சர்வதேச மருத்துவ நிபுணர்
18-ம் நூற்றாண்டின் முன்னணி மருத்துவர்களில் ஒருவரும், உடற்கூறியல், நோயியல் குறித்து முதன் முதலாக விளக்கிக் கூறியவருமான ஜியோவான்னி பாட்டிஸ்டா மார்காக்னி (Giovanni Battista Morgagni) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# இத்தாலியில் ஃபோர்லி என்ற நகரில் பிறந்தார் (1682). இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். இவரது தாய் மகனுக்கு சிறப்பான கல்வி கற்க ஏற்பாடு செய்தார். தலைசிறந்த மாணவனாக விளங்கியதோடு, கவிதைகள் எழுதத் தொடங்கினான், சிறுவன்.
# 14 வயதிலேயே நகரில் பிரபலமாகி விட்டார். கவியரங்குகள், தத்துவ விவாதங்களில் கலந்துகொள்ளத் தொடங்கினார். 16 வயதில் பெலோ னியா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலத் தொடங்கினார். 1701-ல் தத்துவம் மற்றும் மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். எதையுமே கவனமாக ஆராய்ந்தறிந்து துல்லியமாகத் தெரிந்துகொள்வதையே இவர் விரும்பினார்.
# உடற்கூறியல் துறையில் தனி ஆர்வம் கொண்டார். உடற்கூறியலில் பல கண்டுபிடிப்புகளைச் செய்தார். ஏற்கெனவே கண்டறியப்பட்ட சிலவற்றில் உள்ள தவறுகளைத் திருத்தினார். இவற்றைத் தொகுத்து ‘அட்வெர்சரியா அனாடொமிகா பிரைமா’ என்ற நூலை 1706-ல் வெளியிட்டார்.
# ஐந்து தொகுதிகளாக வெளிவந்த இந்நூலில் உடலியல், நோயியல் குறித்த ஏராளமான கட்டுரை தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. இது வெளிவந்த உடனேயே அறிவியல் சமூகத்தில் பெயரும் புகழும் அடைந்தார். 1717 முதல் தொடர்ந்து இரண்டு வருடங்கள் இந்நூலில் மேலும் ஐந்து தொகுதிகளை வெளியிட்டார். 1711-ல் பட்வா பல்கலைக்கழகத்தில் கோட்பாடு மருத்துவத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
# உடற்கூறியல் துறையின் தலைவராக பதவி உயர்வு பெற்றார். பல நூற்றாண்டு காலமாக நோய்கள் பொதுவாக உடல் முழுவதும் ஏற்படுவதாகவே மருத்துவர்கள் நம்பி வந்தனர். உடலின் இயற்கைக் கட்டமைப்புகளின் புதிர்கள் குறித்தும், உடலின் பல்வேறு உறுப்புகளில் தோன்றும் பல்வேறு நோய்கள் குறித்தும் ஆராய்ந்தார்.
# பல ஆண்டு காலமாக 600-க்கும் மேற்பட்ட பிரேதப் பரிசோதனைகள் உட்பட மிகவும் கவனமாக இவர் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளின் அடிப்படையில் நோயால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அதன் விளைவாக மரணம் உண்டாதல் ஆகியவற்றை எடுத்துக் கூறினார். இவரது ஆய்வுகள் நோய்க்கான காரணங்கள் குறித்த புரிதலுக்கும் அடிப்படையாக அமைந்தன.
# உடற்கூறியல் நிலைமைகள் குறித்த துல்லியமான, தெளிவான அறிவுடன் நோய் கண்டறிதல், நோய்க்கான காரணிகள் கண்டறியும் செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என்று கூறினார். ஒவ்வொரு நோயும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளதைத் தெரிவிக்கிறது என்பதை விளக்கினார். அதற்கு முன்பு வரை நோய்க்கான சிகிச்சைகள் தோராயமாகவும் கணிப்புகளின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டன.
# 1761-ம் ஆண்டு, தனது 79-வது வயதில் ‘ஆன் தி சீட்ஸ் அன்ட் காசஸ் ஆஃப் டிசீஸ், அனாடமிகலி ஸ்டடீட்’ என்ற நூலை வெளியிட்டார். இவரது மாஸ்டர் பீஸ் எனக் கருதப்படும் இந்நூல், பல முறை மறு பதிப்பு செய்யப்பட்டது. லத்தீன் மொழியில் எழுதப்பட்ட இந்நூல், பிரெஞ்ச், ஆங்கிலம், ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
# வாழ்நாள் முழுவதும் ஆய்வுகளுக்காகவும் கட்டுரைகள், நூல்கள் எழுதுவதிலும் செலவிட்டார். இவர் பிறந்த ஊரில் இவருக்குச் சிலை வைக்கப்பட்டுள்ளது. இறுதி வரை எழுத்துப் பணிகளையும் தொடர்ந்தார்.
# மருத்துவம் மட்டுமல்லாமல், தொல்லியல், வரலாறு, புவியியல், தத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எழுதினார். நோயியல் மற்றும் நவீன உடற்கூறியலின் தந்தை எனக் கருதப்படும் ஜியோவான்னி பாட்டிஸ்டா மார்காக்னி 1771-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 89-வது வயதில் காலமானார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago