குறள் கதை 44: உருவம்
1964 - மே மாதம் 27-ம் தேதி பாரதப் பிரதமர் நேரு மறைந்தார். எல்லோராலும் நேசிக்கப்படும் ஒருவரான லால்பகதூர் சாஸ்திரியை ‘கிங் மேக்கர்’ காமராஜர் நாட்டின் அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுத்து அறிவித்தார்.
மகாத்மா காந்தி பிறந்த அதே தேதியில் அக்டோபர் 2-ம் தேதி பிறந்தவர் சாஸ்திரி. காந்தி 1869-ல் பிறந்தார், லால்பகதூர் 1904-ல் பிறந்தார்.
உத்திரப் பிரதேசத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர். சாஸ்திரியின் தந்தையார் ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியராக இருந்தார்.
சாஸ்திரி பிறந்து ஒண்ணரை வயதாகும்போது அப்பா டெபுடி தாசில்தாராகப் பதவி உயர்வு பெற்றாலும், பிளேக் நோயில் அகால மரணமடைந்து விட்டார்.
வயிற்றில் ஒரு குழந்தையுடன் சாஸ்திரியின் தாயார் தன்னுடைய 23-வயதில், பிறந்த வீட்டுக்கு 2 பெண் குழந்தைகளையும், மகனையும் அழைத்துப் போய் வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
சாஸ்திரிக்கு 4 வயதாகும்போது தூண்போல குடும்பத்தைத் தாங்கி நின்ற அம்மா வழி தாத்தாவுக்கு பக்கவாதம் வந்து அவரும் மரணமடைந்துவிட்டார்.
காந்திஜி விடுதலை முழக்கம் செய்து கொண்டிருந்த காலம். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த லால்பகதூர், காந்தியின் அழைப்பை ஏற்று பள்ளியில் இறுதித் தேர்வு கூட எழுதாமல் ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
விடுதலைப் போராளிகள் சேர்ந்து தேசிய உணர்வுடன் ஒரு பள்ளி தொடங்கி, போராட்டத்தில் ஈடுபட்டுப் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகள் படிப்பைத் தொடர வழிசெய்தார்கள். கல்லூரியில் தத்துவப் பிரிவில் முதல் வகுப்பில் தேறினார் லால்பகதூர்.
இந்திய தேசிய காங்கிரஸில் உறுப்பினராகப் போராட்டத்தில் கலந்துகொண்டு முதல் முறையே இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். தனி நபர் சத்தியாகிரகத்தில் ஓராண்டு மீண்டும் சிறை.
1942- வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஊர் ஊராகச் சென்று போராளிகளை ஒழுங்குபடுத்தினார்.
1947-ல் நாடு சுதந்திரமடைந்ததும் உத்தரப் பிரதேசத்துக்கு கோவிந்த வல்லபபந்த் முதலமைச்சர். அவரின் கீழ் காவல்துறை- போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.
பெண்களும் கண்டக்டர் வேலை பார்க்கலாம் என்று முதன்முதல் சட்டம் இயற்றியவர் இவர்தான்.
கலவரத்தில் போராட்டக்காரர்களை லத்தி கொண்டு அடிக்காமல் தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் குழாய்கள் மூலம் நீர் பீய்ச்சியடித்துக் கூட்டத்தைக் கலைக்கலாம் என்று யோசனை சொன்னார்.
1952-ல் நேரு மந்திரிசபையில் ரயில்வே- போக்குவரத்து அமைச்சராக இருந்தார்.
அரியலூரில் ரயில் விபத்து ஏற்பட்டதற்கு தார்மீகப் பொறுப்பு ஏற்று தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
1947 முதல் 1964 வரை 17 ஆண்டுகள் பிரதமராக இருந்து நேரு சம்பாதித்த பெயரை 1 வருடம் 7 மாதம் பிரதமராக இருந்தே சம்பாதித்து விட்டார் லால்பகதூர்.
பிரதமராகப் பதவியேற்றதும் யு.ஏ.ஆர் என்கிற ஐக்கிய அரபு குடியரசு அழைப்பில் எகிப்துக்குப் பயணமானார்.
கெய்ரோ விமான நிலையத்தில் சாஸ்திரி இறங்கியபோது எகிப்து அதிபர் நாசர் ஓடுதளத்துக்குச் சென்று விமானப் படிக்கட்டுகளில் சாஸ்திரி இறங்கியதும் வணக்கம் கூறி வரவேற்றார்.
நாசர் 6 அடி 4 அங்குல உயரம். சாஸ்திரி 5 அடி 2 அங்குலம் உயரம். நாசரின் பெரிய உருவத்துக்கு முன் இவர் பாதி அளவே தெரிந்தார்.
சென்னை அண்ணாசாலை எல்.ஐ.சி கட்டிடத்துக்கு அடுத்து அலங்கார் தியேட்டரில் நான் படம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நியூஸ் ரீலில் நாசரையும், சாஸ்திரியின் சின்ன உருவத்தையும் பார்த்த ரசிகர்கள், நம் நாட்டின் பிரதமர் ‘சைஸை’ப் பாருடா என்று ‘கொல்’லென்று சிரித்து கலாட்டா செய்தார்கள்.
அதே ஆண்டு 1965- ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான், காஷ்மீர் எல்லையில் இந்தியா மீது போர் தொடுத்தபோது, நமது ராணுவத்துக்கு சாஸ்திரி உத்தரவிட்டு, அடித்து நொறுக்கச் செய்து விட்டார்.
அதே ‘அலங்கார்’ தியேட்டரில் செப்டம்பரில் படம் பார்க்கப் போனேன். நியூஸ் ரீலில் சாஸ்திரி பேசும் பகுதி காட்டப்பட்டதும், தியேட்டரில் இருந்த ஆயிரம் பேரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றார்கள். கிண்டல் செய்த அதே தியேட்டரில் அரங்கம் அதிர கரவொலி எழுந்தது.
திருவாரூர் தேர் 40 அடி உயரம் இருக்கலாம். கம்பீரமாக ஊர்வலம் வரலாம். ஆனால் அது கொடை சாய்ந்து கீழே விழாமல் இருக்க 6 அங்குல கடையாணி முக்கியம். ஆகவே, கடையாணியைக் கேவலமாக நினைக்காதீர்கள்.
உருவத்தை வைத்து எதையும் யாரையும் எடை போடாதீர்கள் என்பதைத்தான் வள்ளுவர்
‘‘உருவுகண்டு எள்ளாமை வேண்டும்-உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து’’ என்கிறார்.
---
குறள் கதை: 45 கடவுள்
சென்னை பாண்டிபஜாரில் கேரளா ஹேர் டிரஸ்ஸர்ஸ் என்று ஒரு சலூன்-முடிதிருத்தகம் உள்ளது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்த சலூன் செயல்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் 6 முதல் 8 பேர் முடி திருத்தும் பணியை அங்கு செய்கிறார்கள்.
அதில் ஒருவர் பரமு. 80 வயதை நெருங்கிக் கொண்டிருந்தார். ராஜபாளையம் பகுதி சொந்த ஊர். மிகச்சிறந்த கலைஞர். அவர் பாணியில் முகத்திற்கேற்ப -சுருள்முடி, கட்டை முடி, சொட்டைத் தலை- எதுவாயினும் அந்த முகத்திற்கேற்ப ‘கட்டிங்’ செய்து விடுவதில் நிபுணர்.
இளம் வயதிலேயே ‘போலியோ’ வியாதி தாக்கியதில் முழங்காலிலிருந்து கணுக்கால் வரை வெளிப்பக்கமாக வளைந்து இருக்கும். அதாவது முழங்கால்கள் முட்டிக்கொள்ளும். பாதத்தினை இன்னொரு பாதத்துடன் இணைக்க முடியாமல், வளைந்த கால் என்பதால் இரண்டு பாதங்களுக்கும் இடையே ஒரு அடி இடைவெளி இருக்கும்.
கோணலான இந்தக் கால்களில் 10 மணி நேரம் 12 மணி நேரம் நின்று கொண்டே முடி வெட்டுவது சொல்லொணாத வலியைத் தரும்.
அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பரமு வேலை செய்தார். திருமணமாகி இரண்டு பிள்ளைகள். அவர்களுக்கும் கல்யாணமாகி வேறு தொழில் செய்கிறார்கள். மனைவியை இழந்த பரமு தன்னைக் கவனித்துக் கொள்ள ஒரு விதவைப் பெண்ணை மணந்து கொண்டார். அந்தப் பெண்ணும் அரசு பொது மருத்துவமனையில் பணிப்பெண் வேலை செய்தார். சிகரெட் பிடிக்கும் பழக்கம் பரமுக்கு உண்டு. என் வீட்டுக்குள் நுழையும் முன் வேகமாக ஒரு சிகரெட்டை பற்றவைத்து நான்குமுறை உள்ளே இழுத்து நுரையீரலை நிரப்பி விட்டு, மீதி சிகரெட்டை வெளியே வீசிவிட்டு நுழைவார்.
கத்திரிக்கோல் காதுப் பக்கம் வரும்போது கை விரல்களில் சிகரெட் வாடை அடிக்கும். சிகரெட் நாற்றம் அடிக்குது பரமு என்றால் ‘யுடிகொலோன்’ திரவத்தை கையில் பூசி வாசனையை மறைத்து விடுவார்.
அவரால் பேசாமல் முடிவெட்ட முடியாது. வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால் நுரையீரலில் நிரப்பி வைத்திருந்த சிகரெட் புகை சாம்பிராணி புகை போல வாய்வழியே வெளியேறும். ‘என்னய்யா! வாயிலிருந்து சிகரெட் நாற்றம் வருகிறது!’ என்றால், ‘சரி இந்த சனியனை விட்டுத் தொலைக்கிறேன்!’ என்று விட்டுவிட்டார்.
இருதய நோயாளி என்பதால் அவ்வப்போது மாத்திரை மருந்துகள் வாங்கிக் கொடுப்பேன். ரொம்பவும் முடியாது போனால் ஜெனரல் ஆஸ்பத்திரியில் உள்ள தெரிந்த டாக்டர்களிடம் அனுப்பி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வேன்.
ஒருநாள் கோவையில் திருமணம் ஒன்றுக்கு நான் போயிருந்தபோது ‘பரமு’ இறந்து விட்டார்!’ என்ற செய்தி வந்தது. இறுதிச் சடங்குக்கு வேண்டியதைச் செய்யுங்கள். நான் சென்னை வந்து பணம் தருகிறேன்!’ என்று சொன்னேன்.
4 நாள் கழித்து சென்னை வந்து விசாரித்தேன். பரமு மொழியில் நடந்ததைச் சொல்கிறேன்:
‘முதலாளி! இந்தக் கோணக்காலோட 16 வயசிலேருந்து 60 வருஷமா தினம் பத்து பன்னிரண்டு மணி நேரம் நின்றுகொண்டே வேலை செய்தேன். கால் வலி தாங்க முடியலே. இனிமேலும் இந்தத் தொழில் பாக்க முடியாதுன்னு புரிஞ்சு போச்சு. கண்டவன்கிட்ட கையேந்தி பொழைக்கறதை விட பாலிடாலைக் குடிச்சு என் கதைய முடிச்சிட்டேன்!’
எப்பேர்பட்ட ரோஷக்காரன். மானஸ்தன்.
தன்னால் படைக்கப்பட்ட ஒரு மனிதன் தெருவில் கையேந்தி பிச்சை எடுத்துத்தான் சாப்பிட வேண்டும் என்ற நிலை வந்தால் அவனைப் படைத்த கடவுள் கெட்டு ஒழியட்டும் என்கிறார் வள்ளுவர்.
‘‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் -பரந்து
கெடுக உலகு இயற்றியான்!’’
கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
10 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago