அறுபதுகளில் தஞ்சை மாவட்டக் கிராமங்களில் அறுவடைக் காலத்தில் களத்துமேடு, வயல்கள், சர்க்கார் ரோடு (நெடுஞ்சாலைக்குக் கிராமத்து மக்கள் சூட்டிய பெயர்) வாசல் முற்றங்கள் இப்படி எங்கே பார்த்தாலும் நெல்மணிகள் இறைந்து கிடக்கும். இவற்றைக் கொத்தித் தின்பதற்குக் குருவிகள் எங்கிருந்தோ கூட்டம் கூட்டமாக வரும். வீட்டுத் தாழ்வாரங்களில் கூடுகட்டிக் குடியிருக்கவே ஆரம்பித்துவிடும். அறுவடைக்காலத்தில் ‘குருவியின் கையில்கூடக் குறுணி நெல் இருக்கும்' என்று ஒரு சொலவடையே உண்டு.
அறுவடை சமயத்தில்தான் பூம்பூம் மாட்டுக்காரர்கள் வருவார்கள். டுர்ரும் டுர்ரும் என்று உறுமிமேளச் சத்தத்துடன் மாட்டின் சலங்கை மணி ஒலிக்கத் தெருவுக்குள் வந்துவிட்டால் போதும், தெருவுக்கே ஒரு தனி அழகு வந்துவிடும். பழம்புடவைகளையும் வேட்டிகளையும் பலவண்ணப் பட்டு, பீதாம்பர தினுசில் அணிந்துகொண்டு கம்பீரமான வண்ண முண்டாசுடன் வருவது ஒருபுறமிருக்க, அவரோடு வருகிற மாட்டை அலங்கரித்திருக்கிற அழகைச் சொல்ல வேண்டும்! அதன் முதுகில் விரித்திருக்கும் வண்ண மயமான விரிப்பு, கொம்புகளில் ஊஞ்ச லாடும் பட்டுக்குஞ்சலங்கள், கழுத்தில் தொங்கும் வண்ண மணிமாலைகள், நெற்றியில் பளீரிடும் மஞ்சள் குங்குமம்…
பூம்பூம் மாட்டுக்காரர்கள் தாங்கள் எது சொன்னாலும் தலையாட்ட மாட்டைப் பழக்கிவைத்திருப்பார்கள்.
‘‘அன்னதானப் பிரபுதானே இந்த வூட்டு ஐயா?'’ என்று கேட்பார். மாடு மணிகள் குலுங்கத் தலையாட்டும்.
‘சாமி வூட்டுக்கு நல்ல சேதி வரப்போகுதா?' உறுமிமேளம் உறுமி கேட்கும். மாடு தலையாட்டும்.
‘‘என்ன கேட்டாலும் பெருமாள் மாடு மாதிரி ஏண்டா தலையை ஆட்டறே? வாயைத் திறந்து சொல்லேன்'’ என்ற சொல்வழக்கையே உண்டாக்கிவிட்டது அந்த வாயில்லா ஜீவன்.
வீட்டிலிருக்கும் பெண்கள் நெல் கொண்டுவந்து பூம்பூம் மாட்டுக் காரனின் கோணிப்பையில் கொட்டு வார்கள். ஒரு கை போட்டால் (கால்படி!) அவர் நடுத்தர விவசாயி. இரண்டு கை போட்டால் கொஞ்சம் பெரிய விவசாயி. மரக்காலில் கொண்டு வந்து போட்டால் மிராசுதார். பிச்சை போடுவதிலும் ஒழுங்கு துலங்கிய காலம் அது.
‘‘எசமானுக்கு நமஸ்காரம் பண்ணுடா பலராமா’'. மாடு இரண்டு காலையும் மடக்கி முன்பக்கம் உட்கார்ந்து தலையைக் குனிந்து நமஸ்காரம் பண்ணும். பெண்கள் தொட்டுக் கும்பிடுவார்கள்.
ஊரின் ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்த தட்டான்குளம் குளக் கரையில் ஒரு பெரிய ஆலமரம். அதன்கீழே, புடவை, வேட்டி குவிய லுக்கு முன்னால் உட்கார்ந்து பீடி புகைத்துக்கொண்டிருந்தார் பூம்பூம் மாட்டுக்காரர். நாங்கள் சின்னப் பையன்கள் நாலைந்து பேர் அவர் செய்வதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தோம். பழைய சிவப்புப் புடவையை இரண்டாக மடித்து, நடுப் பகுதியை டர்ரென்று கிழித்தார். வேறு சில கிழிசல் கலர் துணிகளை இடைவெளியில் செலுத்தி அப்படியே முறுக்கி அப்படியும் இப்படியும் தட்டி கம்பீரமான முண்டாசாகத் தயாரித்துத் தலையில் வைத்துச் சரிபார்த்தார்.
எங்களில் ஒரு துடுக்கான பையன் மாட்டிடம் போய், என்னைக் காட்டி, ‘‘அன்னதானப் பிரபுதானே ஐயா?’' என்று கேட்டான். மாடு பேசாமல் இருந்தது.
‘‘ஐயா வீட்டுக்கு நல்ல சேதி வருமா?'’. மாட்டிடம் எந்தச் சலனமும் இல்லை.
“பூம்பூம் மாட்டுக்காரரே, இப்ப மட்டும் உங்க மாடு ஏன் தலையாட்ட மாட்டேங்குது?”
“பசங்களா, கிண்டலா பண்றீங்க? வாத்தியார் கேட்டாதானே பதில் சொல் லுவீங்க? வழியில போறவர்றவன் கேட்டா பதில் சொல்வீங்களா? நான் கேட்டாதான் மாடு தலையாட்டும், என்ன புரிஞ்சுதா?”
நாங்கள் அவர் சொல்வதைக் கேட்டுத் தலையாட்டிவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.
“டேய்! அந்த ஆளு நம்மளையும் தலையாட்ட வச்சுட்டார் பாத்தியா?”
நாங்கள் விழுந்துவிழுந்து சிரித் தோம். இன்று நினைவின் தெருக்களின் மட்டுமே பூம்பூம் மாட்டுக்கார்கள் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago