தினம் தினம் யோகா 50: சசாங்காசனம்

By எஸ்.ரவிகுமார்

நீண்டதூர பயணம், அதிக பணிச் சுமை காரணமாக பலருக்கும் முதுகு வலி ஏற்படக்கூடும். அப்போது, ‘முயல்’ ஆசனத்தில் சிறிது நேரம் அமர்ந்தால் நிவாரணம் பெறலாம். ‘சசாங்’ என்றால் முயலை குறிக்கும் சொல். ஆசனத்தின் நிறைவு நிலையில், முயல் போன்ற வடிவில் நாம் இருப்பதால் இப்பெயர்.

கால் நீட்டி உட்காரவும். இரு கால்களையும் மடித்து, மடித்த கால்கள் மீது அமரவும். இது நாம் ஏற்கெனவே பார்த்த வஜ்ராசனம்தான். இப்போது இரு கைகளையும் மெல்ல தலைக்கு மேல் உயர்த்தவும். உள்ளங்கைகள் முன்னோக்கி இருக்கட்டும். ஒரு முறை நன்கு மூச்சை இழுக்கவும். மூச்சை விட்டபடியே நெற்றி தரையில் படுமாறு முன்பக்கம் குனியவும். கை விரல்களால் ‘நடந்து’, இயன்றவரை கைகளை நீட்டி வைத்துக் கொள்ளவும். நிதானமாக மூச்சை இழுத்து விடவும். 1-20 எண்ணவும். மூச்சை இழுத்தபடியே நேராக நிமிர்ந்து உட்கார்ந்து, கைகளை ரிலாக்ஸ் செய்துகொள்ளவும்.

வயிறு பெரிதாக உள்ளவர்களால் நெற்றியால் தரையை தொட இயலாது. அதனால், இயன்றவரை குனிந்தால் போதும். தேவைப்பட்டால், முட்டிகளை சற்று அகலமாக வைத்துக் கொள்ளலாம். கைகளை மேலேயே உயர்த்துவதற்கு பதிலாக, கைகளை பின்னால் கட்டிக்கொண்டும் இந்த ஆசனத்தை செய்யலாம்.

இந்த ஆசனத்தின்போது வயிறு பகுதி நன்கு அழுத்தப்படுவதால், உள் உறுப்புகளின் இயக்கம் தூண்டப்படுகிறது. முதுகுக்கு முழு ஓய்வு கிடைக்கிறது. படபடப்பு, டென்ஷன் நீங்கி மனம் அமைதி அடைகிறது. அதிகப்படியான கழுத்து, முதுகு வலி, ஸ்பாண்டிலிடிஸ், வெர்டிகோ உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

நாளை – கை நீட்டும் தவக்களை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE