டி.வி.சுந்தரம் ஐயங்கார் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

டிவிஎஸ் நிறுவனர், பிரபல தொழிலதிபர்

இந்திய தொழில் துறை, ஆட்டோமொபைல் துறையின் முன்னோடியான டி.வி.சுந்தரம் ஐயங்கார் (T.V.Sundaram Iyengar) பிறந்த தினம் இன்று (மார்ச் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் (1877) பிறந்தார். திருச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளி, திருநெல்வேலி இந்துக் கல்லூரி, கோயம்புத்தூர் போதனா பயிற்சிக் கல்லூரியில் பயின்றார். தொழில் தொடங்கும் ஆர்வத்துடன் இருந்தார். பெற்றோர் விரும்பியதால், சட்டம் படித்தார்.

# வழக்கறிஞர், ரயில்வே குமாஸ்தா, வங்கி ஊழியராக வேலை செய்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு, தொழில் துறையில் இறங்கினார். தேக்கு மரங்களை இறக்குமதி செய்து மர வியாபாரம் தொடங்கினார்.

# தொலைநோக்குப் பார்வை கொண்டவர். வாகனங்களில் செல்வதே பெரிய விஷயமாக இருந்த காலத்தில், மதுரையில் முதன்முதலில் கிராமப்புற பேருந்து சேவை தொடங்க களம் இறங்கினார். தி.வே.சுந்தரம் ஐயங்கார் அண்ட் சன்ஸ் நிறுவனத்தை 1911-ல் தொடங்கினார். தஞ்சாவூர் - புதுக்கோட்டை வழித்தடத்தில் 1912-ல் பேருந்து சேவை தொடங்கி, தென்னிந்தியாவில் சாலைப் போக்குவரத்து துறைக்கு அடித்தளமிட்டார்.

# பேரம் பேசும் நிலையை மாற்றி, இவ்வளவு தூரத்துக்கு இத்தனை கட்டணம், பயணிகள் தரும் காசுக்கு ரசீது வழங்குவது ஆகிய நடை முறைகளைக் கொண்டுவந்தார். கால அட்டவணைப்படி பேருந்துகள் புறப்பட்டு, சென்றடையும் நடைமுறையையும் நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தினார். ‘டிவிஎஸ் பஸ் ஒரு எடத்துக்கு வர்ற டயத்த வெச்சுண்டே நம்ம கடிகாரத்தை கரெட்க் பண்ணி டயம் வெச்சுக்கலாம்’ என்று காஞ்சி மகா பெரியவர் கூறியது, இவரது பேருந்து நிறுவனத்தின் நேரம் தவறாமைக்கு நற்சான்று!

# வாகன டயர்கள், பாகங்களின் அதிக தேய்மானத்துக்கும், எரிபொருள் விரயத்துக்கும் மோசமான சாலைகளே காரணம் என்பதை உணர்ந்தார். அதனால், சாலைகளைப் பராமரிக்கும் ஒப்பந்தப் பணியையும் தானே எடுத்துக்கொண்டார்.

# இரண்டாம் உலகப் போரின்போது, சென்னை மாகாணத்தில் பெட் ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை ஈடுகட்ட டிவிஎஸ் எரிவாயு ஆலை தொடங்கினார். ரப்பர் புதுப்பிப்பு ஆலை, தி மெட்ராஸ் ஆட்டோ சர்வீஸ் லிமிடெட், சுந்தரம் மோட்டார் லிமிடெட், வீல்ஸ் இந்தியா, ப்ரேக்ஸ் இந்தியா, டிவிஎஸ் இன்ஃபோடெக், சுந்தரம் ஃபைனான்ஸ் என டிவிஎஸ் குழுமத்தில் ஏராளமான நிறுவனங்கள் தொடங்கப் பட்டு செயல்பட்டு வருகின்றன.

# இவரது 5 மகன்களும் தந்தைக்கு உதவியாக தொழிலில் இறங்கினர். வெற்றிகரமான தொழிலதிபராக விளங்கிய இவர் கலைகளையும் ஆதரித்தார். காந்தியக் கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றினார். தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்.

# அலுவலகத்தில் கேன்டீன் முறையை அறிமுகப்படுத்தினார். ஊழியர் குடியிருப்புகள், அவர்களது குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்ற வசதிகளையும் செய்து கொடுத்தார்.

# தன் வாரிசுகளை தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்ய வைத்தார். நிர்வாக யோசனைகளில் தொழிலாளர்களைப் பங்கேற்க வைத்தார். தாத்தா அப்பா பேரன் - கொள்ளுப்பேரன் என 4 தலைமுறையாகத் தொடர்ந்து இதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிற குடும்பங்கள் பல உண்டு.

# நாட்டின் மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் குழுமத்தை தொடங்கியவரும், முன்னணி தொழிலதிபராக விளங்கியவருமான டி.வி.சுந்தரம் ஐயங்கார் 78-வது வயதில் (1955) மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்