கதை: 2 ‘இன்ஸ்பையர்’
குழந்தைக்கு 5 வயதாகும் வரை திடீரென்று ஓடி சுவற்றில் மோதிக் கொள்வான். தண்ணீர் குடத்தின் மீது இடறி வாசலில் விழுவான். எதிரெ நடந்து வருபவர் மீது மோதிக் கொள்வான். ஏதோ விளையாட்டுக்குச் செய்கிறான் என்று நினைத்தனர். டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது பிறவியிலேயே இக்குழந்தை பார்வை இழந்தவன் என்று தெரிந்து அதிர்ச்சியுற்றனர் பெற்றோர்.
லிட்டில் ஃபிளவர் பார்வையற்றோர் பள்ளியில் துவக்கக்கல்வி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அடையாறிலுள்ள செயிண்ட் லுாயிஸ் இன்ஸ்டிட்யூட்டில் படித்தான். மேல்நிலைப்படிப்பு ராயப்பேட்டையிலுள்ள வெங்கேடஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்..
படிக்கும் காலத்தில் சில ஆசிரியர்கள், அநாகரீகமாக, ஈவு இரக்கமின்றி பார்வைக்குறைபாட்டை கேலி செய்து நாம் ஏன் இந்த உலகத்தில் வாழ வேண்டும்; தற்கொலை செய்து கொள்ளலாமா என்று அந்த இளைஞன் நினைக்கும் அளவுக்கு அவமானப்படுத்தியிருக்கிறார்கள்.
தன் மேல் எறியும் ஒவ்வொரு செங்கல்லையும் படிக்கட்டுகளாக அடுக்கி, அந்த இளைஞன் பள்ளிப்படிப்பு முடித்து, லயோலா கல்லூரியில் சேர்ந்து பி.ஏ., எம்.ஏ., -முதல் வகுப்பில் -ஆங்கிலப் பாடத்தில் தேறினான். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பயிற்சியில் எம்.ஃபில் பட்டம் பெற்றான். தன்னம்பிக்கையூட்டும் விதமாக சுயமுன்னேற்ற உரைகள் நிகழ்த்துவதில் நிபுணன் ஆனான்.
தமிழ், தெலுங்கு, இந்திப் பாடல்கள், மனப்பாடமாக தன் இனிய குரலில் 3000 பாடல்களை மேடையில் தன் இசைக்குழுவை வைத்து பாடி கச்சேரி நடத்துவான். மனிதவள மேம்பாட்டு பயிற்சி 1000 பேருக்கு மேல் கொடுத்துள்ளான். அகில இந்திய அளவில் ஏன் வெளிநாடுகளிலும் அவர்கள் பணிபுரிகிறார்கள்.
இந்த இளைஞனின் பெயர் ‘இன்ஸ்பைரிங்’ இளங்கோ. பாண்டிச்சேரியில் ஆழ்கடலுள் சென்று ஸ்கூபா டைவிங் அடித்து சாதனை- பூனாவில், ஒற்றையாக (பாரா கிளைடிங்) பாராசூட்டில் பறந்து சாதனை- என்று வானம் எல்லை அல்ல, அதைத்தாண்டியும் சாதிக்க முடியும் என்று சொல்பவன்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நாள் ‘அப்பா! அம்மாவுக்கு உடம்புக்கு முடியாம ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கோம். உங்களைப் பாக்கணும்னு ஆசைப்படறாங்க!’ என்றான்.
என்னைப் பொருத்தவரை 40 வயதுள்ள எல்லா பிள்ளைகளும், பெண்களும், யார் பெற்ற பிள்ளைகளாக இருப்பினும் என்னை அப்பா என்றே அழைக்க வேண்டும் என்று வற்புறுத்துவேன். அதனால் இளங்கோவும் அப்படி அழைத்து செய்தி சொன்னான்.
‘அம்மா எந்த ஆஸ்பத்திரியில் இருக்காங்க?’ என்று கேட்டேன். புரசைவாக்கத்தில் உள்ள சின்ன மருத்துவமனை ஒன்றின் பெயர் சொன்னான்.
ஒரு மாலைநேரம் போனேன். அம்மாவுக்கும் உங்களுக்கும் நடுவில் நான் நின்று ஒரு போட்டோ எடுத்துக் கொள்கிறேன் என்றான். பின் ஐந்து நிமிடம் இருந்து விட்டு விடைபெற்றேன். மறுநாள் அம்மா இவ்வுலகை விட்டு பிரிந்த செய்தி சொன்னான்.
ஒரு வாரம் இடைவெளி விட்டு, சரி அம்மா போய் விட்டார்கள். உறவு என்று வேறு யார் இருக்கிறார்கள் என்றேன். ஒரே ஒரு அக்கா. அவளுக்கும் பார்வை குறைபாடு; என்னைப் போல என்றான். சரி இத்தனை நாள் அம்மா இருந்து பார்த்துக் கொண்டார். இனி உன்னைக் கவனிக்க ஒரு ஆள் வேண்டும். திருமணம் செய்து கொள் என்றேன்.
‘வெளையாடறீங்களாப்பா. எனக்கு யார் பொண்ணு குடுப்பாங்க? வயசு வேற 38 ஆகுது!’ என்றான். முதலில் நீ கல்யாணம் பண்ணிக்கத் தயார்ன்னு சொல்லு பொண்ணு தானா வரும்!’ என்றேன்.
ஆறு மாதம் கழித்து ஒரு நாள், ‘அப்பா பொண்ணு கிடைச்சிருச்சு!’ என்றான். இளங்கோவின் அபரிமிதமான ஆற்றல், வாழ்க்கை மீது அவனுக்கு உள்ள பிடிப்பு. மக்களைக் கவரும் அவன் காந்தப் பேச்சில் லதா என்ற பெண் மயங்கி விட்டாள். கையெடுத்து அந்தப் பெண்ணைக் கும்பிட்டேன். திருமண வரவேற்பு விழா. பாந்தியன் ரோடு ரவுண்டானா அருகில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. சைலேந்திரபாபு என்ற கண்ணியமான போலீஸ் அதிகாரியும், நானும் கலந்து கொண்டு வாழ்த்தி வந்தோம். ஒரு வருடத்தில் லதாவுக்கும், அவனுக்கும் மகன் பிறந்தான். ஆர்வன் வெற்றி இளங்கோ என்று பெயர் சூட்டினான். நானும் துணைவியாரும் அவன் வீட்டுக்குப் போய் குழந்தையை வாழ்த்தி விட்டு வந்தோம்.
ஒரு நாள், ‘டேய் தம்பி, உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?’ என்று கேட்டேன். ‘இல்லைப்பா!’ என்றான். அவனுடைய வலியை என்னால் உணர முடிந்தது.
சரி, அப்படி ஒருவேளை கடவுள் இருந்து உன் முன்னால் தோன்றி என்ன வரம் வேண்டும் கேள் என்றால் என்ன கேட்பாய் என்றேன்.
ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவன் சூரியனைப் பார்த்ததில்லை. சந்திரனைப் பார்த்ததில்லை. மலை எப்படி இருக்கும்; நதி எப்படி இருக்கும் தெரியாது. பூவின் வண்ணங்கள் தெரியாது. பறவைகள், விலங்குகளின் தோற்றம் அவன் கண்டதில்லை. அவன் உலகம் இருண்ட ஒரு கோளம். அவன் சொன்னான்:
‘பெரிசா ஒண்ணும் கேக்க மாட்டேன். முகம் பார்க்கிற கண்ணாடியக் குடு. 3 விநாடி எனக்கு கண்பார்வையை குடு. என் முகம் எப்படி இருக்குன்னு ஒரு தடவை பார்த்துக்கறேன் என்று கேட்பேன்!’ என்றான்.
அந்தக்கணம் நொறுங்கிப் போய் விட்டேன். எவ்வளவு சின்ன ஆசை. எவ்வளவு பெரிய ஏக்கம். இதோடு என் மகன் வாழ்ந்துதானே இத்தனையும் சாதித்திருக்கிறான் - இவனுக்கு வள்ளுவர் எழுதிய குறள்தான்:
‘தெய்வத்தான் ஆகாது எனினும்-முயற்சிதன்
மெய் வருத்தக் கூலி தரும்’
******
கதை: 3- ‘பார்த்துப் போ’
ஓவியக்கல்லூரியில் படிக்கும்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய மாணவர்கள் தங்க, ‘ஸ்லாடர்ஸ் ஹாஸ்டல்’ என்று புரசைவாக்கம் ரிதர்டன் ரோடில் ஒன்று இருந்தது. அது இலவச ஹாஸ்டல். சிறைச்சாலைக்குள் நான் பலமுறை சென்றிருக்கிறேன். அதெல்லாம் ஒன்றுமில்லை. பூலோக நரகத்தைப் பார்க்க விரும்பினால் இந்த ஆஸ்டலுக்குள் ஒரு முறை போய் வந்தால் போதும். 1961-ல் நிலமை அப்படி. இப்போது எப்படி இருக்கிறது என்று எனக்குத் தெரியாது.
நல்ல வேளை அதிலெல்லாம் தங்கும் அளவுக்கு எனக்கு பொருளாதார பிரச்சனை இல்லை. மாமாவின் கல்விக்கடன் மூலம் குறைந்த வாடகையில் வெளியே தங்கிக் கொள்ள முடிந்தது. செட்டிநாடு பகுதியில் இருந்து ஒரு நண்பன் ராம்குமார் என்னோடு படித்தான். திருவல்லிக்கேணி மேன்சன் ஒன்றில் குறைந்த வாடகையில் என்னைப் போல் தங்கியிருந்தான். அந்த மவுண்ட் ரோடு ஓட்டலில் பகல் சாப்பாட்டிற்கும், இரவு சாப்பாட்டிற்குமாகச் சேர்த்து 60 டிக்கெட் வாங்கினால் 28 ரூபாய். நண்பனும் பகல் உணவுக்கு அந்த ஓட்டலில் டிக்கட் வாங்கியிருந்தான்.
ஓவியக்கல்லூரியிலிருந்து சைக்கிளில் 1 மணிக்கு புறப்பட்டு என்ன வேகத்தில் வந்தாலும் ஓட்டல் வர 15 நிமிடம் ஆகி விடும். அதற்குள், மவுண்ட் ரோடு ரவுண்டானா சுற்றியுள்ள அலுவலகங்களில் வேலை செய்வோர் 5 நிமிடங்களில் ஓட்டல் வந்து டைனிங் ஹால் சீட்களை நிரப்பி விடுவார்கள். நாம் வந்து சேரும்போது 100 பேர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். சாம்பார் முடித்து ரசம் சாப்பிடும்போது, அடுத்த ரவுண்டு சாப்பிடுவோர் சேருக்கு பின்னால் நின்று கொண்டு மெதுவாக தங்களது டோக்கனை- அந்த சீட்டில் அமர்ந்து சாப்பிடுபவரின் இலைக்கு பக்கத்தில் ரிசர்வ் செய்ய வைப்பார்கள். அதுவே சாப்பிடுபவருக்கு கடுப்பாகி விடும். சில பேர் ஆள் ஒல்லியாக இருப்பான்; ஆனால் 3 தடவை சாதம் வாங்கி சாம்பாரையே ஊற்றி வெட்டிக் கொண்டிருப்பான். இனி எப்போது அவன் ரசத்துக்கு வந்து, மோர் சாதம் சாப்பிட்டு இலையை காலி பண்ணுவது?
சாப்பிட்டவர்கள் எழுந்ததும், அந்த எச்சிலை நாற்றம், அவற்றை பக்கெட்டில் எடுத்துப் போகும்போது டேபிளில் ஒழுகியிருக்கும் சாம்பார் + ரசம் + மோர் கலந்த வாடை, டேபிளைத் துடைக்க கிளீனர் பயன்படுத்தும் நாற்றம் பிடித்த டவல் இவற்றையெல்லாம் சகித்து 2-வது பந்தியில் பொறுமையாக உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிக்கும்போது மணி 2 ஆகி விடும். அரையும், குறையுமாக சாப்பிட்டு ஓட வேண்டும். இதில் சாம்பார் சாப்பிட்டு முடிந்ததும், உடனே சாதம் வராது. அதாவது சாதம் தீர்ந்து விட்டது. இதில் போலீஸ்காரர்கள் பாவம். காலையில் இருந்து மாலை வரை, நடு ரோட்டில் நின்று, நான்கு பக்கமும் இருந்து வரும் டிராஃபிக்கை ஒழுங்குபடுத்த வேண்டும். போராட்டம், ஊர்வலம் என்றால் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த, உச்சி வெயிலில் -குடித்த தண்ணீர் வியர்வையாக, காக்கி சட்டைக்குள் ஒழுக, நாக்கு வறண்டு, தொண்டை காய்ந்து, அசுரப்பசியில் அந்த ஓட்டலுக்கு இலவசமாக சாப்பிட வருவார்கள். அவர்கள் எப்படி சாப்பிடுவார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை.
ஆகவே சாம்பார் சாதம் முடிந்து காத்திருந்தால், அண்டாவில் கொதிக்கும் நீரில் அரிசியை மூட்டையிலிருந்து அப்படியே கொட்டுவார்கள். அந்த அரிசியை நீரில் போட்டு, பொட்டு நீக்கி, எலிப்புழுக்கை நீக்கி, பின்னர் அண்டாவில் கொட்ட அவகாசமிருக்காது. ஆகவே சாதத்தை எடுத்து வரும்போது அதில் மொடை வாசம் அடிக்கும். இதில் சோடா உப்பு வேறு கலப்பார்கள். சாப்பிட்டால் வயிற்று வலி நிச்சயம் வந்தே தீரும்.
6 ஆண்டுகள் இப்படி நரக வேதனை அனுபவித்து வேறு வழியில்லாமல், வீடுகளில் 10 பேருக்கு மட்டும் சமைக்கும் மெஸ்களில் சாப்பிட ஆரம்பித்தேன்.
சில நாள் கல்லூரி செல்லும் முன் 9 மணிக்கே பகல் உணவு அருந்திப் பார்த்தோம். வகுப்புக்குப் போனால் தூக்கம் தள்ளும். நின்று கொண்டே படம் வரைய சிரமமாக இருக்கும். இதையெல்லாம் என்னோடு அனுபவித்தவன் ராம்குமார்.
ஓவியக்கல்லூரியில் 3 ஆண்டுகள் முடித்து பாதியில் வெளியேறி, பத்திரிகை ஒன்றில் கெளரவ சம்பளத்தில் வேலை பார்த்தான். பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கினான். கல்யாணம் செய்தான். புரசைவாக்கத்தில் உள்ள நர்சிங் ஹோமில் தலைப்பிரசவத்திற்கு மனைவியைச் சேர்த்திருந்தான். அதிகாலை போன். சிசேரியன் செய்ய கையெழுத்துப் போட வேண்டும். பல்கூட விளக்காமல் காரை எடுத்து திருவல்லிக்கேணி, வாலாஜா ரோடு, அண்ணா ரவுண்டானா, காசினோ, கெயிட்டி தியேட்டர் தாண்டி கூவம் ஆற்றோரம் சிந்தாதிரிப் போட்டை குடிசைப்பகுதியைக் கடந்து சென்று கொண்டிருந்தான். சடாரென்று குடிசைகளுக்கு நடுவிலிருந்து ஒரு சைக்கிள் வந்து காரில் மோதி கீழே விழுந்தது. ‘மடையா. வீட்டில் சொல்லீட்டு வந்திட்டியாடா. ம்...ம்.. மவனே!’ என்று கெட்ட வார்த்தைகளில் திட்டிவிட்டான் ராம்குமார்.
ஒரு விநாடி தவறி இருந்தால் ஒரு உயிர் அநியாயமாக போயிருக்கும். சைக்கிளில் வந்தது 15 வயதுப் பையன். தினமணி, தினத்தந்தி, தினகரன், இந்து பேப்பர் வீடுவீடாகப் போடும் சிறுவன். இந்தக் காசை வைத்துத்தான் பள்ளிக்கூட சம்பளம் கட்ட வேண்டும். டாக்டர் அப்துல்கலாம் என் நினைவுக்கு வந்தார். அவரும் சிறுவனாக இருந்தபோது தெருவுக்குத் தெரு இப்படி பேப்பர் போட்டுத்தானே படித்தார்?
கீழே இறங்கிப் போய் தரையில் சிதறிய பேப்பர்களை பொறுக்கி, சைக்கிள் கேரியரில் வைத்து- ‘பார்த்துப் போ ராஜா!’ என்றான் ராம்குமார். இது போன்ற சூழ்நிலை எல்லோருக்கும் வரும். அப்போது இனிமையான வார்த்தைகள் இருக்கும்போது கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்- என்பதைத்தான் வள்ளுவர்...
‘இனிய உளவாக இன்னாத கூறல்- கனியிருப்ப
காய் கவர்ந் தற்று’ - என்று பாடியுள்ளார்.
---
கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago