கல்கத்தா நகரம். டிசம்பர் மாதக் குளிர். கடுமையாகத் தாக்குகிறது. குடிசையில் வாழ்கிற மக்களுக்கு குடிக்க கூழும் இல்லை. போர்த்துக் கொள்ள போர்வையும் இல்லை.
அதிகாலை 6 மணிக்கு வெள்ளை உடையில் தேவதை போல அன்னை தெரெஸா கிளம்பி வந்தார்.
கள்ளக்கடத்தல் செய்து கல்வித் தந்தையான ஒரு கோடீஸ்வரனின் அரண்மனை போன்ற வீடு. காலிங் பெல்லை அழுத்தினார். ஆறடி தாண்டிய உயரம். பரந்த நெற்றி. சில்க் ஜிப்பா. ஜரிகை வேஷ்டியில் அந்த பெரிய மனிதர் தோன்றினார்.
சுபகாரியத்திற்கு கிளம்பும்போது அபசகுனமாக வெள்ளைச் சேலையில் அவரைப் பார்த்தார். அன்னை ஏழைகளுக்காக கையேந்தி நின்றார்.
காலங்கார்த்தால கையேந்திட்டு வந்திடறாங்க. உன் மூஞ்சிலயா முழிக்கணும். தூ என்று காரித் துப்பினார். ஏந்திய கரங்களில் எச்சில் துளிகள். அவற்றை ஒரு முறை பார்த்தார் தெரெஸா.
அவரைத் திரும்பவும் பார்த்து, ‘எனக்கு வேண்டியதை குடுத்திட்டீங்க. அந்த ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்க!’ என்றார். அந்த வார்த்தைகள் சில்க் ஜிப்பாவை சிலையாக நிற்க வைத்தன.
ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நியூட்ரினோ என்று ஆயிரக்கணக்கான அடி பூமியை ஈவு இரக்கமில்லாமல் மனிதன் குடைந்து கொண்டே இருந்தாலும், அந்த பூமி மாதா எப்படி பொறுமையாக இருக்கிறாளோ -அதற்கு இணையாக நின்றார் அன்னை தெரெஸா.
இவர் போன்ற மனித தெய்வங்களை பெருமைப்படுத்த வள்ளுவர் எழுதிய குறள்:
‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் -தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை’
--
குறள் கதை 96: கற்பு
திரைப்பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் நெருப்பு போன்றவர். முணுக்கென்றால் துர்வாச முனிவர் போல கோபித்து காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்து விடுவார். தான் செய்தது தவறு என்றால் பத்து வயதுப் பிள்ளையாக இருந்தாலும், ‘சாமி, சாமி. கோபத்தில் திட்டிட்டேன். மன்னிச்சுக்கப்பா!’ என்று உடனே இறங்கி வந்து விடுவார்.
பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் கறாராக இருப்பார். நடிக்க வந்திருக்கும் கதாநாயகி வெயிலில் நிற்கிறாரே என்று இவர் கம்பெனி ஆள் ஓடிப்போய் குடையை விரித்து அந்த ஹீரோயினுக்கு பக்கத்தில் நின்று குடை பிடித்தான்.
‘கொடையை குடுத்திட்டு வாடா. அந்த அம்மாவுக்கு அசிஸ்டெண்ட் இருக்காங்கள்ல. அவங்க புடிச்சுக்குவாங்க. எங்கிட்ட சம்பளம் வாங்கிட்டு அங்க போய் என்ன ஊழியம் பண்றே!’ - என்று கடிந்து விடுவார்.
தி.நகரில் வெங்கட ராமன் தெருவுக்கு தென்பகுதியில் ஆபீஸ் கட்டடம். தெருவுக்கு நேர் வடக்குப் பகுதியில் குடியிருக்கும் வீடு.
வீட்டின் முதல்மாடியில் சமையல் அறை. டைனிங் ஹால் இருந்தது. கம்பெனி ஆபீஸ் அலுவலகத்தின் முதல்மாடியில் தேவர் அவர்களின் அறை. எழுத்தாளரோ, பாடல் ஆசிரியரோ -இசையமைப்பாளரோ ஸ்டண்ட் மாஸ்டரோ யார் வந்தாலும் அந்த அறையில்தான் அவர்களைச் சந்திப்பார்.
ஒரு நாள் பகல் 12.15-க்கு30 வயது தாண்டிய பருமனான சற்று மாநிறமுள்ள நடிகை ஒருவர் தேவர் அவர்களை சந்திக்க வந்தார். சமையல் செய்து கொண்டிருந்த தேவர் அண்ணா மனைவி மாரியம்மாள் எதேச்சையாக அந்தப் பெண் அலுவலகத்துள் நுழைவதைப் பார்த்தார்.
மாரியம்மா பள்ளி இறுதிப்படிப்பை முடித்து ஆசிரியப் பயிற்சி முடித்து வாத்தியாரம்மாவாக கொஞ்ச நாள் வேலை பார்த்தவர்.
தேவர் அண்ணா மழைக்கு பள்ளியில் ஒதுங்கியவர். கோணல் மாணலாக கையெழுத்து மட்டும் போடுவார். படிப்புக்கும் அவருக்கும் வெகுதூரம்.
12.15-க்கு அந்தப் பெண்மணி தேவரைச் சந்திக்க உள்ளே போனவர் 12.30 - 12.45 -1.00 மணி, 1.15-க்கு வெளியே வந்தார்.
அந்தப் பெண் வெளியே வரும் நேரத்தை கணக்கிட்டு சுமார் ஒரு மணிநேரமா அவள் உள்ளே இருந்திருக்கிறாள் - என்ற சிந்தனை மாரியம்மாவுக்கு தோன்றி விட்டது.
பொதுவாக பெண்கள் எதை வேண்டுமானாலும் பங்கு போட்டுக் கொள்வார்கள். கணவனை இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ லேசில் அனுமதிக்க மாட்டார்கள். ரோஷமான பெண்கள் அந்த ஆண் மீது பாய்ந்து குதறி எடுத்து விடுவார்கள். அல்லது தன்னையே கொளுத்திக் கொள்ளுவார்கள்.
என்ன போறாத நேரமோ -தேவர் அண்ணா பகல் உணவு சாப்பிட வீட்டுக்கு வந்தார். கைகளைக் கழுவி மேஜைக்கருகே வருவதற்குள், ‘அவ்வளவு நேரம் அவகிட்ட உங்களுக்கு என்ன ஜோலி. என்ன மனுஷன்யா நீங்க. சீ...!’ என்று பொங்கி வெடித்தார்.
அதன் பிறகு மெளனமாகி விட்டார். ஒரு நாள் இரண்டு நாளல்ல. ஒரு வாரம் இரண்டு வாரமல்ல. ஒரு மாதம் இரண்டு மாதமல்ல. ஓராண்டு, இரண்டாண்டுகள் அல்ல- 15 ஆண்டுகள் பேசவே இல்லை.
அன்று என்ன நடந்தது என்று தேவர் அண்ணா விளக்கிக்கூற கடைசி வரை அவகாசம் மாரியம்மா தரவே இல்லை.
ஒவ்வொரு கிருத்திகைக்கும் பழனிமலை சென்று முருகனுக்கு விசேஷ பூஜை முடித்து பாலாபிஷேகம், தேனாபிஷேகம், சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம் எல்லாம் முடித்து சுவாமி தரிசனம் முடிந்ததும் -சிலைக்கு கட்டியிருக்கும் கோவணத்துணியை வாங்கி அங்கேயே பிழிந்து, அந்தச் சாற்றைக் குடித்து விட்டு, அந்த துணியைச் சென்னைக்கு கொண்டு வந்து தலையணை அடியில் வைத்து தூங்கி விடுவார். இப்படியே 15 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவர் தேவர் அண்ணா என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
ஏகபத்தினி விரதன் என்றால் காப்பியகால ராமபிரானைத்தான் உடனே நாம் நினைத்துக் கொள்கிறோம். நம் காலத்திலும் அத்தி பூத்தாற் போல இப்படி அபூர்வ மனிதர்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். இவர்களைப் போற்ற வள்ளுவர் எழுதிய குறள்:
‘பிறன்மனை நோக்காத பேராண்மை-சான்றோர்க்கு
அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு!’
--
கதை பேசுவோம்..
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago