‘அக்னி நட்சத்திரம்’ படத்துல வர்ற ‘ராஜா… ராஜாதி ராஜன் இந்த ராஜா’ பாட்டுக்கு நான் அமைச்ச ‘வேவ்ஸ் ஸ்டெப்’ அப்பாவோட ஸ்டைல்ல இருந்து தனியா தெரிஞ்சுது. எப்பவுமே அப்பாவோட டான்ஸ் ஸ்டைல் வேற. அதே போல, அண்ணன் ராஜூவோட டான்ஸ் ஸ்டைல் வேற. என்னோட ஸ்டைலும் வேற. அந்தப் பாட்டு ஷூட்டிங் முடிஞ்சு அப்பா போட்டுப் பார்த்தார். ‘‘என்னடா பிரபு, இந்த ‘வேவ்ஸ் ஸ்டெப்’ வர்ற ஒரு இடம் மட்டும் பாட்டோட சரியா ஒட்டலையே’’ன்னார். எனக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு. தப்பு பண்ணிட்டமோனு தோணுச்சு. ஆனா, உண்மைதான். தப்புதான். ‘‘பாட்டு முழுக்க ஒரு ஸ்டைல்ல இருக்கு. ‘நெஞ்சம் விளையாடுது நித்தம் இசை பாடுது’ன்னு வரிகள் வர்ற அந்த இடத்துல மட்டும் நார்மலான ‘பிரேக் டான்ஸ்’ ஸ்டைல்ல இருக்கே’’னு அப்பா திரும்பவும் சொன்னார். எதுவும் பேசாம அப்படியே நின்னேன். கஷ்டமா இருந்துச்சு.
படம் ரிலீஸ் ஆச்சு. அந்தப் பாட்டு அப்படி ஒரு ரீச்! சூப்பர் டூப்பர் ஹிட்டுன்னே சொல்லலாம். ரசிகர்கள் ரொம்பவே கொண்டாடினாங்க. சந்தோஷத்துல ஒட்டுமொத்த ஃபீலிங்கும் பறந்து போச்சு. அந்த டைம்லதான் டி.வியில ‘ஒளியும் ஒலியும்’ புரொகிராம் செம ஃபேமஸ் ஆச்சே. அரை மணி நேரத்துக்கு சினிமா பாட்டெல்லாம் போடுவாங்க. வெள்ளிக்கிழமை ராத் திரின்னா தெருவே காலியா கிடக்கும். அப்படித்தான் ‘அக்னி நட்சத்திரம்’ பாட்டையும் ‘ஒளியும் ஒலியும்’ல போட் டாங்க. ‘‘டான்ஸ் ரொம்ப டிஃபரெண்ட்டா இருக்கே’’னு பார்த்தவங்கள்லாம் பாராட்டுனாங்க.
சனி, ஞாயிறு ரெண்டு நாளும் எனக்கு செம ஜாலியா இருந்தது. திங்கள்கிழமை ஸ்கூலுக்குப் போனேன். டி.வியில டெலிகாஸ்ட் ஆன பாட்டை ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் பார்த்திருந் தாங்க. ‘‘டேய் பிரபு… நீ தானாடா அது. உனக்கு டான்ஸ் எல்லாம் ஆட வரு மாடா? எங்கக்கிட்ட சொல்லவே இல்லை யேடா… சூப்பர்டா… சூப்பர்டா. கார்த்திக் சாரை எல்லாம் பார்த்தியாடா?’’ன்னு கேட்டாங்க. நான் டான்ஸ் ஆடுவேங் கிறதே என்னோட ஃபிரெண்ட்ஸுக்கு அன்னைக்குத்தாங்க தெரிய ஆரம் பிச்சுது.
எங்க ஸ்கூலுக்கு புதன்கிழமைன்னா கலர் டிரெஸ்ல போகலாம். ‘ராஜாதி ராஜா’ பாட்டுக்கு யூஸ் பண்ணின அதே பிளாக் பேகி பேண்ட், டி-ஷர்ட், ஷூன்னு போட்டுட்டு பள்ளிக்கூடத்துக்கு அன்னைக்கு போனேன்.
‘‘டேய் இது ‘அக்னி நட்சத்திரம்’ படத்துல வர்ற பாட்டோட டிரெஸ் தானே’’ன்னு ஒரே பரபரப்புதான். அவ்ளோ வருஷமா ஸ்கூல்ல யார் கண்ணுக்கும் தெரியாத வன் அந்த வாரத்துலதான் தெரிய ஆரம்பிச்சேன். பரவாயில்லையே… ஏதோ சுமாரா ஆடி யிருக்கேன் போலிருக்குன்னு நெனைச் சுக்கிட்டேன். இப்பக்கூட யாராவது என் டான்ஸைப் பார்த்துட்டு பாராட்டினா, பரவாயில்லையே நாம சுமாரா ஆடுறோம் போலிருக்கேன்னு நெனைச்சிப்பேன். இது ஏதோ பணிவா இருக்கேன்னு நெனைக்காதீங்க. உண்மையிலயே எனக்கு அப்படித்தான் தோணும்.
இந்த பாட்டுக்கு நைட் ஷூட் நடந்துச்சு. 7 மணியில இருந்து 9 மணி வரைக்கும் ஷூட் நடக்கும்; ‘அத முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து தூங்கி காலையில ஸ்கூல் போக வேண்டியதுதான்’னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, அந்தப் பாட்டு ஷூட்டிங் நடந்த நாலு நாளுமே எக்மோர் ரயில்வே ஸ்டேஷன்ல கூட்டம் குறைஞ்ச பிறகுதான் ஷூட்டிங்கே தொடங்கினாங்க. ஆரம்பிக்கிறதே 9 மணிக்கு மேலதான். ஷூட் விடியக் காலையில முடியும். மறுநாள் ஸ்கூல்ல ஒரே தூக்கக் கலக்கம்தான். ஏற்கெனவே ஸ்கூல்ல எனக்கு ரொம்ம்ம்பபபப நல்லப் பேரு. இதுல தூக்கம் வேற. டீச்சர்ஸ்கிட்ட நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டேன்.
‘மௌன ராகம்’ படத்துல தொடங்கின மணி சாரோட கனெக்ஷன் எனக்கு ஸ்கூல் டேஸ் முடியுற வரைக்கும் இருந்துச்சு.
‘அக்னி நட்சத்திரம்’ படத்தை அடுத்து ‘அஞ்சலி’ படத்துலேயும் நான் வேலை பார்த்தேன். அந்தப் படத்தோட டான்ஸ் பிராக்டீஸ் வேலைகளை என் னோட குரு தர்மராஜ் மாஸ்டர் கிட்டயும், என்கிட்டயும் அப்பா விட்டுட்டார். படத்துல வர்ற சின்ன பசங்க எல்லாருக்கும் நாங்கதான் டிரெயினிங். இன்னைக்கு இயக்குநரா இருக்காரே விஷ்ணுவர்தன்… அவர், அவ ரோட தம்பி கிருஷ்ணா, ஷாலினி யோட அண்ணன் ரிச்சர்ட், அவங்க தங்கை ஷாமிலி, என்னோட தம்பி பிரசாத் இவங்க எல்லாரும்தான் அந்த குட்டிப் பசங்க. இப்பவும் விஷ்ணு, கிருஷ்ணா, ரிச்சர்ட் இவங்க எங்கேயாவது பார்த்துட்டா, ‘அண்ணா’ன்னு தான் என்னைக் கூப்பிடுவாங்க.
‘அஞ்சலி’ படத்துக்கு டான்ஸ் ரிகர்ஷல் மணி சார் ஆபீஸ்ல தான் நடந்துச்சு. டிரெயினிங் முடிஞ்சு வீட்டுக்குக் கிளம்பும் போதெல்லாம் 300 ரூபா கொடுப்பார். பஸ்ல டிக்கெட் எடுக் காம மிச்சம் பிடிச்சு ஸ்கூல் கேன்டீன்ல ஸ்நாக்ஸ் வாங்கி திங்கிற பையனுக்கு முழுசா 300 ரூபா கிடைச்சா எப்படி இருக்கும்? அந்தப் பணத்தை கையில வாங்குறப்போ வர்ற சந்தோஷம் இருக்கே, சொல்ல வார்த்தைங் களே இல்லீங்க. ஆனா என்ன… வீட்டுக்கு வந்ததும் பணத்தை அம்மா வாங்கிப்பாங்க. இருந்தாலும் அந்த வயசுல கொஞ்ச நேரம் அவ்ளோ பணத்தை கையில வெச்சிருக் கும்போது மனசுக்கு அப்படி இருக்கும்.
இப்படி 10-வது படிக்கிற வரை எப்போ எல்லாம் கேப் கிடைக்குதோ அப்பாவோட சேர்ந்து ஷூட்டிங் போய்ட்டு வருவேன். நல்லா படிக்கலைன்னாலும் 10-வது வரைக்கும் பாஸாகிட்டேன். 11-வதுக்கு வந்த பிறகுதான் படிப்பு ரொம்பவும் மோசமாச்சு. அது எனக்கே தெரிஞ்சது. கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ் எல்லாம் எனக்கு சைனீஸ் மாதிரி இருந்துச்சு. ஒரு வழியா லெவன்த் முடிஞ்சுது. ஃபிரெண்ட்ஸுங்க எல்லாம் எப்படியாவது நல்ல மார்க்கோட பாஸாகிடணும்னு வேண்டிட்டு இருந் தாங்க. ஆனா, நான் மட்டும் ஃபெயிலானலும் மதிக்கிற அளவுக்கு மார்க்கோட ஃபெயிலானா பெட்டரா இருக்கும்னு நெனைச்சிட்டிருந்தேன்.
‘ரிசல்ட் வர்ற அன்னைக்கு அப்பா ஷூட்டிங் போய்டணும். 10 நாளுங்க கழிச்சுத்தான் அவர் வரணும்’னு கடவுள்கிட்ட வேண்டிட்டேன். அந்த நேரம்தான் ஆழ்வார்பேட்டை வீட்டை கட்டிக்கிட்டிருந்தாங்க. வீட்டு வேலை பார்க்குறது, டேங்கர் லாரியில வர்ற தண்ணிய பிடிக்குறதுன்னு கொஞ்சம் ஓவரா இறங்கி நானும் வேலை பார்த்தேன். எப்ப வேணும்னாலும் ரிசல்ட் வரும்கிற பயத்துல. அந்த சமயத்துல அப்பாவும் ஷூட்டிங் போகல. ‘என்னடா இது பிரபுவுக்கே வந்த சோதனையா’ன்னு ஒருநாள் ஃபிரெண்ட் ‘எஸ்’ வீட்டுக்குப் போனேன். வீட்டுக்கு முன்னாடி முகம் கழுவிட்டு இருந்தான். அது மதிய நேரம். இந்த நேரத்துல முகம் கழுவிட்டு இருக்கானேன்னு தோணுச்சு. திரும்பி என்னைப் பார்த் தான். அவன் கண்ணுங்க ரெண்டும் சிவப்பா இருந்துச்சு. கிட்டப் போய் ‘‘என்னடா… ரிசல்ட் வந்துடுச்சா? ஃபெயி லாடா?’’ன்னு கேட்டேன். எதுவும் பேச முடியாம அழுகையாலேயே ஆமாம்’னான். ஃபர்ஸ்ட் டைம் அவன் அழுது நான் அப்போதான் பார்த்தேன். ‘‘கவலைப்படாதடா. நானும் ஃபெயி லாயிடுவேன்டா. உனக்கு வந்துடுச்சு. எனக்கு வரலை’’ன்னு சொன்னேன்.
இந்நேரம் நமக்கும் ரிசல்ட் வந் திருக்குமேன்னு தோணுச்சு. உடனே அங்கே இருந்து சைக்கிளைத் திருப்பி பயங்கர வேகமா வீட்டுக்கு வந்துட்டேன். ஆனா, அன்னைக்கு எனக்கு ரிசல்ட் வந்துச்சா?
- இன்னும் சொல்வேன்…
படம் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
17 hours ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
29 days ago