திருக்குறள் கதைகள் 8-9: மாவீரன் அலெக்ஸாந்தர்

By செய்திப்பிரிவு

கிமு.356-ல் பிறந்து 33 வருடமே வாழ்ந்து 13 வருடங்களில் மாசிடோனியாவில் தொடங்கி இந்தியா வரை போர் செய்து பல நாடுகளை வெற்றிகொண்டு மாவீரன் அலெக்ஸாந்தர் என்று பெயரெடுத்து சரித்திரத்தில் இடம் பிடித்தவன் அலெக்ஸாந்தர்.

மாசிடோனியாவைச் சேர்ந்த இரண்டாம் பிலிப்-க்கும், ஒலிம்பியாஸூக்கும் பிறந்தவன். தத்துவ ஆசான் அரிஸ்டாட்டிலிடம் பாடம் படித்தவன். தந்தை படுகொலை செய்யப்பட்டதும், தனது 20-வது வயதிலேயே பட்டத்துக்கு வந்தவன். எதிரிகளை கண்மூடி முழிப்பதற்குள் அடித்து நொறுக்கி கிரீஸ் நாட்டுக்குள்ளிருந்த மாசிடோனியா மன்னன் ஆக பிரகடனப்படுத்தினான்.

எவ்வளவோ சோதனைகள் வந்த போதும் பெர்ஷியாவில் தொடங்கி சிரியா, எகிப்து, ஈராக் என அனைத்து நாடுகளையும் 25 வயதுக்குள் வென்றான்.

அடுத்த 8 ஆண்டுகளில் பிரமிக்க வைக்கும் சக்கரவர்த்தியாக 11 ஆயிரம் மைல், 70 நகரங்கள், மூன்று கண்டங்கள், 20 லட்சம் சதுர மைல்களை கையகப்படுத்தினான்.

அலெக்ஸாந்தர்

மேற்கில் கிரீஸ், எகிப்து கடந்து, கிழக்கிலே இந்தியாவில் பஞ்சாப் வரை வாணிபம் தொடர இணைத்தான்.

நினைத்ததை முடித்தே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் அலெக்ஸாந்தரை 13 ஆண்டுகள் இடைவிடாத போரில் சோர்ந்துபோன படையினர் எதிர்த்து நின்று மேற்கொண்டு யுத்தம் செய்ய மறுத்தனர்.

4 அடி 10 அங்குல உயரமுள்ள அலெக்ஸாந்தர் 7 அடி உயரமுள்ள பஞ்சாப் மன்னன் புருஷோத்தமனின் 35 ஆயிரம் படை வீரர்களுடன் கடும்போர் புரிந்தான். சாதாரண சிப்பாய், குதிரை மேல் தோன்றுவது போல, 7 அடி உயர புருஷோத்தமன் அமர்ந்தால் யானையே சிறியதாகத் தெரியுமாம்.

அவனைத் தோற்கடித்து ‘உன்னை எப்படி நடத்த வேண்டும்’ என்று கேட்டான் அலெக்ஸாந்தர்.

‘என்னை ஒரு மன்னனாக நடத்த வேண்டும்’ என்றான் புருஷோத்தமன். அவனது பிரம்மாண்ட உருவம், கம்பீரம், போரிடும் ஆற்றல் கண்டு நெகிழ்ந்து அவனை நண்பனாக்கி, கை குலுக்கி, அவன் நாட்டையே திரும்பக் கொடுத்து ஆட்சி செய்யச் சொன்னான். கங்கை ஆற்றைக் கடந்து 80 ஆயிரம் குதிரைப்படை, 2 லட்சம் காலாட்படை, 8 ஆயிரம் ரதங்கள், 6 ஆயிரம் யானைப்படையை எதிர்கொண்டால் வங்காளத்தை பிடிக்கலாம் என்று அலெக்ஸாந்தர் சொன்னபோது -படைவீரர்கள், நாட்டை விட்டு வந்து நெடுங்காலம் ஆகி விட்டது- பெற்றோர்களை, மனைவிமார்களை, பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தி, தொடர்ந்து போர் செய்ய மறுத்தார்கள்.

ஈரான் பாலைவனத்தை கடுமையான வெயிலில் தாண்டி படைகள் திரும்பிப் போகும்போது நாலில் ஒரு பாகம் வீரர்கள் செத்து விழுந்தனர்.

கி.மு.323-ல், தனது 33 வயதில், கடுமையான விஷக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டு பாபிலோனாவில் இறந்தான் அலெக்ஸாந்தர்.

அலெக்ஸாந்தர்

நம் ஊர் நாட்டுப்புறக்கதைகள் போல, அலெக்ஸாந்தரைப் பற்றி ஒரு சுவையான கதை உலாவுகிறது.

மரணப்படுக்கையில் இருந்த அலெக்ஸாந்தர்- தனது நாட்டில் இருந்த நரம்பியல் நிபுணர், இருதய நிபுணர், கல்லீரல் நிபுணர், சிறுநீரக நிபுணர் என்று எல்லா ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களையும் வரச்சொல்லி- என் உடலை நீங்கள் அனைவரும் சேர்ந்துதான் சுடுகாட்டுக்குத் தூக்கிச் செல்ல வேண்டும். மரணத்தை எந்த மருத்துவரும் வெல்ல முடியாது என்று உலகுக்குத் தெரியட்டும்.

மாசிடோனியாவிலிருந்து எகிப்து பெர்ஷியா, ஈராக், ஆப்கானிஸ்தான், பஞ்சாப் வரை கொள்ளையடித்த வைரம், வைடூரியம், புஷ்பராகம், கோமேதகம் எல்லா கற்களையும் சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் இறைத்துக் கொண்டே போக வேண்டும். எந்த சொத்தும் மனிதனுடன் கடைசியில் வராது என்று உலகம் புரிந்து கொள்ளட்டும்.

மயானத்தில் குழி தோண்டி சவப்பெட்டியை உள்ளே இறக்கும் முன், அந்தப் பெட்டியின் பக்கவாட்டில் இரண்டு துவாரம் செய்து என் கைகள் இரண்டையும் வெளியே எடுத்து, நீட்டி உள்ளங்கையை மேல் நோக்கி விரித்து வைத்துப் புதையுங்கள்.

மாவீரன் அலெக்ஸாந்தர் உலகை வென்றவன் - வெறுங்கையோடு போனான் என்று உலக மக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்று சொன்னானாம். இது எந்த அளவு உண்மை என்று தெரியா விட்டாலும் சுவாரஸ்யமான கதை- அலெக்ஸாந்தர் மட்டுமல்ல; எந்த மனிதனுமே இந்த மண்ணில் நிரந்தரமாகத் தங்க முடியாது; நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமையுடையது இவ்வுலகம் என்கிறார் வள்ளுவர்:

‘நெருநல் உளன்ஒருவன் - இன்றுஇல்லை என்னும்

பெருமை உடைத்து இவ்வுலகு’

----

கதை-9 ஊருணி நீர்

மே மாத உச்சி வெயில் மண்டையைப் பிளக்கிறது. ஏரோட்ரோம் காட்டில் பரந்து விரிந்து காய்ந்த நிலப்பரப்பில், எறும்புகள் ஊர்வது போல சாரி,சாரியாக பெண்கள் குடத்துடன், செங்காட்டுத் தோட்டத்தை நோக்கி படையெடுக்கிறார்கள்.

மழை பொய்த்து விட்டது. பூமியில் விளைச்சல் ஏதும் இல்லை. தரிசு நிலமாக அவை மாறிக் கொண்டிருக்கின்றன. மாடு, கன்றுக்கு தீவனமும் இல்லை. குடிக்கத் தண்ணீருமில்லை. ஊரைச் சுற்றியிருந்த உப்புத் தண்ணீர் கிணறுகளும் வற்றி விட்டன. உக்கிரம் என்றால் அப்படியொரு உக்கிரம்.

பருவாய், கரடிவாய் கிராமப்பகுதி ஏழை எளிய மக்கள் சூலூர் சந்தைக்கு வறண்ட நாக்குடன், குடிக்கத் தண்ணீர் தேடியவாறு நடந்து வருகிறார்கள்.

எங்கள் வீட்டு வாசலில் ஒரு மொடாவில் நீர் மோரும் இன்னொரு பாத்திரத்தில் பானகமும் (வாழைப்பழம், புளி, நாட்டுச் சர்க்கரை கலந்த பானம்) ஊற்றி, வெளித்திண்ணையில் வைத்திருக்கிறார் அம்மா.

தாகசாந்தி செய்தவர்கள், ‘மகராசி நல்லா இருக்கோணும்!’ என்று வாழ்த்தி விட்டு செல்கிறார்கள்.

பாலைவனத்தின் நடுவே சோலை இருப்பது போல, விமான நிலைய ஓடு தளத்துக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் செங்காட்டுத் தோட்டத்தில் மட்டும் குடி தண்ணீர் கிடைக்கும்.

95 வயதில் பாட்டி

வெள்ளையர் ஆட்சி முடிந்ததும், கந்தசாமி அய்யா பூனா வரையில் நிலப்பட்டாவை எடுத்துப் போய், அரசுடன் சண்டை இட்டு, தன் நிலத்தை மீட்டு, விவசாயம் செய்ய கிணறு தோண்டினார். பன்னீர் போல நீர். திராட்சை ரசத்தின் சுவையில் கிணற்றில் பொங்கியது.

மின்சார வசதி கிடைக்காத காலம். ஆயில் எஞ்சின் மாட்டி தண்ணீர் இறைத்து 20 அடி நீளம், 10 அடி ஆழம், 5 அடி அகலமுள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பி, கிராமத்து மக்களுக்கு இலவசமாக வழங்குகிறார் பேச்சியம்மாள் என்ற புண்ணியவதி. அந்தக்கூட்டம் காசிகவுண்டன்புதூர் கிராமத்திலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் செங்காட்டுத் தோட்டத்துக்கு எறும்பு போல ஊறிக் கொண்டு தினமும் வருகிறது.

தண்ணீர் தீர்ந்தால் உடனே மோட்டார் போட்டு தொட்டியை நிரப்பி விடுவார்.

எங்கள் கிராமத்துக் கிணறுகளில் கசப்புத்தண்ணீர்தான் பெரும்பாலும் என்பதால் தினந்தோறும் குளிக்கும் பழக்கம் எங்களுக்கில்லை. எப்போதும் மேற்கிலிருந்து காற்று அடித்துக் கொண்டே இருப்பதால் வேலை செய்யும்போது கூட வேர்க்காது. ஆகவே ஊரிலிருந்து மருமகன் வந்தால் கூட, ‘மாப்பிள்ளை, கை கால் முகம் கழுவீட்டு வாங்க.

சாப்பிடலாம்!’ என்றுதான் அழைப்பார்களே தவிர -குளிச்சிட்டு வாங்க என்று சொல்ல மாட்டார்கள்.

அப்படியே குளித்தாலும் கசப்புத் தண்ணீரில் சோப்பு நுரைக்காது.

109 வயதில்

கிராமத்து மக்கள் எல்லோருமே வள்ளல்களாக இருப்பார்கள்; எந்த தோட்டத்துக்கு தண்ணீர்க் குடத்தோடு போனாலும் இலவசமாக நீர் தருவார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.

செங்காட்டுத் தோட்டத்துக்கு, வடக்கு திசையில் அணைத்தோட்டம் என்று ஒன்று இருந்தது. அந்தக்கிணற்றிலும் குடி தண்ணீர் இருந்தது. அங்கும் தொட்டியில் தண்ணீர் இருக்கும். ஆனாலும் யாராவது குடத்துடன் வருவதைப் பார்த்தால், வேலைக்காரர்கள் மாட்டுச்சாணத்தை எடுத்து அந்தத் தொட்டித் தண்ணீரில் கலந்து விடுவார்கள்.

இந்தப் புண்ணியவதி பேச்சியம்மாள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சலிக்காமல் கிராமத்து மக்களுக்கு தண்ணீர் தானம் செய்தார். கணவன் இறந்து 30 வருடங்கள் தாண்டியும் 109 வயது வரை வாழ்ந்தார். சூர்யா, ஜோதிகாவை வாழ்த்தி விட்டு அடுத்த ஆண்டுதான் இறைவனடி சேர்ந்தார்.

அந்த ஆண்டு நல்ல மழை பெய்து, குளங்குட்டைகளில் எல்லாம் நீர் நிரம்பி வழிந்தது. சிறு வயதுப் பிள்ளைகள், விறால் மீன் போல குட்டைத் தண்ணீரில் பாய்ந்து நீச்சலடித்து விளையாடினார்கள்.

சூர்யா ஜோதிகாவுடன்

குளத்து நீர் பொதுவானது. யாரும் தடையின்றி பயன்படுத்தலாம். குடி தண்ணீரை இலவசமாக ஊருக்கு கொடுத்த பேச்சியம்மாள் கொடை வள்ளல் அல்லவா?

குளத்து நீர் மக்களை எப்படி மகிழ்விக்கிறதோ, அது போல கொடை வள்ளலின் செல்வமும் மக்களை மகிழ்விக்கும் என்கிறார் வள்ளுவர்:

‘ஊருணி நீர்நிறைந் தற்றே -உலகு அவாம்

பேர் அறிவாளன் திரு’

-கதை பேசுவோம்
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

3 hours ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்