மான்டேஜ் மனசு 14: ரெட்டை வால் காதல்!

By க.நாகப்பன்

ஒரு சனிக்கிழமை மாலைப் பொழுதில் பழைய அலுவலக நண்பர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன்.

நாயக பிம்பங்களைத் தாண்டி சமூக வலைதளங்களில் கௌதம் மேனன், செல்வராகவன் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்தது பற்றி பேச்சு திரும்பியது.

'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் வெளியாகி ஆறு வருடங்கள் ஆனதை குறிப்பிட்டு சுரேஷ் சிலாகித்துக் கொண்டிருந்தான்.

சுரேஷ் சாதாரணமான, சின்ன விஷயத்தைக் கூட வெகு அழகாக சொல்லி கவனிக்க வைப்பான். எதிரில் இருப்பவர்கள் நிதானமாக இல்லையென்றால் தன் பக்கம் வாக்கு சேகரித்து விடுவான். அவன் மார்கெட்டிங் உத்தி உடன் இருப்பவர்களை சுண்டி இழுக்கும்.

சுரேஷ் பேசியதை விட, அன்று பிரேம் பேசியதுதான் அதிர்ச்சி.

''கௌதம் மேனன்தான் காதல் படம் எடுக்க தகுதியானவர். அவரோட ரசனைக்குப் பக்கத்துல யாரும் வர முடியாது. ஸ்டைல், மேக்கிங், அழகியல் கௌதம் மேனனின் மிகப் பெரிய பிளஸ். இந்த மாதிரி படம் எடுக்காம, செல்வராகவன்லாம் எதுக்கு இப்படி படம் எடுக்கிறாப்ல'' என்று போகிற போக்கில் காலி செய்தான் பிரேம்.

செல்வாவைப் பற்றி பேசும் போது எதிர்க்காமல் இருக்க முடியுமா?

''செல்வா காட்டுற காதல்ல நீ எந்த மேஜிக்கையும் பார்க்க முடியாது. ஃபேன்டஸி இருக்காது. யதார்த்தமா இருக்கும். இன்னும் சொல்லணும்னா நமக்கு என்ன நடந்தது, என்ன நடக்குதுன்னு சொல்ற படத்தைதான் செல்வா எடுக்கிறார். நீ பார்க்கிற கௌதம் மேனன் படம் உனக்கு அந்நியமானது. மேட்டிமைத்தனத்தோட நகல் அது. உனக்கு ஜெராக்ஸ்தான் வேணும்னா கொண்டாடு. தப்பில்லை.''

இதை சொன்னது... ஆம், நானேதான்.

''பாஸ்... காதல்னா மகிழணும். உற்சாகமா இருக்கணும். துள்ளிக் குதிக்கணும். அழுதுகிட்டு கிடைக்கலைங்கிற கவலையில தாடி வளர்த்துக்கிட்டு பைத்தியமா திரியக்கூடாது. ஆனா, உங்க செல்வா அதைத்தானே சொல்றார். நமக்கு நெகடிவ் விஷயமே வேணாம் பாஸ்!''

பிரேம் இதைச் சொன்னதும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

மூச்சுக்கு முப்பது முறை எதைப் பற்றி கருத்து கேட்டாலும் எதிர்மறையாக பேசும் பிரேம், 'ஆன்லைனில் மொபைல் வாங்குவது என்றாலும் ஏமாத்திடுப்புடுவாய்ங்க' என்று வாய் வலிக்க சொல்லும் பிரேம், புதுசா ஆரம்பிக்கும் எந்த விஷயத்துக்கும் வாழ்த்துகள் சொல்லாமல் 'ஆபத்து பாஸ். எச்சரிக்கையா இருங்க' என்று சொல்லும் பிரேம், காதல் என்றால் பாசிட்டிவ் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறானே... இது என்ன மாதிரியான டிசைன்!

இந்த இடைவெளியில் சுரேஷ், பிரேம் பக்கம் சாய ஆரம்பித்தான்.

''பாஸ் என்னதான் இருந்தாலும் ஜெஸ்ஸியை மறக்க முடியுமா?'' என்று சினிமாத்தனமாக பேச ஆரம்பித்தான். அவன் சிவகார்த்திகேயன் ரசிகன் என்பதை உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும். சிவாவின் ரசிகன் என்பதில் என்று குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம் இருக்கிறது. 'இறுதிச்சுற்று' படம் வந்தபோது கூட 'மான்கராத்தே'தான் பெஸ்ட் என்று அலப்பறை கூட்டியவன் சுரேஷ் என்றால் அவனைப் பற்றி நீங்களே ஒரு அனுமானத்துக்கு வந்திருப்பீர்கள் என்று கருதுகிறேன்.

''ஜெஸ்ஸி கேரக்டரைப் பார்க்க நீ அதுல உன் காதலியைப் பார்க்க முடியுமா? ஒரு படத்தை நல்லா இருக்குன்னு சொல்ல முடியும். ரசிக்க முடியும். சந்தோஷப் பட முடியும். ஆனா, அந்த படத்துக்குள்ள உன் வாழ்க்கையைப் பார்த்திருக்கியா? நீ விரும்புறதும், எதிர்பார்க்குறதும் ஒரே விஷயமா இருக்கலாம். ஆனா, அதுதான் உனக்கும், உன்னை சுற்றி இருக்குறவங்களுக்கும் நடக்குதா? வழக்கமான எம்பிஏ மூளையை கழட்டி வெச்சிட்டு உணர்வுரீதியா பேசு சுரேஷ்.''

''இல்லை பாஸ். செல்வா படம் பார்த்தா எனக்கும் அந்த ஃபீல் வருது. கஷ்டமா இருக்கு. அழாம இருக்க முடியலை. என் வலியை நான் யாருக்கு அழுது காட்ட விரும்பலை. ஏன் என் வலியை நான் எல்லாருக்கும் சொல்லணும். அதான் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்னு விரும்புறேன்."

''அப்போ நிஜமாவே எந்த சந்தர்ப்பத்துலயும் உன்னால சிரிச்சுக்கிட்டே இருக்க முடியுதா? அதற்கான சாத்தியங்கள் இருக்கா?''

''அப்படி சிரிக்க முடியாத சமயங்கள்ல நான் ஜாலியா இருக்குற மாதிரி நடிக்கிறேன். இப்போ நடிக்க ஆரம்பிச்சா அப்புறம் அதுவே பழகிடும். சரிதானே!''

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. வெளியில் ஜாலியான ஆள் என்ற பிம்பத்தைக் கட்டமைக்கும் சுரேஷ் இப்படி நடந்துகொள்கிறான். அவனுக்குள் எவ்வளவு வலி இருந்தால் இந்த பிம்பத்தை வலிந்து திணித்துக்கொண்டிருப்பான். அவன் சொன்ன மேலோட்டமான ஒரு பதில் எங்களை உலுக்கிவிட்டது.

இந்த உரையாடலை இன்னும் நீட்டிக்கச் செய்தால் ஆரோக்கியமாக இருக்காது என்பதை உணர்ந்த சிவாதான் 'த்ரிஷா இல்லனா திவ்யா' என்றான்.

''அது எப்படி பாஸ் உடனே அடுத்த காதலுக்கு தயாராக முடியும்?''

'நீங்க போன தலைமுறை பாஸ். இந்த தலைமுறையில் இதெல்லாம் சகஜம்' என்று சொல்லிவிடுவார்களே என்று உள்ளூர சின்ன பயம் இருந்தது எனக்கு.

இந்த நீண்ட உரையாடலை அனுபவப் பகிர்வாகவே தருகிறேன்.

*

முந்தைய தலைமுறையில் ஒரு காதல் சேராமல் போனால், தோல்வியில் முடிந்தால், ஒரு தலைக் காதலாக இருந்தால் அந்த பாதிப்பில் இருந்து வெளியே வர நீண்ட நாட்கள் ஆகும். ஆனால், இன்றைய தலைமுறை அந்த பாதிப்புகளை மனதில் ஏற்றிக்கொள்ளாமல் சர்வ சாதாரணமாக கடக்கிறார்கள். தாடியும் திரியும் இளைஞர்கள் எண்ணிக்கை இப்போதும் அதிகம் என்றாலும், அதன் பின்னணியில் இருப்பது ட்ரெண்ட் தானே தவிர சோகம் அல்ல.

இன்றைய தலைமுறையின் மன முதிர்ச்சிக்கு 'மயக்கம் என்ன' படம் சிறந்த உதாரணம். சுந்தரின் காதலி ரிச்சா கங்கோபாத்யாயாவை தனுஷ் விரும்புகிறார்.

நண்பனின் காதலியை விரும்புவதால் தனுஷ் குற்ற உணர்ச்சி அடைவதோடு நிற்கவில்லை. அதற்கடுத்து காதலிக்கிறார். திருமணமும் செய்து கொள்கிறார்.

'புதுப்பேட்டை' படத்தில் நண்பனின் தங்கையை திருமண கோலத்தில் பார்க்கிறார் தனுஷ். தாலி எடுத்து கொடுக்க வேண்டிய தனுஷ், சோனியா அகர்வாலின் கழுத்தில் கட்டிவிடுறார். அங்கேயும் எந்த உறுத்தலும் தனுஷுக்கு இல்லை.

அதே சமயத்தில், இளைஞர்கள் இப்படி பயணிப்பது ஆபத்து என்று எண்ணம் வருகிறதா? அதற்கும் செல்வராகவன் இன்னொரு காட்சியில் பதில் சொல்கிறார்.

தனுஷின் இன்னொரு நண்பன் ரிச்சாவை ''நல்லா பார்த்துக்குவேன். என் கூட வந்திடு'' என்று சொல்கிறார். அப்போது ரிச்சா பேசுவது தான் இன்றைய தலைமுறையின் மனமுதிர்ச்சிக்கான உதாரணம்.

''தப்பு உன் மேல இல்லை. உன் முன்னாடி நான் அழுதிருக்கக் கூடாது. தாராளமா எங்க வீட்டுக்கு வரலாம். எனக்குப் பிரச்சினையே இல்லை. இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்ததுன்னு ரெண்டு பேருமே மறந்துடலாம். சீக்கிரம் கல்யாணம் பண்ணு. அதான் உன்னை இப்படியெல்லாம் பேச வைக்குது.

உன் பொண்டாட்டிய நீதான் தேடிக்கணும். இன்னொருத்தர் பொண்டாட்டி மேல ஆசைப்படக்கூடாது'' என்று சொல்வார்.

அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் எந்த நெருடலும் இல்லாமல் அந்த நண்பனை ரிச்சா இயல்பாய் சந்திப்பதும், பேசுவதும் ஆரோக்கியமான அணுகுமுறை.

செல்வா இன்றைய தலைமுறையையும், காதலையும் எவ்வளவு அழகாய் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இன்னும் சொல்லப் போனால் கௌதம் மேனன் சினிமாவில் வரும் கதைகளும் சிலருக்கு நடந்திருக்கும். செல்வராகவன் சினிமாவில் வரும் கதைகளும் சிலருக்கு நடந்திருக்கும். ஆனால், நாம் எந்த வகை கதாபாத்திரமாக இருக்கிறோம்? எந்த கதை நமக்கானது? என்பதுதான் இங்கே முக்கியம்.

இதைத் தாண்டியும், ஒரு சிலர் இன்றைய காதலின் அப்டேட் வெர்ஷன் வேறுவிதமாக புரிந்துகொள்கிறார்கள். சுருக்கமாக சொல்லப் போனால் 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தின் தியரி தான். ஆனால், ஒரு பெண் ஒரே சமயத்தில் இருவரைக் காதலித்தால் நாம் கொடுக்கும் பட்டப்பெயர்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

இல்லை என்கிறீர்களா?

'தீராத விளையாட்டுப் பிள்ளை', 'இனிமே இப்படித்தான்' படங்களை நீங்கள் எந்த உறுத்தலும், நெருடலும் இல்லாமல் பார்த்திருக்கிறீர்கள்தானே. அந்தப் படங்களை பார்க்கும்போது விஷால் மீதோ, சந்தானத்தின் மீதோ உங்களுக்கு கோபம் வந்திருக்கிறதா? இல்லை பரிதாபம் வந்திருக்கிறதா? இந்த இரண்டுமே இல்லாமல் எந்த சங்கடத்தையும் உணராமல் உங்களால் இயல்பாக படம் பார்க்க முடிந்ததா?

இயல்பாக படம் பார்க்க முடிந்தது என்றே வைத்துக்கொள்வோம். 'எங்கேயும் எப்போதும்' படத்தில் ஒரு காட்சி வரும். பேருந்தில் பயணிக்கும் ஒரு பெண் செல்போனில் தன் காதலனுடன் பேசிக் கொண்டிருப்பார். இன்னொரு அழைப்பு வரும்போது, 'ஹேய். கட் பண்ணு. கட் பண்ணு. அப்பா லைன்ல வர்றார். கட் பண்ணு'' என சொல்லிவிட்டு அடுத்த அழைப்பில், 'சொல்லுடா. அப்பாகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்' என பேசுவார். ஒரே சமயத்தில் இருவருடன் பேசுவதற்கே நீங்களோ, உங்கள் நண்பர்களோ, பக்கத்து இருக்கையில் இருந்தவரோ திட்டித் தீர்த்திருப்பீர்கள்தானே.

இங்கே ஒரு பையன் ஒரே தருணத்தில் இருவரை ஈஸியாக காதலிக்க முடிகிறது. பெண்கள் அப்படி செய்ய முடியுமா? அப்படி செய்கிற பட்சத்தில் நீங்கள் அவர்களை ஏற்றுக்கொள்வீர்களா?

சரி. இதை விடுங்கள்.

உங்கள் காதலி / மனைவியின் பழைய காதல் தெரிந்த பிறகு எந்த கேள்வியும் எழுப்பாமல் இருக்க முடியுமா? அல்லது அந்த காதலன் பற்றி உங்கள் பிரியத்துக்குரியவர் சொல்லும்போது இயல்பாக கடக்க முடியுமா?

இந்த விவாதத்துக்குள் போவதற்கு முன் சிவாவின் நண்பன் ராகவ் கதையை சொல்லிவிடுகிறேன்.

ஒரே சமயத்தில் இரண்டு பேரை எந்த உறுத்தலும் இல்லாமல் காதலிக்க முடியும் என்பதற்கு நிகழ்கால உதாரணம் ராகவ்.

ராகவ் விஸ்காம் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தான். ரம்யா முதலாமாண்டு கணிதம் படித்துவந்தாள். பக்கத்து வீட்டிலேயே வசிப்பதால் கிட்டத்தட்ட சின்ன வயதில் இருந்தே இருவரும் ஒன்றாக வளர்ந்தவர்கள்தான். ஆனால், கல்லூரிப் பருவத்தில் ரம்யாவை ராகவ் அதிகம் கவனிக்கத் தொடங்கினான். கணக்கில் தடுமாறும் ரம்யாவுக்கு உதவினான். அவன் செய்த சின்ன சின்ன குறும்புகளையும் ரம்யா ரசிக்கவே செய்தாள்.

ரம்யாவின் சாந்தமான தன்மையும், அமைதி தவழும் செயல்களும், முகக் களையும் ராகவை இயல்பாக ஈர்த்தன. கணக்கு சொல்லித் தரும் லாவகத்துடன் காதலையும் கற்றுக்கொடுத்தான். ரம்யாவும் காதலித்தாள். பக்கத்து வீடுதான் என்பதால் ராகவ் நண்பர்களுடன் அரட்டைக் கச்சேரி முடித்து வந்த பிறகு, அவள் எந்த நிலையில் இருந்தாலும் அட்டனென்ஸ் போட்டுவிடுவாள்.

சுமாராக படிப்பவள், ராகவுக்காக நல்ல மார்க் எடுக்க ஆரம்பித்தாள். ராகவ் எடுத்துத் தந்த ஆரஞ்சு நிற சுடிதாரை அலுக்காமல் அணிவாள். இப்படியே இருந்த ராகவ் - ரம்யா காதலில் தீட்சிதா நுழைந்தாள்.

தீட்சிதாவின் தோற்றமும், நுனி நாக்கு ஆங்கிலமும், சென்ட் வாசமும், குரலும் ராகவை என்னவோ செய்தன. தீட்சிதாவின் பக்கத்து வீடுதான் ராகவின் நண்பன் ஜெகதீஷ் வீடு. ஜெகதீஷை பார்ப்பதாகச் சொல்லி சொல்லியே தீட்சிதாவை நோட்டம் விட்டான். தீட்சிதாவும் ஒரு கட்டத்தில் ராகவை கவனிக்க ஆரம்பித்தாள்.

அவள் கை குலுக்கி பிறந்தநாள் வாழ்த்து சொன்னாலே ஷாக் அடித்ததாய் சொல்வான். வழக்கமாக பசங்கதானே பெண்களுக்கு அதிகம் செலவு செய்வார்கள். இங்கே ராகவ் விஷயத்தில் தலைகீழ் விகிதம். ராகவ் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு ஐஸ்கிரீம், பீட்ஸா, சாக்லேட் என்று இஷ்டத்துக்கும் வாங்கிக் கொடுத்தாள்.

ஃபேஸ்புக் அக்கவுண்டில் பாஸ்வேர்டில் தீட்சிதாவின் பெயரையும் சில எழுத்துகளுடன் சேர்த்து வைத்து உருகினான். ரம்யாவுக்கு ராகவ் விலகிப் போவது போல தெரியவில்லை. அங்கேயும் அச்சரம் பிசகாமல் மெயின்டெய்ன் செய்தான்.

தீட்சிதா ராகவ் வீட்டுப் பக்கமே புது வீடு வாங்கி குடிவந்தார்கள். அப்போது ஆரம்பித்தது பிரச்சினை. இரண்டு காதலும் தெரியவர, ராகவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வசை பாடி வணக்கம் போட்டனர். தீட்சிதா அவளுக்கு கை வரப் பெற்ற ஆங்கிலத்தில் அதிகமாய் திட்டித் தீர்த்தாள். ஸ்டேட்டஸ், குடும்பம் என்று ஒன்றுவிடாமல் கேவலப்படுத்தியபோதும் ராகவ் கலங்கவில்லை.

ரம்யாதான் அதிகம் கவலைப்பட்டாள். 'என்கிட்ட பேசுற மாதிரியே தானா தீட்சிதா கிட்டயும் பழகியிருப்ப? அப்போ என்கிட்ட பேசுனதையே அவகிட்டயும் சொல்லும்போது உனக்கு கூச்சமா இல்லையா? ஒரே சமயத்துல ரெண்டு பேரை எப்படி உண்மையா காதலிக்க முடியும்? ஒண்ணு நான் இல்லைன்னா அவ. யார் வேணும்னு நீ முடிவு பண்ணியிருக்கலாம். இல்லை அடுத்த காதல் வந்த பிறகு என்னை விட்டு விலகியிருக்கலாம். எப்படி ரெண்டு பேரை மெயின்டெய்ன் பண்ண நினைச்ச? இதை நினைச்சாலே இத்தனை நாள் அன்பும் பொய்னு தோணுது.

ஆனா, உண்மையான அன்பை ஏமாத்துறது எவ்ளோ பெரிய துரோகம்? நீ நேர்மையா இல்லை. இப்படி ஒரு காதல் நமக்குள்ள இருந்ததுக்காக நான் வெட்கப்படுறேன். உன்னை காயப்படுத்த விரும்பலை. ஆனா, உன் மேல கோபம், வருத்தம், வெறுப்பு எல்லாமே இருக்கு. ஆனா, என் உண்மையான காதலுக்கு எந்த அர்த்தமும் இல்லாமப் போச்சு...' என வெதும்பினாள்.

ரம்யா காதலின் கசப்பில் கணிதத்தை டிஸ்கன்டினியூ செய்துவிட்டு நர்ஸிங் படிக்கப் போய்விட்டாள். தீட்சித் எம்பிபிஎஸ் படித்துவிட்டு மெல்போர்னில் எம்எஸ் படிக்கிறாள். ராகவ் நெல்லையில் ஒரு லோக்கல் சேனலில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கிறான்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர், இரு காதலிகள், சிக்கிக் கொண்டு தவிப்பது என எல்லாமே எனக்கு 'ரெட்டைவால் குருவி' படத்தை நினைவுபடுத்தின.

பாலுமகேந்திரா இயக்கத்தில் மோகன், அர்ச்சனா, ராதிகா நடிப்பில் வெளியான படம் 'ரெட்டைவால் குருவி'. தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணிபுரிகிறார் மோகன். இவர் மனைவி அர்ச்சனா வங்கியில் பணிபுரிகிறார். வேலை நிமித்தம் காரணமாக வேலூருக்கு மாற்றல் ஆகிறார் அர்ச்சனா. இந்த இடைவெளியில் மெல்லிசைப் பாடகி ராதிகாவுக்கும், அவரைப் பேட்டி எடுக்கும் மோகனுக்கும் காதல் முகிழ்க்கிறது. திருமணம் ஆனதை சொல்லாமல் மறைக்கும் மோகன் ராதிகாவையும் திருமணம் செய்துகொள்கிறார். இரண்டு வீடுகளிலும் மாறி மாறி வந்து போவதும், அலுவலகத்தில் இருந்து சமாளிப்பதுமாக நாட்களை நகர்த்துகிறார். ராதிகாவும், அர்ச்சனாவும் ஒரே சமயத்தில் கர்ப்பிணி ஆகிறார்கள். இருவரும் ஒரே மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்படுவதால் மோகனின் குட்டு வெளிப்படுகிறது.

கடைசியில் அவரால் அவரது குழந்தைகளைக் கூட முழுசாய் கொஞ்ச முடியாதபடி இருவரும் விரட்டி அடிக்கிறார்கள். ஒரு நாள் மாறுவேடத்தில் சென்று தன் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் மோகனைப் பார்த்து அர்ச்சனா திருடன் என கத்துகிறார். அதற்குப் பிறகு மோகனைப் பார்த்து கலங்கி, அப்பா டா என சொல்லி குழந்தையின் அழுகையைப் போக்குகிறார். ராதிகா வீட்டுக்கு போகும் மோகன் அர்ச்சனா வீட்டுக்கு போவதை மறைக்கிறார். அர்ச்சனா வீட்டில் இருக்கும்போது ராதிகா வீட்டுக்கு ஏன் போகப்போகிறேன்? பொய்யாய் சமாளிக்கிறார். இப்படியே அந்த சமாளித்தல் படலம் நீள்கிறது.

இந்தப் படத்தின் ஆரம்பத்தில் சுதந்திரத்தை வாங்கிப்புட்டோம் என்று ஒரு பாடல் வரும். அதில் இரண்டாவது வரியாக வெள்ளையனை துரத்திப்புட்டோம். அவன் கூட வெட்கத்தையும் விரட்டிப்புட்டோம் வரிகளுக்கு நாவசைத்து ஆடும் பெண்ணை கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் அவர் மௌனிகாதான் என்று கண்டுகொள்வீர்கள்.

ரெஸ்டாரன்டில் ராதிகா நாளைக்கு ப்ளூ டிரெஸ் போட்டுக்கலாம்னு இருக்கேன் என தோழியிடம் சொல்வார். அவர் யாரென்று பார்த்தால் ஹீரா.

பாலுமகேந்திரா தன் பிற்கால படங்களின் கதாநாயகிகளை இதில் சின்ன பிரேமில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

டைட்டில் கார்டில் பார்த்தால் உதவி இயக்கத்தில் அறிவுமதியின் பெயர் பளிச்சிடுகிறது.

அர்ச்சனாவின் நடிப்பு இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அர்ச்சனாவின் குரலில் இருக்கும் குழைவில் கூட காதல் வெளிப்படும். ஒட்டிக்கிறதுக்கு மட்டும் வருவே. விஷயம் முடிஞ்சதும் தொட விடமாட்டியே என்பார்.

ராதிகாவோ மூக்கும் முழியுமா என்பதற்கு பதில் முழியும் முழியுமா என்று மோகனை ரசிப்பார். செக்ஸ் கல்வி பற்றி தைரியமாக கருத்து சொல்வார்.

இன்னும் சொல்லப்போனால் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் என்ற வார்த்தையை சினிமாவில் பயன்படுத்தியது இந்தப் படத்தில்தான். குழந்தைகள் தின விழாவில் பேட்டி எடுக்கும் மோகனிடம், சிந்தாதிரிப்பேட்டை சீனிவாசன் என்று கெத்தாக அறிமுகம் செய்யும் டீன் ஏஜ் இளைஞன் எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஆகப் போவதாக கூறுவான்.

இப்படி 'ரெட்டைவால் குருவி' படத்தைப் பற்றிப் பேச நிறைய இருக்கிறது.

ஆண் பார்வையில் இருவரைக் காதலிக்கும் 'ரெட்டை வால் குருவி', 'ஆட்டோகிராப்' என பல படங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு பெண் காதலித்தால் ஏற்றுக்கொள்வோமா?

சினிமாவில் மட்டும்தான் இப்படியா? இலக்கியத்தில் இருக்கிறதா என்றால் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன என்றே சொல்ல முடியும். கவிதா சொர்ணவல்லி 'கதவின் வெளியே மற்றொரு காதல்' என்ற சிறுகதையை எழுதி இருக்கிறார்.

'எல்லோருக்கும் இரண்டாவது காதல் எந்த நிமிடமும் நிகழும். ஏன் நான்காவது காதல் கூட வரும், வந்தே தீரும். வாழ்க்கை முழுக்க காதல் துரத்திக்கிட்டே இருக்கும்' என்கிறார் கவிதா சொர்ணவல்லி.

வெறுப்பில் பிரிவில் இன்னொரு காதல் முளைக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு காதலில் இருந்துகொண்டே இன்னொரு நபரையும் காதலிக்க முடியும் என்பதுதான் கதைக்கரு.

இரு தோழிகள். ஒருவர் தன் இரண்டு காதலையும் சொல்கிறார். அதை சகித்துக்கொண்டு கேட்கும் தோழியும் இறுதியில் ஒரே சமயத்தில் இருவரை காதலிக்கிறார்.

இதுவா பெண்ணியம்? பெண் சுதந்திரம் என்பது என்ன தெரியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்டு கொடி பிடிப்பவரா நீங்கள்? அந்த கதையில் ஃபெமினிசம் இருக்காது. ஆனால், எமோஷனல் இருக்கும். முடிந்தால் படித்துப் பாருங்கள்.

கணவன் / மனைவிக்கு ஏற்கெனவே இருந்த காதலை ஏற்றுக்கொண்ட நீங்கள், ஒரு பெண்ணின் கடந்த கால / நிகழ் கால காதலையும் உணரமுடியும்தானே!

*

- மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்...

க.நாகப்பன் - தொடர்புக்கு nagappan.k@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: >மான்டேஜ் மனசு 13 - தொட்டு தொட்டு போகும் 'காதல்'

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்