மான்டேஜ் மனசு 13 - தொட்டு தொட்டு போகும் காதல்

By க.நாகப்பன்

கணேசகுமாரனின் 'மிஷன் காம்பவுண்ட்' நூல் வெளியீட்டு விழா டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தது. வலி, அழுகை, வன்முறை, மரணம், தற்கொலை, கொலை என்ற சொல்லாட்சிகளுடனும், உள்ளடக்கத்துடனும் சிறுகதைகள் எழுதும் கணேசகுமாரன், காதலர் தினத்தில் தொகுப்பை வெளியிட்டது நகை முரண்தான். ஆனால், கணேசகுமாரன் அன்பைதான் வெவ்வேறு வடிவங்களில் கதாபாத்திரங்களின் வழியாக சொல்கிறார் என்பதை மறுக்க முடியாது.

கணேசகுமாரனுக்கு வாழ்த்துகளை சொல்லிவிட்டு அரங்கத்தில் இருந்து நகர்ந்தேன். விழாவில் சாரு சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் பேசியதோடு, சில காதல் கதைகளையும் சொன்னார். அப்போதுதான் கணேஷின் எண்ணம் எனக்குள் வர ஆரம்பித்தது.

பிப்ரவரி 15 கணேஷின் திருமண நாள். காதல் மனைவி ஆர்த்தியுடனும், ஒரு வயது செல்ல மகளுடனும் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அவனுக்கு வாழ்த்துகளை சொல்ல செல்பேசியை உயிர்ப்பித்தேன்.

''இயக்குநருடன் டிஸ்கஷனில் இருக்கிறேன்'' என்று மெசேஜ் தட்டினான்.

''ஓ.கே. மச்சி. கன்டினியூ'' என்று ரிப்ளை செய்தேன்.

இந்த முறை கணேஷ் துணை இயக்குநராக பணி உயர்வு பெற்றுவிட வேண்டும். அதுதான் இந்த ஆண்டின் ஆகச் சிறந்த பரிசாக அவனுக்கு இருக்கும் என்று நினைத்தபடி வீட்டுக்கு விரைந்தேன்.

கணேஷ் லைனில் வந்தான்.

''சொல்லு மச்சி..''

''திருமண நாள் வாழ்த்துகள் டா... சீக்கிரமே உன் கனவு நனவாகணும். நம்ம பசங்க எல்லாரும் சேர்ந்து உன் படத்தைப் பார்க்கணும்.''

''நன்றி மச்சி. அடுத்த மீட்டிங்ல ஒன் லைன் ஒண்ணு சொல்றேன் டா. எப்படி இருக்குன்னு சொல்லு.''

''ஓ.கே. மச்சி... தங்கச்சி, மருமக எப்படி இருக்காங்க?''

''நல்லா இருக்காங்க டா.''

''இப்போ எந்த பிரச்சினையும் இல்லையே.''

''இன்னும் ஆர்த்தியோட சொந்தக்காரங்க சிலர் அதே கோபத்தோட தேடுறாங்க டா. ஊர்ப்பக்கம் கூட இன்னும் போகலை.''

''போகப்போக சரியாகிடும் மச்சி. கவலைப்படாதே'' என்று உரையாடலுக்கு திரையிட்டேன்.

'காதல்' படம் பார்க்கும் போது கணேஷ் நினைவுக்கு வருகிறானா? கணேஷை நினைக்கும் போது 'காதல்' படம் நினைவுக்கு வருகிறதா? என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு கணேஷ் ஆக்கிரமிப்பு இருக்கிறது.

'காதல்' படத்தின் கதை அப்படியே கணேஷுக்கு பொருந்தும். சந்தியாவின் சித்தப்பா கேரக்டர் மாதிரி ஆர்த்தியின் தாய்மாமன் ஒருவர் கணேஷிடம் பேசிப் பேசியே டார்ச்சர் செய்தார்.

''நீ எங்க வீட்டுப் பொண்ணை லவ் பண்றதுல எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல.. நானே மத்தவங்களை மீறி உங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுப்புடுவேன்.. ஆனா, நீ வேற ஜாதிக்காரப்பய.. . நாளைக்கே உங்க ரெண்டு பேருக்கும் யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணி வெச்சுடலாம். என் சாதிக்கார பய எவனாவது ஒருத்தன் உன்னை வெட்டிட்டான்னு வை.. என்ன பண்ண முடியும் தம்பி..?'' இப்படிதான் கணேஷை நாசூக்காக மிரட்டிப் பார்த்தார்.

ஆனால், கணேஷ் 'காதல்' பட நாயகன் பரத் மாதிரி அவ்வளவு விவரம் தெரியாதவரல்ல. விவரமான ஆளு.

உங்களுக்குத் திருமணம் என்றால் உங்களுக்கு எப்போது தெரியவரும்? சுமார் மூன்று மாதங்கள், குறைந்தது ஒரு மாதம்.....

கணேஷுக்கு திருமணம் என்பது ஒரு மணிநேரம் முன்கூட்டிதான் அவனுக்கே தெரியும். எப்படி என்கிறீர்களா?

கணேஷ் - ஆர்த்தி கதையைப் படியுங்கள்.

கணேஷும், ஆர்த்தியும் ஏழாம் வகுப்பில் இருந்து ஒரே பள்ளியில் படித்தவர்கள். கணேஷின் சேட்டைகளும், குறும்புத்தனமும், வசீகர சிரிப்பும், எந்த கேள்விக்கும் பதில் சொல்லும் புத்திசாலித்தனமும் எல்லா கண்களுக்கும் பிடித்தமானதாக இருந்தது. ஆர்த்தியின் கண்களுக்கும் அப்படித்தான் கணேஷைப் பிடித்தது.

அதுவே அவர்களுக்குள் நட்பு மலர காரணமாக இருந்தது. ஆர்த்தியின் பாட சந்தேகங்களை அசால்ட்டாக டீல் பண்ணிய கணேஷ், அவள் நல்ல மதிப்பெண்கள் எடுக்க காரணமாக இருந்தான். அந்த ஆரோக்கியமான நட்பை நண்பர்கள் வரவேற்றனர்.

பிளஸ் 2 முடித்தபிறகு கணேஷ் அரசு பாலிடெக்னிக்கில் படிக்க சிதம்பரம் சென்று ஹாஸ்டலில் சேர்ந்துவிட்டான். ஆர்த்தி தஞ்சாவூரிலேயே கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள். இடையில் ஒரு வருடம் இருவருக்குமிடையே சுத்தமாக எந்த தொடர்புமே இல்லை.

நாளடைவில் ஒரு வெறுமையை உணர்ந்தான் கணேஷ். இழந்துபோன அந்த நட்பு மீண்டும் தேவைப்பட்டது. ஆர்த்தியைப் பற்றி விசாரித்ததில் அவளுடைய கல்லூரியின் பெயர் மட்டும் கிடைத்தது. அதை மனதில் பதிந்துகொண்டு ஒருமுறை தஞ்சாவூர் வந்தபோது அவளுடைய கல்லூரி வாசலில்போய் நின்றான்.

மதியம் கல்லூரி முடிந்து எல்லா மாணவர்ளும் வெளியில் வர ஆரம்பித்தனர். ஒவ்வொரு முகத்தில் ஆர்த்தியைத் தேட ஆரம்பித்தான். அவளைப் பார்க்கப்போகிறோம் என்ற சந்தோஷம் ஒருபுறமும் பார்த்தால் என்ன செய்வது என்ற பதட்டமும் கணேஷுக்கு அதிகரித்தது. கால்கள் நடுங்க ஆரம்பித்தன. நாக்கு வறண்டுகொண்டிருந்தது. பதினைந்து நிமிடத்தில் மொத்த மாணவர்களும் வெளியேறினார்கள். அவளை மட்டும் காணவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினான்.

அந்த ஒரு வருட இடைவெளியும், ஆர்த்தி இல்லாத இழப்பும் அவனுக்குள் காதலாக பரிமாணம் அடைந்ததை கணேஷ் உணர்ந்தது அந்த தேடல் படலத்தில் தான்.

பின்பு ஒரு நாள், வேறு ஒரு தோழி மூலம் ஆர்த்தி வீட்டு செல் நம்பர் வாங்கினான். ஒரு காயின் போன் பூத்தில் நின்றுகொண்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவள் வீட்டு எண்ணுக்கு அழைத்தான். நல்லவேளை ஆர்த்திதான் போனை எடுத்தாள். அவளது குரலில் அவ்வளவு உற்சாகம். இடையில் இருவரும் ஏன் ஒருவரையொருவர் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதற்கான காரணங்களையும் சம்பவங்களையும் பரஸ்பரம் தெரிவித்துக்கொண்டனர்.

மறுநாள் அவர்கள் படித்த பழைய பள்ளிக்கூடத்தில் ஒரு புளியமர நிழலில் இருவரும் சந்தித்தனர். கணேஷைப் பார்த்ததும் ஆர்த்தி கண் கலங்கினாள். ஆர்த்தி தன்னைக் காதலிப்பதை கணேஷ் உணர்ந்த தருணம் அதுதான். அவளை சமாதானம் செய்து, ‘இனிமே உன்னைவிட்டு எங்கேயும் போகமாட்டேன்’ என ஆறுதல் சொல்லி அங்கிருந்து கிளம்பினான்.

கணேஷ் அவன் வீட்டில் நச்சரித்து ஒரு பழைய செல்போனை செகண்ட் ஹேண்டில் வாங்கினான். இன்ஜினீயரிங் சேர்ந்தான். ஆர்த்தி நர்ஸிங் படித்தாள்.

கணேஷ் சென்னையில் வேலைக்கு சேர்ந்தான். ஆர்த்தி ஒரு மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தாள். இப்படியே நாட்கள் ஓடி சரியாக அவர்கள் காதலிக்கத்தொடங்கி ஒன்பதாவது வருடம் காதல் விஷயம் அவளுடைய வீட்டுக்குத் தெரிந்துவிட்டது. முதலில் அவளை திட்டினார்கள். கண்டித்தார்கள்.

ஆனால் இருவரும் ஒன்று சேர்ந்தே ஆகவேண்டும் என பிடிவாதமாக இருந்தனர்.

இந்நிலையில் திடீரென்று அவளுடைய மாமா ஒருவரிடமிருந்து கணேஷுக்கு போன் வந்தது.

''என்ன தம்பி.. நம்ம ஆர்த்தியை லவ் பண்றீயாம்..? இப்பதான் வீட்ல சொன்னாங்க.. உன்னைப் பத்தி விசாரிச்சேன்.. நீ அந்த வாத்தியார் வீட்டு பையன்தானே..? ஏம்பா.. நீ லவ் பண்றதுல எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல.. நானே மத்தவங்களை மீறி உங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுப்புடுவேன்.. ஆனா, நீயோ வேற ஜாதிக்காரப்பய.. அது எங்காளுங்களுக்கு செட் ஆகாது. நாளைக்கே உங்க ரெண்டு பேருக்கும் யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணி வெச்சு, மெட்ராஸுக்கு அனுப்பி வெச்சுடலாம்.. ஆனா, எங்க ஏரியாவுல எங்க சாதிக்காரய்ங்க 600 குடும்பம் இருக்கு.. அதுல எவனாவது ஒருத்தன் அங்க கெளம்பிவந்து உன்னை வெட்டிட்டான்னு வை.. என்ன பண்ண முடியும் தம்பி..? இல்ல.. ஒரு பேச்சுக்கு வெச்சுக்குவோம். இங்க வேற உங்க அம்மா, அப்பா வேற இருக்காங்க.. பார்த்துக்க தம்பி'' என சொல்லி போனை வைத்தார். அவர் தன்னை பாலிஷாக மிரட்டுகிறார் என ஆரம்பத்திலேயே கணேஷுக்கு புரிந்தது.

என்ன செய்வது என தெரியாமல் கணேஷ் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருக்கும்போது சிறிதுநேரத்தில் அம்மாவிடமிருந்து போன் வந்தது. போனை எடுத்தால் அம்மா அழுதபடி, ''என்னடா இது.. ஒருத்தரு வீட்டுக்கு வந்துருக்குறாரு… அவங்க வீட்டு பொண்ணை நீ லவ் பண்றியாம்.. கல்யாணம் பண்ணி வெக்கிறேன்.. ஆனா வெட்டுனாலும் வெட்டுவாங்கன்னு ஏதோ ஏதோ பேசுறாருடா.. நான்.. அது நீ இல்ல, வீடு மாறி வந்திருப்பீங்கனு சொன்னா, நம்பமாட்டேங்குறாருடா.. என்ன இதெல்லாம்..?'' என கேட்டார்.

கணேஷ் வேறு வழியில்லாமல் ''அவர் சொல்றது உண்மைதாம்மா'' என்றான் மனதைத் திடப்படுத்திக்கொண்டு. அதைக் கேட்டு அம்மா அழுதுதீர்த்தார்.

அவன் சமாதானப்படுத்த முயற்சி செய்யும்போது ஆர்த்தியின் மாமா போனை வாங்கி, ''தம்பி.. சும்மா வீட்டுக்கு வந்தேன்.. வேற ஒண்ணுமில்ல'' என சொல்லிவிட்டு போனை வைத்தார்.

அன்று மாலை ஆர்த்தியின் செல்போனுக்கு தொடர்புகொண்டால் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. அவள் வேலை பார்க்கும் ஹாஸ்பிட்டல் நம்பருக்கு அழைத்தால் அவள் வேலைக்கு வரவில்லை என்ற தகவல் வந்தது. வேறு ஒரு எண்ணில் ஆர்த்தியிடமிருந்து கணேஷுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது அதில் தான் வீட்டில் ஹவுஸ் அரெஸ்ட் செய்துவைத்திருப்பதாகவும் அடித்து துன்புறுத்துவதாகவும் துரிதமாக கல்யாண வேலைகள் நடந்துவருவதாகவும் சொன்னாள்.

கணேஷ் தன் பெற்றோரை சமாதானம் செய்து சம்மதம் வாங்கினான். கணேஷ் தன் பெற்றோரை அழைத்துக்கொண்டு மகளிர் காவல் நிலையத்துக்கு போனான். புகார் செய்தான். உடனே ஆர்த்தியையும் அவளுடைய பெற்றோரையும் ஸ்டேஷனுக்கு வரவைத்தார்கள். கணேஷ், ஆர்த்தியை தனித்தனியே விசாரித்தார்கள். விசாரணைக்குப் பின், ''அவங்க ரெண்டு பேரும் மேஜர்.. கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்றாங்க.. நீங்க என்ன சொல்றீங்க..?'' என இருவரின் பெற்றோர்களிடம் கேட்டனர். கணேஷ் வீட்டில் சம்மதம் தெரிவித்தனர்.

ஆர்த்தியின் அப்பா, 'எங்களுக்கு ஒரு மாசம் டைம் கொடுங்க.. நாங்களே எங்க சொந்தத்துல சொல்லி, நல்லபடியா கல்யாணம் பண்ணிவெக்கிறோம்' என கேட்டார். போலீஸார் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி ஆர்த்தியை அவர்களுடன் திரும்ப அனுப்பிவைத்தனர். ஆர்த்தியும் கணேஷும் சந்தோஷத்தில் மிதந்தனர். கணேஷ் சென்னை திரும்பினான்.

ஆனால். அதன்பிறகு நடந்ததுதான் அதிர்ச்சி. அவளை திரும்பவும் பழையபடியே வீட்டுக்குள் முடக்கிவைத்தனர். ஒரு மாதத்துக்குள் எப்படியாவது அவளை மனம் மாற்றம் செய்துவிடலாம் என பல்வேறு வழிகளில் முயற்சி செய்தனர். ஆனால் ஆர்த்தி கொஞ்சம்கூட மசியவில்லை. மாதம் ஒன்றாகிவிட்டது ஆனால் எந்த தகவலுமே இல்லை. போன் செய்தால் கட் செய்தார்கள்.

அன்று பிப்-14 அன்று காதலர் தினம், ஊரே காதல் கொண்டாட்டத்தில் இருந்தது. அன்று இரவே கணேஷ் சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு பஸ் பிடித்தான். வீட்டுக்குக்கூட போகாமல் நேராக நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு மகளிர் காவல் நிலையத்துக்கு போனான். புகார் செய்தான்.

ஆர்த்தி வீட்டுக்கு போன் செய்தார்கள் முன்பு மாதிரியே அனைவரையும் வரவைத்தார்கள். அவர்களிடம் இன்ஸ்பெக்டர், ''உங்களுக்கு கொடுத்த டைம் முடிஞ்சுபோச்சு.. சொன்ன மாதிரி நீங்க நடந்துக்கலை.. பொண்ணு ஸ்டிராங்கா இருக்கா.. ஸோ.. இனிமே அந்த பையன் சொல்றபடிதான் நாங்க கேட்கணும்..'' என்றார்.

''என்னப்பா செய்யப்போற..?'' - கணேஷைப் பார்த்து கேட்டார் இன்ஸ்பெக்டர்

''இல்ல மேடம்.. ஏதாவது வுமன்ஸ் ஹாஸ்டல்ல தங்க வெச்சி பார்த்துக்கிறோம்.. அப்புறமா நாள் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறேன்'' என்றான் கணேஷ்.

''அதெப்படிப்பா.. ஒரு வயசுப்பொண்ண சும்மா அனுப்பிவைக்கமுடியும்.. நீ உன் கூட கூட்டிட்டுபோகணும்னா கல்யாணம் பண்ணிதான் கூட்டிட்டு போகமுடியும்.. அதுக்கு உனக்கு சம்மதமா..?''

''சம்மதம் மேடம்''

விறுவிறுவென அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு கல்யாணத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் நண்பர்கள் கொண்டுவந்தனர். இதற்கிடையில் ஆர்த்தியின் பெற்றோர்கள், 'எங்களுக்கும் அவளுக்கும் இனி எந்த சம்பந்தமுமில்லை' என எழுதிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்.

கணேஷ் தன் பெற்றோரிடம் போனில் பேசி நிலவரத்தை சொல்லி வரவைத்தான். அவர்களும் வந்து சேர்ந்தனர். எல்லாம் தயாரானது. பிப்-15 அன்று காவல் துறை முன்னிலையில் அருகில் உள்ள ஒரு அம்மன் கோயிலில் திருமணம் நடந்தது. அன்றே இருவரும் ஒரு உறவினர் துணையுடன் சென்னைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் எங்கு இருக்கிறோம் என்பதே யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டனர். அவர்களது திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது.

அதன்பிறகு சில மாதங்கள் கழித்து ஆர்த்தியின் மாமாவிடமிருந்து போன் வந்தது. பாசமாக பேசினார். அவர்களது வீட்டு குழந்தைகள் 'ஆர்த்தி அக்கா எங்கே' என கேட்டு அழுவதாகவும் தஞ்சாவூருக்கு வரும்போது அவசியம் அவருடைய வீட்டுக்கு வரவேண்டும் என்றும் கூறினார். ஆர்த்தி அதில் மனம் கரைந்தாள். ஆனால் கணேஷுக்கு ஒரு சின்ன சந்தேகம் இருந்துகொண்டேயிருந்தது.

தஞ்சாவூர் போனபோது அவருக்கு போன் செய்து ஆர்த்தி விஷயத்தை சொன்னாள். அன்று மாலை ஏழு மணி அளவில் அவர் மட்டும் ஒரு கார் எடுத்துக்கொண்டு வந்து கணேஷ், ஆர்த்தியை வண்டியில் ஏறச்சொன்னார். ஆர்த்தி சந்தோஷத்துடன் புறப்பட்டாள். கணேஷ் சந்தேகத்துடன் போனான். வண்டியில் கருவேலங்காடு வழியாக போகப்போக கணேஷ் மனதுக்குள் என்னென்னமோ எண்ணம் வர ஆரம்பித்தது. இருப்பினும் ஒரு கை பார்த்துவிடலாம் என மனதை தைரியப்படுத்திக்கொண்டான். வண்டி நேராக ஒரு வீட்டு முன்பு போய் நின்றது.

அது அவரது வீடுதான். அந்த வீட்டு குழந்தைகள் ஓடிவந்து ஆர்த்தியை சூழ்ந்துகொண்டர். அந்த வீட்டு ஆட்கள் ஒவ்வொருவரும் வினோத்தை தள்ளி நின்று பார்த்து ஏதோ பேசி சிரித்துக்கொண்டனர். கணேஷ் இரண்டாவது முறையாக வெட்கப்பட்டான்.

அதுவும் அந்த ஆர்த்தியின் மாமா கேரக்டர், டாடா சுமோ, கார் பயணம் என எல்லாம் 'காதல்' படத்தை நினைவுபடுத்தின.

'காதல்' படம் பாலாஜி சக்திவேலுக்கு மிகப் பெரிய அடையாளத்தைத் தேடித் தந்தது. ஷங்கர் தயாரிப்பில் பரத், சந்தியா நடிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கி ஹிட்டான படம் 'காதல்'.

சந்தியாவும், தண்டபாணியும் இப்படத்தில் அறிமுகங்கள். ஆனால், புதுமுகம் என்று நினைக்காத அளவுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருப்பார்கள். விஜய் மில்டனின் ஒளிப்பதிவில் மதுரை நிலப்பரப்பை நமக்குள் கடத்தி இருப்பார். நா. முத்துக்குமாரின் வளையாமல் நதிகள் இல்லை. வலிக்காமல் வாழ்க்கை இல்லை என்ற வரிகள் உட்பட அனைத்துப் பாடல்களும் ரிப்பீட் ரகத்தில் ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தனர். அறிமுக இசையமைப்பாளர் ஜோஷ்வா ஶ்ரீதரின் இசையும் படத்துடன் பொருந்திப் போனதை சொல்லியே ஆக வேண்டும்.

கதை ரொம்ப சிம்பிள். பைக் மெக்கானிக் பரத் குடிசைப் பகுதியில் வாழும் இளைஞன். ஒயின்ஷாப் நடத்தி வரும் தண்டபாணியின் மகள் சந்தியாவுக்கு பரத் மீது ஈர்ப்பும், காதலும் வருகிறது. நாளடைவில் பரத்தும் சந்தியாவைக் காதலிக்கிறார். இருவரின் சாதியும் காதலுக்குத் தடையாக இருக்கும் என்று கருதி சென்னை சென்று நண்பர் மூலம் தெரு முனையில் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

சந்தியாவின் சித்தப்பா இருவரையும் தேடி சென்னை வருகிறார். பரத் - சந்தியா இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கிறார். வீட்டில் இருப்பவர்களிடம் நிதானமாக எடுத்துச் சொல்லி புரியவைப்பதாகவும், சேர்த்துக்கொள்ள உதவுவதாகவும் உறுதி தருகிறார். இதை நம்பி சென்னையில் இருந்து மதுரைக்கு பரத்தும், சந்தியாவும் காரில் வருகின்றனர்.

வீடு நெருங்கும் போது பரத்தை சாதிய பேச்சால் அவமானப்படுத்துகிறார். அதற்குப் பிறகு பரத்தை அடித்து உதைத்து மனநலம் பாதிக்கப்படும் அளவுக்கு புத்தி பேதலிக்கச் செய்துவிடுகின்றனர்.

நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன் என்று மண்டியிட்டு கலங்கும் சந்தியா பரத் எங்கே இருந்தாலும் உயிரோடு இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தாலியைக் கழட்டி எறிகிறார். புத்தி பேதலிட்த பரத் அந்த தாலியை கையில் எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.

சில ஆண்டுகள் கழித்து சந்தியாவுக்கு அவர் சாதியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடக்கிறது. சந்தியா குழந்தையை கையில் சுமந்த படி. தன் கணவனுடன் பைக்கில் வரும்போது நடுரோட்டில் பிச்சை எடுக்கும் பரத்தை சில ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கும் சந்தியா பிச்சைக்காரன் மாதிரி இருக்கும் பரத்தை கூர்ந்து கவனிக்கிறார் அவர் நெஞ்சில் தன் பெயர் பச்சை குத்தி இருப்பதைப் பார்த்து மயக்கமடைகிறார் . சந்தியாவின் கணவர் சிவகுமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கிறார்.

இரவில் விழிப்பு வந்த சந்தியா பரத்தை தேடி அலைகிறார். பரத்தின் கோலத்தைப் பார்த்து ''நீ நல்லா இருக்கணும்னுதானே தாலியை பிச்சு எறிஞ்சேன். இப்படி நடக்கும்னு தெரியாம போச்சே! நாம காதலிச்சது தப்பா! என்னாலதானே இப்படி ஆன? நான் பாவி ஆகிட்டேன். இனிமே உன்னை விட மாட்டேன்'' என்று கலங்குகிறார்.

குழந்தையின் அழுகுரல் கேட்டு திரும்ப அங்கு சந்தியாவின் கணவர் சிவகுமார், குழந்தையுடன் நிற்க, சந்தியா பரிதவிக்கிறார். சந்தியாவின் கணவர் பரத்துக்கு சிகிச்சை அளித்து பரமாரிக்கும் முடிவுடன் ஒரு கையில் சந்தியா, குழந்தையை தாங்கியபடி, இன்னொரு கையில் பரத்தை கை பிடித்து அழைத்துச் செல்கிறார்.

மனித நேயம் மிக்க இந்த கணவரை ரயில் பயணத்தில் சந்தித்ததாகவும், மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிப்பதாகவும் சொன்ன உண்மைக் கதையை உங்களுக்கு கண்ணீருடன் சமர்ப்பிக்கிறேன் என்று பாலாஜி சக்திவேல் பெயர் திரையில் ஒளிரும்.

இடைச்செருகலாக ஒன்றை சொல்ல வேண்டும். பரத் நண்பர் சுகுமார் தங்கியிருக்கும் மேன்ஷனில் பரத்தும், சந்தியாவும் தங்குவார்கள். அங்கே குளியலறையில் ஸ்டிக்கர் பொட்டு பார்த்து ஒரு பொண்ணு இங்கே தங்கியிருக்கு என மேன்ஷனுக்கே தம்பட்டம் அடிக்கும் கேரக்டரில் நடித்திருப்பது நம்ம சூரிதான்.

‘காதல்’ படத்தைப் பார்த்தவர்கள் போட்டி போட்டு என்ன படம்... என்று சிலாகித்துப் பாராட்டினார்கள். எந்த சாதிக்கார பெண்ணுடன் சேரக் கூடாது என்று நினைத்தார்களோ, அதே சாதியைச் சார்ந்த ஒருவர் தான் பரத்தை பராமரிக்கிறார். பொதுவாக ஆதிக்க சாதிப் பெண்ணை ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவர் காதலிப்பார். அது ஆதிக்க சாதியினருக்கு தெரியவரும்போது ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் மிரட்டப்படுவார். கொல்லப்படுவார். அல்லது சம்பந்தப்பட்டவர்கள் ஊரை விட்டு ஓடிவிடுவார்கள். அல்லது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் குடும்பமே அழியும். அல்லது அவன் சுற்றமும் சேர்ந்தே அழியும்.

'காதல்' படத்திலும் அந்த சிக்கல் இருக்கிறது. பரத்தும் - சந்தியாவும் இணையவே இல்லை. இயக்குநர் கூட மேன்ஷன் அறையில் உடை மாற்றும் சூழலில் வரும் கிறுகிறுன்னு பாடலில் தள்ளித் தள்ளியே டூயட் பாட வைத்திருப்பார்.

ஆனால், காதலனுக்கு தான் காதலித்த பெண்ணின் கணவன் அடைக்கலம் தருவது உண்மை சம்பவம் என்ற மையப்புள்ளியை வைத்து படமாக்கி இருப்பதால் 'காதல்' பட கிளைமாக்ஸ் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 'காதல்' தனித்துவமானதுதான்.

'பருத்தி வீரன்', 'சுப்பிரமணியபுரம்', 'பாரதி கண்ணம்மா' ஆகிய படங்களில் கதாநாயகி ஆதிக்க சாதியைச் சார்ந்தவராகவும், கதாநாயகன் ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்தவராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த மூன்று படங்களிலும் நாயகன் - நாயகி இணையவே இல்லை என்பதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்த மூன்று படங்களிலும் நாயக பிம்பம் ஹீரோயிஸமாக இருக்கும்.

'காதல்' படம் அப்படியல்ல. என்னை கை விட்டுடமாட்டியே ஐஸூ என்று நாயகியிடம் எப்போதும் பயந்தபடியும், பதறியபடியும் பரத் கேட்டுக்கொண்டே இருப்பார். வீர வசனம் பேசும் நாயக பிம்பம் இல்லை.

ஆதிக்க சாதியினருக்கான பிரச்சார படமா? அவர்களை முன்னிறுத்தி எடுக்கப்பட்டதா? என்ற கேள்வியும் எழுகிறது. ஒயின்ஷாப் முதலாளியான தண்டபாணியின் தோரணை, உடல் மொழி, மிரட்டல் பேச்சு, மகள் வயதுக்கு வந்தவுடன் ஊருக்கே கறிவிருந்து வைப்பது, தொங்கட்டானுடன் பாசத்தை பங்கு போடும் அம்சவள்ளிப் பாட்டி கடைசியில் ’அந்த பொண்ணை வெட்டிப் போடுங்கடா' என டெரர் காட்டுவது, 'காதலுக்கு மரியாதை' படத்தை டிவியில் பார்த்து கலங்கும் தண்டபாணியின் இரு மனைவிகளும் 'அந்தப் பையன் தான் இதுக்கெல்லாம் காரணம். நம்ம பொண்ணு மனசைக் கெடுத்த அவனைக் கொல்லுங்க' என சுய சாதியை உயர்த்திப் பிடிக்க நினைப்பது, சந்தியாவின் சித்தப்பா பொண்ணு ஓடிப் போன சோகம் என நாடகமாடி உளவியல் ரீதியாக விஷயங்களைக் கறப்பது என எல்லாம் ஆதிக்க சாதியின் தன்மைகளை புட்டு புட்டு வைக்கிறது.

தென் மாவட்டங்களில் அப்பட்டமாக நடக்கும் கதையைத் தான் பாலாஜி சக்திவேல் காட்சிப்படுத்தி இருக்கிறார் . அதே சமயம், எந்த அரசியலுக்குள்ளும் சிக்கக்கூடாது என்பதற்காகவே உண்மை சம்பவத்தை படமாக எடுத்ததாக பாலாஜி சக்திவேல் சொல்கிறார். 2004-ல் காதல் படம் வெளியானதால் இது கௌரவக் கொலைகளை பேசும் படம் என்ற விமர்சனம் அப்போது அதிகம் எழவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகே தமிழ் சினிமாவில் கௌரவக் கொலைகள் குறித்த பதிவுகள் பேசப்பட்டன.

'சுந்தர பாண்டியன்' கூட கௌவரக் கொலைகள் குறித்த அறிமுகத்தை பெருமையாக பதிவு செய்யும் படம்தான். ஆரம்பத்திலேயே அப்படியான காட்சிகளை வாய்ஸ் ஓவரில் சொல்வார்கள். படம் வெற்றிகரமாக ஓடிய பிறகு இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்வதாக ஒரு பேட்டியில் சொன்னார்.

சமீபத்தில் பொன் ராம் இந்த கௌரவக் கொலைகள் விஷயத்தை வித்தியாசமாக டீல் பண்ணுகிறார் என்று நண்பர் சுகுணா திவாகரின் முகநூல் ஸ்டேட்டஸ் படித்தது மாற்றி யோசிக்க வைத்தது.

கௌரவக் கொலைகளை பகடி பண்ணுவது பொன் ராம்தான். சத்யராஜ் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் கௌரவக் கொலை செய்துவிட்டதாக பீதியைக் கிளப்பி, அதையே காமெடியாக்கி இருப்பார்கள். 'ரஜினி முருகன்' படத்தில் மாற்று சாதிப் பெண்ணைக் காதலித்ததற்காக கௌரவக் கொலை செய்துவிடுவார்கள் என்று பயந்து, தன் சாதிப்பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக ராஜ்கிரணை பொன் ராம் பேச வைத்திருக்கிறார் என்று நண்பர் சுகுணா திவாகர் எழுதி இருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால், 'காதல்' படத்தில் டெரர் காட்டிய தண்டபாணிதான் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் என் மீசை துடிக்குதுலே என்று சத்யராஜை சீண்டுவார். அவரின் கதாபாத்திரத்தை இப்படி நய்யாண்டி செய்திருப்பதே குறியீடாக இருக்குமோ என்று யோசிக்க வைக்கிறது.

*

பப்பி லவ் தான் காதலின் கதைக்களம். அதை எப்படி உன்னத காதலாக பாலாஜி சக்திவேல் படைத்தார் என்ற கேள்வி எழலாம். அதற்கு கணேஷின் காதலே ஒற்றை உதாரணம். சின்ன வயதில் அரும்பிய சினேகமான புன்னகையில் ஆரம்பித்த நட்பு இன்று காதலாகி கசிந்துருகி கணேஷ் 14 ஆண்டுகளைக் காதலால் கடந்திருக்கிறான்.

''நீ என் முதல் குழந்தை. இரண்டாம் தாய். கடைசி தோழி'' என்று காதல் வசனம் எந்த படத்திலாவது பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தால் கைதட்டுங்கள். அது கணேஷின் வசனமாகவும் இருக்கக்கூடும்.

பிப்ரவரி மாதம் கணேஷுக்கு ரொம்பவே ஸ்பெஷல். திருமணம் நடந்தது மட்டும் காரணமல்ல, அவன் மகள் பிறந்ததும் பிப்ரவரியில்தான்.

*

- மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்...

க.நாகப்பன் - தொடர்புக்கு nagappan.k@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: >மான்டேஜ் மனசு 12: காதல் கடத்தும் அழகிய தீ!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்