இரப்போர்க்கு ஈந்துவக்கும் ஈகைத் திருநாள் 

By செய்திப்பிரிவு

இறைவன் ஆணையை சிரமேற் தாங்கிரமலான் மாதம் பகல் முழுவதும் உண்ணாமல், பருகாமல் நோன்பிருந்து, பின்னர் இரவைப் பகலாக்கி விழித்திருந்து, தனித்திருந்து அவனது அருளுக்காக அழுது தொழுது தவம் கிடந்த அடியார்கள், இறை இல்லம் நோக்கித் தங்கள் முழுக் கூலியையும் பெற்றிட அடி எடுத்து வைக்கும் அற்புதமான நாள் இது!

ஆண்டவனும், தன் சங்கைமிகு நல்லடியார்களுக்குக் கூலியைத் தானே நேரில் வழங்கிட நிர்ணயித்துள்ள நன்நாள்!

இன்றுதான் அல்லாஹ் தன் வானவர்களை நோக்கி, வானவர்களே! முஹம்மது (ஸல்) அவர்களுடைய சமுதாய மக்களாகிய என் நல்லடியார்கள் ரமலான் மாதத்தில் நோற்ற நோன்பிற்கும் ஆற்றிய வணக்கத்திற்கும், செய்த நற்பணிகளுக்கும் ஈடாக தன் முழு பொருத்தத்தையும் முழு மன்னிப்பையும் வழங்குகிறேன் என்று முழங்கிடும் பொன்னான நாள்.

பெருமானார் (ஸல்) அவர்கள், மாநிலந்தனக்கோர் மணி விளக்காக தீன் எனும்பயிர்க்கோர் செழுமழையாக அவதரித்தவர்கள். அவர்களது சொல், செயல், வாக்கு, வாழ்வு, மனித குலம் அனைத்திற்கும் மாமருந்தாக அமைந்த ஒன்று.

தான் உண்பதையே பிறரும் உண்ணச் செய்ய வேண்டும். தான் உடுத்துவதையே பிறரையும் உடுத்தச் செய்ய வேண்டும். இரப்போர்க்கு தன்னிடம் உள்ளதில் நல்லவற்றையே ஈதல் வேண்டும் என்பது நபிகளார் வாக்கு. நபிகளார் ‘என் ஈரல்குலை’ என்று ஏற்றமாகச் சொல்லும் மகளார்,முத்தான முத்து, முழு முத்து ஹழ்ரத் பாத்திமா (ரலி) அவர்கள் திருமணம் நிகழ்கிறது. மணமகளுக்கு அழகான ஆடை அணிவிக்கிறார்கள். மறுநாள் மகளார் வாசலில்யாசகர் ஒருவர் வந்து ‘‘உடுத்த துணிஇல்லை; உடுத்திட துணி ஒன்று தாருங்கள் என்று இரக்கிறார். நாயகியார் உள்ளே போகிறார்கள். தான் அணிந்திருந்த புத்தாடையைக் கழற்றிவிட்டு பழம்புடவையைத் தான் கட்டிக்கொண்டு புத்தாடையை, யாசித்தவருக்கு வழங்குகிறார்கள்.

மகளைப் பார்க்க வந்த நபிகளார், பழம்புடவையுடன் காட்சி தந்த மகளை நோக்கித் திடுக்கிட்டு, ‘‘என் அருமை மகளே! உனது புத்தாடை எங்கே?’’ என்று கேட்கிறார்கள். ‘‘யாசகருக்கு வழங்கி னேன்’’ என்கிறார்கள் மகளார்.

‘‘ஏன் மகளே! பழம்புடவையை கொடுத்திருக்கலாமே?’’ என்றார்கள் நபி(ஸல்) அவர்கள். ‘‘அருமைத் தந்தையே! அழகியபொருளையே இரப்போர்க்கு வழங்கிஅல்லாஹ்வின் அருள் பெற வேண்டும்எனத் தாங்கள்தானே அறிவுறுத்தினீர்கள்!’’ என ஹழ்ரத் பாத்திமா (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள். ‘கற்றவன் யார்? என்றவினாவுக்கு கற்றவன் கற்றபடி நிற்பவன்’ என விடையளித்தார்கள் நபி(ஸல்) அவர்கள்.

மக்களில் மிகக் கொடியவர்கள் தீய அறிஞர்களே என்பது நபிமொழி. கற்ற கல்வியைச் செயல்படுத்தாதவர்கள் தீயவழியில் செல்கின்றவர்கள்தாம் என்றார்கள்.பள்ளிவாசல்களில் ஒரு பகுதியைக் கல்விக்கூடமாக அமைத்து அறிவொளிக்கு வித் திட்டவர் அண்ணலார்.

பிற உயிர்களையும் உடமைகளையும் பாதுகாப்பது, பிறர் உரிமைகள், விருப்பங்களை மதிப்பது, பிறர் உள்ளத்தைப் புண்படுத்தாமல் இருப்பது, பிறர் கருத்துகளுக்கு மதிப்பளிப்பது ஆகியவற்றை வற்புறுத்தினார்கள். தீய செயல்கள் தீமை பயப்பதால் அவற்றை வெறுத்தார்கள்.

முஹம்மது முஸ்தஃபா நூரி

இந்த ஈந்துவக்கும் திருநாளன்று ஈத்காஹ்விற்கு போகும் முன் இனிப்பான ஈத்தம்பழம் போன்றவற்றை ஒத்தப்படையில் உண்ண வேண்டும். தவறாது குளித்து, தன்னிடமுள்ள ஆடைகளில் உயர்வான ஆடையை அணிந்து, நறுமணம் பூசி, இறைஇல்லத்திற்கு அல்லது ஈத்காஹ்விற்குப் புறப்பட வேண்டும். ஸதக்கத்துல் பித்ரு தருமத்தை முன் கூட்டியே ஏழைகளுக்கு இன்முகத்தோடு வழங்க வேண்டும். தங்களால் எந்த அளவு அதிகமாக தேவையுள்ளவர்களுக்குக் கொடுக்க முடியுமோ அந்த அளவு கொடுப்பது சிறப்பாகும்.

அன்று அதிகாலையிலேயே விழித்தெழுந்து, குளித்து, மனைவி மக்களுடனும், மற்றவர்களுடனும், அன்போடும், மகிழ்ச்சியோடும் உறவாடுவதும், பெருநாள் தொழுகையை நிறைவேற்ற ஈத்காஹ் பள்ளிக்கு விரைந்து முன்கூட்டியே செல்வதும் போற்றற்குரியதாகும்!

நம் மஹல்லா பள்ளிவாசலில் அன்றைய பஜ்ருத் தொழுகையைத் தொழுவது ஏற்றமாகும். பெருநாள் தொழுகைக்கு முடிந்தமட்டும் கால்நடையாகவே போக வேண்டும்.அப்படி நடந்து செல்லும்போது, ‘அல்லாஹுஅக்பர்... அல்லாஹு அக்பர்... லா இலாஹாஇல்லல்லாஹூ வல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து’என்று மெதுவாகச் சொல்லிக்கொண்டு போக வேண்டும். போகும்போது ஒரு பாதையிலும், வரும்போது ஒரு பாதையிலும் வரவேண்டும்.

ஈகைத் திருநாளன்று, நல்லறம் பேணி,இரப்போர்க்கு ஈந்து, உற்றார் உறவினர்களை உற்சாகப்படுத்தி, பெருமானார் காட்டிய வழியில் வாழ்ந்து சிறந்திட இறைவனை வேண்டுவோம்!

கட்டுரையாளர்

அமீருல்ஹிந்த், முஜாஹிதே மில்லத்

மௌலானா எல்.முஹம்மது முஸ்தஃபா நூரி,

முன்னாள் தலைமை இமாம்

வக்ஃபு வாரியக் கல்லூரி பள்ளிவாசல், மதுரை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE