மணலைக் குவித்து வைத்து விழிகளை வியப்பில் ஆழ்த்திய டென்ட்கொட்டகையில் ஆரம்பித்து, பெஞ்ச், நாற்காலி, சோபா என்று வளர்சிதை மாற்றம் அடைந்து மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வரை வளர்ந்ததால் திரைப்படங்களைப் போலவே, திரையரங்குகளுக்கும் தனி வரலாறு உண்டு.
அந்த வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால் திரையரங்குகளில் படம் பார்ப்பதன் மகோன்னதத்தை உணரவும், சிலாகிக்கவும் முடியும். இன்றும் திரைப்படம் பார்ப்பதற்கு எத்தனையோ வழிகள் இருந்தாலும், திரையரங்குகளில் படம் பார்க்கும் அனுபவம் வேறு எங்கும் கிடைக்காது என்பது மறுக்கமுடியாத உண்மை.
அந்த விதத்தில் என் நெஞ்சுக்கு நெருக்கமானது திருநெல்வேலி - உடையார்ப்பட்டி ராம் தியேட்டர். படம் பார்க்க என்ன தேவை? என்ன மாதிரியான சூழல் அமைய வேண்டும்? பார்வையாளர்கள் எப்படி இருக்க வேண்டும்? என்பதை எனக்கு காட்சிப் பூர்வ ரசனையையும், கலா ரீதியான ரம்மியத்தையும் கற்றுக்கொடுத்தது ராம் தியேட்டர்தான்.
திருநெல்வேலியில் டிடிஎஸ் (DTS) தொழில்நுட்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் திரையரங்கம் என்ற பெருமை ராம் தியேட்டருக்கு உண்டு. ஒரே இடத்தில் ராம் மற்றும் முத்துராம் என இரண்டு திரையரங்குகள் தொடங்கப்பட்டன. அப்போது டிடிஎஸ் என்றால் என்னவென்று தெரியாது. படம் போடும் முன்பு சிடி போட்டு டிடிஎஸ் விளம்பரம் போடுவார்கள், அப்படி தான் திருநெல்வேலி மக்களுக்கு டிடிஎஸ் என்றால் என்ன என்று தெரியும். ஏன் எனக்கு அப்படித்தான்.
முதல் முறையாக 'மோனிஷா மற்றும் மோனலிசா' மற்றும் 'பெரியண்ணா' ஆகிய படங்கள் ராம் திரையரங்கில் வெளியானது. என் வீட்டிற்கு மிகவும் அருகில் இருக்கும் திரையரங்கம் என்பதால் அனைத்துப் படங்களுமே அங்கு தான் பார்ப்பேன். ராம் திரையரங்கம் என்றாலே கமல் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயம். காரணம், கமல் என்ன வேடத்தில் நடித்திருக்கிறாரோ அதே வேடத்தில் பெரிய கட்-அவுட் வைத்து அதற்கு கீழே அதே வேடத்தில் நின்று முதல் நாள் முதல் காட்சியில் புகைப்படம் எடுப்பார் ஒரு ரசிகர். 'ஆளவந்தான்' சமயத்தில் கமலைப் போல உடலமைப்பை மாற்றி டி.ஷர்ட் போட்டு மொட்டை அடித்து புகைப்படம் எடுத்தார். அந்தளவிற்கு கமல் ரசிகர்களுக்கும் ராம் திரையரங்குக்கும் அவ்வளவு அன்னியோன்யம் உண்டு.
ராம் தியேட்டரில் ஆளவந்தான் படம் பார்த்த அனுபவம் நினைத்து நினைத்து சிலாகிக்கத்தக்கது. 'கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான். வெளியே மிருகம் உள்ளே கடவுள் விளங்கமுடியாத கவிதை நான். மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன். ஆனால், கடவுள் கொன்று இரையாய்த் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே' என்று பாடி நடித்த நந்துவைப் (கமல்) பார்த்து என்ன படம் டா என்று என்னை மறந்து நின்றது அதே தியேட்டரில்தான். பஞ்ச் வசனங்கள், உச்சரிப்பில் துல்லியம் கவனித்து தூங்காமல் கூட படங்கள் பார்த்த நாட்கள் அதிகம்.
நான் சென்னை நகர்ந்தவுடன், ஊருக்கு போகும் போகும் போதெல்லாம் நான் சந்திக்கும் உறவுப் பட்டியலில் ராம் திரையரங்குக்கு நீங்காத இடம் உண்டு.
ரசிகர்கள் தான் தங்களுக்கு முக்கியம் என்று ராம் திரையரங்க உரிமையாளர்கள் அவ்வளவு விஷயங்கள் செய்வார்கள். எந்த ஒரு பெரிய நடிகரின் படம் என்றாலும் முதல் நாள் காட்சிகள் ஓடிக் கொண்டே இருக்கும். ராம் திரையரங்கில் படம் போடப்பட்ட 30 நிமிடத்தில் முத்துராம் திரையரங்கிற்கு டிக்கெட் கொடுத்து 45வது நிமிடத்தில் அங்கு படம் போட்டுவிடுவார்கள். ஒரு ரசிகர் முதல் நாள் படம் பார்க்க சென்றால் மிஸ் பண்ணாமல் கண்டிப்பாக படத்தைப் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையை விதைத்தது ராம் திரையரங்கம் தான்.
அதனால்தானோ என்னவோ, திருநெல்வேலியில் இருக்கும் ஒரு திரையரங்கத்துக்கு சமூக வலைதளங்களில் லைக்கிடும் ரசிக நெட்டிசன்களின் ஆதரவு பெருகிக்கொண்டே வருகிறது. திரையரங்கில் என்ன நடந்தாலும் உடனுக்குடன் தனது >அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அப்டேட்டில் அசத்துகிறார்கள்.
நான் 'ஐ' படம் பார்த்த போது திரையரங்கில் ரசிகர்களின் கொண்டாட்டத்தை வீடியோவாக பதிவு செய்து ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு ட்ரெண்ட்செட்டர் ஆனார்கள்.
தற்போது 'தெறி' படத்துக்காக பல்வேறு வகையில் ரசிகர்களை கவர்வதற்காக களம் இறங்கியிருக்கிறது ராம் சினிமாஸ்.
ராம் திரையரங்க நிர்வாக இயக்குநர் ராமசாமி ராஜா
திருநெல்வேலியில் இருக்கும் ஒரு திரையரங்குக்கு இவ்வளவு திட்டங்கள் ஏன் என்ற கேள்வியை நிர்வாக இயக்குநர் ராமசாமி ராஜாவிடம் முன் வைத்தபோது, அவர் கூறிய பதில்கள் எளிமையும், எதார்த்தமுமாக இருந்தன.
"2013 டிசம்பர் 13ம் தேதி சமூக வலைதளத்தில் இயங்க ஆரம்பித்தோம். திரையரங்குக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை ரொம்ப கம்மியாகி விட்டது. டொரண்டில் படத்தை பதிவிறக்கம் செய்து போனில் பார்க்கும் காலம் இது. அதையும் மீறி திரையரங்கம் மக்கள் வரக் காரணம் முதல் நாள் கொண்டாட்டம் தான். அப்போது எங்களுடைய திரையரங்கம் மட்டுமன்றி வெவ்வேறு திரையரங்குகள் படத்தை திரையிடுவார்கள். மற்றவர்களும் அதே படத்தை திரையிடும் போது, எங்களுடைய திரையரங்கிற்கு தான் அனைவரும் படம் பார்க்க வரவழைக்க வேண்டும். அது தான் எங்களது முதல் நோக்கம்.
அதற்கு நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை வெளியில் சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்வதற்கு நாங்கள் ஆரம்பித்தது தான் சமூக வலைதள பக்கங்கள். முதலில் நாங்கள் என்னவெல்லாம் செய்தோமோ அதை சொன்னோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
சமூக வலைதளத்தில் வரவேற்பு கிடைத்துவிட்டது. அடுத்த கட்டமாக கட்-அவுட் மற்றும் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் அனைத்தும் திரையரங்கிலும் இருக்கிறது. அதைத் தாண்டி என்ன செய்யலாம் என்று யோசித்தோம். உடனடியாக ரசிகர்களுக்காக ஸ்பெஷல் வீடியோ போடலாம் என்று திட்டமிட்டோம். அந்த ஸ்பெஷல் வீடியோ தான் தற்போது ரசிகர்கள் பலரையும் எங்கள் திரையரங்குக்கு இயல்பாக இழுத்து வந்திருக்கிறது. 'ஜில்லா' படத்துக்கு தான் முதன் முதலாக ஸ்பெஷல் வீடியோ திரையிட்டோம். அன்று முதல் ரசிகர்களின் எண்ணிக்கை ரொம்ப அதிகமானது.
நடிகர்களின் பிறந்த நாளுக்கு சிறப்பு படங்கள் அதோடு சிறப்பு வீடியோக்கள் என திரையிட்டோம். இதற்கு கிடைத்த ரசிகர்களின் வரவேற்பை நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததில்லை. இதனால் எங்களுக்கு சமூக வலைதளத்தில் பிரச்சினையானது உண்டு. 'வேதாளம்' படத்தின் போது இது தான் எங்களின் நம்பர் 1 வீடியோ என்று தெரிவித்தோம். அப்போது விஜய் ரசிகர்கள் கோபப்பட்டார்கள்.
'தெறி' படத்தை திரையிட இருக்கிறோம். தற்போது விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள், அஜித் ரசிகர்கள் கோபப்படுகிறார்கள். படங்களை மாற்றி மாற்றி திரையிடுவதால் அதிருப்தி இருந்து கொண்டே தான் இருக்கும்.
எங்களைப் பொறுத்தவரை ஒரு ரசிகர் எங்கள் திரையிரங்கில் வந்து படம் பார்த்தால் அந்த அனுபவத்தை அவர் மறக்க கூடாது. சில பேர் சென்னை, பெங்களூர் என இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் எங்கள் திரையரங்கில் என்ன செய்கிறோம் என்று பார்க்க வேண்டும். முதல் நாள் படம் போடுகிறோம் என்றால் லைவ் அப்டேட் என்று தொடர்ச்சியாக என்ன நடக்கிறது என்பதை சமூக வலைத்தளத்தில் சொல்வோம். தற்போது யூடியூப் ஸ்ட்ரீமிங், பெரிஸ்கோப் என புதிதாக ஆரம்பித்திருக்கிறோம். தொழில்நுட்பம் வளர வளர நாமும் அதற்கு தகுந்தாற் போல மாறிக் கொண்டே இருக்க வேண்டும். எங்களின் கொண்டாட்டத்தை உலகிற்கு யூடியூப் மூலமாக காட்டுறோம். ரசிகர்கள் உள்ளே வந்ததில் இருக்கும் போது உள்ள சந்தோஷம் வெளியே போகும் போதும் இருக்க வேண்டும்.
சமூக வலைதளத்தில் எப்போதுமே விஜய் ரசிகர்கள் அல்லது அஜித் ரசிகர்கள் தான் இருப்பார்கள். எங்களுடைய சமூக வலைத்தள வளர்ச்சிக்கு இருவருமே முக்கிய காரணம். அவர்களிடம் இருந்து ஆதரவும் இருக்கிறது, திட்டுவதும் இருக்கிறது. நாங்கள் ஆதரவை மட்டும் எடுத்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
ரசிகர்களின் ஆதரவு எந்தளவிற்கு பெருகியிருக்கிறது என்ற கேள்வியை முன் வைத்த போது, "'தெறி' படத்தின் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை, பெங்களூர், மதுரை உள்ளிட்ட ஊர்களின் இருந்து ராம் திரையரங்கிற்கு ரசிகர்கள் வரவிருக்கிறார்கள். இதெல்லாம் விட துபாயில் இருந்து 3 பேர் வருகிறார்கள்.
சென்னையில் இருந்து குடும்பத்துடன் வந்தால் உட்கார இடம் ஒதுக்கிக் கொடுப்பீர்களா? என்று கேட்டிருக்கிறார்கள். கண்டிப்பாக வாங்க என்று சொல்லியிருக்கிறோம்" என்றார்.
'தெறி' படத்தின் முதல் நாள் கொண்டாட்டம் திட்டம் என்ன என்ற கேள்விக்கு, "இந்த வருடத்தில் நாங்கள் மிகவும் எதிர்பார்த்த படம் இது தான். 'புலி' படம் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. இந்தப் படம் எதிர்பார்த்ததிற்கு மேலேயும் போகும் என்று நம்புகிறோம். இப்படத்திற்கு புக்கிங் தொடங்கி சில மணி நேரத்தில் டிக்கெட்கள் விற்று தீர்ந்து வருகின்றன" என்று குறிப்பிட்டார்.
ரசிக ஞானத்தால் வருமே சுகம் என்று நினைப்பவரா நீங்கள்? மறக்காமல் ஒரு முறை நெல்லை ராம் தியேட்டருக்கு விசிட் அடியுங்கள்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago