திருக்குறள் கதை: தாய்
என் தாயாரின் சகோதரி ராமாத்தாள். இந்த சின்னம்மா கோவை பல்லடத்தை அடுத்த நாரணாபுரம் என்ற குக்கிராமத்தில் மணியக்காரர் பூமியைக் குத்தகைக்கு எடுத்து கணவர், பிள்ளைகளோடு விவசாயம் செய்து வயிறு வளர்த்து வந்தார். ஒரு நாள் வேடிக்கையாக, ''எத்தனை குழந்தைகள் உனக்கு சின்னம்மா?'' என்று கேட்டேன்.
‘‘பத்துப் பொறந்துச்சு சாமி! பஞ்சத்துல கஞ்சி ஊத்த முடியாம அதில நாலு போயிருச்சு. மீதி ஆறு பேர் இருக்கிறாங்க. அதில் ரெண்டு பேர் பொட்டைப் புள்ளைக!’’ என்றார்.
‘‘பத்துக் கொழந்தைங்க பெத்தீங்களா? புள்ளை பெத்துக்கறது அவ்வளவு சுலபமா?’’ என்று கேட்டேன்.
‘அந்தக் கொடுமையை ஏன் கேக்கறே? நமக்குன்னு சித்திரை, வைகாசி மாசம் கொளுத்தற வெயில் காலத்திலதான் குழந்தைங்க பொறக்கும்.
சீமை ஓடு மேய்ந்த வீடு. வெயில் கொளுத்தும் வீட்டுக்குள்ளே சூடு தாங்காம வேர்த்து ஒழுகும். அந்த வீட்டுக்குள்ளே தலைக்கு மேல இருக்கற விட்டத்தில 2 தாம்புக் கயிறைத் தொங்க விடுவாங்க. கயிற்றின் கீழ்ப்பகுதியில 2 முடிச்சு இருக்கும். பாயை விரிச்சு மண்டி போட்டு உட்கார்ந்து தலைக்கு மேல தொங்கற கயித்தை 2 கையையும் தூக்கிப் பிடிச்சுட்டு காலையில 7 மணியிலிருந்து முக்கணும். 7,8,9,10 மணி ஆனதும் நாக்கு வறண்டுடும்.
கொத்து மல்லி காபி ரெண்டு வாய் குடுப்பாங்க. குடிச்சிட்டு பழையபடி பிரஷர் குடுக்கோணும். 11, 12, 1 மணி. உச்சிப் பொழுது. ஊருக்குள்ளே தீ பத்தி எரியற மாதிரி சூடு காந்தும். உஷ்ணக்காத்து ஊட்டுக்குள்ளே பூந்து மூஞ்சில அடிக்கும்.
மயக்கமா வரும். உடனே புதுப்பானையில தண்ணி ஊத்தி வச்சிருப்பாங்க. அதுக்குள்ளே சின்ன டவலைப் போட்டு நனைச்சு கொண்டாந்து மூஞ்சில புளிஞ்சு விடுவாங்க. ஐஸ் தண்ணி மாதிரி ஜில்லுன்னு அது பட்டதும் கொஞ்சம் தெம்பு வரும். பழையபடி பிரஷர் குடுக்கோணும். வயிறு காஞ்சு போகக்கூடாதுன்னு தண்ணி மோர் முக்கால் டம்ளர் குடுப்பாங்க. பழையபடி விட்டத்துக் கவுத்தைப் புடிச்சுட்டு பிரஷர் குடுத்து முக்கோணும். 2,3,4 மணியானதும் முடியில தாயின்னு கத்தினா, சுக்குத் தண்ணி, கருப்பட்டி கலந்தது ரெண்டு வாய் குடுப்பாங்க. 6 மணியாயிரும். ‘அய்யோ உசிரு போகுதே!’ன்னு கத்தினா குழந்தை வந்துடும்.
குடிமகன்ங்கற நாவிதன் பெண்டாட்டிதான் கிராமத்தில மருத்துவச்சி. சோளக்கருது அறுக்கற கம்பறக்கத்தியை எரியற அடுப்புக்குள்ளே வச்சு நல்லா சூடாக்கி, ஆற வச்சு அதைக் கொண்டாந்து தொப்புள் கொடியை அறுத்து குழந்தையைப் பிரிச்சு எடுப்பாங்க. குடி தண்ணீர் வசதி இல்லாத ஊர்ல ஒரு லிட்டர் நல்ல தண்ணில துணியை நனைச்சு குழந்தை உடம்பை துடைச்சு சுத்தப்படுத்துவாங்க. முழுசா குளிப்பாட்டி விட தண்ணி வசதி இருக்காது.
சோளத்தட்டு வெட்டற காண்ட்ராக்ட் எடுத்திருந்ததனால, 3-வது நாள் வேலைக்குப் போயாகோணும். 16 முழப் புடவையை கயிறு மாதிரி முறுக்கி, வயித்தை சுத்தி இறுக்கமா கட்டிக்கொண்டு வேலைக்குப் போனேன்.
வேப்பமரக் கிளையில் தொட்டில் கட்டி குழந்தையைத் தூங்க வெச்சிட்டு, வேலை பார்த்தேன். திடீர்னு குழந்தை அழுதுச்சு. முழுசா குளிப்பாட்டாத குழந்தை ஒடம்பில ரத்த வாடை இருந்திருக்கு. அதனால நாய் வந்து குழந்தையைக் கடிச்சிருக்கு. ஓடிப்போய் விரட்டிவிட்டு முலைப்பால் குடுத்து குழந்தையைக் காப்பாத்தினேன்!’
இப்படியெல்லாம் சிரமப்பட்டு குழந்தை பெற்று வளர்த்து அது பெரியவனாகி, டெல்லி போய் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் பரிசு வாங்கினால் எப்படி சந்தோஷப்படுவாள் அந்தத் தாய்.
இதைத்தான் வள்ளுவர்:
‘ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் -தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்!’ என்கிறார்.
----
குறள் கதை 100: பிறப்பொக்கும்
ஆதி மனிதன் ஆடு மாடுகள் போல காடுகளிலும் மேடுகளிலும், ஆற்றோரத்திலும் காலைக் கடன்களை முடித்திருக்கிறான். கிராமப்புறங்களில் 70 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த என் வயதொத்த மக்கள் சோளக்காடு, பருத்திக்காடு, வேலியோரம் உள்ள மறைவிடத்தில் போய் உட்காருவோம். சூர்ய வெளிச்சம் பட்டு இரண்டு மூன்று நாட்களில் அது காய்ந்து, பின் உலர்ந்து மண்ணோடு உரமாகப் போய்விடும்.
ஆங்கிலேய அரசு காலத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் இந்தியன் க்ளாஸட் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். தரையில் குத்தவைத்து உட்கார்ந்து டாய்லட் போய், நாலு சொம்பு தண்ணீரை ஊற்றி உள்ளே அனுப்பி விடுவார்கள்.
இதேபோல, ‘வெஸ்டர்ன் டாய்லட்’ வசதியும் வந்துவிட்டது. சேரில் உட்காருவது போல செளகர்யமாக உட்கார்ந்துகொண்டு பேப்பர் படித்தவாறு, மியூசிக் கேட்டவாறு நிதானமாக வேலையை முடிக்கலாம்.
வயிறு காலியானதும் கீழே குனிந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. பின்புறம் உள்ள வாட்டர் டேங்க் -லீவரை ஒரு விரலால் தட்டிவிட்டால் 10 லிட்டர் தண்ணீர் பாய்ந்து வந்து கிளாஸட்டை சுத்தப்படுத்தி விடும்.
இரண்டு நாளாக வயிறு கட்டிக் கொண்டது. என்ன முயன்றாலும் ஒன்றும் நடக்கவில்லை. ‘கான்ஸ்டிபேஷன்’ என்று புரிந்துவிட்டது. டாக்டரிடம் போகிறீர்கள். பரிசோதனை எல்லாம் முடிந்து ஒரு ‘மோஷன்’ டெஸ்ட் செய்து பார்க்கலாம். புழு, பூச்சி ஏதாவது தொல்லை இருந்தால் தெரிந்துவிடும் என்கிறார் டாக்டர்.
முந்தைய நாள் காலை பழனி மலை சென்று கிருத்திகைக்கு வேண்டுதல் முடித்து பஞ்சாமிர்தம் வாங்கிச் சாப்பிட்டு வந்திருக்கிறீர்கள். ஆனால், பஞ்சாமிர்தமாக மலம் வராதே.
தரையில் குத்த வைத்து உட்கார்ந்து ஒரு பேப்பரை அடியில் விரித்துப் போட்டு முக்கி முனகிக் கொஞ்சம் டாய்லட் போய் -ஒரு கோலிக்குண்டு அளவு மலத்தை மரக்கட்டை ஸ்பூனால் எடுத்து -சிறு கண்ணாடிக் குடுவையில் போட என்ன சிரமப்படுகிறீர்கள்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கோடிக்கணக்கான மக்களின் மலத்தை அள்ளுகிறானே உன் சகோதரன் -சக மனிதன் அவனைப் பற்றி ஒரு கணம் நினைத்துப் பார்க்கிறோமா?
சாக்கடை அடைப்பை நீக்க உயிரைப் பணயம் வைத்து உள்ளே போய் மூச்சு முட்டி மரணத்தைத் தழுவும் பரிதாபத்திற்குரிய அவர்களைப் பற்றி நமக்குத் தெரியுமா?
உன்னைப் போல அவனும் அவன் தாயார் வயிற்றில் 10 மாதம் இருந்துதானே வந்திருப்பான். அவன் உடலிலும் சிவப்பு ரத்தம்தானே ஓடுகிறது. இதை நினைவுபடுத்தத்தான் வள்ளுவன் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனப் பிறப்பால் அனைவரும் சமம் என்றார். இந்தியாவில் 80 லட்சம் பேர் இன்னும் கையால் மலம் அள்ளுகிறார்கள். தமிழ்நாட்டில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்தப் பணியைச் செய்கிறார்கள்.
இந்த அவலத்திலிருந்து அந்த மக்களுக்கு விடிவு காலம் விரைவில் வரவேண்டும்.
கேரள இளைஞர்கள் BANDI C00T என்ற ஒரு ரோபோவைக் கண்டுபிடித்துள்ளனர். சாக்கடைக்குள் மூச்சைப் பிடித்துக்கொண்டு மனிதன் உள்ளே போய் அடைப்பை நீக்கும் பணியை அந்த ரோபோ மிஷின் செய்கிறது. அதற்கு லைசென்ஸ் அளித்து பல்லாயிரக்கணக்கில் அவற்றைத் தயாரித்து இந்தியா முழுக்கப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் சகமனிதன் சாக்கடைக்குள் மரணிக்கும் அவலம் தீரும். அன்றுதான் நாம் குறளை மதிக்கிறோம்; வள்ளுவரை வணங்குகிறோம் என்று அர்த்தம்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்- சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’
***
திருக்குறள் 100 என்ற எனது புதிய முயற்சிக்கு ஆதரவளித்து இணையதளத்தில் அழகாக வெளியிட்டு வாசகர்களிடம் சேர்த்த 'இந்து தமிழ் திசை' ஆசிரியர் குழுவுக்கும், நிர்வாகத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன் - அன்புடன் சிவகுமார்.
(தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in)
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago