M.G.R. ஒரு காரியத்தில் இறங்கினார் என்றால் என்ன இடையூறு வந்தாலும் அதை முடிக்காமல் விடமாட்டார். அதற்கு மிகப் பெரிய உதாரணம் அவர் முதன் முதலில் தயாரித்து, இயக்கி, நடித்து பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படமான ‘நாடோடி மன்னன்’.
‘மலைக்கள்ளன்', ‘அலிபாபாவும் 40 திருடர்களும்', ‘மதுரை வீரன்', ‘தாய்க்குப் பின் தாரம்' என்று வெற்றிப் படிகளில் ஏறி புகழின் உச்சியில் இருந்த எம்.ஜி.ஆர். நடிப்பதற்காக பல் வேறு படவாய்ப்புக்கள் காத்திருந்தன. ஆனால், அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு தனது முழு கவனத்தையும் ‘நாடோடி மன்னன்’ படம் எடுப்பதில் திருப்பினார் எம்.ஜி.ஆர்.! அது ஏன் என்பதற்கான விளக்கமும் கொடுத்தார்.
‘‘நான் சொந்தத்தில் ‘நாடோடி மன்னன்’ படத்தை ஏன் ஆரம்பித்தேன்? எனக்காக எத்தனையோ படங்கள் காத்திருக்கும் நேரத்தில் அதில் நடித்து முடித் தாலே வாழ்க்கைக்கு தேவையான பணம் சம்பாதித்து நிம்மதியாக இருக்கலாம். ஆனால், ‘நாடோடி மன்னன்’ ஒரு பரி சோதனை முயற்சி. என் விருப்பப்படி செய்து அதற்கு மக்களின் பதில் என்ன? என்று எதிர்பார்க்கிறேன்’’ என்றார் எம்.ஜி.ஆர்.
‘நாடோடி மன்னன்’ படத்துக்கான கனவு 20 வயதிலேயே எம்.ஜி.ஆரின் மனதில் கருக்கொண்டது. படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கொல் கத்தா சென்ற எம்.ஜி.ஆர்., அங்கு ‘இஃப் ஐ வேர் கிங்’ என்ற படத்தைப் பார்த்தார். இந்தப் படமே எம்.ஜி.ஆர். மனதில் விதை யாய் விழுந்து விருட்சமாக வளர்ந்தது. அதன் விளைவுதான் ‘நாடோடி மன்னன்.’
படத்துக்காக பணத்தை பணம் என்று பார்க்காமல் எம்.ஜி.ஆர். செலவழித்தார். சில நேரங்களில் அவரது அண் ணன் சக்ரபாணியே கவலைப்படும் அள வுக்கு கடன் வாங்கி செலவு செய்தார். காட்சி களின் பிரம் மாண்டத்துக்கு மட்டுமல்ல; படத்தில் பணி யாற்றும் நடிகர்களுக் கும் தொழிலாளர் களுக்கும் தாராள மான சம்பளமும் வழங்கப்பட்டது.
படப்பிடிப்பு குழுவினர் விரும்புவதை சாப்பிடுவதற் காக படப்பிடிப் பின்போது மினி ஓட்டலையை எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்து விட்டார். அந்தக் காலத்தில் பணக்காரர் கள் மட்டுமே குடிக்கும் ‘ஓவல்டின்’ என்ற பானம் பெரிய அண்டாக்களில் வைக்கப்பட் டது. முதன்முதலாக பல தொழிலாளர்கள் ‘ஓவல்டின்’ குடித்ததே அப்போதுதான்.
படம் முடிந்த பிறகு ‘‘வெற்றியோ, தோல்வியோ அது மக்கள் தீர்ப்பைப் பொறுத்தது. படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி’’ என்று சர்வ சாதாரணமாக சொன்னார் எம்.ஜி.ஆர்.
மக்கள் எம்.ஜி.ஆரை மன்னனாக்கி னர். அதுவரை வெளியான படங்களை வசூலில் புரட்டிப் போட்டு அமோக வெற்றி பெற்றது ‘நாடோடி மன்னன்’. 19 ஆண்டுகள் கழித்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து எம்.ஜி.ஆர். நிஜமாகவே முடிசூடியதற்கு கால்கோள் நடத்தியது ‘நாடோடி மன்னன்’.
மதுரையில் பல லட்சம் மக்கள் முன் னிலையில் நடந்த வெற்றி விழாவைத் தொடர்ந்து சென்னையிலும் 30.11.1958ல் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் பேரறிஞர் அண்ணா தலைமையில் வெற்றி விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவில் எம்.ஜி.ஆருக்கு வீரவாளை அண்ணா பரிசளித்தார்.
இந்தக் கூட்டத்தில்தான், ‘‘மரத்தில் பழுத்த கனி தங்கள் மடியில் விழாதா என்று பலரும் எதிர்பார்த்திருக்க, நல்லவேளையாக அந்தக் கனி என் மடியில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன். எம்.ஜி.ஆரை பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வது போலாகும்’’ என்று அண்ணா பேசினார்.
‘நாடோடி மன்னன்’ பற்றி குறிப்பிடும் போது நடிகை பானுமதி பற்றி சொல்லி யாக வேண்டும். நடிப்பு, தயாரிப்பு, இசை, இயக்கம் என்ற பன்முகத்திறமை கொண்டவர் பானுமதி. ‘மலைக்கள்ளன்’, ‘மதுரை வீரன்’ என்று ஏற்கெனவே வெற்றி பெற்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கு பானுமதியே ஜோடி. ‘நாடோடி மன்னன்’ படத்திலும் அவரையே நாயகியாக நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்பந்தம் செய்தார்.
பானுமதி அந்தக் காலத்திலேயே சுதந்திரமாக செயல்படும் நடிகை. எம்.ஜி.ஆரும் அப்படியே. தான் விரும்பு கிறபடி காட்சிகள் வரும்வரை எம்.ஜி.ஆர். விடமாட்டார். அதனால்தான் இன்றும் அவர் படங்களை ரசிக்க முடிகிறது. எம்.ஜி.ஆர். மீண்டும் மீண்டும் காட்சி களை எடுப்பது பானுமதிக்கு பிடிக்கவில்லை. ‘‘எடுத்த காட்சிகளையே எத்தனை முறை எடுப்பீங்க?’’ என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து கேட்டார்.
சக நடிகையின் ஒத்துழைப்பு இப்படி இருக்கும்போது கோபம் வந்தாலும், எம்.ஜி.ஆர். அமைதியாகவே பதில் சொன்னார், ‘‘படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி, இயக்குநரும் நான்தான். என் இயக்கத்தில் நடிக்க விருப்பம் இருந்தால் நடிங்க. இல்லைன்னா விட்டுடுங்க.’’ இதைத் தொடர்ந்து, படத்தில் இருந்து விலகிக் கொண்டார் பானுமதி. பிறகு, அவர் இறப்பது போல காட்சிகள் மாற்றப்பட்டு நடிகை சரோஜா தேவியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவரின் திறமையை எம்.ஜி.ஆர். மதிப்பார். படத்தில் இருந்து பாதியில் விலகினாலும் சென்னையில் நடந்த வெற்றி விழாவுக்கு பானுமதியையும் பெருந்தன்மையுடன் அழைத்து, அவருக் கும் விருது வழங்கினார் எம்.ஜி.ஆர்.
அதன் பின்னரும், எம்.ஜி.ஆர். - பானுமதி நடிப்பில் ‘ராஜா தேசிங்கு’, ‘கலை அரசி’, ‘காஞ்சித் தலைவன்’ ஆகிய படங்கள் வெளியாயின.
பன்முகத் திறமை மிக்க பானுமதிக்கு தமிழக அரசின் சார்பில் அதுவரை ‘கலைமாமணி’ பட்டம் வழங்கப்படாததை அறிந்த எம்.ஜி.ஆர், தான் முதல்வராக இருந்தபோது ‘கலைமாமணி’ விருதை பானுமதிக்கு வழங்கி கவுரவித்தார்.
எம்.ஜி.ஆர். நல்ல இசை ஞானம் உடை யவர். ‘நாடோடி மன்னன்’ படப்பிடிப்பின் போது ஒருநாள், இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடுவுடன் பாடல் களுக்கான இசையமைப்பு பற்றி எம்.ஜி.ஆர். ஆலோசித்துக் கொண்டிருந் தார். அப்போது, ‘‘நீங்கள் இசையமைப் பில் எல்லாம் தலையிட வேண்டுமா?’’ என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டார் பானுமதி. இசை பற்றி எம்.ஜி.ஆருக்கு பெரிதாக ஒன்றும் தெரிந்திருக்காது என்ற எண்ணம் பானுமதிக்கு.
எம்.ஜி.ஆருக்கு நினைவாற்றல் அபா ரம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எதை யும் மறக்க மாட்டார். பானுமதி கேட்ட கேள்விக்கு, 27 ஆண்டுகளுக்குப் பின் முதல்வராக இருந்தபோது செயல்வடி வில் அவருக்கு பதிலளித்தார் எம்.ஜி.ஆர்.
தமிழக அரசு இசைக் கல்லூரியின் முதல்வராக பானுமதியை எம்.ஜி.ஆர். நியமித்தார். பின்னர், அந்த பதவியின் அந்தஸ்து மேம்படுத்தப்பட்டு இயக்குநர் மற்றும் முதல்வராக பானுமதி பதவி வகித்தார். 2005-ம் ஆண்டு பானுமதி மறைந்த தினம், எம்.ஜி.ஆர். நினைவு நாளான டிசம்பர் 24-ம் தேதி.
படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்
எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’ திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்ட 33 திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது. எந்த கருப்பு வெள்ளை படமும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. பெங்களூரிலும், இலங்கையிலும் தலா ஒரு திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் வெள்ளி விழா படம் என்பதோடு, ரூ.1 கோடி வசூல் செய்த முதல் தமிழ்படம் என்ற பெருமை பெற்றது ‘மதுரை வீரன்.’
- தொடரும்...
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago