மகாத்மா காந்தியை விட ஜி.டி.பிர்லா 25 வயது இளையவர். காந்தி 1869-ல் பிறந்தார். இவர் 1894-ல் பிறந்தார்.
1919-ம் ஆண்டில் முதல் உலக மகா யுத்தத்துக்குப் பிறகு 50 லட்சம் ரூபாய் முதலீட்டில் குவாலியர் மில்லை உருவாக்கியவர்.
1926-ல் வெள்ளையர் காலத்தில் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்.
1916-ல் மகாத்மா காந்தியை முதன் முதலில் சந்தித்தார்.
1932-ல் காந்திஜி உருவாக்கிய ஹரிஜன்சேவா சங்கத்தின் தலைவர் பொறுப்பேற்றுச் செயல்பட்டார்.
காந்திஜியின் பரம பக்தராக இருந்த கோடீஸ்வரர் பிர்லா ஒரு கட்டத்தில் பத்திரிகையாளர்கள் காந்தியிடம் கேட்டார்கள். கடைசியில் காங்கிரஸ் கட்சி பணக்காரர்களின் கைக்கூலியாக ஆகிவிட்டதா? ஆலை முதலாளிகளின் கருணைப் பார்வையை எதிர்பார்த்துதான் காங்கிரஸ் இருக்கிறதா என்று கேட்டார்கள்.
பொக்கை வாய்ச்சிரிப்புடன் காந்தி சொன்னார்.
‘கசப்பான உண்மை அதுதான். தொண்டர்களிடம் 4 அணா, 4 அணாவாக வசூல் செய்தோம். அந்த சொற்பக் காசை வைத்து எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியவில்லை. அதனால் காங்கிரஸ் கொடுக்கும் நன்கொடையில்தான் மக்கள் நலன் பேணப்படுகிறது!’ என்றார்.
பிர்லா மாளிகை டெல்லியில்தான் உள்ளது. காந்தி டெல்லிக்கு ரயிலில் செல்கிறார் என்றால் பிர்லா 4 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியை ரயில் நிலையம் எடுத்துப் போவார். காந்தி வந்ததும் அவரை சாரட்டில் ஏற்றி அமர வைத்து -குதிரைகளை அவிழ்த்து விட்டு, தானும் 10 தொண்டர்களும் அந்த சாரட்டை ரோட்டில் இழுத்துக் கொண்டு சென்று பிர்லா மாளிகையில் இறக்கி விடுவார்.
காந்திஜியின் ஆசிரமம், மருத்துவமனை, பால் பண்ணை இத்தனையும் பராமரிக்க வருஷத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவு ஆகும். அத்தனைக்கும் கணக்கு எழுதி வைத்து காந்தி கொடுப்பார். அதை திரும்பிக்கூடப் பார்க்காமல் வாங்கிக் கிழித்துப் போடுவார் பிர்லா.
அந்த பிர்லா மாளிகையில் கடைசி 4 மாதங்கள் டெல்லி போனால் காந்தி தங்குவார். மாலை நேரங்களில் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடக்கும். ஆண்களும் பெண்களுமாக தொண்டர்கள் குறைந்தது 200 பேர் கூடுவார்கள். பிரார்த்தனை முடிந்தவுடன் காந்தி கொஞ்ச நேரம் உரை நிகழ்த்துவார். மெல்லிய குரல். மைக் வசதி இருக்காது. கவர்ச்சிகரமாக ஏற்ற இறக்கத்துடன் அவருக்குப் பேசத் தெரியாது. வார்த்தையில் உண்மை இருக்கும். சத்தியம் இருக்கும்.
பிர்லா மாளிகையில் அன்றைய மாலை தினம், கூட்டம் முடிந்ததும் தொண்டர்கள் துண்டு ஏந்தி அமர்ந்திருப்போரிடம் நிதி வசூல் செய்தார்கள்.
மொத்தமாக ஆயிரத்து நூற்று 10 ரூபாய் 50 பைசா வசூல் ஆகியிருந்தது. நாளை வங்கியில் டெபாசிட் செய்து விடு என்று கூறிவிட்டுப் போய் விட்டார் காந்தி.
மறுநாள் வங்கிக்குப் போய் எண்ணிப் பார்த்ததில் அதில் காலணா (3 பைசா) குறைவாக இருந்தது. காந்திக்கு போன் செய்தான் தொண்டன். நிலைமையைச் சொன்னான்.
‘‘நன்றாக எண்ணிப் பார்த்தாயா?’’
‘‘இரண்டு முறை எண்ணிப் பார்த்தேன் பாபுஜி!’’
‘‘அப்படியென்றால் யாரோ கையாடல் செய்திருக்கிறார்கள். பிச்சையெடுத்து நாம் காசு வசூலிக்கிறோம். அதிலும் ஒருவன் கை வைக்கிறானா? நான் நேர்மையை, சத்தியத்தைச் சரியாகப் போதிக்கவில்லை!’’ என்று சொல்லிக் கொண்டு அந்த நாள் முழுவதும் உபவாசம் இருந்தார். நீர் கூட அருந்தாமல் பட்டினி கிடந்து தன்னைத்தானே தண்டித்துக் கொண்டார். இதுபோன்ற நிகழ்வுகளுக்குப் பொருந்தும் வள்ளுவன் குறள்:
‘தினைத்துணையாம் குற்றம் வரினும் -பனைத்
துணையாக் கொள்வர் பழிநாணுவார்’
----
குறள் கதை 65: சோதனை
1954-ல் சேலத்தில் சிவசுப்பிரமணியன் -சரஸ்வதி தம்பதிக்குப் பிறந்தவர் ராமகிருஷ்ணன். மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி. தஞ்சாவூரில் கல்வி பயின்று ஆய்குடியில் வாழ்ந்து வருபவர்.
1975-ல் கோவையில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். அப்போது பெங்களூரில் நடந்த கடற்படை அதிகாரிகள் தேர்வில் கலந்துகொள்ளச் சென்றார்.
உடல் தகுதித் தேர்வின்போது மரத்திலிருந்து குதித்தவருக்கு முதுகுத் தண்டுவடத்தில் பலமாக அடிபட்டுவிட்டது. பல மாதங்கள் சிகிச்சையளித்தும் பயனில்லை. கழுத்துக்குக் கீழே இனி செயல்படாது என்ற நிலையில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
தனிமையின் வெறுமை கொன்றது. அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுத்தால் ஆறுதலாக இருக்குமே என்றனர் குடும்பத்தினர்.
''தொடக்கத்தில் 4 குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தேன். இப்போது இங்கே மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் மட்டும் 60 பேர் உள்ளனர். அப்படிப்பட்ட எனக்கு மனித நேயத்துடன் சிகிச்சை அளித்தவர் அமர்ஜித்சிங் சாகல். அவர் நினைவாக அமர்சேவா சங்கம் தொடங்கி நடத்தி வருகிறேன்'' என்றார் ராமகிருஷ்ணன்.
உடல் குறைபாடு, உள்ளக் குறைபாடு இருக்கும் குழந்தைகளுக்கு அவர்களது உடல்நிலைக்கேற்ப டைப்பிங் -புக் பைண்டிங் -கம்ப்யூட்டர் பயிற்சி -சீருடை தைத்தல் -கை வேலைகள் உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கிறார்கள். இங்கு பயிற்சி பெற்ற சில பேர் 'இன்ஃபோசிஸ்' கம்பெனி உள்ளிட்ட பல நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள்.
சக்கர நாற்காலியில் சாதனை புரிந்து வரும் ராமகிருஷ்ணனை லட்சுமி என்ற பெண்மணி மணந்து துணை நிற்கிறார்.
உடல் ஊனமுற்றதால், ஓய்ந்து மூலையில் முடங்கி விடாமல், உலகமெங்கும் தன் சேவையை விரிவுபடுத்தி வாழ்கிறார் ராமகிருஷ்ணன். இந்த அற்புத மனிதருக்கு மத்திய அரசு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.
மனம் தளராமல் -எந்த சோதனை வந்த போதும் இடைவிடாது முயற்சி செய்பவர் விதியையும் புறமுது காட்ட வைப்பார்கள் என்கிறார் வள்ளுவர்:
‘ஊழையும் உப்பக்கம் காண்பர்- உலைவு இன்றி
தாழாது உஞற்றுபவர்’
--
கதை பேசுவோம்.
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago