தமிழ் அறிஞர், எழுத்தாளர்
சிறந்த தமிழ் அறிஞரும், இயற்றமிழ், இசைத் தமிழில் வல்லவருமான முனைவர் இரா.திருமுருகன் (R.Thirumurugan) பிறந்த தினம் இன்று (மார்ச் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்ற ஊரில் (1929) பிறந்தார். இயற்பெயர் சுப்பிரமணியன். தமிழ் மீதான பற்றால் பின்னாளில் பெயரை ‘திருமுருகன்’ என மாற்றிக்கொண்டார். குழல் இசைப்பதிலும், வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர்.
# 1951-ல் பண்டிதர் பட்டம் பெற்றார். புல்லாங்குழலில் மேல்நிலைப் பட்டம் பெற்றார். கல்வியியலில் முதுகலைப் பட்டமும், சிந்துப் பாடல்களில் யாப்பிலக்கணம் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டமும் பெற்றார்.
# புதுச்சேரி அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 44 ஆண்டுகள் அரசுப் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தனி அலுவலராகப் பணியாற்றினார். தமிழ் வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டார்.
# தமிழ் வளர்ச்சிக்காகப் பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். புதுவையில் தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் அரசு ஊழியர்கள் கட்டாயம் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்று குரல் கொடுத்தார்.
# தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழுவின் சிறப்புத் தலைவர், புதுவை தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளை நிறுவனர், ‘தெளிதமிழ்’ மாத இதழின் சிறப்பு ஆசிரியர், ‘தமிழ்க்காவல்’ என்ற இணைய இதழின் ஆசிரியர், சென்னைப் பல்கலைக்கழக இசைத் துறை பாடத்திட்டக் குழு உறுப்பினர், புதுவை அரசின் ஆட்சிமொழி சட்ட நடைமுறை ஆய்வுக்குழு உறுப்பினர் என பல பொறுப்புகளில் தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்.
# இயன்றவரை அயல்மொழி கலக்காமல் தமிழில் பேசுவது, எழுதுவது, தொலைபேசி அழைப்புக்கு ‘ஹலோ’ என்பதற்கு பதில் ‘வணக்கம்’ என்று கூறுவது, தமிழில் கையெழுத்திடுவது போன்ற பழக்கங்களால், மறைந்துவரும் தமிழ் பண்பாட்டைக் காக்க முடியும் என்றார்.
# தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்துக்கு பழந்தமிழ் படைப்புகளை ஒலித்தகடுகளாக்கும் குழுவில் முக்கியப் பங்காற்றினார். தமிழுக்கு புதிய இலக்கணம் உருவாக்குவதிலும், இசைத்தமிழ் யாப்பிலக்கணம் உருவாக்குவதிலும் ஈடுபட்டார். தமிழ் பணிக்காக பல நாடுகளுக்கு சென்றார். இவரது 40 ஆண்டுகால தமிழ்ப் பணிகள், ‘தமிழியக்கம்’ என்ற பெயரில் வெளியான நூல்களில் இடம்பெற்றுள்ளன.
# ‘இலக்கணச்சுடர்’, ‘இயல்இசைச் செம்மல்’, ‘முத்தமிழ்ச் சான்றோர்’, ‘நல்லாசிரியர்’, ‘மொழிப்போர் மறவர்’, ‘பாவலர் அரிமா’, ‘கலைச்செல்வம்’ உள்ளிட்ட பல விருதுகள், பட்டங்கள் பெற்றுள்ளார். ‘இலக்கணக் கடல்’ எனப் புகழப்பட்டவர்.
# ‘இனிக்கும் இலக்கணம்’, ‘இலக்கண எண்ணங்கள்’, 7 தொகுதிகளாக வெளிவந்த ‘என் தமிழ் இயக்கம்’ உள்ளிட்ட பல நூல்களைப் படைத்துள்ளார். ‘ஓட்டைப் புல்லாங்குழல்’, ‘பன்னீர் மழை’ உள்ளிட்ட பல பாடல்கள், ‘புதுச்சேரி பாண்டிச்சேரியுடன் போராடுகிறது’, ‘பாவாணர் கண்ட இன்றைய தமிழின் இலக்கணங்கள்’ ஆகிய வரலாற்று நூல்கள் உள்ளிட்ட 55 நூல்களை எழுதியுள்ளார்.
# தமிழ் வளர்ச்சி, தமிழர் நலனுக்காகவே இறுதிவரை பணியாற்றிய இரா.திருமுருகன் 80-வது வயதில் (2009) மறைந்தார். அவரது விருப்பத்தின்படி, ஜிப்மர் மருத்துவமனைக்கு அவரது உடல் தானமாக வழங்கப்பட்டது. கண்ணும் தானம் செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago