திருக்குறள் கதைகள் 36 - 37: துன்பம்

By சிவகுமார்

குறள் 36: துன்பம்

கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் நாட்டு விடுதலை, காந்தியக் கொள்கை, கதர் விற்பனை என்று இளம் வயதிலேயே உயர்ந்த லட்சியங்களோடு வாழ்ந்தவர்.

அம்மா இறந்துவிட்டார். புதுத்துணி சடலத்தின் மீது போர்த்தும் சடங்குக்கு கதர் துணி வந்தால்தான் போர்த்துவேன் என்று பிடிவாதம் பிடித்தார். திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி என்று எங்கு தேடியும் அன்றைய தினம் கதர் துணி வாங்க முடியவில்லை. ஆகவே பெற்ற தாய்க்கு கதர் துணி போர்த்தாமல் -மற்றவர்கள் வேறு புதுத்துணி போர்த்தி சுடுகாட்டுக்கு எடுத்துப் போய் அடக்கம் செய்தார்கள்.

சிறாவயல் ஊரில் காந்திஜி மீதுள்ள பற்றினால் ஆசிரமம் ஒன்று தொடங்கி நடத்தினார். தென்னாட்டுக்கு வந்த காந்தி அந்த ஆசிரமத்தைப் போய்ப் பார்த்தார். எளிமையின் வடிவமான ஜீவாவைப் பார்த்ததும் நெகிழ்ந்துபோன காந்தி, 'உங்களுக்கு என்னய்யா சொத்து இருக்கு?' என்று கேட்டார்.

‘இந்த நாடே என் சொத்து வேறு என்ன வேண்டும்?’ என்றார் ஜீவா. இல்லை, இல்லை இந்த நாட்டின் சொத்தே நீங்கதான் என்றார் காந்தி.

திருப்பூரில் கூட்டம் முடிந்து அதே வேகத்தில் பொள்ளாச்சி போனார். தண்ணீர் கூட குடிக்காமல் மணிக்கணக்கில் பேசினார். அடுத்து 30 மைல் தொலைவில் கோவையை அடுத்த சிங்காநல்லூரில் ஒரு கூட்டம். யாருமே அவர் சாப்பிட்டாரா என்று கேட்கவில்லை. பரவாயில்லை. சிங்காநல்லூரில் கூட்டம் முடிந்து சாப்பிடலாம் என்று நினைத்தார். அங்கு கூட்டம் முடிந்த போது இரவு 10.30 மணி.

ஹோட்டல் போனால் எல்லாம் காலி. சர்வர்கள் சாப்பிட வைத்திருந்த உணவைப் பங்கிட்டுக் கொடுத்தார்களாம்.

ஜீவா

கட்சிக்காக 4 அணா, 8 அணா நிதி வசூல் செய்வார். ஆனால், தொண்டர்களிடம் டீ வாங்கித் தரச் சொல்லி கெஞ்சுவார். ‘இடுப்பில் இவ்வளவு காசு முடிந்து வைத்துக்கொண்டு என்கிட்ட கேட்கறீங்களே தாத்தா?’ என்று கேட்டால், ‘அது சங்கக்காசு தம்பி. அதில் கை வைக்கக்கூடாது!’ என்பார்.

முதலாளி வர்க்கம் -தொழிலாளி வர்க்கம் - கார்ல் மார்க்ஸ் பாட்டாளி வர்க்கத்தின் வலிகளையும் வேதனைகளையுமே பேசாமல் -பாரதியாரையும், கம்பனையும் உள்வாங்கி ஊர், ஊராகப் போய் சிம்ம கர்ஜனை செய்தவர்.

1952-ல் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தண்டையார்பேட்டையில் நின்று சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றார். சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று சட்டசபையில் முழங்கிய முதல் மனிதர் இவர்தான்.

எந்த தண்டையார்பேட்டை மக்கள் வாக்களித்து சட்டமன்றத்திற்கு அனுப்பினரோ அவர்களே அடுத்த தேர்தலில் தோல்வியைத் தழுவ வைத்தனர்.

மனைவி என்று பெயருக்கு இருந்தார்கள். போராட்டம், சிறைவாசம், தலைமறைவு வாழ்க்கை என்று பஞ்சபாண்டவர்கள் 13 வருடம் துன்பப்பட்டது போல இவரும் துன்பப்பட்டு, பதினேழு ஆண்டுகளுக்குப் பின் தன்னைச் சந்திக்க வந்தவள் தன் மகளே என்று தெரியாமல் ‘நீ யாரம்மா?’ என்று கேட்கிற அவலமெல்லாம் அவர் வாழ்க்கையில் நடந்துள்ளது.

ஜீவா-காமராஜருடன்

கடைசியில், சென்னையில் சொந்தமாக ஒரு சதுர அடி நிலம் கூட இல்லாமல் தாம்பரம் பக்கத்தில் புறம்போக்கு நிலத்தில் சுவர் இல்லாமல் வெறும் ஓலைகளால் கட்டப்பட்ட குடிசையில் வாழ்ந்தார்.

முதலமைச்சர் காமராஜர் செங்கல்பட்டு பகுதியில் ஒரு பள்ளித் திறப்பு விழாவுக்குச் சென்றவர் வழியில் ஜீவாவையும் வந்து அழைத்துப் போவதாகச் சொல்லியிருந்தார்.

காலையில் வீட்டுக்குச் சென்று குடிசைக் கதவைத் தட்டி ‘என்னய்யா ரெடியா?’ என்று கேட்க, ‘ரெடியாகிட்டிருக்கு!’ என்று பதிலளித்தார் ஜீவா.

இருந்த ஒரே வேட்டியை துவைத்து குடிசையின் நடுவில் இருந்த கம்பில் ஒரு நுனி வேட்டியைக் கட்டி மறு நுனியைப் பத்தடி தள்ளி நின்று கையில் பிடித்து, உலர்த்திக் கொண்டிருந்தார்.

‘என்னய்யா இது? சொல்லியிருந்தா 2 வேட்டி வாங்கிக் குடுத்திருப்பேன்ல?’ என்றார் காமராஜர்.

‘எதுக்குண்ணே- இப்ப இது இருக்குண்ணே- கிழியட்டும் அப்புறம் பார்க்கலாம்ணே!’ என்று காமராஜர் பாணியில் பதில் சொன்னார்.

துன்பத்தைக் கண்டு கலங்காமல் -எதிர்த்து நின்று அந்தத் துன்பத்திற்கே துன்பம் கொடுத்தவர் ஜீவா.

இவரைப் போன்றவர்களை நினைவுபடுத்தும் குறள்:

‘இடும்பைக்கு இடும்பை படுப்பர்- இடும்பைக்கு

இடும்பை படா அதவர்!’

--

குறள் 37: அன்பு

உனக்கு நண்பனாக இருப்பவர் உன்னை விட வயதில் சற்று மூத்தவராக இருக்க வேண்டும். உன்னை விடப் படித்தவராக இருக்க வேண்டும். அப்படி இருப்பின் அவர் அனுபவங்கள் உனக்குப் பாடமாக உதவும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

பாலா பழனூர் அப்படி இயல்பாக வந்தமைந்த அருமையான நண்பர். லயோலா கல்லூரியில் பி.ஏ., ஹானர்ஸ் படித்துப் பட்டம் பெற்று வழக்கறிஞராக வேண்டும் என்று சட்டக் கல்லூரியில் சேர்ந்தபோது, நான் தங்கி இருந்த புதுப்பேட்டை, திருவேங்கடம் தெரு 47-ம் எண் வீட்டில் என் அறைக்கு எதிர் அறையில் தங்கினார்.

பின்னாளில் மாம்பலத்தில் எனக்கு வீடு வாங்கிக் கொடுத்த வழக்கிறிஞர் சுப்பிரமணியராவ் -அந்த வீட்டில் பாலாவுடன் தங்கிய வழக்கறிஞர் நண்பர் ஸ்தனிஸ்லாஸ் புதுச்சேரியில் மாஜிஸ்திரேட்டாக இருந்த ஜான் ஆம்ரூஸ் எல்லோரும் காமராஜரைத் தோற்கடித்த விருதுநகர் சீனிவாசனுடன் ஒன்றாகப் படித்தவர்கள்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் அசோகா ஓட்டலில் பொங்கல் வடை சாப்பிடுவோம். 1960-களின் தொடக்கத்தில் கட்டப்பட்ட ஓட்டல்; பாந்தியன் ரவுண்டானா அருகில் வட்ட வடிவில் டிசைன் பண்ணி கட்டப்பட்ட அறைகள். தியேட்டரில் படம் பார்க்க மாதம் ஓரிரு முறை ஒன்றாகப் போவோம். ஆங்கிலப் படக்கதையை பாலா, படம் பார்க்கும்போது நமக்குச் சொல்வது வசதியாக இருக்கும்.

கத்தோலிக்க கிறித்துவக் குடும்பங்கள் வாழும் பகுதி புதுப்பேட்டை. பாலாவின் தாய்மாமன் ரெவரண்ட் ஃபாதர் ஆரோக்யம். இலங்கையிலிருந்து ஒரு முறை சென்னை வந்தவர் -அச்சு போன்ற பொடி எழுத்துகளில் தன் கையெழுத்தைக் காட்டினார்.

அந்த எழுத்துகளால் கவரப்பட்டு, குமுதம் ஒரு பக்கத்தில் அச்சான 20 வரி சமாச்சாரத்தை தபால் கார்டில் அரைப் பக்கத்தில் அச்சடித்தது போல பொடி எழுத்துகளில் நான் எழுதி அசத்தியிருக்கிறேன்.

பாலாவுடன்

ஐந்து நட்சத்திர ஓட்டல் பார்ட்டிகளுக்குப் போனால் எப்படி அமரவேண்டும்; அந்த வெள்ளை கர்ச்சீப்பை முக்கோணமாக மடித்து எப்படி மடியில் போட வேண்டும். கத்தியும், ஃபோர்க்கும் (முள்கரண்டி) பயன்படுத்தி எப்படி சாப்பிடுவது எல்லாம் அவர்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார்.

சர்வரைக் கூப்பிடக் கைதட்டுவதோ, ‘ஏய்’ என்று குரல் கொடுப்பதோ அநாகரிகம். டேபிளில் பெல் இருக்கும். அதைத் தட்டித்தான் அழைக்க வேண்டும். வாயைத் திறந்து மெல்லக்கூடாது. இரைந்து பேசக்கூடாது. கத்தியையும், முள் கரண்டியையும் பெருக்கல் குறிபோல் குறுக்காக பிளேட்டில் வைத்தால் சாப்பிட்டு முடித்ததற்கு அடையாளம். இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தவர் அவர்.

குடியிருந்த ஒண்டுக்குடித்தனங்களில் ஒன்று கன்னையா குடும்பம். கோ ஆபரேட்டிவ் சொசைட்டியில் ஆபீஸர். அவர் மகள் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத பிலோமினாவுக்கும் பாலாவுக்கும் காதல் அரும்பிவிட்டது. மதம் ஒன்றாக இருந்தாலும் சாதியும், வசதியும் தடையாக இருந்தது. ஒரு வழியாகப் போராடி 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1969- ஜனவரி 29-ம் தேதி பாலா-பிலோ திருமணம் வேளாங்கண்ணியில் நடைபெற்றது. அதற்கு அந்த வீட்டில் குடியிருந்த நாங்கள் அரசு பஸ்ஸில் நாகப்பட்டினம் போய் -வேறு பஸ் பிடித்து வேளாங்கண்ணி சென்று திருமணத்தில் கலந்து கொண்டோம்.

அதன் பிறகு எம்ஜிஆர் தமிழக முதல்வராக இருந்தபோது நாடாளுமன்றத்தேர்தலில் புதுச்சேரி- காரைக்கால் தொகுதியில் நின்று வெற்றி பெற்று ஐந்தரை மாதமே பதவியில் இருந்த சரண்சிங் மந்திரி சபையில் சில நாள் அமைச்சராகவும் இருந்தவர் பாலா. பின்னர் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 2000-ல் மகன் அமெரிக்காவில் குடியேறியபோது சில மாதம் அமெரிக்காவிலும், சில மாதம் தமிழ்நாட்டிலும் இருந்தார். மூன்றாண்டுகள் முன்பு மரணம் அவரைத் தழுவிக்கொண்டது.

இந்த பிலோமினா பிறந்த நாள் ஒன்று என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. பிலோமினாவுக்கு அப்போது 12 வயதும், அவள் தம்பி மோகனுக்கு 10 வயதும் இருக்கும். ஒரு ஞாயிற்றுக்கிழமை. என் அறைக்குப் முன்னால் 3 சைக்கிள் வைக்கும் அளவுள்ள போர்ட்டிகோவில் வீட்டுப் பிள்ளைகள் கூச்சல் போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஓவியம் வரைய அமைதியான சூழல் வேண்டும். பிள்ளைகளிடம் கூச்சல் போட வேண்டாம் என்று அன்பாகச் சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. இன்னும் அதிகம் கூச்சல் போட்டனர். மோகன் கழுத்தைப் பிடித்து வீதிப் பக்கம் தள்ளினேன். 4 படிகளில் தடுமாறி இறங்கி தரையில் அவன் விழுந்தான். முழங்காலில் அடிபட்டு ரத்தம் வடிந்தது. அம்மா அன்னம்மா வந்தார். பதறிப் போய் விட்டார்.

‘ஒண்டுக்குடித்தனம்னா கொழந்தைங்க அப்படித்தான் கத்துவாங்க. அமைதியா இருக்கணும்னா போட் கிளப் ஏரியாவுல வீடு வாங்கி அங்கே குடி போயிடு!’ என்று நெருப்பு வார்த்தைகளை என் மீது வீசினார்.

பாலா- பிலோமினா

15 ரூபாய் வாடகையில் ஐந்தரை அடி அகலம் ஆறடி நீளமுள்ள சிறிய குறுகிய அறையில் தங்கியிருக்கும் என்னை- கோடீஸ்வரர்கள் குடியிருக்கும் போட்கிளப் ஏரியாவில் போய் தங்கிக் கொள் என்று சொன்னது பெருத்த அவமானமாகப் போய்விட்டது.

அந்த வீட்டில் யாருக்குப் பிறந்த நாள் வந்தாலும் பக்கத்து குடித்தனக்காரர்கள் எல்லோருக்கும் கேக் துண்டும், வடையும் கொடுப்பார்கள்.

நாளைய தினம் பிலோமினாவுக்குப் பிறந்த நாள். கேக், வடை நம்மைத் தேடி வரும். மானம் ரோஷம் உள்ளவனாக இருந்தால் அதை நாம் வாங்கித் தின்னக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

மறுநாள் ஓவியக்கல்லூரி சென்று விட்டு மாலை வீட்டுக்கு வராமல், கொஞ்ச நேரம் ராஜரத்னம் பார்க் பக்கம் இருந்து விட்டு மவுண்ட்ரோடு சீதாகபேயில் இரவு உணவு முடித்து நேரே கடற்கரைக்கு சைக்கிளில் உழைப்பாளர் சிலையிலிருந்து தெற்கு நோக்கி 2 கி.மீ. சென்று காந்தி சிலை அருகே மணலில் இறங்கி சைக்கிளைப் பூட்டிவிட்டுப் படுத்துக் கொண்டேன்.

பெளர்ணமி நிலா கடல் மேல் சிவப்பு பந்து போல் உதித்து உச்சிக்கு வந்துவிட்டது. இரவு 12 மணி. கடலோரம் மட்டுமல்ல, சாலைகளிலும் போக்குவரத்து இல்லை. டூட்டிஃப்ரூட்டி ஐஸ்கிரீம் வண்டி மட்டும் பெல் அடித்துக்கொண்டு சென்றது.

மகனுடன் பிலோமினா

காவலுக்கு வந்த போலீஸ்காரர், ‘ஏய்! என்ன இங்கே படுத்திருக்கே? வீடு இல்லே? போ!’ என்று நாயை விரட்டுவது போல விரட்டி அனுப்பினார். ராதாகிருஷ்ணன் சாலை, ஜெமினி ரவுண்டானா (மேம்பாலம் அப்போது கட்டப்படவில்லை) நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் ரோடு, ஸ்பர்டேங் ரோடு, எழும்பூர் சிக்னல், அசோகா ஓட்டல் தாண்டி ஒன்றரை மணிக்கு சைக்கிளில் மெதுவாக ஊறிச் சென்றேன்.

வாயிற்படியில் ஒரு கருப்பு உருவம்.

‘என்ன மோனே? பிலோவுக்கு இன்னிக்கு பிறந்த நாளல்லோ? அண்ணன் வருவான்னு - பாப்பா இவ்வளவு நேரம் காத்திருந்திட்டு இப்பத்தான் படுக்கப் போனா- இந்தா கேக் சாப்பிடு!’ -என் வைராக்கியத்தின் மீது சவுக்கடி விழுந்தது.

அந்த அன்னையின் அன்பில் நெகிழ்ந்து தொண்டை அடைக்கக் கண்ணீரோடு கேக் சாப்பிட்டேன்.

‘‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்- ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்’’

என்று இந்த அன்பைத்தான் தன் குறளில் சொல்கிறார் வள்ளுவர்.

--

கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

10 hours ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்