திருநெல்வேலி, நாங்குநேரி பக்கம் -மேலக்கருவேலங்குளம் சொந்த ஊர். 1940-ல் பிறந்தவர். வசதியான குடும்பம். செயிண்ட் சேவியர் கல்லூரியில் தமிழில் பி.ஏ.,படித்தார். 1963-ல் சென்னை மாநிலக்கல்லூரியில் எம்.ஏ.படித்த போது இந்தியா மீது சைனா போர் தொடுத்தது. பிரதமர் நேரு வானொலியில் நிதி தாருங்கள் என்று அறிவிப்பு செய்தார்.
தனது கழுத்தில் போட்டிருந்த எட்டரைப் பவுன் தங்கச்சங்கிலியை எடுத்துப்போய் காமராஜர் வீட்டில் யுத்த நிதிக்கு கொடுத்து விட்டார்.
படிப்பு முடிந்து ஊருக்குத் திரும்பினார். கிராமத்தில் இவர் பங்குக்கு 50 ஏக்கர் நிலம் கிடைத்தது. அதை உழுத விவசாயிகளுக்கே பிரித்துக் கொடுத்து விட்டார்.
குடியிருந்த வீட்டில் தன் பங்கை தொண்டு நிறுவனங்களுக்கு எழுதி வைத்து விட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்திலுள்ள ஸ்ரீகுமரகுரு சுவாமிகள் கல்லூரியில் லைப்ரேரியனாக 35 வருடங்கள் பணியாற்றினார். அதற்கு கிடைத்த மொத்த சம்பளம் 30 லட்சம் ரூபாயையும் ஏழை எளிய மக்களுக்கு பிரித்துக் கொடுத்து விட்டார்.
தன் சொந்த செலவுக்கு நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலில் மாலை நேரங்களில் சர்வராக வேலை பார்த்து அதில் கிடைத்த சம்பளத்தில் சிறிய அறை எடுத்து அதில் தங்கிக் கொண்டார்.
ஏழ்மை, வறுமையை உணர்ந்து கொள்ள 7 வருடம் பஸ் ஸ்டேண்டுகளிலும், ரயில்வே பிளாட்பாரத்திலும் படுத்து துன்பத்தை அனுபவித்தார்.
20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளர்களாக ஐக்கிய நாடுகள் சபை தேர்வு செய்த உலகின் ஒப்பற்ற மனிதர்களில் இவரும் ஒருவர். ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர் என்று அமெரிக்கா தேர்வு செய்து ரூ.30 கோடி பரிசு கொடுத்தது.
அதை அப்படியே அமெரிக்க குழந்தைகள் நலனுக்கு தானமாக கொடுத்து விட்டு வந்தார்.
சிறுவயதில் அப்பா பால்வண்ணநாதர் கோயில் ஒன்றில் தர்மகர்த்தாவாக இருந்தார். கோயில் வளாகத்தில் காய்த்திருந்த ஒரு பலா பழத்தை சிப்பந்தி ஒருவர் பறித்து வந்து அப்பாவிடம் கொடுத்துப் போனார். அப்பா அதை அறுத்து சுளைகளை மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்தார். இதைப் பார்த்த இவர் இது மாபெரும் குற்றம் என்று கூறி, ஒரு ஏக்கர் வயலை கோயிலுக்கு எழுதி வைத்து விட்டார்.
அம்மாவைக் கடவுளாக மதித்தவர். பேராசைப்படாதே- உன் சொத்தில் பத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்கு தானம் செய் - தினம் ஒரு உயிருக்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை செய் -என்று அம்மா சொன்னவற்றை இன்றும் வேத வாக்காக கடைப்பிடிக்கிறார்.
திருமணம் செய்து கொள்ளவில்லை. இறந்ததும் உடலை மருத்துவக்கல்லூரி பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்று உயிர் எழுதி வைத்து விட்டார். அவர்தான் 81 வயதில் வாழும் நவீன கர்ணன் ‘பாலம்’ நிறுவனத்தின் தலைவர் கல்யாண சுந்தரம்.
இதுபோன்ற தவப்புதல்வர்களை பெருமைபடுத்த வள்ளுவர் எழுதிய குறள்:
‘யான் எனது எனும் செருக்கு அறுப்பான் - வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்’
---
குறள் கதை 23: கைம்மாறு
திருவண்ணாமலை என்று சொன்னால், 22 வயதில் அந்த ஊருக்குப் போய் விருதுநகர் நாடார் சத்திரத்தில் இலவசமாகத் தங்கிக் கொண்டு நாலுநாள் திருவண்ணாமலை கோபுரங்களை, தடாகத்தை பல கோணங்களில் வண்ண ஓவியமாக தீட்டிய நாட்கள் நினைவுக்கு வரும்.
இப்போது அந்த ஊரை மறக்க முடியாமல் செய்பவர் பவா.செல்லதுரையும், அவர் மனைவி ஷைலஜாவும். விருந்தோம்பலுக்கு பெயர் போனவர்கள். இயற்கையான சூழலில் எளிமையாக ஆசிரமம் போல அவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கு, கலைஞர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள்- மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு வேண்டுமென்றால் பறந்து செல்லும் இடம் அந்த வேடந்தாங்கல்.
எழுத்தாளர் ஜெயகாந்தன், பிரபஞ்சன், ஜெயமோகன் என பலரும் பாரதிராஜா, பாலுமகேந்திரா, மிஸ்கின் என பல படைப்பாளிகளும் இவர்களது உபசரிப்பில் கிறங்கிப் போயிருக்கிறார்கள்.
இறுக்கமான சூழலில் வாழும் இந்த பெருமக்கள் தங்கள் இதயத்தை திறந்து மடை திறந்த வெள்ளமாக தங்கள் வாழ்க்கை அனுபவங்களை கொட்டும்போது இரவு பகலாக அதை ரசிக்க பவாவிடம் ஒரு கூட்டமுண்டு.
நவீன இலக்கியங்களை ஆழ்ந்து படித்து ஆலமரத்தின் அடியில் ஐம்பது பேரை உட்கார வைத்து அனாயசமாக குழந்தைகளுக்கு பாட்டி கதை சொல்வது போல் பவா கதை சொல்லும் அழகே அழகு.
‘ஒரு மனிதன்- ஒரு வீடு- ஒரு உலகம்’ என்ற ஜெயகாந்தனின் நாவலை உள்வாங்கி பவா நிகழ்த்திய உணர்வுப்பூர்வமான எளிமையான உரையை வீடியோவில் கேட்டு அவருக்கு நான் ரசிகனானேன்.
அவரது நெருங்கிய நண்பர் கருணா. திருவண்ணாமலை பக்கம் சொந்த ஊர். கொஞ்சம் வசதியான குடும்பம். கல்லூரி சொந்தமாக துவக்கி நடத்தி வருகிறார்.
தனது சகோதரி மேல் உயிரையே வைத்திருப்பவர். திருவண்ணாமலையே அதிரும் வண்ணம் ஆடம்பரமாக சகோதரி திருமணத்தை நடத்தி வைத்தார்.
ஆண்டுகள் பத்து ஓடி விட்டன. குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. பார்க்காத டாக்டர் இல்லை. போகாத கோயில் இல்லை. மனம் சோர்ந்து போய் நாம குடுத்து வச்சது அவ்வளவுதான் என்று நினைக்கும் போது இன்ப அதிர்ச்சி. தங்கை கருவுற்றாள்.
கண்ணும் கருத்துமாக- சரியான சத்து உணவு, உடற்பயிற்சி -தூக்கம்- மருத்துவர் செக்கப் எல்லாம் செய்து பிரசவம் நடந்தது. அதில் இன்னொரு அதிர்ச்சி, பிறந்தது இரட்டைக் குழந்தைகள்.
ஆனால் அதிலும் ஒரு சோகம். ஒரு குழந்தை இறந்து விட்டது. வீட்டிலே நடமாடும் தெய்வமாக அந்த குட்டிப் பையனை எல்லோரும் கொண்டாடினர்.
குழந்தைக்கு இரண்டு வயதாயிற்று. குலதெய்வம் கோயிலில் ஒரு விசேஷ நாளில் தாய்மாமன் மடியில் உட்கார வைத்து மொட்டை போட்டார்கள்.
கோயிலுக்குள் சென்று விசேஷ அர்ச்சனை முடித்து தீபாராதனை முடிந்து கற்பூரத்தட்டில் நோட்டுகளைப் போட்டு கண்களை மூடி கும்பிட்டு விட்டு குழந்தையைப் பார்த்தால் காணவில்லை.
‘‘எங்கம்மா குட்டிப் பையன்?’’
‘‘உங்கிட்டத்தாண்ணே நின்றுகிட்டிருந்தான்?’’
‘‘உங்கிட்ட ஓடி வந்தானேம்மா?’’
எங்கே போயிற்று. எப்படி போயிற்று. சப்தநாடியும் அடங்கி விட்டது. வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கோயிலைச் சுற்றி கூட்டத்தில் தேடினார்கள். எங்கும் தென்படவில்லை.
ரோட்டின் மறுபகுதியில் வட்டமாக ஒரு நூறு பேர் நின்று வேடிக்கை பார்க்க -6 வயது பெண் அந்தரத்தில் கம்பி மேல நடந்து கொண்டிருந்தது.
கருணா எட்டிப் பார்க்க மொட்டைத் தலையுடன் மத்தளம் கொட்டும் கழைக்கூத்தாடி அருகே குட்டிப்பையன் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். மீண்ட சொர்க்கம் போல ஓடிப் போய் குழந்தையை தூக்கினார் கருணா.
‘‘உங்க குழந்தையா- அழுதுக்கினு இருந்துச்சு. அதான் பழத்தைக் குடுத்து இங்கன குந்த வச்சிருக்கேன்!’’ என்றான் கழைக்கூத்தாடி உணர்ச்சிவசப்பட்ட கருணா பாக்கட்டில் கை விட்டார். ஐநூறு ரூபாய் நோட்டுக்கத்தை அப்படியே கழைக்கூத்தாடியிடம் நீட்டினார்.
‘‘அய்யே! துட்டு தர்றியா? இன்னா மனுஷன்யா நீ? உன் குயந்த வேற; என் குயந்த வேறயா? இதுக்குப் போய் துட்டு தர்றே. எடுத்துகினு போய்யா’’ என்றான் கழைக்கூத்தாடி. ஒரு நொடியில் அவன் செயலால் கோபுரமாய் உயர்ந்து விட்டான்.
எந்த வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவி செல்பவர்கள் மழையைப் போன்றவர்கள் என்கிறார் வள்ளுவர்:
‘கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு
என் ஆற்றும் கொல்லோ உலகு’
****
-கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago