தி.ஜானகிராமன் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

தமிழ் இலக்கிய எழுத்தாளர், நாவலாசிரியர்

நவீன இலக்கிய எழுத்தாளரும், சாகித்ய அகாடமி பரிசு வென்றவருமான தி.ஜானகிராமன் (Thi.Janakiraman) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தேவங்குடியில் (1921) பிறந்தார். தந்தை ஆன்மிக சொற்பொழிவாளர், இசைக் கலைஞர். சிறு வயதில் அவருடன் சொற்பொழிவுகளுக்கு செல்வார். உமையாள்புரம் சாமிநாத ஐயர், மிருதங்கம் சுப்பையர், பத்தமடை சுந்தரம் ஐயரிடம் இசை கற்றார்.

# தஞ்சாவூரில் புனித பீட்டர் பள்ளி, சென்ட்ரல் பிரைமரி பள்ளி, கல்யாணசுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். கும்பகோணம் அரசு கல்லூரியில் பட்டம் பெற்றார். பல ஐரோப்பிய இலக்கியங்கள் கற்றார். கல்லூரியில் படித்தபோது, விடுதலைப் போராட்ட கூட்டங்களில் கலந்துகொண்டார். அதுதொடர்பாக பல கதை, கட்டுரைகளை எழுதினார்.

# கும்பகோணம் உயர்நிலைப் பள்ளி, சென்னை எழும்பூர் உயர்நிலைப் பள்ளி, அய்யம்பேட்டை பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். சென்னை வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும், பின்னர் டெல்லி வானொலி நிலையத்தில் உதவி தலைமை கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

# தமிழ் இலக்கிய இதழான ‘கணையாழி’ மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். தனது பயண அனுபவங்களை ‘உதயசூரியன்’, ‘கருங்கடலும் கலைக்கடலும்’ என்ற தலைப்புகளில் வார இதழ்களில் எழுதினார்.

# 1964-ல் வெளியான இவரது ‘மோகமுள்’ நாவல், இலக்கிய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. ‘அமிர்தம்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’, ‘நளபாகம்’ உட்பட பல நாவல்களை எழுதியுள்ளார். ‘அம்மா வந்தாள்’ நாவல் ஆங்கிலம், குஜராத்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

# ‘கமலம்’, ‘தோடு’, ‘அவலும் உமியும்’ போன்ற குறு நாவல்கள், ஏராளமான சிறுகதைகளை எழுதியுள்ளார். ‘கெட்டிமேளம்’, ‘அக்பர் சாஸ்திரி’, ‘பாயசம்’, ‘பிடிகருணை’, ‘மனிதாபிமானம்’, ‘சக்தி வைத்தியம்’, ‘யாதும் ஊரே’ உள்ளிட்ட பல சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்தன. ‘நாலு வேலி நிலம்’, ‘வடிவேல் வாத்தியார்’, ‘டாக்டர் மருந்து’ ஆகிய நாடகங்களையும் எழுதியுள்ளார்.

# இலக்கியம், இசை பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார். சமையல் கலை, இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டவர். நல்ல மொழிபெயர்ப்பாளரும்கூட.

# தஞ்சை மாவட்டத்தின் பேச்சுவழக்கு, நையாண்டி ஆகியவற்றை தன் கதைகளில் செழுமையாகப் பதிவு செய்தவர். தஞ்சை மண்ணின் பண்பாடும், காவிரி ஆற்றின் அழகும் இவரது எழுத்தில் அற்புதமாக இழையோடுகின்றன. காவிரி பாயும் பகுதிகளில் மேற்கொண்ட பயணத்தின் பதிவுகளாக, எழுத்தாளர் சிட்டியுடன் இணைந்து ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற நூலை எழுதினார்.

# கதைகளில் நுட்பமான மனித உணர்வுகளை வெளிப்படுத்தியவர். ‘சக்தி வைத்தியம்’ என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். இவரது எழுத்தில் இசைக்கு முக்கிய இடம் இருக்கும். இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர் என போற்றப்பட்டார்.

# தமிழ் இலக்கிய உலகின் தனித்துவம் வாய்ந்த படைப்பாளிகளில் ஒருவரும் ‘தி.ஜா.’ என இலக்கிய உலக நண்பர்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான தி.ஜானகிராமன் 1982-ம் ஆண்டு மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்