தகவல்களுக்கான இணைய தேடல் சுற்றுச்சூழலுக்கும் இணக்கமான வகையில் இருக்க வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்தி அதற்காக வழிகாட்டும் பசுமை தேடியந்திரங்கள்.
உங்கள் தேடல் பசுமையானதா? அதாவது நீங்கள் இணையத்தில் தேடும்போது பசுமையான வழியை பின்பற்றுகிறீர்களா? இந்த கேள்விக்கான உங்கள் பதில் 'ஆம்' என்பதாக இருந்தால் நீங்கள் பசுமை தேடியந்திரங்களை அறிந்திருக்கிறீர்கள் என்று பொருள். இந்த கேள்விகள் உங்களிடம் குழப்பத்தை அல்லது ஆர்வத்தை ஏற்படுத்தினால் நீங்கள் பசுமை தேடியந்திரங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்று அர்த்தம்!
தேடியந்திரங்களில் பல வகை இருக்கின்றன. அவற்றில் ஒரு வகை பசுமை தேடியந்திரங்கள் - மிகவும் முக்கிய வகையும் கூட.
பசுமை தேடியந்திரங்கள் என்றால் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான முறையில் இணையத்தில் தகவல்களை தேட உதவும் தேடியந்திரங்கள் என்று புரிந்து கொள்ளலாம். இந்த வகை தேடியந்திரங்கள் புதியவை அல்ல; ஆனால் லட்சிய நோக்கம் கொண்டவை. சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை. சுற்றுசூழல் பாதுகாப்பிற்கும் உதவி வருபவை.
பசுமை வழிகாட்டிகள்:
பசுமை தேடியந்திரங்கள் பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், அவை தனித் தேடியந்திரங்கள் அல்ல; அதாவது அவை இணையத்தில் தகவல்களை தேடித்தர தங்களுக்கென சொந்த நுட்பத்தை கொண்டிருக்கவில்லை. மாறாக, கூகுள் உள்ளிட்ட மற்ற தேடியந்திர சேவைகளை பயன்படுத்தி இணையவாசிகளின் தேடலை பசுமையானதாகவும், சுற்றுச்சூழலுக்கு நட்பானதாகவும் மாற்றித்தருகின்றன.
இணைய பயன்பாடு பரவலாகி, தேடியந்திரங்களை பயன்படுத்தும் சகஜமான நிலையில், தகவல்களை தேடுவது பசுமையாக அமைய வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்துவதற்காக சுற்றுச்சூழல் ஆர்வம் கொண்டவர்கள் பசுமை தேடியந்திரங்களை உருவாக்கத் துவங்கினர். ஒரு கட்டத்தில் அலையெனவே பசுமை தேடியந்திரங்கள் உருவாகி கொண்டிருந்தன.
மூன்று வகைகள்:
பசுமை தேடியந்திரங்கள் நோக்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்றாலும், செயல்படும் விதத்தை வைத்து அவற்றை மூன்று வகையாக பிரிக்கலாம்.
முதல் வகை பசுமை வடிகட்டிகளாக செயல்படுபவை - முழு இணையத்தையும் தேடாமல் அவற்றில் சுற்றுச்சூழல் சார்ந்த இணையதளங்களில் மட்டும் தகவல்களை தேட வழி செய்பவை.
இரண்டாம் வகை, இணைய தேடலின் மூலம் சுற்றுசூழலை பாதுகாக்க உதவும் வகையில் செயல்படுபவை - இணைய தேடல் மூலம் வரும் விளம்பர வருவாயை கொண்டு மரக்கன்றுகளை நட்டு வளர்க்க ஏற்பாடு செய்து சுற்றுசூழல் பாதுகாப்பில் நேரடியாக பங்கேற்பவை.
மூன்றாம் வகை அடையாள நோக்கிலானவை. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது போல சிறிய அளவில் சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருபவை.
பசுமைத் தளங்கள்:
முதல் வகை தேடியந்திரங்களின் தேவையை எளிதாக புரிந்து கொள்ளலாம். சுற்றுச்சூழல் நோக்கிலான தகவல்களை தேடும்போது மொத்த இணையத்தையும் தேட வேண்டிய அவசியம் இல்லையே. அதற்கு பதிலாக சுற்றுசூழல் சார்ந்த இணையதளங்களில் மட்டுமே தேடுவது பொருத்தமாகவும், தேடிய தகவல் எளிதாக கிடைக்கவும் உதவும் தானே. உதாரணத்திற்கு, கூகுள் அல்லது பிங் அல்லது யாஹூ போன்ற பொது தேடியந்திரங்களில் பசுமையான நோக்கிலான குறிச்சொல்லை டைப் செய்து, அதில் வரும் முடிவுகளில் இருந்து தேர்வு செய்வதை விட, எடுத்த எடுப்பிலேயே எந்த இணையதளங்களில் எல்லாம் பசுமை தகவல்கள் / செய்திகள் இருக்குமோ அவற்றில் மட்டும் தேடி எடுத்துக்கொள்வது சரியாக இருக்கும் தானே.
இதைத்தான் பசுமை தேடியந்திரங்கள் செய்கின்றன. கூகுள் போன்ற தேடியந்திரங்களில் அதில் உள்ள வடிகட்டி வசதியை கொண்டு இணையவாசிகளே கூட, பசுமையான இணையதளங்களில் தேடிப் பார்க்கலாம். ஆனால் இது கொஞ்சம் சிக்கலானதாக தோன்றலாம். அதனால் தான் இணையவாசிகள் சார்பில் இந்த வடிகட்டல் வசதியை அடிப்படையாக கொண்ட சேவையை பசுமை தேடியந்திரங்கள் வழங்குகின்றன.
பசுமை தகவல்களை மட்டும் தேட விரும்பினால் அதை எளிதாக்கு தருவதோடு அத்தகையை தேடலில் ஈடுபடுவதற்கான உந்துததலாகவும் இவை அமைந்தன.
இந்த வகையில் பல தேடியந்திரங்கள் உருவாகி பசுமை தேடல் கருத்தாக்கத்தை பிரபலமாக்கினாலும், இவற்றில் நீடித்து நிற்பது கிரீன்மேவன் மட்டுமே!
ஒரு வலைவாசலுக்கான தன்மையுடன் இருக்கும் கிரீன்மேவன் பசுமை செய்திகள் மற்றும் பசுமை இணையதளங்களையும் பட்டியலிடுகிறது. பசுமை பொருட்களுக்கான அறிமுகம் பகுதியும் இருக்கிறது. இவை தவிர பசுமை வடிகட்டி பயன்படுத்தி நமது தேடலை பசுமை இணையதளங்கள் சார்ந்த்தாக அமைத்துக்கொள்ளலாம். இணைய முகவரி - >http://www.greenmaven.com/
கிளிக்கில் முளைக்கும் மரங்கள்
இரண்டாம் வகை பசுமை தேடியந்திரம் தேடுவதற்கு வழிகாட்டுவதோடு நிற்காமல், அதன் மூலம் பசுமையான செயலிலும் ஈடுபடுபவை. இவற்றை மரம் நடும் தேடியந்திரங்கள் என்றும் சொல்லலாம். ஏனெனில் இவை தேடல் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயை மரகன்றுகள் வைத்து பராமரிக்க வழிகாட்டுகின்றன.
இவற்றின் செயல்முறை எளிதானது; ஆனால் உலகை மாற்றக்கூடியது - சிறிய அளவிலேனும்!
இணையத்தில் தேடும்போது நமக்கு தேடிய தகவல்கள் கிடைக்கின்றன. தேடியந்திரங்களுக்கு நம் தேடல் மூலமாக விளம்பர வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயில் ஒரு பகுதியை பசுமை நோக்கில் பயன்படுத்தினால் புவிக்கு நாம் செய்யும் கைமாறாக இருக்காதா?
இந்த எண்ணத்தை தான் இகோஷியா போன்ற பசுமை தேடியந்திரங்கள் செயல்படுத்தி வருகின்றன.
இணைய தேடல் மூலமான விளம்பர வருவாயை கொண்டு இவை மரம் நடும் திட்டங்களில் பங்கேற்கின்றன அல்லது உதவுகின்றன. இந்தப் பிரிவில் இகோசர்ச், குடுசர்ச், என்விரோசர்ச் என பல தேடியந்திரங்கள் தோன்றினாலும் இவற்றில் இன்னமும் மிஞ்சி நிற்பது இகோஷிய மட்டும் தான். அது மட்டும் அல்ல பசுமை தேடியந்திரமாக அது தனித்து நிற்கிறது.
இகோஷியா மகத்துவம்
இகோஷியாவின் பின்னே உள்ள கருத்து மிகவும் எளிதானது. எப்படியும் நீங்கள் தகவல்களுக்காக கூகுள், பிங், யாஹூ போன்ற பொது தேடியந்திரங்களை பயன்படுத்துகிறீர்கள். அந்தத் தேடலுக்கு இகோஷியாவை பயன்படுத்துங்கள். உங்களுக்கு தேடல் முடிவுகள் கிடைக்கும் என்றால், உங்களைப் போன்றவர்கள் தேடுவதால் விளம்பர வருவாய் கிடைக்கும். அந்த வருவாயை நாங்கள் வைத்துக்கொள்ளாமல் அதன் பெரும்பகுதியை பசுமை வழிக்காக செலவிடுகிறோம் என்கிறது இகோஷியா (ecosia.org). அதாவது, பூமியின் பசுமை பரப்பை அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க உதவும் வகையில் மரம் நடுவதற்காக இந்த வருவாயை பயன்படுத்திக் கொள்கிறது.
ஆக, நீங்கள் செய்யும் ஓவ்வொரு கிளிக்கும் உலகில் எங்கோ ஒரு மூளையில் மரம் நட பயன்படுகிறது - இகோஷியா தேடியந்திரத்தை பயன்படுத்தும் போது உங்கள் செயலின் பசுமை தாக்கத்தை நீங்கள் நன்றாக உணரலாம். அதன் முகப்பு பக்கத்திலேயே உங்கள் ஒரு கிளிக் மற்றவர்களின் கிளிக்குகளுடன் சேர்ந்து இத்தனை மரம் வைக்கப்பட உதவியிருக்கிறது எனும் தகவல் உணர்த்தப்படுகிறது. பசுமை விரும்பிகளுக்கு இது உற்சாகம் அளிக்க கூடியது தானே!
பிங் மூலம்
ஆனால் இகோஷிய சொந்தமாக தேடலில் ஈடுபடுவதில்லை. பிங் தேடல் சேவையை தான் இது தனக்கான மூல தேடியந்திரமாக பயன்படுத்துகிறது. தேடல் பட்டியலில் இரண்டு வகையான விளம்பரங்களை இடம்பெறச் செய்கிறது; ஒன்று இகோ ஆட்ஸ் இன்னொன்று இகோ லிங்க்ஸ். இவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயை தான் மரம் வைக்க பயன்படுத்திக்கொள்கிறது. (தனது செயல்பாட்டிற்கான செலவு போக 80 சதவீதம்). இதற்காக ஓர் அமைப்புடன் கைகோத்துள்ளது. இந்த திட்டம் செயல்படும் விதம் மற்றும் மரங்கள் எங்கே நடப்படுகின்றன? எப்படி பராமரிக்கப்படுகின்றன போன்ற விவரங்கள் இதற்கான அறிமுக பக்கத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. செலவு கணக்கு உள்ளிட்ட விவரங்களும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
புத்தகம் தந்த ஞானம்
இகோஷியா இன்று மாற்று தேடியந்திரங்களில் பசுமை நோக்கிலான முக்கிய தேடியந்திரமாக வளர்ந்திருக்கிறது. 25 லட்சம் பயனாளிகளை அதை தவறாமல் பயன்படுத்துகின்றனர். அதோடு, மற்ற தேடியந்திர முடிவுகளை மட்டும் சார்ந்திராமல் அது தானே சொந்த தேடல் அல்கோரிதமையும் உருவாக்கி கொண்டு அதன் மூலமும் தேடலை மேம்படுத்தி தருகிறது. ஆங்கிலம் தவிர வேறு மொழிகளிலும் தேடல் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் தேடல் சேவை வசதியின் வேகமும் மேம்பட்டிருப்பதாக இகோஷியா குறிப்பிடுகிறது. கூகுள் தேடல் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் வசதியும் இருக்கிறது.
"இகோஷியாவுக்கு மட்டும் கூகுளுக்கு இருக்கும் அளவு பயனாளிகள் இருந்தால், உலகில் காடுகள் அழிக்கப்படுவதன் பாதிப்பை ஒட்டுமொத்தமாக நிறுத்துவிடுவோம்" என்கிறார் கிறிஸ்டியன் ரால் (Christian Kroll). இவர் தான் இகோஷியாவின் நிறுவனர்.
ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த ரால், 2009-ம் ஆண்டு இகோஷியா தேடியந்திரத்தை துவக்கினார். ரால் அதற்கு முந்தைய ஆண்டு தான் பட்டப்படிப்பை முடித்திருந்தார். பெரிய பகாசுர நிறுவனங்களில் பணியாற்றுவதை விரும்பாதவர் உலக நாடுகளில் சுற்றிக்கொண்டிருந்தார். இந்தப் பயணத்திற்கு நடுவே அவர் தாம்ஸ் பிரைட்மேன் எழுதிய ஹாட், பிளாட் அண்ட் கிரவுடெட் (Hot, Flat and Crowded ) புத்தகத்தை வாசித்தார். காடுகளை அழிப்பதன் மூலம் உண்டாகும் கரியமில சுவடுகள் புவிவெப்பமாதலுக்கு 17 சதவீத பங்களிப்பை செலுத்துவதாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல் அவரது மனதில் நன்றாக பதிந்து போனது.
இந்த விவரம் எனக்கு தெரியாத்தாக இருந்த்து என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ள ரால், இது இத்தனை மோசமாக இருக்கிறது என்றால் இதை தடுக்க நாம் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எண்ணத்தில் இருந்தவர் மனதில், காடுகளை காக்கும் ஒரு தேடியந்திரத்தை உருவாக்கினால் என்ன என்று தோன்றியது.
லாபத்தை விட நல்ல செயலுக்கு முக்கியம் அளிக்க வேண்டும் என நினைத்தவர், இந்த எண்ணத்தை செயல்படுத்தும் விதமாக பாரெஸ்டல் (Forestle) எனும் தேடியந்திரத்தை முதலில் துவங்கினார். பாரெஸ்ட், கூகுள் தேடல் நுட்பத்தை பயன்படுத்தி தேடல் சேவையை வழங்கியது. அதன் மூலமான வருவாயை பசுமை நன்கொடையாக அளிக்க திட்டமிட்டது. ஆனால் சில நாட்களில் எல்லாம் கூகுள் இதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது.
ஒரு பில்லியன் மரங்கள்
இதன் பிறகு இதே எண்ணத்தை அடிப்படையாக கொண்டு இகோஷியா தேடியந்திரத்தை நிறுவினார். கூகுளுக்கு பதிலாக யாஹு மற்றும் பிங் தேடியந்திரங்களை அடிப்படை தேடல் சேவைகளாக தேர்வு செய்து கொண்டார். இகோஷியா தேடியந்திர செயல்பாடுகளை தொழில்முறை தன்மை பெறச்செய்வதற்காக அதை ஒரு லாப நோக்கில்லாத நிறுவனமாக பதிவு செய்து கொண்டார்.
அதன் பிறகு, இகோஷிய மெல்ல வளர்ந்து வருகிறது. அதன் பயனாக உலகில் மரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
பிரேசில் மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பகுதிகளில் காடு வளர்ப்பு திட்டத்தில் பங்கேற்கும் இகோஷியா 2020-ம் ஆண்டில் 100 கோடி மரங்கள் எனும் இலக்கை மனதில் கொண்டு செயல்பட்டு வருகிறது.
2014-ம் ஆண்டில் முதல் மில்லியன் எண்ணிக்கையையும், 2015-ல் இரண்டாவது மில்லியன் எண்ணிக்கையையும் எட்டியிருக்கிறது.
பசுமை பாதையில் நம்பிக்கை இருப்பவர்கள் இகோஷியாவை பயன்படுத்திப் பார்க்கலாம். ஆனால் தயவு செய்து கூகுளின் அளவுகோளோடு இதை அணுக வேண்டாம். வலைதள முகவரி - >https://www.ecosia.org
கருப்பு கூகுள்கள்
முன்றாவது வகை பசுமை தேடியந்திரங்கள் அடையாள நோக்கிலானவை. இதில் பல தேடியந்திரங்கள் இருந்தாலும் பிளாக்லேவை மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது. ஏனெனில், அது இந்த பிரிவில் முன்னோடி என்பது மட்டும் அல்ல, மற்றவை எல்லாம் அதன் பிரதியெடுத்தலாகவே இருக்கின்றன.
பிளாக்லேவும் கூகுளை மையமாக கொண்ட தேடல் சேவைதான். அப்படி கூட சொல்ல முடியாது. இது கூகுளில் ஒரு சின்ன மாற்றத்துடன் தேட வைக்கிறது. கூகுளின் முகப்பு பக்கத்தின் பின்னணியை வெள்ளை நிறத்திற்கு பதிலாக கருப்பு நிறத்திலான பின்னணியாக மாற்றி விடுவது தான் அந்த மாற்றம். இவ்வாறு கருப்பு நிற பின்னணியை பயன்படுத்தும் போது மானிட்டருக்கான ஒளி பயன்பாடு குறைந்து மின்சக்தி மிச்சமாவதாகவும், இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு சின்னதாக உதவலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருப்பு பின்னணி மூலம் ஆண்டுக்கு 750 மெகாவாட் மணி நேரங்களை மிச்சமாக்கலாம் எனும் ஆய்வு தகவல் தந்த ஊக்கத்தால் இந்த தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. பிளாக்லேவின் இந்திய வடிவமும் இருக்கிறது. அதன் முகவரி >http://in.blackle.com
முந்தைய அத்தியாயம்: ஆ'வலை' வீசுவோம் 17 - ஆங்கில அகராதிகளின் 'கூகுள்'!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago