எம்ஜிஆர் 100 | 3 - அண்ணாவின் தம்பிகள்

By ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. முதல் முறையாக 1977-ல் ஆட்சியைப் பிடித்து முதல்வராக இருந்த நேரம். எதிர்க்கட்சித் தலைவராக திமுக தலைவர் கருணாநிதி. சட்டப் பேரவையில் சூடும் சுவையுமான ஒரு விவாதம். ஒரு கட்டத்தில் கருணாநிதி பேசும்போது, ‘‘ஆட்சி அதிகாரம் எங்களுக்கு புதிதல்ல. நாங்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைதான் அது’’ என்றார். எம்.ஜி.ஆர். எழுந்தார். தனக்கே உரிய டிரேட் மார்க் புன்னகையுடன் சொன்னார், ‘‘நீங்கள் எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்று கணக்கு பார்க்கத்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்.’’

இப்படி, அரசியல் களத்திலே எதிரெதிரே நின்று விவாதங்களில் ஈடுபட்டாலும் அறிஞர் அண்ணாவின் தம்பிகளான இரண்டு பேருக்கும் இடையே அரசியலைத் தாண்டிய ஆழமான நட்பு நிலவி வந்தது. தனது நாற்பதாண்டு கால நண்பர் என்று எம்.ஜி.ஆரை கருணாநிதி குறிப்பிடுவார். எம்.ஜி.ஆரும் மேடைகளில் ‘நண்பர் கலைஞர் கருணாநிதி’ என்றே விளித்து பேசுவார்.

அரசியல் உக்கிரம் தகித்த போதும் அதையும் தாண்டிய நட்பு குளிர்ச்சி இருவருக்கும் இடையே நிலவியதற்கு சான்றுகள் ஏராளம். அதில் ஒரு சம்பவம்.

எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசைக் கண்டித்து 1982-ம் ஆண்டு ‘நீதிகேட்டு நெடும் பயணம்’ என்ற பெயரில் மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுடன் பாத யாத்திரையாக சென்றார். தொடர்ந்து நடந்ததில் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. காலில் கொப்புளங்கள் ஏற்பட்டன. அப்படியும் பயணத்தை தொடர்ந்தார்.

விஷயம் முதல்வர் எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது. உடனடியாக தொலைபேசி மூலம் கருணாநிதியை தொடர்பு கொண்டார். உடல் நலன் குறித்து அக்கறையோடு விசாரித்தார். அதோடு, கருணாநிதியின் உடல் நிலையை கவனிக்க ஒரு மருத்துவர் குழுவையும் அனுப்பி வைத்தார். இது இருவருக்குமான நட்பின் அடையாளம் மட்டுமல்ல, தனது அரசை எதிர்த்து பாத யாத்திரை போகிறாரே? தனது அரசியல் எதிரியாயிற்றே? என்றெல்லாம் கருதாமல் கருணாநிதியின் உடல் நலனில் எம்.ஜி.ஆர். கொண்ட அக்கறையையும் அவரின் அன்பு உள்ளத்தையும் காட்டும் நிகழ்ச்சி இது.

இருவருக்கும் இடையிலான நட்பின் ஆழத்துக்கு இன்னொரு சம்பவம்.

‘எங்கள் தங்கம்’... எம்.ஜி.ஆரை ரசிகர்கள் இப்படி அழைப்பதற்கு காரணமான அவர் நடித்து மேகலா பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட படம். மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் கடனை ‘எங்கள் தங்கம்’ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தால் அடைத்ததாக அதன் வெற்றி விழாவில் முரசொலி மாறன் குறிப்பிட்டார்.

படத்தின் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். என்றாலும் இரண்டு பாடல்கள் ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தும். ஒன்று.. எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடலான ‘நான் செத்துப் பிழைச்சவன்டா.... ’

மற்றொன்று ஜெயலலிதாவுடன் எம்.ஜி.ஆர். பாடும் டூயட் ‘நான் அளவோடு ரசிப்பவன்...’ இந்த இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் அதில் உள்ள சிறப்பான வரிகள். இரண்டு பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி.

‘நான் அளவோடு ரசிப்பவன்...’ பாடலுக்கான முதல் வரியை எழுதி விட்டார் வாலி. என்ன காரணமோ தெரியவில்லை, அன்று அவருக்கு அடுத்த வரி உடனடியாக வரவில்லை. அப்போது மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு கருணாநிதி வந்தார். வாலியைப் பார்த்து ‘பல்லவி எழுதி விட்டீர்களா?’ என்று கேட்டார்.

‘நான் அளவோடு ரசிப்பவன்....’ முதல் வரியை சொன்னார் வாலி.

‘எதையும் அளவின்றி கொடுப்பவன்....’ இரண்டாவது வரி வந்தது கருணாநிதியிடம் இருந்து.

எம்.ஜி.ஆரின் வள்ளல்தன்மையை மனதில் கொண்டு கருணாநிதி கூறிய இந்த வரிக்குப் பிறகு பாடல் கிடுகிடுவென எழுதி முடிக்கப்பட்டு அன்று மாலையே ஒலிப்பதிவும் ஆகிவிட்டது.

பாடல் எம்.ஜி.ஆருக்குப் போனது. ஆனால், இரண்டாவது வரியை வாலிக்கு கருணாநிதி எடுத்துக் கொடுத்த விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. சில நாட்கள் கழித்து வாஹினி ஸ்டூடியோவில் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரை சந்தித்தார் வாலி.

அவரை வரவேற்று ‘‘வாங்க ஆண்டவனே. (தனக்கு நெருக்கமான வர்களை எம்.ஜி.ஆர் இப்படி அழைப்பது வழக்கம்) ‘அளவோடு ரசிப்பவன்’ பாட்டு பிரமாதம். அதிலும் அந்த இரண்டாவது வரி அருமை’’ என்று கூறிய எம்.ஜி.ஆர். அன்பின் மிகுதியால் வாலியை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.

‘‘அண்ணே, நீங்க இந்த முத்தத்தை கருணாநிதிக்குத்தான் கொடுக்கணும்’’ - வாலியின் ரியாக் ஷன்.

‘‘ஏன்?’’ எம்.ஜி.ஆர். புரியாமல் கேட்டார்.

விஷயத்தை வாலி சொன்னதும் சிந்தனையில் ஆழ்ந்தார் எம்.ஜி.ஆர். அதன் எதிரொலி சில நாட்களுக்குப் பின் அவரிடம் இருந்து வெளிப்பட்டது.

‘நான் செத்துப் பிழைச்சவன்டா.. எமனைப் பார்த்து சிரிச்சவன்டா...’ பாடலின் பல்லவியை எழுதி எம்.ஜி.ஆரி டம் காட்டினார் வாலி. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எம்.ஜி.ஆர். உயிர்பிழைத்த பிறகு வெளியான இந்தப் பாடல் அவருக்கு கச்சிதமாக பொருந்தியது.

திருப்தியடைந்த எம்.ஜி.ஆர். வாலியிடம் சொன்னார்: ‘‘ஆண்டவனே, இரண்டாவது சரணத்திலே இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது கருணாநிதி தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தது பற்றி நாலு வரியிலே நறுக்குன்னு எழுதிடுங்க.’’

இதையடுத்துப் பிறந்த வரிகள்தான்...

‘ஓடும் ரயிலை இடைமறித்து

அதன் பாதையில் தனது தலைவைத்து

உயிரையும் துரும்பாய்தான் மதித்து

தமிழ் பெயரைக் காத்த கூட்டமிது’

தனது கொடை உள்ளத்தை ‘அளவின்றி கொடுப்பவன்...’ என்று புகழ்ந்து அடியெடுத்துக் கொடுத்த கருணாநிதியின் போர்க் குணத்துக்கு எம்.ஜி.ஆரின் பதில் மரியாதை.



‘எங்கள் தங்கம்' படத்தின் ஆரம்பத்தில் அப்போது சிறுசேமிப்புத் துறை தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். தனது வழக்கமான தொப்பி, கண்ணாடியுடன் சிறுசேமிப்புத் துறை தலைவராகவே வருவார். அவரிடம் தங்கம் பாத்திரத்தில் நடிக்கும் எம்.ஜி.ஆர். நிதி கொடுப்பார்.

எம்.ஜி.ஆருக்கு தமிழக அரசின் லாட்டரி சீட்டில் பரிசு விழும் (அப்போது லாட்டரி சீட்டு இருந்தது). அந்தப் பரிசை எம்.ஜி.ஆருக்கு அண்ணா வழங்குவது போல ஒரு காட்சி. மொட்டை அடித்துக் கொண்டு பாகவதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்.கதாகாலட்சேபம் செய்யும் காட்சி என்று படத்தில் ‘ஹைலைட்’கள் ஏராளம்.



தொடரும்..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்