ஆறு வழி தேசிய நெடுஞ்சாலையில் கார் பறந்து கொண்டிருக்கிறது. வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் நண்பர், "அடேங்கப்பா... ஊரெல்லாம் சுத்தமாக மாறிடுச்சு. செம டெவலப்மெண்ட் போல" என்கிறார் ஒரு கசப்பான புன்னகையை வழியவிடுகிறேன்.
உண்மையிலேயே இது வளர்ச்சியா!? தன் இருப்பிலிருந்து மாறுவது எல்லாமே வளர்ச்சியாகிவிடுமா? ஒரு குழந்தை வளர்வது, உயரத்திற்கேற்ற பருமன் கூடுவது வளர்ச்சி. உடலில் ஏதாவது ஒரு பகுதி மட்டுமே பெரிதாவது வளர்ச்சியா? பொதுவாக இங்கே வீக்கம் வளர்ச்சிபோல் உணர்த்தப்படுகிறது. புற்றுநோய் கட்டியும் கூட தன் இயல்புநிலையில் இருந்து கூடுதலாய் வளர்வதுதான். இது வீக்கம், இது புற்று என வகைப்படுத்தத் தெரியாத சமூகம் வேறுவழியின்றி அதை வளர்ச்சி என்றே சொல்லிக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறது.
50 கி.மீ தூரத்திற்கு ஒருமுறை பணம் செலுத்திவிட்டு அந்தச் சாலையே நமக்குச் சொந்தம் எனும் நினைப்பில் 160 கி.மீ வேகம் வரை விரைகின்றீர்களே, அந்தச் சாலைகளின் புவியியல் நமக்குத் தெரியலாம். ஆனால் அதன் வரலாறு தெரியுமா?
சாலை எங்கெல்லாம் தன்னை விரிவுபடுத்தி, நளினப்படுத்திக்கொள்ள முனைகிறதோ, அங்கெல்லாம் முதலில் காவு கேட்பது சாலைகளின் இருமருங்கிலும் வரிசையாக நின்றிருந்த மரங்களை. நெடுஞ்சாலைகளின் இருமருங்கிலும் ஒவ்வொரு கிலோ மீட்டர் தொலைவிற்கும் 200-300 புளியமரங்களோ, வேப்பமரங்களோ இருந்தன. இன்றைக்கு நாற்கரச் சாலையில் ஒரே ஒரு மரத்தைக்கூட காணமுடியவில்லை.
அடுத்து காவு கேட்பது அந்தப்பகுதியில் காலம்காலமாய் வாழ்ந்து வந்தவர்களின் வேர்களைத்தான். ஒரு ரவுடியின் மனோபாவத்தோடு விரிவாக்கத்திற்காகவும், நகரங்களைச் சுற்றிச் செல்லும் புறவழிச்சாலைகளை அமைப்பதற்காகவும் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. அதற்காக எந்த வகையிலும் பொருந்தாத தொகை ஒன்று வழங்கப்படுகிறது. அதோடு "நீ காலம்காலமாகப் பயன்படுத்திய நிலம் இனி உனக்கு சொந்தமல்ல" என வெளியேற்றிவிட்டுச் சொல்கிறது, "இனி என் சாலையில் கால் வைத்தால் காசு கொடுக்க வேண்டும்".
சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டால் விபத்துகள் குறையும் என்றார்கள். முன்பெல்லாம் 100 கி.மீ தூர பயணத்தில் சராசரியாக 5 விபத்துகளுக்கான அடையாளங்களைக் காணலாம். ஆனால் இப்போது அப்படிக் காண முடிவதில்லை. ஆகவே விபத்துகளே நடப்பதில்லையா?. உண்மையில் முன்பைவிடக் கூடுதலாகவே விபத்துகள் நடக்கின்றன. முன்புபோல் வாகனங்கள் நாள் கணக்கில் அகற்றப்படாமல் கிடப்பதில்லை. சில மணி நேரங்களில் அக்கற்றப்பட்டுவிடுகின்றன. சாலையைக் கடக்க முனையும் உள்ளூர்வாசிகள், சாலையின் அகலம், அதில் சீறி வரும் வாகனங்களின் வேகம் பற்றிய அறிந்திராததால் இழக்கும் உயிர்களை, உடல் உறுப்புகளை நினைத்தால் நடுங்குகிறது.
நெடுஞ்சாலைகளில் 90% சாலையோரப் பகுதி விவசாய நிலமாக இருந்தவை. கால்வாய்ப் பாசனம் இருந்தால் நன்செய், கிணறு மட்டும் இருந்தால் புன்செய், மழையை நம்பியிருந்தால் மானாவாரி. விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையில் 90% நிலங்கள் விவசாயத்தைத் தொலைத்துவிட்டன. ஆவின் பால், உணவகம், இட்லி தோசையுடன் பாயாசமும் தரும் பஞ்சாபி உணவகம், தொழிற்சாலைகள், வீட்டு மனைகள், பள்ளி கல்லூரிகள், இடம் வாடகைக்கு என்ற பலகை தாங்கிய காலி இடங்கள், வாகனப் பணிமனை, பெட்ரோல் நிலையங்கள், விடுதிகள், செடிப்பண்ணை, திருமண மண்டபங்கள் என ஏதேதோ நிரம்பியிருக்கின்றன.
அங்கிருந்த விவசாயம் என்ன ஆனது? அந்த விவசாயிகள் எங்கே போனார்கள்? அந்த விவசாயத்தின் கூலிகளாய் இருந்தவர்கள் என்ன ஆகியிருப்பார்கள்? நிலத்தை விற்றவர்கள் முதலாளிகளாக, நிதிநிறுவன அதிபர்களாக அவதாரம் எடுத்தனர். கூலிகளாக இருந்தவர்கள் நகரங்களுக்குப் புலம்பெயர்கின்றனர், அதில் பலர் நிறுவனங்களில், ஏடிஎம்-களில் செக்யூரிட்டிகளாகவும், வீட்டு வேலை செய்யும் பெண்களாகவும் மாறுகின்றனர்.
வளரும் நாடுகளில் திணிக்கப்படும் வளர்ச்சித் திட்டங்களில் உலக வங்கியும், வெளிநாட்டு நிறுவனங்களும் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றன. அவர்களுக்கு இங்கிருக்கும் சாலைகள் விரிவாக்கம் பெறுவதின் மேல், நீர்நிலைகள் பாதுகாக்கப்படுவதன் மேல் ஏன் இத்தனை அக்கறை என்பது அவ்வளவு எளிதில் புரிந்துவிடாத ஒன்று. பெரும்பாலும் விரிவாக்கப்படும் சாலைகள் அந்தந்தப் பகுதி மக்களுக்கு அதிகப் பயன் தருகின்றன என்பதைவிட, எங்கோ இருக்கும் ஒரு பெருநிறுவனத்தின் பொருட்களை, நாட்டின் இன்னொரு பகுதிக்கு அதிவிரைவில் எடுத்துச்செல்லும் வகையிலான சாலைகளை முன்னுரிமை கொடுத்து கட்டமைக்கப்படுகின்றன.
இந்தியா போன்று தன் விழுமியங்களை பாதுகாக்க முனையும், ஒட்டு மொத்த உலக தட்பவெப்பத்திற்கு, மண்ணிற்கு, விளைச்சலுக்கு சவால் விடும் சூழல்களை கொண்டுள்ள வளர்ந்து வரும் ஒரு நாட்டின் மீது கார்ப்பரேட் எனப்படும் மாஃபியாக்களுக்கு ஒரு பெரிய கண் உண்டு. அவர்கள் சொந்த நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் தாதாவாகவோ, வளர்ந்த நாடுகளில் இருந்து வளரும் நாடுகளின் அரசியல் சதுரங்கக் காய்களை நகர்த்தும் தாதாக்களாகவோ இருக்கலாம். அவர்களின் முதல் நோக்கம் வளர்ச்சி என்பதான ஒரு மாயை குறித்த ஒரு ஏக்கத்தைத் தூண்டிவிடுவது. அடுத்து வளரும் நாடுகளில் காலம் காலமாக சுயசார்போடு, கட்டுக்கோப்போடு, நிலைத்த தன்மையோடு வாழும் மக்களை, அவர்களை அறியாமலேயே கொஞ்சம் ஆழத்தில் இறங்கி அவர்களின் முக்கிய வேர்களை அறுத்துவிடுவது.
கையகப்படுத்திய நிலத்திற்குச் சொந்தமானவனையும், அதில் வேலை செய்தவனையும் நேரடியாக வேர் அறுத்து உடனடியாக வெளியேற்றினார்கள். சாலையோரம் நிலம் வைத்திருப்பவனை, அவனையறியாமல் "காசு, பணம், துட்டு.. மணி..மணி" எனும் மாயையில் அவன் காலம்காலமாக செய்து வந்ததை நூதனமாக நிறுத்தச்செய்து அவனை மெல்ல வெளியேற்றும் திட்டத்தோடு வேரை மட்டும் அறுத்துவிட்டார்கள். இனி கொஞ்சம் கொஞ்சமாக அவனும் உதிர்வான். பணம், வாய்ப்பு இல்லாதாலும் தன் பூர்வீகத்திலிருந்து ஒருவன் வெளியேறலாம், கூடுதல் பணம், கூடுதல் வாய்ப்பு என்றும் ஒருவனை வெளியேற்றலாம்.
100 கிமீ தொலைவிற்கு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டால், நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5000 ஏக்கர் நிலங்கள் விவசாயத்தைக் கைவிடுகின்றன. 5000 ஏக்கர் நிலம் சார்ந்த விவசாயிகள், விவசாயக் கூலிகளின் வேர்கள் அறுக்கப்பட்டுவிட்டதை அவர்கள் உணர்வதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
*
ஈரோடு மாவட்டத்தை மேட்டூர் வலதுகரை, காலிங்கராயன், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, கீழ் பவானி கால்வாய்கள் பெரிதும் வளப்படுத்துபவை. இதில் அகலமான, மிக நீளமான கீழ்பவானி கால்வாய் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது அமைக்கப்பட்டது. காலிங்கராயன் கால்வாய் 730 வருடங்களுக்கு முன்பு பவானி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டு காவிரி ஆற்றுக்கே சவால் விடும் வகையில் ஆற்றைவிட உயரமான ஆற்றை ஒட்டிய வறண்ட நிலங்கள் பயன்பெறும் வகையில் வெட்டப்பட்டது.
காலிங்கராயன் கால்வாயில் சாய, தோல் கழிவுகள் கலக்கின்றன எனச் சொல்லி கரைகள், தளம் கான்க்ரீட்டால் நிரப்பப்பட்டுள்ளது. கடைமடைக்கு தண்ணீர் போவதில்லை, நீர் கசிந்து வீணாகின்றன என்ற காரணங்களால் கீழ்பவானி வாய்க்காலுக்கு கான்கிரீட் சுவரும் தளமும் அமைக்க 1200 கோடிக்கு மேல் உலகவங்கி செலவு செய்ய பல வருடங்களாக தயார் நிலையில் இருக்கின்றது.
மேலோட்டமாகப் பார்த்தால் நீர் வீணாவதைத் தடுக்கவும், கடைமடைக்கு தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்தவும் கான்க்ரீட் அவசியம் என்ற வாதம் சரியாகப்படலாம். ஆனால் 200 கி.மீ தொலைவு இருக்கும் கால்வாயின் கரைகள் கான்க்ரீட் ஆக்கப்பட்டால், அந்தக் கரைகளில் இருக்கும் 2 லட்சம் மரங்கள் என்னவாகும், அதை நம்பிய பறவைகள் பூச்சிகள் என்ன செய்யும் என்பதற்கு பதிலுண்டா? நீர் கசிந்து வீணாகின்றன என்பதைப் போன்ற முட்டாள்தனமான வாதம் உலகில் வேறொன்றுமில்லை. கால்வாயில் ஓடும் நீர் மண் உறிஞ்சப்படுவதால் வீணாகின்றன எனச் சொன்னால், இனி ஆற்றுக்கும், அணைக்கும் கூட கான்க்ரீட் போட்டுவிடுவதுதானே நல்லது.
கீழ்பவானி கால்வாயில் நேரடியாக இரண்டு லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறதென்று சொன்னால், மறைமுகமாக நிலத்தடி நீர் உயர்வதின் வாயிலாக, கசிவுநீர்க் குட்டைகள் நிரம்புவதன் மூலமாக மூன்று லட்சம் ஏக்கர் பயன் பெறுகின்றன. கால்வாய் கான்க்ரீடாக்கப்பட்டால், சில ஆண்டுகளில் அந்த மூன்று லட்சம் ஏக்கர் நிலமும் முற்றிலும் மானாவாரி நிலமாக மாற்றப்படும். விவசாயம் முழுதும் நலிந்துபோகும். அந்த நிலங்களை நம்பியிருந்த விவசாயிகள், விவசாயக் கூலிகள் வேறு வழியின்றி மனம் வெதும்பி வெளியேறவேண்டி வரும். நிலங்கள் வீட்டுமனைகளாக்கப்படும். ஒட்டுமொத்தமாக நிலங்கள் ஏதாவது கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்கேற்ப ஒரு தொழிற்பேட்டையாக கையகப்படுத்தப்படலாம்.
*
இதோ இப்போது கெயில் நிறுவனம் மாட்சிமைதாங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை கையில் வைத்துக்கொண்டு தயாராக நிற்கிறது. அநேகமாக தமிழகத் தேர்தல்வரை கள்ள மௌனம் காக்கும் என எதிர்பார்க்கலாம். அதன்பின் தன் அசுரபலத்தை விளைநிலங்களின் மீது எந்தவித கருணையுமின்றி பாய்ச்சும். மக்கள் அடர்த்தி மிகுந்த இந்த தேசத்தில், விவசாயத்தை முன்னிறுத்தும் இந்த தேசத்தில் மக்களைக் குறித்தோ, விவசாயம் குறித்தோ எந்தவிதக் கவலையும், கவனமுமின்றி தன் கோரத்தனத்தை செயல்படுத்தும்.
குழாய்கள் பதிக்கப்படும் நிலமனைத்தும் அதை நம்பி வாழ்வோரிடமிருந்து அந்நியப்படுத்தப்படும். அவர்களுக்கே கடும் நிபந்தனைகள் விதிக்கப்படும். ஒட்டுமொத்த சுதந்திரமும் பறிக்கப்படும். அந்த நிலத்தின் பயன்பாடு, விலை காயடிக்கப்படும். மிக எளிதாக விவசாய சமூகம் முடமாக்கப்படும்.
அந்த நிலத்தில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால், பாதிக்கப்பட்டவனே குற்றவாளி என சட்டம் பாய்ச்சப்படும். அசம்பாவிதங்களில் அவன் பாதிக்கப்பட்டால் நிறுவனம் கள்ளமௌனம் சாதிக்கும். மேல் மட்டத்தில் இருப்பவர்கள் அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள்.
அப்போ, வளர்ச்சியே தேவையில்லையா? எல்லாவற்றுக்கும் முட்டுக்கட்டை போடுவது சரியா? ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றைப் பெறமுடியும், ரயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, நகர விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டபோது என எல்லா நேரங்களிலும் இப்படியான எதிர்ப்புக் குரல் எழும்பும், பின்னர் அடங்கிவிடும் என புத்திசாலித்தனமாக வஞ்சனைகள் நிரப்பி, நினைத்த ஒவ்வொன்றையும் நிறைவேற்றிவிடுவது ஒன்றும் சிரமமில்லைதான்.
ஆனால்… இதெல்லாம் உண்மையிலேயே யாருக்காக செய்கிறீர்கள்!?
பூர்வகுடிகளின் வேர்களை அறுத்துவிட்டு மெல்ல மெல்ல அவர்கள் குழம்பி, மனம் வெதும்பி, நொந்து, இயலாமைக்கு ஆட்பட்டு சிதைந்துபோவதை உறுதிப்படுத்துவதற்குப் பெயர் வளர்ச்சி என்றால், அது வளர்ச்சியில்லை… அழுத்தமாகச் சொல்லவிரும்புவது "அது புற்றுநோய்க்கு நிகரான ஒன்றுதான்."
இந்தப் போக்குக்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியவில்லை. எனவே, இப்போதைக்கு 'டேஷ் இன் இந்தியா' என்று சொல்லி கோடிட்ட இடங்களை நிரப்பக் கோருகிறேன்.
ஈரோடு கதிர் - தொடர்புக்கு kathir7@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
18 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
27 days ago