திருக்குறள் கதை 97: தீமை
நெல்சன் மண்டேலா தனிமைச் சிறையில் 27 ஆண்டுகாலம் வதைபட்டு சித்ரவதைகள் அனுபவித்து தென்னாப்பிரிக்காவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்து அதன் அதிபராகப் பொறுப்பேற்றார்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை தனக்கு பாதுகாப்பு தரும் காவலர்களுக்கு 30 வயது, 40 வயதுக்குள்தான் இருக்கும். அந்த இளைஞர்களை அழைத்துக் கொண்டு காலை சிற்றுண்டி அருந்த ஒரு ஓட்டலுக்குச் சென்றார்.
உங்களுக்கு எதெல்லாம் சாப்பிடப் பிரியமோ அவற்றை ஆர்டர் கொடுத்துக் கொள்ளுங்கள் என்று அன்புக் கட்டளையிட்டார். எல்லோரும் ஏதோ சுற்றுலாவுக்குச் சென்ற மகிழ்ச்சியுடன் பிரியப்பட்டதை ஆர்டர் செய்தார்கள்.
இவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் 4 வரிசை தாண்டி ஒரு பெரியவர் தனியே அமர்ந்து ஏதோ ஆர்டர் கொடுக்க காத்திருந்தார். மண்டேலா அவரைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்து, ஒரு இளைஞனை அனுப்பி, ‘அவரையும் அழைத்து வந்து நம்மோடு அமரச் செய்து அவருக்கு வேண்டியதை வாங்கிக் கொடுங்கள்!’ என்றார்.
ஆனால். அந்தப் பெரியவர் எழுந்து வர ரொம்பவும் தயங்கினார். இளைஞன் பிடிவாதமாக அவரை அழைத்து வந்து அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு ஆர்டர் செய்தான்.
நம்மூர் பொங்கல், வடை, பூரிக்கிழங்கு, மசால் தோசை மாதிரி அந்த ஓட்டலில் என்னென்ன வெரைட்டி இருந்ததோ, அவற்றையெல்லாம் வரவழைத்து இளைஞர்கள் வெளுத்துக் கட்டினார்கள்.
ஆனால் அந்தப் பெரியவர், வழக்கத்துக்கு மாறாக சீக்கிரமே சாப்பிட்டு முடித்து வணக்கம் கூறிவிட்டுத் தடுமாறி நடந்து வெளியேறினார்.
பாவம். வயதாகிவிட்டது. நடக்க சிரமப்பட்டுப் படபடப்பாகப் போகிறார் என்றார் ஒரு செக்யூரிட்டி.
அப்படியல்ல. அவர் யார் என்று நினைத்தீர்கள். என் சிறை வாழ்க்கையில் பெரும்பகுதி அவர்தான் ஜெயிலராக, சிறை அதிகாரியாக இருந்தார்.
27 ஆண்டுகளுக்கு முன் நான் சிறைக்குள் நுழையும் போது முகம்மது அலிபோல் இரும்பு உடம்புடன் இருந்தேன். சிறையில் கொடுக்கும் உப்பில்லாத கூழும், வாயில் வைக்க முடியாத அச்சுக்களியும் என்னைப் படிப்படியாக பலவீனப்படுத்த ஆரம்பித்தன. போதாதற்கு வாரம் ஒரு நாள் எனக்கு இரண்டு விதமான பூஜை நடக்கும். என் ஆடைகளைக் கழற்றிவிட்டு உள்ளாடையுடன் நிறுத்தி 100 சவுக்கடி தருவார்கள். அது முடிந்ததும் 100 முறை லத்தியால் தாக்குவார்கள். ஆனால், ரத்தம் வராமல் இந்தக் கொடுமையைச் செய்வார்கள்.
கழுத்து அறுபட்ட கோழிபோல, வெட்டப்பட்ட நாகம் போல வலி தாங்காமல் துடிதுடிப்பேன். நாக்கு வறண்டுவிடும். தொண்டை காய்ந்து விடும். நடுநடுங்கிக் கொண்டே ‘தண்ணீர், தண்ணீர்!’ என்று அலறுவேன்.
இந்த ஜெயிலர் என்னிடம் வந்து ஓ உனக்குத் தண்ணீர் வேண்டுமா? இதோ என்று என் மீது சிறுநீரைப் பீய்ச்சியடித்தார். ஒரு நாள் இருநாள் அல்ல, கடைசி வரை இந்த மரியாதை எனக்கு ஈவு இரக்கமில்லாமல் தரப்பட்டது.
சரி! மேலதிகாரியின் உத்தரவு. அதை இவர் செய்திருக்கிறார். இவரைக் கோபித்து என்ன பயன் என்றுதான் இன்று நம்மோடு சிற்றுண்டி அருந்த அழைத்தேன்!’ என்றார் மண்டேலா.
‘ஒருவர் உனக்குத் தீமை செய்தால் அவரே நாணும் அளவுக்கு நீ அவனுக்கு நன்மை செய்து விடு’ என்கிறார் வள்ளுவர்.
‘இன்னா செய்தாரை ஒறுத்தல்- அவர் நாண
நன்னயம் செய்து விடல்!’
---
குறள் கதை 98: ஞானம்
கணவன் ஞானக்கிறுக்கன். ஆனால், அவன் பேனா பிடித்தால் நாடே நடுங்கும். மேடை ஏறி மைக் பிடித்தால் நெருப்பு பொறி பறக்கும். உடனே நாடு கடத்தப்படுவார்கள்.
இந்த ஞானக்கிறுக்கனை ஒரு பேரழகி, கோடீஸ்வரி காதலித்துப் பெற்றோர் எதிர்ப்பில் திருமணமும் செய்து கொண்டாள்.
வாழ்க்கைப்பட்ட நாளிலிருந்து சந்தோஷப்படுவது போல் ஒரு சம்பவம் கூட நடக்கவில்லை. ஊர், ஊராக, நாடு நாடாக பலமுறை நாடு கடத்தப்பட்டான். ஏழு குழந்தைகள் பிறந்தன. காலரா நோயில் 4 குழந்தைகள் இறந்துவிட்டன. வறுமையின் உச்சம். கடைசிக் குழந்தை பாலுக்கு அழுதது.. மூன்று நாட்களாக தாய் பட்டினி. மார்பு கொடுத்தாள். குழந்தை பல் பட்டு ரத்தம் மட்டுமே வந்தது. அடுத்த 2 நாளில் குழந்தை இறந்துவிட்டது.
தலைமறைவு வாழ்க்கை. நண்பர்களிடம் கையேந்தி காசு வாங்கி சவப்பெட்டி செய்து குழந்தையை அடக்கம் செய்தான்.
அடுத்த 6 மாதங்களில் நோய்வாய்ப்பட்டு அவளும் இறந்துவிட்டாள். அந்தப் பெண்மணிதான் ஜென்னி. அந்த மேதை கார்ல் மார்க்ஸ். ஒரு நாள் கூட இவரை மணந்து என்ன சந்தோஷத்தை அனுபவித்தேன் என்று மனதால் கூட அவள் நினைக்கவில்லை. குழந்தைகளை வரிசையாகப் பறிகொடுத்த போதும் கார்ல் மார்க்ஸ் காதல் அனைத்தையும் விட மேலானது என்று நம்பினாள்.
கார்ல் மார்க்ஸும் நண்பன் ஏங்கெல்சும் எழுதிய 80 பக்க கம்யூனிஸ்ட் அறிக்கை உலக இலக்கியங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்தி எழுதிய, ‘மூலதனம்’ 25 ஆண்டுகளில் உருவான உலகப் புகழ் புத்தகம்.
ஜென்னி போன்ற கற்புக்கரசிகளை கொண்டாட வள்ளுவர் எழுதிய குறள்:
‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய் எனப் பெய்யும் மழை!’
---
கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago