப்புகளை நடத்தி தமிழ்த் தொண்டு ஆற்றினார். கலித்தொகை, திருக்குறள், திருக்கோவையார், சிவஞான போதம், கந்தபுராண செய்யுள்களைத் தெளிவாகவும், அழகாகவும், நகைச்சுவையுடனும் நடத்தி மாணவர்களுக்கு விளங்க வைப்பார்.

# பதிகம், ஊஞ்சல், கலம்பகம், நான்மணி மாலை, அட்டகம், அந்தாதி, சிலேடை வெண்பா என பல வடிவில் பாடல்கள் பாடியுள் ளார். 400-க்கும் மேற்பட்ட அடிகள் கொண்ட கலிவெண்பா பாவகையில் அமைந்த தாலவிலாசம் மிகவும் பிரசித்தம்.

# யாப்பிலக்கணங்கள் கற்பதற்கு முன்பாகவே பல தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். இதனால், இவரை ‘வரகவி’ என்று அழைத்தனர். ‘உயிரிளங்குமரன்’ என்ற நாடகமும் எழுதியுள்ளார். இது அட்டகிரி கந்தசுவாமி கோயிலில் அரங்கேற்றப்பட்டது.

# ‘சைவபாலிய சம்போதினி’ என்ற சைவ சித்தாந்த மாத இதழை 1910-ல் தொடங்கி, 5 ஆண்டுகள் நடத்தினார். 1927-ல் ஈழத்து தென்னிந்தியத் தமிழ் அறிஞர்கள் இவருக்குப் பொற்கிழியும் புலவர் பட்டமும் வழங்கினர்.

# ஆங்கில ஆட்சியை எதிர்த்து தேசிய விழிப்புணர்வைத் தூண்டும் பாடல்களை எழுதினார். கந்தவனக் கடவை நான்மணிமாலை, தந்தையார் பதிற்றுப்பத்து, நல்லையந்தாதி, நல்லை முருகன் திருப்புகழ், கதிரைமலை வேலவர் பதிகம் ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகள்.

# குழந்தைகளுக்கான ஆடிப்பிறப்பு, கத்தரிவெருளி, புளுக்கொடியல், பவளக்கொடி, இலவுகாத்தகிளி உள்ளிட்ட ஏராளமான பாடல்களை இயற்றி சிறுவர் இலக்கிய முன்னோடி என்ற பெருமை பெற்றார். தாடி அறுந்த வேடன், எலியும் சேவலும் உள்ளிட்ட இவரது கதைப் பாடல்கள் சிறுவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை.

# தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகப் போற்றினார். ஏறக் குறைய 15 ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார். சிறுவர்களுக்காக இவர் பாடிய பாடல்கள் ‘சிறுவர் செந்தமிழ்’ என்ற பெயரில் 1955-ல் நூலாக வெளிவந்தது. சிலேடை வெண்பா இயற்றுவது இவரது தனிச்சிறப்பு. தமிழுக்காக 60 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டாற்றிய ‘தங்கத் தாத்தா’ நவாலியூர் சோமசுந்தர புலவர் 75-வது வயதில் (1953) மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்