எம்ஜிஆர் 100 | 44 - போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்!

By ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. போட்டி என்று வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவார். நிஜமான போட்டிகளில் மட்டுமல்ல; விளையாட்டுக்காக நடந்த போட்டிகளில் கூட அவர் தோற்றது இல்லை.

படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஓய்வாக இருக்கும்போது, பொழுது போக்குக்காக நண்பர்களுடன் எம்.ஜி.ஆர். சீட்டு விளையாடுவார். பணம் வைத்து விளையாடும் பழக்கம் கிடையாது. விளையாட்டில் தோற்றுப் போனவர்கள் தனது தலைக்கு மேல் தலையணையை வைத்துக் கொண்டு ‘‘நான் தோத்து போயிட்டேன், நான் தோத்து போயிட்டேன்’’ என்று சொல்ல வேண்டும். இந்த விளையாட்டு அந்த இடத்தையே கலகலப்பாக்கிவிடும்.

‘உரிமைக்குரல்’ படத்தின் சில காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டன. ‘மாட்டிக்கிட்டாரடி மயிலைக் காளை…’ என்ற பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரை நடிகை லதாவும் அவரது தோழிகளும் கிண்டல் செய்து பாடுவது போல காட்சி. இந்தப் பாடலில் கடைசியில் இரண்டு வரிகள் மட்டும் கோவை சவுந்தரராஜன் பாடியிருப்பார். எம்.ஜி.ஆருக்காக அவர் குரல் கொடுத்த ஒரே பாடல் இது. படத்தின் நடன இயக்குனர் சலீம். அவரது உதவியாளர்தான் புலியூர் சரோஜா.

பாடல் காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும், நடனக் கலைஞர்களை பாராட்டி அவர்களுக்கு விருந்தளிக்கப் போவதாக எம்.ஜி.ஆர். அறிவித்தார். தங்களை எம்.ஜி.ஆர். கவுரவிக்கிறார் என்பதால் நடனக் கலைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சொன்னபடி, நடனக் கலைஞர்களுக்கு எம்.ஜி.ஆர். விருந்தளித்தார். அப்போது, குழுவினரை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் திடீரென ஒரு போட்டியை அறிவித்து அவர்களுக்கு சவாலும் விடுத்தார்.

‘‘எல்லோரும் முடிந்த வரையில் பாயசம் குடியுங்கள். யார் அதிகம் குடிக்கிறார்களோ அவர்களை விட ஒரு கப் பாயசம் நான் கூடுதலாக குடிக்கிறேன்’’ என்று சவால் விட்டார். பலர் ஒதுங்கிக் கொண்டனர். ஒரு சிலர் மட்டும் அதை ஏற்றுக் கொண்டு மளமளவென பாயசத்தைக் குடிக்கத் தொடங்கினர். ஐந்தாறு கப் குடிப்பதற்குள்ளேயே சிலர் கழன்று கொண்டனர். எட்டாவது கப் குடித்துவிட்டு ஒருவர் பின்வாங்கினார்.

ஒருவர் மட்டும் தாக்குப் பிடித்தார். எம்.ஜி.ஆரும் சளைக்காமல் அவருக்கு போட்டியாக தானும் பாயசத்தை குடித்துக் கொண்டே வந்தார். விளையாட்டாக நடக்கும் இந்தப் போட்டியை படத்தின் இயக்குநர் தரும் மற்றவர்களும் ரசித்தனர். போட்டியின் வேகம் அதிகரித்தபோது, ஒரு கட்டத்தில் தருக்கு பயம் வந்து விட்டது.

‘எம்.ஜி.ஆர். அளவுக்கு அதிகமாக பாயசத்தைக் குடித்துவிட்டு வயிற்றுப் பிரச்சினை ஏற்பட்டால் என்னாவது? அவரது உடல் நலம் பாதிக்கப்படுவ தோடு, படப்பிடிப்பும் பாதிக்கப்படுமே?’ என்று தர் கவலை அடைந்தார். பயமும் கவலையும் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டன. எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘‘அண்ணே, அதிகம் சாப்பிடாதீங்க. உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது’’ என்று கூறி தடுக்கப் பார்த்தார். எம்.ஜி.ஆர். கேட்கவில்லை. ‘‘போட்டி என்று வந்து விட்டால் விளையாட்டாக இருந்தாலும் போட்டிதான்’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.

போட்டியில் தாக்குப் பிடித்த ஒருவர் கடைசியாக 12-வது கப் பாயசத்தைக் குடித்துவிட்டு இனி ஒரு துளி கூட உள்ளே இறங்காது என்று சொல்லி எழுந்துவிட்டார். பின்னர், எம்.ஜி.ஆர். ‘‘13-வது கப்’’ என்று கூறி உயர்த்திக் காட்டி மடமடவென்று குடித்து விட்டார். பின்னர், வெற்றி பெற்றதற்கு அடையாளமாக சிறு குழந்தை போல கட்டை விரலை உயர்த்தி சைகை காட்டி கூடியிருந்தவர்களைப் பார்த்து பூவாய் புன்னகைத்தார். சுற்றி இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை பாதிக்கக் கூடாதே என்ற கவலையால், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பாயசம் கொடுத்துக் கொண்டிருந்தவரிடம் தர் ஜாடை காண்பித்தார். எம்.ஜி.ஆருக்கு கொடுக்கும் கப்பில் முழுதாக பாயசம் ஊற்றாமல் முக்கால் கப் மட்டும் ஊற்றிக் கொடுக்கும்படி சைகையால் சொன்னார். எம்.ஜி.ஆரின் கண்களில் இருந்து எதுவும் தப்புமா? இதை கவனித்துவிட்டார். பாயசம் கொடுப்பவரிடம் ‘‘முழுதாக ஊற்றிக் கொடு’’ என்று அதட்டலாக சொன்னார். எம்.ஜி.ஆரின் நேர்மை உணர்வு தரை நெகிழ வைத்தது.

‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பெக்டர் ராமு, அப்துல் ரஹ்மான் என இரட்டை வேடங்கள். அப்துல் ரஹ்மானாக நடிக்கும் எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சியில் ‘ஒன்றே சொல்வான், நன்றே செய்வான், அவனே அப்துல் ரஹ்மானாம்…’ என்ற கருத்துள்ள பாடல் இடம்பெறும். அந்தப் பாடலில் வரும் வரிகள் இவை…

‘ஆடும் நேரத்தில் ஆடிப் பாடுங்கள்

ஆனாலும் உழைத்தே வாழுங்கள்

வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம்

இரண்டும் உலகில் தேவை

ஆடும்போதும் நேர்மை வேண்டும்

என்றோர் கொள்கை தேவை’

படங்கள் உதவி: ஞானம்

‘உரிமைக்குரல்’ படத்தின் ‘கிளைமாக்ஸ்’ காட்சிகள் வண்டலூர் அருகே நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜிக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தில் படமாக்கப்பட்டன. வில்லனின் ஆட்கள் பயிர்களுக்கு நெருப்பு வைப்பதுபோல காட்சி.

படத்துக்காக பயிர்களுக்கு நெருப்பு வைக்கப் போவதை அறிந்த எம்.ஜி.ஆர்., ‘‘மக்களுக்கு உணவாக பயன்படும் நெற்பயிரை கொளுத்துவதை அனுமதிக்க முடியாது’’ என்று உறுதியாகக் கூறிவிட்டார். பின்னர், வைக்கோல்களுக்கு தீ வைக்கப்பட்டு காட்சி படமாக்கப்பட்டது.

- தொடரும்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்