இதுதான் நான் 17: சின்ன விஷயம் ஆனா, பெரிசு!

By பிரபுதேவா

என்னோட வாழ்க்கையில் கிடைச்ச முக்கியமான விஷயம் ஃஃபிரண்ட்ஸ்தான். எனக்கு நாலு பிரண்ட்ஸுங்கன்னு சொன்னது என்னையும் சேர்த்துதான். எதுக்குமே ரெடியாகாத நான் இப்போ எங்களைப் பத்தி எழுதப் போறேன்னதும் அதுக்காக ஸ்பெஷலா தயாராகிற மனநிலைக்குப் போறேன். அப்படிப்பட்ட சூப்பர் பயணம் எங்களோடது.

நான் இன்னைக்கு இதை இங்கே சொல்றதை அவங்க படிச்சாக்கூட, ‘‘ஏண்டா… எங்களப் பத்தி சொன்னே. இதெல்லாம் சொல்லணுமாடா?’’ன்னு திட்டுவானுங்க. அதனாலதான் இங்கே அவங்க பேரை சொல்லாம ஒவ்வொருத் தனோட இனிஷியலை மட்டும் சொல் றேன். இல்லேன்னா, ‘‘ஏண்டா பேரைச் சொன்னே’’ன்னு அதுக்கும் திட்டுவாங்க.

ஒருத்தன் ‘ஆர். இன்னொருத்தன் ‘பி’. மூணாவது ஃபிரெண்ட்டோட முதல் எழுத்து ‘எஸ்’. இவங்கள்ல ‘பி’ இருக் கானே, அவன் என்னோட 39 வருஷ கால நண்பன். எல்.கே.ஜி போறப்ப ஃபிரெண்ட் ஆனான். அப்புறம் ஒரு சின்ன கேப் வந்துச்சு. திரும்பி ஆறாவது படிக்கிறப்ப ஒரே கிளாஸுக்கு வந்துட் டோம். ஸ்கூல்லதான் கேப் இருந்துச்சே தவிற, வீடுங்க பக்கத்துப் பக்கத்துல இருந்ததால அடிக்கடி சந்திப்போம். மத்த ரெண்டு பேரும் 6-வது படிக்கிறப்ப ஃபிரெண்ட் ஆனவங்க.

நான் சினிமாவுல இருக்குறதால பல பேர் என்னோட பேட்டி, படங்கள்னு எல்லாத்தையும் ஃபாலோ பண்ணு வாங்க. ஆனா, இவங்க மூணு பேரும் அதெல்லாம் பார்க்கக் கூட மாட்டானுங்க. ‘‘டேய் நம்ம நண்பன் படம்டா’’ன்னு ஒரு படத்தைக் கூட முதல் நாள் ஷோ போய் பார்த்ததே இல்லை. நானும் கேட்டதும் இல்ல. நாங்க நாலு பேரும் ஒண்ணா சேர்ந்து பேசிக்கிறதை எங்க முகத்தை பார்க்காம யாராச்சும் கேட்டா, ‘‘ஆறாவது படிக்கிற ஸ்டூடன்ட்ஸ் பேசிக்கிறாங்க’’ன்னுதான் நினைச்சுப்பாங்க.

நான் ஒண்ணுவிடாம ஷேர் பண்ணிப் பது இவங்ககிட்ட மட்டும்தான். சில ஃபிரண்ட்ஸ் வேலைக்குப் போனதும், கல்யாணம் ஆனதும், ஒரு குழந்தை பிறந்ததும் மாறிடுவாங்க. எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. ஸ்கூல்ல நாங்க பொண்ணுங்கக்கிட்ட பேசினதே இல்லை. ஏன், பொண்ணுங்களைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டோம். ஆனா, நாங்க நாலு பேருமே காதல் திருமணம் செய்துகிட்டோம். என் பசங்க என்னைவிட என் ஃபிரெண்ட் ‘எஸ்’கிட்டதான் குளோஸா இருப்பாங்க.

எங்க நாலு பேரோட வீடும் ஆழ்வார்பேட்டையில அடுத்தடுத்து ஒரு நிமிஷத்துல போய் சேர்ற தூரத் துலதான் இருந்துச்சு. என்னோட பேரண்ட்ஸை அவங்க அம்மா, அப்பா மாதிரிதான் அவனுங்களும் நினைப்பாங்க. நானும் அப்படித்தான் நினைப்பேன். ‘காதலன்’ படம் ரிலீஸான நேரம். ‘ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி’பாட்டுக்கு நான் ஆடுனதை பார்த்த ஒரு ஃபிரெண்ட்டோட அம்மா, ‘‘ஏண்டா, பிரபு ஒழுங்கா படிச்சிருந்தா இப்படி ரோட்டுல நின்னு ஆடியிருக்க வேண்டாம்ல’’ன்னு சொன்னாங்க. நான் சினிமாவுல என்ன பண்றேன்னுகூட அவங்களுக்குத் தெரியவே தெரியாது. ‘‘நல்லா சாப்பிடுடா பிரபு. ஏன் ஒல்லியாவே இருக்கே’’ அப்படித்தான் அவங்களோட அன்பு இருக்கும். எங்க நாலு பேர்ல ‘ஆர்’மட்டும்தான் நல்லா படிப்பான்.

ஸ்கூல்ல காலை, மதியம் ரெண்டு வேளையும் அட்டன்டென்ஸ் எடுப்பாங்க. அப்போ 9-ம் வகுப்பு படிக்கிறேன். ஒருமுறை நானும் என் ஃபிரெண்ட் ‘எஸ்’ஸும் சேர்ந்து காலையில் கிளாஸுக்குப் போகாம பரீட்சைக்குப் படிக்க போய்ட்டோம். மதியம் வந்தப்போ மிஸ் கேட்டாங்க. ‘‘எக்ஸாமுக்கு படிக்கிறதுக்காக லீவ் போட்டோம் மிஸ்’’னு சொன்னேன். கிளாஸ்ல இருந்த 80 பேரும் சத்தம் போட்டுச் சிரிச்சாங்க. நாங்க படிக்கப் போனோம்கிறதே காமெடியாயிடுச்சு. அப்படி இருக்கும் எங்க படிப்பு!

இவ்வளவு வருஷமா ஷூட்டிங் போய்ட்டு இருக்கேன். இது வரைக்கும் அவங்க ஷூட்டிங் பார்க்க வந்ததே இல்லை. நான் என்னப் படம் பண்றேன்னு கூட தெரியாது. அவங்க என்ன கம்பெனியில இருந்தாங்க. இப்போ எதுக்கு மாறி இருக்காங்க. அதுவும் எனக்குத் தெரியாது. ஏன்னா, இதெல்லாம் ஆறாவது படிக்கிறப்ப எங்கக்கிட்டே இல்லையே. எங்க, மனசு இன்னும் 6-வது படிக்கிற பசங்க மாதிரிதான் இருக்கு. கர்ணன் - துரியோதணன் நட்பு மாதிரி, குசேலன் - கிருஷ்ணன் நட்பு மாதிரி எங்க நட்புக் கும் வரலாறு இருக்குங்க. ‘ரோமியோ - ஜூலியட்’, ‘ அம்பிகாபதி - அமராவதி’ மாதிரியான காதலை பெருசா பேசிக்கிறோம். யாரோட காதல் கதை சக்சஸ் ஆகலையோ அதைத்தான் நாம பெரிய ஸ்டோரியா சொல்றோம். ஆனா, ஃபிரெண்ட்ஸ்ல வெற்றி - தோல்வி அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.

வீட்டுல ஒரு விசேஷம்னா சொந்தக் காரங்க ஒருத்தர் விடாம சொல்லியா கணும். இல்லாட்டி கோபிச்சுப்பாங்க. அதுவே நட்புல, ஒருத்தன்கிட்ட சொல் லிட்டாப் போதும், மத்த ஃபிரெண்ட்ஸ் கிட்ட அவனே சொல்லிடுவான். நம்ம கிட்ட நேர்ல ஏன் சொல்லலைன்னு மத்த ஃபிரெண்டுங்க எதிர்பார்க்கவும் மாட்டாங்க. மிடில் கிளாஸ் ஃபேமிலிக்கு வர்ற எல்லா கஷ்டமும் என்னோட ஃபிரெண்ட்ஸுக்கும் வரும். ஆனா, எப்பவுமே என்கிட்ட பெருசா ஹெல்ப் எதுவும் கேட்டதே இல்லை. வெளியில யும் போய் நான் அவங்க ஃபிரெண்டுன்னு சொல்லிக்கிட்டதும் இல்லை.

ஒரு படத்தோட சக்சஸையோ, ஒரு படத்துக்குக் கிடைச்ச அவார்டு பத்தியோ, இவங்க மூணு பேர்கிட்டேயும் சொன்னா, ‘‘அப்படியாடா சூப்பர்டா.., சூப்பர்டா... அதெல்லாம்விட நேத்து ஒரு பயங்கரமான விஷயம் நடந்ததுடா. நானும் நம்ம ஃபிரெண்ட் ‘பி’இருக்கானே அவனும் ஹோட்டலுக்கு சாப்பிட போனோம்டா. நான் ஏதேதோ ஆர்டர் பண்ணி சாப்பிட்டுட்டே இருந்தேன். அவன், ‘டேய் காசு அதிகம் இல்லடா. நீ பாட்டுக்கு ஆர்டர் பண்ணிட்டே இருக்கே’ன்னு திட்றான். காதுல வாங்காம நான் சாப்பிட்டுட்டே இருந் தேன். அப்போ அவன் முகத்தை பார்க் கணுமே. அப்புறம் ஒருவழியா அவனை சமாதானம் செஞ்சு, நான் பணத் தைக் கொடுத்துட்டு வந்தேண்டா’’ன்னு சொல்லி முடிப்பான். இது எவ்வளவு சின்ன விஷயம். ஆனா, அதுதான் எங்களுக்கு பெரிய விஷயம். எங்களுக்கு எதுவுமே முக்கியம் இல்ல. ஆனா, எல்லாமும் முக்கியம்.

என்னோட முதல் குழந்தை பிறந்தப்ப நான் ஷூட்டிங்க்ல இருந்தேன். என் ஃபிரெண்ட்தான் அப்போ ஹாஸ்பிடல்ல கூட இருந்தான். ‘‘டேய் மனசு கஷ்டமா இருக்கு. நாம மீட் பண்ணலாமாடா’’ன்னு சொல்லிட்டா போதும் எந்த வேலையில இருந்தாலும் தூக்கிப் போட்டுட்டு வந்துடு வானுங்க. ஒரு தடவை ஹைதராபாத்து லேர்ந்து ஃபிரெண்டுக்கு போன் செஞ் சேன். எனக்கு அப்போ கொஞ்சம் உடம்பு சரியில்ல. குரல் மாறிடுச்சு. நான் ஏதோ கஷ்டத்துல இருக்கேன்னு அவனா நினைச்சுட்டு போன்லேயே அழுதுட்டான். ‘‘டேய்… குரல்தான்டா சரியில்ல. நான் நல்லாத்தான் இருக்கேன்டா’ன்னு சொல்லி சமாதானம் செஞ்சேன். இதெல் லாம் நட்புலதான் நடக்கும்.

நாங்க நாலு பேரும் சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோ என்கிட்ட இருக்கு. அவங்க பேரை சொன்னாலே திட்டுவாங்க. நான் எப்படி போட்டோவை காட்டுறது? அதனாலதான் இங்கே அதையும் தவிர்த்துட்டேன். அவங்களப் பத்தி வருஷம் முழுக்க எழுதிட்டே இருக்கலாங்க. ‘டேய்… உனக்கு வேற வேலையே இல்லையாடா’ன்னு அப்படி எழுதுனாலும் திட்டுவாங்க. அதனால அடுத்து நான் சினிமாவுக்குள்ள போகப் போறேன். ஆமாம், நான் எப்படி சினிமாவுக்கு வந்தேன்?

- இன்னும் சொல்வேன்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்