திருக்குறள் கதைகள் 50 - 51: நன்றிக்கடன்

By சிவகுமார்

1940-களின் நடுவில் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் நடந்த சம்பவம். இசையமைப்பாளர் காலையிலிருந்து பாடலுக்கு ட்யூன் போட்டுப் பார்த்து திருப்தியாக வரவில்லை என்று அலுத்துக் கொண்டு, ஹார்மோனியப் பெட்டியை தன் அறையில் வைத்து விட்டு வீட்டிற்கு கிளம்பினார்.

மறுநாள் காலை வந்து பார்த்தபோது ஹார்மோனியப்பெட்டி இடம் மாறி இருந்தது. ஆபீசில் இரண்டு பையன்கள். ஒருவனுக்கு 15 வயது இருக்கும். இன்னொருவனுக்கு 18 வயது இருக்கும். சின்னவன் இசையமைப்பாளரிடம் தயங்கித் தயங்கி, ‘ஐயா! நேற்று இவன் ஒரு ட்யூன் போட்டான்’ என்று சொன்னான். ‘யாரடா! உங்களைப் பொட்டியத் தொடச் சொன்னது?’ என்று கோபத்தில் கத்தியவர் சற்று தணிந்து, ‘டேய் நீ போட்ட ட்யூனை வாசிச்சுக் காட்டு!’ என்றார். பையன் வாசித்தான். இசையமைப்பாளர் சலனமற்று நின்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து, ‘சரி,சரி நீங்க போங்க. உங்க வேலையைப்பாருங்க!’ என்று அனுப்பி விட்டார்.

அன்றைய ரிகார்டிங். இந்த பையன் போட்ட ட்யூனுக்கு பாடல் ஒலிப்பதிவாகியது.

இரண்டு நாள் கழித்து, ‘இங்க வா தம்பி! வேறென்ன ட்யூன் உனக்குத் தெரியும். வாசிச்சு காட்டு!’ என்றார்.

இரண்டு ட்யூன்களை வாசித்தான் சிறுவன்.

அந்த வாரத்தில் அதே ட்யூன்களில் இரண்டு பாடல்கள் பதிவாயின. என்னதான் சிறுவன் என்றாலும் அவனுக்கும் ஏக்கம் இருக்காதா? நாம் போட்ட ட்யூனை வாத்தியார் ஓசைப்படாமல் பயன்படுத்திக் கொண்டு ஒன்றுமே சொல்லாமல் இருக்கிறாரே என்று நினைத்தான். படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

ஒரு கட்டத்தில் ஜூபிடர் நிறுவனம், சென்ட்ரல் ஸ்டுடியோவிலிருந்து சென்னை நெப்ட்யூன் ஸ்டுடியோவுக்கு மாற்ற காமிரா, லைட், மைக், எடிட்டிங், ப்ராசஸ் -எல்லா கருவிகளையும் லாரிகளிலும் வேன்களிலும் ஏற்றிப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.

தயாரிப்பாளர் ஜூபிடர் சோமு, முகைதீன் இருவரும் காரில் ஏறப்போன போது இசையமைப்பாளர் ஓடி வந்தார். -‘சார் எதை வேணும்னாலும் இங்க விட்டுட்டுப் போங்க. இந்தப்பையனை மட்டும் விட்டுடாதீங்க. இவன் வைரம், வைடூரியம்.. ரிலீஸான நம்ம படத்தில் ஹிட் ஆன மூன்று பாட்டுகளுக்கும் ட்யூன் போட்டவன் இவன்தான்’- என்று சொன்னபோது சிறுவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அந்த சிறுவன்தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள். இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. எம்.எஸ்.விக்கு அப்போது வயது 20.

விஸ்வநாதன் -ராமமூர்த்தி

விஸ்வநாதன் சிறுவனாக இருந்தபோது போட்ட ட்யூனில் வந்த பாடல், ‘புது வசந்தமாமே வாழ்வில் இனி புதிதாய் மணமே பெறுவோமே’ -படம் வீர அபிமன்யு.

சென்னை வந்த எம்.எஸ்.வி இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமனின் உதவியாளராக சேர்ந்து சொர்க்கவாசல், தேவதாஸ் படங்களுக்கு வேலை செய்தார்.

‘ஜெனோவா’-படம் எஃப் நாகூர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்தார். முதன் முதல் எம்.எஸ்.வி இசையமைப்பது தெரிந்து பயந்து போன எம்.ஜி.ஆர் ஜூபிடரில் அவன் ஆபீஸ் பையனாக இருந்தவன், அவனைப் போய் மியூசிக் டைரக்டராக போட்டிருக்கீங்களே’ -என்று பதட்டப்பட்டவர், பாடலைக் கேட்டு சிலிர்த்து, மந்த வெளியில் ஒரு கூரை வீட்டில் இருந்த எம்.எஸ்.வியை தேடிப் போய்ப் பார்த்து பாராட்டினார்.

எம்.எஸ்.வியுடன் எம்ஜிஆர்

படிப்படியாக உயர்ந்து இசையில் இமயம் தொட்டபோதும் தனக்கு ஆசிகூறி வளர்த்து விட்ட குரு எஸ்.எம். சுப்பையா நாயுடுவை தன் தந்தை போல் பாவித்து சென்னை வீட்டிலேயே கடைசிகாலம் வரை வைத்துக் காப்பாற்றினார். அவருக்குப் பின் அவரது துணைவியாரையும் கவனித்துக் கொண்டார். இருவர் மறைந்தபோது கொள்ளி வைக்கும் பாக்கியமும் பெற்றார்.

ஒருத்தர் நமக்குச் செய்த நன்றியை மறந்தால் நற்கதி கிடைக்காது என்கிறார் வள்ளுவர்.

‘‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்- உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு!’’

---

குறள் 51- சொத்து

சென்னை கடற்கரை. காலை 9 மணி. நீதிமன்றத்திற்குப் போகும் வழக்கறிஞர் கார்கள், நீதிபதிகள் கார்கள், காலேஜ் போகும் மாணவ மாணவியர் பஸ்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் என்று அத்தனை பேரும் கடற்கரை சாலையில் பறந்து கொண்டிருக்கிறார்கள்.

விவேகானந்தர் இல்லத்துக்கு முன்பு சிமெண்ட் பெஞ்சில் ஒரு 28 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒரு வார தாடியுடன், கசங்கின சட்டையுடன் கால்மேல் கால் போட்டு ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

வழியில் போன பெரியவர் ஒருவருக்கு பொறுக்க முடியவில்லை. ‘ஏனப்பா! உலகமே ஆலாப்பறக்குது. இப்படி பொறுப்பில்லாம, தாடியை சொறிஞ்சுகிட்டு படுத்திருக்கியே?’ என்று கேட்டார்.

எழுந்து உட்கார்ந்த இளைஞன், ‘என்ன செய்யலாம்ங்கய்யா?’ என்றான்.

‘‘அட, ரெண்டு பசங்களை வச்சு, பீச்சில் சுண்டல் வித்தால் ஒரு நாளைக்கு சாதாரணமா 100, 200 ரூபாய் சம்பாதிக்கலாம்ல?’’

‘‘அப்புறம்ங்கய்யா!’’

‘‘வீட்டிலேயே தேங்கா, மாங்கா, பட்டாணி, சுண்டல் செஞ்சு 5,6 வளுசப்பசங்களை புடிச்சு சாயங்காலம் கடற்கரைக்கு அனுப்பினா 1000, 2000 ரூபாய் சம்பாதிக்கலாம்ல?’’

‘‘அப்புறம்ங்கய்யா!’’

‘‘இட்லி, தோசை, ஊத்தாப்பம் போட்டு தள்ளுவண்டியில வித்தோம்னா ஒரு நாளைக்கு 5000, 10 ஆயிரம் சம்பாதிக்கலாம்ல?’’

‘‘அப்புறம்ங்கய்யா!’’

‘‘முருகன் இட்லிக்கடை, சரவணபவன் மாதிரி- மயிலாப்பூர், மாம்பலம், சென்ட்ரல் ஸ்டேஷன் ஏரியாவுல கடை நடத்தினா 50 ஆயிரம் லட்சம் ஒரு மாசத்தில் சம்பாதிக்கலாம்ல?’’

‘‘அப்புறம்ங்கய்யா!’’

‘‘நியூயார்க், வாஷிங்டன்ல கூட பிராஞ்ச் துவக்கி கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாமே?’’

‘‘அப்புறம்ங்கய்யா’’

‘‘அப்புறம் என்ன என்னன்னு கேட்டுகிட்டு, அப்புறம் ஜாலியா கால் மேல் கால் போட்டு சந்தோஷமா இருக்கலாமே?’’

‘‘அதத்தானே இப்ப நான் செஞ்சுகிட்டிருக்கேன். இவ்வளவு கஷ்டப்பட்டு அமெரிக்காவெல்லாம் போயி சம்பாதிச்சு, அப்புறம் கால் மேல் கால் போடறதை இப்பவே நான் அப்படித்தானே உட்கார்ந்திருக்கேன்?’’

‘‘பொழைக்கத் தெரியாத பயலா இருக்கியே?’’

‘‘கோடி, கோடியா சம்பாதிச்சவனெல்லாம் கொல்லி மலை மேல இருந்து தற்கொலை செஞ்சுட்டான்னு பேப்பர்ல செய்தி வருது. ஆயிரம் கோடி சொத்து வச்சிருந்த பெரிய மனுஷங்கல்லாம் ஐ.பி குடுத்து ரெண்டு கையையும் மேலே தூக்கி நான் ஓட்டாண்டி ஆயிட்டேன்னு சொல்றாங்க. அந்த வேலை நமக்கெதுக்குங்கய்யா?

சுகமான தூக்கம்

காலைல ஐந்தரை மணிக்கு சென்ட்ரல் ஸ்டேஷன் போனா ஏற்காடு எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், கொச்சின் எக்ஸ்பிரஸ் -ரயில்கள்ளருந்து வர்ற மக்கள் கிட்ட இருந்து பெட்டி படுக்கையைத் தூக்கிட்டு வந்து கார்பார்க்கிங்ல குடுத்தா 50 ரூபாய், 100 ரூபாய் தர்றாங்க. நம்ம வயித்துக்கு அது போதும்.

உடம்பில தெம்பு இருக்கற வரைக்கும் இப்படி உழைச்சு பொழைச்சுக்கிடலாம் சாமி’ என்றான்.

மனவலிமைதான் மனிதனுக்கு உண்மையான சொத்து என்கிறார் வள்ளுவர்:

‘‘உள்ளம் உடைமை உடைமை- பொருள் உடைமை

நில்லாது நீங்கி விடும்!’’

--

கதை பேசுவோம்..
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

10 hours ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்