தனது 19-வது வயதில் 1936-ல் ‘சதிலீலாவதி’ படத்தில் முதன்முதல் அறிமுகமானார் அந்த இளைஞர். 17 நாள் தினமும் அதிகாலை வந்து ஸ்டுடியோவில் ஒப்பனை செய்து போலீஸ் உடைமாற்றி வெளியில் உள்ள மாமர நிழலில், வேர்த்து விறுவிறுக்க ‘ஷாட்’ வரும், அழைப்பார்கள் என்று காத்திருந்தார். அன்று முழுக்க யாரும் வந்து அழைக்கவில்லை. மறுநாளும், அதேபோல. நேரத்தில் ஸ்டுடியோ போய் தயாராகிக் காத்துக் கொண்டிருந்தார். யாரும் ஷாட் ரெடி வாங்க என்று அழைக்கவில்லை. இப்படியே ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, 17 நாட்கள் ஒப்பனையுடன் காத்திருந்தார். ‘சாரிப்பா இன்னிக்கு உனக்கு ஷாட் வரலே என்று ஒருவர் கூட சொல்லவில்லை.
17-வது நாள் எல்லிஸ் ஆர் டங்கன், ‘அந்த போலீஸ் வேஷம் போட்ட பையனைக் கூப்பிடு’ என்றார். வந்தான்.
‘சைக்கிள் இருக்கா?’
‘இல்லே சார்’
‘போலீஸ் வேஷத்துக்கு சைக்கிள் இல்லாம எப்படி? நாளை ஷூட் பண்ணலாம்!’ என்றார் டைரக்டர்.
‘இதோ வந்திட்டேன் சார்’ என்று அந்த இளைஞன் ஓடிப்போய், தெருவில் பெட்டிக்கடை ஒன்றின் முன்னால் இருந்த சைக்கிளை எடுத்து வந்து, ‘சார், நான் ரெடி!’ என்றான்.
படப்பிடிப்பு தொடங்கி இரண்டாவது ஷாட் எடுக்கும்போது சைக்கிளுக்குச் சொந்தக்காரன் செட்டுக்குள் வந்து, ‘என் சைக்கிளைத் திருடிட்டு வந்திட்டான் சார்!’ என்று புகார் கொடுக்க, பின் சமாதானமாகி படப்பிடிப்பு நடந்தது.
அந்த சைக்கிளுக்கு சொந்தக்காரர் பின்னாளில் ‘பராசக்தி’- படத்தின் டைரக்டர்கள் இரட்டையரில் ஒருவர் கிருஷ்ணன் (பஞ்சு). அந்த இளைஞர் எம்.ஜி.ஆர்.
இப்படி 10 ஆண்டுகள் துண்டு துண்டு வேஷங்களில் நடித்துப் போராடி உயிர் வாழ்ந்து 1946-ல் ஜூபிடர் பிக்சர்ஸ் ‘ராஜகுமாரி’யில் ஹீரோவாக நடிக்க சான்ஸ் கிடைத்தது. அப்படத்தின் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி. கதை, வசனம் கலைஞர் மு.கருணாநிதி. 1947-ல் படம் வெளியாயிற்று. பின்னர் அந்த ஹீரோ அந்தஸ்தைத் தக்கவைக்க 7 ஆண்டுகள் பெரும் போராட்டம். 18 படங்கள் வெளிவந்தன. அவற்றில் ‘மந்திரி குமாரி’, ‘மருதநாட்டு இளவரசி’ என இரண்டே வெற்றிப் படங்கள். அதுவும் படத்தின் டைட்டிலில் பெண்கள் பெயர்கள்.
ஆரம்ப நாட்களில் 2 ஜிப்பா, 2 வேஷ்டி, உள்ளாடைகள் இவற்றை இரவு நேரத்தில் இவரே துவைத்துப் போட்டு, காலையில் சொம்புக்குள் சுடுகரி போட்டு இஸ்திரி போட்டு அணிந்துகொண்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டிய வால்டாக்ஸ் ரோடு வீட்டிலிருந்து சூளைமேடு தாண்டி, கீழ்பாக்கத்திலுள்ள நியூ டோன் ஸ்டுடியோ நடந்தே சென்று வாய்ப்பு கேட்டார்.
இதெல்லாம் 1940-களில். ஹீரோ மாதிரி இருக்கேப்பா - உனக்கெப்படி சைடு வேஷம் குடுக்கறது என்று சொல்லி அனுப்பி விடுவார்கள். அன்று உச்சத்தில் இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர் செக்கச்செவேல் என்று மின்னுவார். எம்.ஜி.ஆருக்கும் அதே நிறம். அவருக்குப் பாட வரும். இவரால் பாட முடியாது. அதனால் பாகவதர் ஹீரோவாக நடித்த அசோக்குமாரில் ஹீரோவின் கண்களை சூடான கம்பிகளில் குத்திக் குருடாக்கும் வேடம் தந்தார்கள். அதிலும் எம்.ஜி.ஆர் உதவியாளரைப் பயன்படுத்தி அந்தக் கொடுஞ்செயலைச் செய்ய வைப்பார்.
நியுடோனிலிருந்து கோடம்பாக்கம் கோல்டன் ஸ்டுடியோவுக்குப் போக பஸ்ஸில் ஏறுவார். காலை சிற்றுண்டி, பஸ் கட்டணம் - எனக் கொண்டு வந்த 10 ரூபாயில் 3 ரூபாய் செலவாகியிருக்கும்.
அந்த நேரம் ஒருவர் வந்து, 'அண்ணே வேலு நாயர் நாடகக் கம்பெனியில் நீங்க சின்னப்பையனா இருந்தப்ப, நான் உங்க கூட நடிச்சேன் - 2 நாள் ஆச்சு சாப்பிட்டு' என்று சொன்னால் அந்த 7 ரூபாயில் 3 ரூபாய் தானம் செய்வார்.
முதல் மனைவி பார்கவி என்கிற தங்கமணி திருமணமாகி 2 வருடத்தில் இறந்துவிட்டார். அம்மா வற்புறுத்தலில் வசதியான வீட்டுப் பெண் சதானந்தவதியை இரண்டாவதாக மணக்கிறார். அவருக்கு டி.பி., வந்து விடுகிறது. 18 ஆண்டுகள் போராட்டம். வால்டாக்ஸ் ரோடிலிருந்து ரிக்சாவில் மனைவியை உட்கார வைத்து சுமார் 6 கி.மீ. தூரத்திலிருக்கும் மயிலாப்பூர் லஸ் கார்னரில் உள்ள டி.பி., டாக்டர் வாசுதேவராவிடம் சிகிச்சை பெற அழைத்து வருவார். கடைசிக் காலங்களில் படப்பிடிப்பிலிருந்து வந்து -சதாநந்தவதிக்கு தலைக்கு எண்ணெய் தேய்த்து விட்டு, அரப்பு, சீகக்காய் போட்டு தேய்த்துக் குளிப்பாட்டி, சாம்பிராணி புகை போட்டு, கூந்தலைக் காய வைத்து -சோறு ஊட்டி விட்டு, படுக்கைக்கு அழைத்துச் செல்வார்.
இந்த துன்பங்களுக்கெல்லாம் வெகுமதியாக 1954-ல் 'மலைக்கள்ளன்' வெளியாகி ஹிட் ஆனது. 6 மொழிகளில் பட்சிராஜா ஸ்ரீராமுலு நாயுடு படமாக்கினார். அடுத்து 'மதுரை வீரன்'. பின்பு 'அலிபாபா' வண்ணப்படம். 1958-ல் 'நாடோடி மன்னன்' சொந்தப் படம். அடுத்து 'ஆயிரத்தில் ஒருவன்' 'எங்க வீட்டுப் பிள்ளை' என வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்து அரசியலில் இறங்கி- தனிக்கட்சி தொடங்கி 1977-ல் கோட்டையைப் பிடித்து முதலமைச்சராக அமர்ந்தார்.
உலக அளவில் நடிகர் இனத்தில் நாடாண்ட முதல் நடிகர் எம்ஜிஆர்தான். அமெரிக்க அதிபரான ஹாலிவுட் நடிகர் ரொனால்டு ரீகன் கூட 1981-ல்தான் பதவியில் அமர்ந்தார். அதற்கு 4 ஆண்டுகள் முன்னரே நாடாளும் அதிகாரம் பெற்றவர் எம்ஜிஆர்.
பொன் எப்படி சுடச்சுட அதன் பிரகாசம் கூடுகிறதோ, அதுபோல துன்பத்தைத் தொடர்ந்து தாங்குபவன் ஒரு நாள் உச்சம் தொடுவான் என்பதைத்தான் வள்ளுவர்,
சுடச்சுடரும் பொன் போல் ஒளிவிடும் -துன்பம்
சுடச்சுட நோக்கிற் பவர்க்கு’- என்று சொல்கிறார்.
---
குறள் கதை 7- இனிது
பதினாறு வயதில் சென்னைக்குப் பயணமானபோது ஒரே சிந்தனை மிகப்பெரிய ஓவியனாக வேண்டும் என்பதுதான். வளர் இளம் பருவம் என்பது 13 வயது முதல் 19 வயது வரையிலுமான காலம். அந்தக் காலம் பருவ உணர்வுகள் றெக்கை கட்டி பட்டாம்பூச்சியாக பறக்கும் காலம். எல்லா பெண்களுமே அழகாக இருப்பதாகத் தோன்றும் காலம்.
கடவுளை ஒரு துரோகி என்று கூட நினைக்கும் காலம். பறவைகளில் ஆண் மயில் தோகை விரித்து ஆடும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். நாட்டுக்கோழி இனத்தில் சேவலின் பல வண்ண இறகுகள், அதன் கம்பீர நடை தனி அழகு. காங்கயம் காளையின் திமில், கருப்பும் வெள்ளையுமான அதன் உடம்பின் நிறம் அழகு. சிட்டுக்குருவியில் ஆண் குருவியின் நிறம் மாறுபட்ட அழகு. மான் இனத்தில் ஆண் மான்களின் கொம்புகளே, அதற்கு அழகு கூட்டுபவை. யானைக்குத் தந்தம்; ஆண் யானையைப் பிரித்துக் காட்டும்.
இப்படி பறவை, விலங்குகளில் அத்தனை வகையிலும் ஆண் இனத்தை அழகாகப் படைத்த கடவுள் மனித குலத்தில் பெண்ணைப் படைக்கும்போது மட்டும் தேவதையாக படைத்துத் தொலைத்து விட்டானே! எல்லா பெண்களிடமும் கண்களோ, மூக்கோ, பல் வரிசையோ, முன்நெற்றியோ, சிற்றிடையுடன் கூடிய சிக் சிக் நடையோ ஏதோ ஒன்று தூக்கத்தைத் தொலைக்க வைக்கிறதே என்று அங்கலாய்க்கும் வயது.
ஆனால், நானோ போய்ச் சேர வேண்டிய இலக்கு முக்கியம் என்று அந்தப் பதினாறு வயதிலேயே உடம்பில் ஒரு உறுப்பு உபாதை செய்தால் அதை வெட்டி எறிந்து விட வேண்டும் என்ற வைராக்கியத்தில் வாழ்ந்தேன்.
ஏழு ஆண்டு ஓவியம் தீட்டிய காலத்திலும், ஓவியக் கல்லூரியில் மாணவிகள், வகுப்புக்கு 4 பேர் இருந்தபோதிலும், பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால்தானே பற்றிக் கொள்ளும் என்று எட்டியே அவர்களோடு பழகினேன்.
சினிமாவில் நடிக்க நேர்ந்தது எதிர்பாராத ஒன்றுதான். ஜூனியர் ஆர்டிஸ்ட்போல ரூ.1000, ரூ.2500-க்கெல்லாம் தொடக்கத்தில் நடித்தவன். 'கந்தன் கருணை' படத்திற்கு என் சம்பளம் ரூ. 3000. அதை கம்பெனியில் தயாரிப்பு நிர்வாகி மூலம் கேட்டு வாங்குவதற்குள் நாக்கு தள்ளிவிட்டது.
தமிழ்க் கடவுள் முருகன் வேஷம். தமிழ்நாட்டின் முன்னணிக் கதாநாயகிகள் ரெண்டு பேர் ஜோடியாக நடிக்கறாங்க.
ஜெமினி ஸ்டுடியோ பக்கத்தில முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் மேல் நீங்கள் அமர்ந்திருக்கும் கட் அவுட் 40 அடிக்கு வைக்கப் போறாங்க. காசு கேக்கறியா, பைத்தியக்காரான்னு மேனேஜர் கேட்டார்.
இந்த கட்டமெல்லாம் தாண்டி 8 வருடப் போராட்டத்துக்குப் பிறகு விதவைத் தாய்க்கு மனநிம்மதி தர திருமணம் செய்துகொள்ள சம்மதித்தேன். சினிமாக்காரனுக்குப் பெண் தர மறுத்த கதை எல்லாம் முன்னரே சொல்லியாகி விட்டது.
1974-ல் 33 வயதில் திருமணம். அடுத்த வருடம் 1975 ஜூலை 23-ம் தேதி முதல் மகன் சூர்யா என்கிற சரவணன் பிறந்தான். முதல் குழந்தைக்கு விளையாடத் தோழர்கள் கிடைக்க மாட்டார்கள். அதனால் அந்தக் குழந்தையிடமே மழலை மொழி இருந்தது. ‘அப்பா! கொங்கு வண்டு மட்டு மேல ஏடி டமான்னு உண்டு டெட்டுப் போச்சு. - குரங்கு வந்து மரத்து மேல ஏறி டமால்னு உழுந்து செத்துப் போச்சு!’ உங்கம்மா பேரு என்ன? ‘-டட்டுமி’ -உங்க பாட்டி பேரு என்ன? ‘-பம்மிம்மா’- பழனியம்மாள் -உங்கப்பா பேரு என்ன? -‘ஜிம்மக்காளி’ -அடேய் உங்கப்பா பேரு என்ன? ‘அடாச் சொன்னே! ‘ஜிம்மக்காளீளீஈஈ..!’ -இப்ப நீ சாப்பிடறியே அதுக்குப் பேரு என்ன - ‘அப்புக் அப்புக் அப்புக்மா’ -அதாவது உப்புமா. இதைத்தான் வள்ளுவர் குழல், யாழ் இசையை விட இனிமையானது குழந்தைகள் மழலை என்கிறார்.
‘குழல் இனிது யாழ் இனிது என்ப -தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்’
கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago