ஞானபீட விருது பெற்ற ஒடிசா கவிஞர்
ஞானபீட விருது பெற்ற ஒடிசா கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சச்சிதானந்த ராவுத்ராய் (Sachidananda Routray) பிறந்த தினம் இன்று (மே 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# ஒடிசா மாநிலம் குர்தா மாவட்டத்தில் உள்ள குருஜங் என்ற இடத்தில் (1916) பிறந்தார். இன்றைய கிழக்கு வங்காளத்தில்தான் வளர்ந்தார். அங்கேயே கல்வி பயின்றார். பள்ளிப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்.
# 11 வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். ‘பாதேய’ என்ற முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தபோது இவருக்கு 16 வயது. புரட்சிகர கருத்துகள் கொண்ட இவரது கவிதைகள் பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்டன.
# சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் அனைத்திலும் தீவிரமாகப் பங்கேற்று பலமுறை சிறை சென்றார். பட்டப்படிப்பை முடித்து, கொல்கத்தாவில் 30 ஆண்டுகள் பணியாற்றினார். இவரது நீண்ட கவிதையான ‘பாஜி ராவுத்’ 1939-ல் வெளிவந்த பிறகு பிரபலமானார். இது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்த ஒரு சிறுவனைப் பற்றியது.
# இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்த இக்கவிதை சிறிய மகா காவியமாகப் போற்றப்படுகிறது. மிகவும் பாராட்டப்பட்ட மற்றொரு கவிதைத் தொகுப்பு ‘பல்லீ’. கிராமப்புறத்தின் எளிமை, கிராம வாழ்க்கையின் ஆனந்தம் ஆகியவற்றையும் இவரது கவிதைகள் வெளிப்படுத்தின.
# சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பின்னர், ஒடிசாவுக்கு வெளியேயும் இவரது புகழ் பரவியது. ‘பாண்டுலிபி’, ‘அபிஜான்’ போன்ற கவிதைத் தொகுப்புகள் வெளிவந்த பிறகு, ஒடிசா நவீன கவிதை யுகத்தின் முன்னணிக் கவிஞராகப் போற்றப்பட்டார்.
# ஒடிசா கவிதைகளுக்கு புதிய மரபு, புதிய பாணியை வகுத்துத் தந்தார். கதைகளில் பேச்சுமொழியைப் பயன்படுத்தினார். ஓரளவு படித்தவர்கள்கூட புரிந்துகொள்ளும் விதத்தில் இவரது படைப்புகள் எளிமையாக இருந்தன.
# கதை, நாடகம், நாவல்கள் எழுதுவதிலும் சிறந்து விளங்கினார். 18 கவிதைத் தொகுப்புகள், 4 கதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு காவிய நாடகம், 3 விமர்சன நூல்களைப் படைத்துள்ளார். 1935-ல் வெளியான இவரது ‘சித்ரக்ரீவ்’ நாவல் மிகவும் பிரசித்தி பெற்றது. ‘வசந்த் கே ஏகாந்த் ஜிலே மே’ காவியம் ஆங்கிலத்திலும் இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
# இவரது கதைகள் பெரும்பாலும் பாட்டாளிகள், விவசாயிகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், நலிவுற்றோரைப் பற்றியே இருந்ததால் வெகுஜனங்களை அதிகம் கவர்ந்தன. மனித உரிமைகளை வலியுறுத்தும் விதமாகவும், மோசமான சமூக கட்டமைப்புக்கு எதிராகவும் இவரது படைப்புகள் திகழ்ந்தன.
# இலக்கியப் பங்களிப்புகளுக்காக 1986-ல் இவருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் ஒடிசா கவிஞர் இவர். பத்ம, சாகித்ய அகாடமி, சோவியத் லேண்ட் நேரு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஆந்திர பல்கலைக்கழகம், பிரம்மபூர் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. பல்வேறு நாடுகளில் நடந்த இலக்கிய மாநாடுகளில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டார். ‘ஒடிசா கலா பரிஷத்’ என்ற அமைப்பை உருவாக்கினார்.
# 50 ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியத்தின் அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து, ‘ஜனங்களின் படைப்பாளி’ என்று போற்றப்பட்ட சச்சிதானந்த ராவுத்ராய் 88-வது வயதில் (2004) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago