பேனா மூலம் பேய்களைப் பிடித்தவர்!

By கிங் விஸ்வா

பால்ய வயதில் கனவுகள்வரை துரத்தி நம்மைப் பயமுறுத்திய விஷயங்கள் இரண்டு. ஒன்று, வீட்டுப்பாடம். இன்னொன்று, பேய். வீட்டுப்பாடத்தில்கூட வீட்டில் இருப்பவர்கள் யாராவது உதவுவார்கள். ஆனால், கனவுகளில் பேயை நாம் தனியாகத்தான் சந்திக்க வேண்டும். இந்தப் பேய்களை வைத்தே கதை எழுதி நம்மைக் கலவரப்படுத்தியவர்களில் முக்கியமானவர் பி.டி.சாமி.

தொடர்ந்து 45 ஆண்டுகள் பேய்க் கதைகளையே சலிக்காமல் எழுதிப் புகழ் பெற்றவர் அவர். அவரைப் பற்றி இன்றைய தலை முறையினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இணையத்திலும் அவரைப் பற்றி அதிக விவரங்கள் இல்லை. எனினும், ஒரு குறிப்பிட்ட வகை எழுத்தில் பல ஆண்டுகள் கவனம் செலுத்திய எழுத்தாளர் அத்தனை சுலபமாக நினைவடுக்கில் இருந்து தவறிவிடக் கூடாது.

நாகர்கோவிலில் உள்ள மறவன் குடியிருப்பில் 1930-ம் ஆண்டு பிறந்த நாஞ்சில் பி.டி.சாமி, இந்தியா விடுதலை அடைந்த பின்னர், பரவலாக எழுதத் தொடங்கினார். பதின்ம வயது களிலேயே எழுத ஆரம்பித்ததாலோ என்னவோ, அவர் தேர்ந்தெடுத்த எழுத்து வகையும் இளைஞர்களைக் குறிவைத்தே இருந்தது: மரும நாவல்கள்! ஆமாம், அப்போதெல்லாம் அட்டையில் 'மரும நாவல்' என்றுதான் குறிப் பிடப்பட்டு இருக்கும்.

ஆரம்பத்தில் சிறிய அளவில் எழுதிவந்த சாமி, 50-களின் பின்பகுதிகளில் பிரபலமான எழுத்தாளராகிவிட்டார். அந்தக் காலகட்டத்தில் மர்மக் கதையுலகில் இயங்கிவந்த சிரஞ்சீவி, மேதாவி, சந்திரமோகன் போன்றோருக்கு மத்தியில் தனக்கென்று ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கிக்கொண்டார். பேய்க் கதை மட்டுமல்லாமல் நாடக ஆசிரியர், திரைப்படக் கதாசிரியர், வசனகர்த்தா, சித்திரக்கதை எழுத் தாளர் என்று பலமுகம் காட்டினார்.

திரைக்கதையாசிரியராக…

பெயர் குறிப்பிடப்படாமல் இவரது கதைகள் பல படங்களில் இடம்பெற்றுள்ளன. முதன்முதலில் இவரது பெயர் திரைப்பட வசனகர்த்தாவாக இடம்பெற்றது ஜெய்சங்கர் ஹீரோவாக நடித்த ஹோட்டல் சொர்க்கம் படத்தில்தான். அதன் பிறகு இவர் வேறு சில படங்களுக்கும் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். புனித அந்தோணியார் என்ற ஆன்மிகப் பின்னணி கொண்ட படத்திலும் இவர் பணியாற்றியிருக்கிறார். புகழின் உச்சியில் இருந்தபோது இவர் தயாரித்த ஒரு திரைப்படம் வெளிவராமல் நின்றுபோனது. ‘பாடும் பச்சைக் கிளி' என்ற அந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் இயக்கமும் இவர்தான். பச்சைக் கிளி அவருக்கு ஆறாத வடுவைத் தந்துவிட்டது.

சித்திரக்கதையில் முத்திரை

அறுபதுகளில் தமிழகத்தின் மூலைமுடுக்குகளி லெல்லாம் இவரது பெயர் பரவ ஆரம்பித்தவுடன் ஆனந்த விகடன் போன்ற வாரப் பத்திரிக்கைகள் இவரது சித்திரக்கதைகளைத் தொடர்ந்து வெளி யிட்டன. பின்னர் 80-களில் இவருக்காகவே தொடங் கப்பட்ட மீனா காமிக்ஸ் என்ற சித்திரக்கதை பத்திரிகை இவரது படைப்புகளை வெளியிட்டு வந்தது.

ஆபத்து, திகில், ரத்தம் என்று படிப்பவர்களைப் பதறவைக்கும் எழுத்து என்பதாலோ என்னவோ, நாவல்களின் அட்டையில் சிவப்பு வண்ணத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். மாருதி, ஜமால், மாலி, மதுரை சி. ராஜா போன்ற பிரபல ஓவியர்கள் இவரது நாவல்களின் அட்டைப் படங்களை வரைந்தனர். குறைந்தபட்சம் 60 பக்கங்கள் முதல் 200 பக்கங்கள் வரை இவரது நாவல் அளவு இருக்கும் (தொடர்கதைகளைப் பொறுத்தவரை 13 பாகம் முதல் 39 பாகம் வரை எழுதியிருக்கிறார்).

பல வார, மாதப் பத்திரிகைகளில் இவரது அமானுஷ்ய தொடர்கதைகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு தொடரின் முடிவிலும் வாசகரை நோக்கி ஒரு தூண்டிலைப் போடுவதுபோலத் திகிலூட்டும் திருப்பங்களுடன் முடிச்சு வைப்பது இவரது தனி பாணி. ஆவியோடு பேச உதவும் ஓஜா பலகை, வூடு சூன்யம் போன்ற பல விஷயங்கள் வாசகர்களைச் சில்லிடவைக்கும்.

இறுதிக் காலம்

ஒரு காலத்தில் மாதம் 5 முதல் 10 நாவல்கள் எழுதிவந்த இவர், 90-களுக்குப் பிறகு எழுதுவதைக் குறைத்துக்கொண்டார். தன் வாழ்நாளில் கிட்டதட்ட 2,000 நாவல்கள் எழுதியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதிய இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கிக் கௌரவித்தது. தனது இறுதி நாட்களில் மூளையில் இருந்த கட்டியின் காரணமாகச் சிகிச்சை பெற்றுவந்த பி.டி.சாமி, 2004-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி காலமானார். ‘கதவுக்குப் பின்னால் யாரோ நிற்பதுபோல் அரவம் கேட்டது. சிறிது நேரத்துக்குப் பின்னர், கதவை யாரோ கூரிய நகங்களால் பிறாண்டும் சத்தம் கேட்கத் தொடங்கியது. அதைக் கேட்டதும் வினோதாவின் முதுகுத்தண்டு சில்லிட்டது' என்று எழுதியே பயமுறுத்த இன்று ஆட்களே இல்லை என்பதுதான் சோகம்.

- கிங் விஸ்வா, காமிக்ஸ் ஆர்வலர், பதிப்பாளர்.

தொடர்புக்கு: prince.viswa@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்