சென்னையில் நான் படிச்ச சாந்தோம் ஸ்கூலுக்கும், அதுக்கு பக்கத்துல இருந்த செயின்ட் பீட்ஸ் ஸ்கூலுக்கும் இடையிலதான் ரோஸரி கேர்ள்ஸ் ஸ்கூல் இருக்கு. பாய்ஸ் ஸ்கூலுக்குப் பக்கத்துல ஒரு கேர்ள்ஸ் ஸ்கூல் இருந்தா, அந்த வயசுல மனசுக்கு ஜாலியா இருக்கத்தானே செய்யும்! அதுக்கும் போட்டியா ஒரு பாய்ஸ் ஸ்கூல் எதிர்ல இருந்தா எப்படி? அதுமட்டுமல்ல; நாங்க கிரிக்கெட்ல பெஸ்ட் காட்டினா, செயின்ட் பீட்ஸ் பசங்க ஃபுட்பாலில் சாமர்த்தியம் காட்டுவாங்க. நாங்க தமிழ் பேசுவோம். அவங்க இங்கிலீஷ் பேசுவாங்க.
இப்படி சின்னச் சின்ன எதிரெதிர் விஷயங்கள் இருந்தன. அதனாலேயே ரெண்டு ஸ்கூல் பசங்களுக்கும் எப்பவும் ஒரு கேப் இருக்கும். இதையெல்லாம் ஒருத்தரோட ஒருத்தர் பார்வைகள்ல காட்டுறதோட சரி. எப்பவுமே சண்டை போட்டுக்கிட்டதே இல்லை.
ஸ்கூல்ல நான் எந்தக் கலாட்டா வுக்கும் போக மாட்டேன். வகுப்புக்கு கட் அடிக்கிறது, ஸ்கூலுக்கு கட் அடிச்சுட்டு படத்துக்கு போறதெல்லாம் செய்ததே இல்லை. விளையாட்டு… விளையாட்டு… எப்பவும் விளையாடிட்டே இருப்பேன். இன்டெர்வெல் நேரத்துல 10 நிமிஷம் கிடைக்கிறப்பவும் விளையாட்டுதான். மத்தியானம் சாப்பாட்டு நேரத்துல சீக் கிரமா சாப்பிட்டுட்டு அப்பவும் விளையாட்டுத்தான்.
ஃபுட்பால், கிரிக்கெட், முதுகு பங்க்சர் இது மூணும்தான் விளையாட்டுல என்னோட இஷ்டம். படிப்பு அவ்வளவா ஏறல. எப்படியோ எக்ஸாம்ல மட்டும் பாஸ் ஆகிடுவேன். நார்மலா இருக்கிற உலகத்துல இருந்து அப்போ எல்லாம் ஸ்கூல் உலகம் சம் பந்தமே இல்லாமல் அவ்வளவு ஜாலியா இருக்கும். இப்போதான் இண்டர்நெட், செல்போன். அதெல்லாம் அப்போ ஏது. எங்களைச் சுத்தி எது நடந்தாலும் அதை ஸ்கூல்ல நண்பர்கள்ட்ட சொல்லாம இருக்கவே முடியாது.
ஏழாம் கிளாஸ் படிக்கிறப்பதான் முதன்முதலா பேண்ட் போட ஆரம் பிச்சேன். ஸ்கூல்ல திங்கட்கிழமை வொயிட் அண்ட் வொயிட் போட்டுக் கலாம். அப்பா எப்பவுமே வொயிட் அண்ட் வொயிட்லதான் இருப்பார். அவர் போட்டுக்காத வொயிட் ஷர்ட் எல்லாம் நான்தான் போட்டுட்டுப் போவேன். அந்த சட்டை லூஸா இருக்கும். அதுக்கு மேச்சா வொயிட் பேண்ட் வேணுமே. மயி லாப்பூர் லஸ் கார்னர்ல ரெக்ஸ்ஸுன்னு ஒரு துணிக்கடை இருக்கும். அப்போ 50 ரூபாய்க்கு ஒரு பேண்ட். வொயிட் கலர்லதான் வாங்குவேன். பேண்ட் பயங்கர லூஸா இருக்கும். அதுக்கு ‘பலூன் பேகி’ன்னு பேரு. அதைத்தான் ஸ்கூலுக்குப் போட்டுட்டுப் போவேன்.
அப்புறம் கொஞ்ச காலம் கழிச்சு ரஜினி சாரோட ‘மாப்பிள்ளை’ பட ஷூட்டிங் நடந் தது. அப்பாதான் டான்ஸ் மாஸ்டர். நான் தான் அசிஸ்டெண்டா போயிருந்தேன். அதில் வர்ற ‘என்னோட ராசி நல்ல ராசி’ பாட்டை ஷூட் பண்ணிக்கிட்டிருந்தாங்க. ரஜினி சார், ‘பிரபு’ன்னு என்னை கூப்பிட் டார். கிட்டே போனதும், ‘‘இந்த பேண்ட் எங்க வாங்குனீங்க?’’னு கேட்டார். ‘‘மயிலாப்பூர் ரெக்ஸ்ல சார்’’னு சொன்னேன்.
‘‘நல்லா இருக்கே… நல்லா இருக் கே’’ன்னு சொன்னார். அவருக்கு அப்போ பிடிச்ச அந்த பேண்ட், பின்னாடி தமிழ் நாட்டுக்கே பிடிச்சுது. ஏன், இந்தியா வுக்கே பிடிச்சுது. அந்த நேரத்துல துணிக் கடைக்காரங்களப் பார்க்குறப்ப, ‘‘ரொம்ப தேங்ஸ் சார்’’ன்னு சொல்ல ஆரம்பிச் சாங்க. ஏன்னா, ‘‘ஒரு மீட்டர், ஒன்றரை மீட்டர்னு துணி எடுத்தவங்கள்லாம், உங்க ஸ்டைல் ஆஃப் பேண்டால ரெண்டு மீட்டர், ரெண்டரை மீட்டர்னு கேக்கு றாங்க சார்’’ன்னு சொல்வாங்க.
எங்க ஸ்கூல் பசங்க நல்லா படிப் பாங்க. ஸ்கூலோட ராசியோ என்னவோ, அங்க படிச்ச எல்லா பசங்களுமே நல்ல இடத்துல இருக்காங்க. ஏ, பி-ன்னு செக்ஷன் ஆரம்பிச்சு ஈ செக்ஷன் வரைக்கும் போகும். ஒவ்வொரு வகுப்புலேயும் 90 பேர்க்கிட்ட இருப்போம். வகுப்புல நாலு பேர் நல்லா படிக்காதவங்கன்னா, அதில் நானும் ஒருத்தன். அதுவும் மோசமா படிக்காத லிஸ்ட்ல நான் இருப்பேன். எக்ஸாம் எழுதிட்டு வர்றப்ப, ‘‘97 மார்க் வரணும். 2 மார்க் தப்பா பதில் எழுதிட் டேன். 95 தாண்டா வரும்’’னு ஃபிரெண்ட் ஸுங்க சொல்லிட்டு சோகமா வருவாங்க. நமக்கு 50 மார்க் வந்தாலே பெருசுன்னு நான் வருவேன்.
ஒரு மார்க்ல ஆரம்பிச்சி எந்த பதில் சரி, எந்த பதில் தப்புன்னு பேசி, மார்க்கை கூட்டிப் பார்த்திட்டே வருவோம். 50 வந்தா போதும்னு இருந்த எனக்கு தப்புத் தப்பா எழுதினதுல மார்க் கொஞ்ச கொஞ்சமா குறைஞ்சி 25-ல இருந்து 30-க்குள்ள வந்துடும். ‘‘சரி.. ஓ.கே. பார்த்துக்க லாம்’’னு நான் கூலா விளையாடப் போயிடுவேன். அந்த 97 மார்க்ல ரெண்டு மார்க் குறைஞ்சிடும்னு சொன்னவன், ‘வீட்டுல திட்டப் போறாங்களே’ங்குற சோகத்துல விளையாட வர மாட்டான். எப்பவுமே படிக்கிற பசங்களுக்குத்தான் பயம். படிக்காதவங்களுக்கு ஏது பயம். இது வாழ்க்கைக்கும் பொருந்தும்.
இப்போ உள்ள பசங்களுக்குத்தான் எவ்வளவு டென்ஷன். எனக்குத் தெரிஞ்சு நிறைய பேரண்ட்ஸ் ரொம்பவே அழகா அவங்க பசங்கள வளர்க்குறாங்க. ஆனா, தன்னோட கனவுகளை அவங்க மேல திணிக்கிறாங்க. ஏன் டென்ஷன். நம்ம ளோட கனவுகளை பிள்ளைகள்ட்ட திணிக்க வேண்டாம்னு தோணுது. விளை யாட்டு, படிப்பு, கலாட்டான்னு கலந்து கட்டி அவங்க சந்தோஷமா வளரட்டுமே. படிப்பு எவ்வளவு முக்கியமோ, அவ் வளவு முக்கியம் விளையாட்டும்.
இப்போ இருக்குற பசங்களுக்கு பள்ளிக்கூடத்துல கண்டிப்பா ஒன் ஹவர் வேர்வை வர விளையாடணும்னு ரூல்ஸ் போட்டா நல்லா இருக்கும். ஏன், நம்ம அரசாங்கமே எல்லா மாணவர்களும் பள்ளிக்கூடத்தில் ஒன் ஹவர் விளையாடியே ஆகணும்னு கட்டாயப்படுத்தலாமே. எனக்குத் தெரிஞ்சி பெரிய ஆளுங்க எல்லாரும் டென்ஷனை மறந்து சின்ன பசங்களா மாறுவது அந்த இடத்துலதான்.
சின்ன வயசுல விளையாடுறது, ஸ்கூல்ல படிக்கிறது, ஃபிரெண்ட்ஸோட சேர்ந்து கலாட்டாவுல இறங்குறது இதெல்லாம் எல்லார் வாழ்க்கையிலயும் நடப்பதுதான். இருந்தாலும், குறிப்பிட்ட வயசுக்கு மேல நாம வளர்ந்து சாதிக்கிறதா நினைச்சு செய்றதைத்தான் பெரிய விஷயம்னு நினைப்போம். நிச்சயம் அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. அந்தச் சின்ன வயசுல சாதாரணமா நடந்ததுதாங்க நிஜமாவே பெரிய விஷயம்.
ஒரு கட்டத்துக்கு அப்புறம் சில பேர் பேசுறப்ப, ‘‘அந்த வயசுல எப்படியெல்லாம் இருந்தோம் பாருங்க’’ன்னு ஏதேதோ சொல்லக் கேட்டிப்போம். என்னையே எடுத்துக் கோங்களேன்… டான்ஸர், டைரக்டர், நடிகர்னு பேர் வாங்குறது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. இதெல்லாம் மெனக்கெட்டு வாங்குறது. பெரிய விஷயம்னு நாம நினைச்சு செய்ற எல் லாமே சாதாரண விஷயம்தான். ‘இது சாதாரண விஷயம்தானே’ன்னு இறங்கி அனுபவிச்சதுதான் பெரிய விஷயம்.
கிளாஸ்ல நல்லா படிக்கிற பசங் கள்லாம் அவங்கள மாதிரியே நல்லா படிக்கிற பசங்கக்கூட நெருக்கமா இருப்பாங்க. கலாட்டா செய்ற பசங்கள் லாம் அதேபோல கலாட்டாவுல இறங்குற பசங்கக்கூட ஆட்டம் போடுவாங்க. விளையாடுற பசங்க விளையாட்டுல ஆர்வமா இருக்குறவங்கக்கூட சுத்து வாங்க. படிக்காத பையனா இருந் தாலும், நான் மட்டும் எல்லா டைப் ஆஃப் பசங்கள்ட்டேயும் ஃபிரெண்டா இருந்தேன். என் கூடவும் பசங்க ஈஸியா ஃபிரெண்ட்ஸ் ஆகிடுவாங்க.
எப்பவும் வீட்டுல சாமி கும்பிட்டு, நெத்தியில விபூதி வெச்சிட்டுத் தான் ஸ்கூலுக்குப் போவேன். ஒரே ஒரு நாள் நெத்தியில விபூதி இல் லாமல் ஸ்கூலுக்குப் போயிட்டேன். அன்னைக்கு என்ன நடந்துச்சி தெரியுங்களா?
- இன்னும் சொல்வேன்…
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago