உணர்வுகள் நிபந்தனைகளுக்குட்பட்டது

By ஈரோடு கதிர்

வீட்டருகில் இரண்டு தெரு தள்ளியிருக்கும் வீதி, ஆனால் அகலமான சாலை போன்றது. சமீபத்தில் ஒரு முற்பகல் நேரத்தில் சாலையினைப் பாதி அடைத்து பந்தல் போட்டுக் கொண்டிருந்தார்கள். திடீர் பந்தல் என்றவுடனே துக்க காரியமாக இருக்கலாமெனத் தோன்றியது. வெள்ளுடைகளில் குவிந்து கொண்டிருந்த கூட்டமும், அதை மரண வீடென்று வெகு எளிதாக உணர்த்தியது. வாகனங்களாலும் மனிதர்களாலும் அந்தப் பகுதியே நிரம்பிக்கிடந்தது.

எல்லா மரணங்களையும் நாம் ஒரே மனநிலையோடு ஒரே அளவான துக்கத்தோடு அணுக முடிவதில்லை. கல்யாணச்சாவுகளை, எதிர்பார்த்து காத்திருந்து நிகழும் மரணங்களை சற்றே நிறைவான, பயம் தணிந்த மனநிலையோடு அணுகுகிறோம். வாழவேண்டிய வயதில் எதிர்பாராத தருணத்தில் நிகழும் அகால மரணங்களை துக்கம் விசாரிக்கும் கூட்டம் வெகு பதட்டத்தோடு அணுகுகிறது. யாருடைய சாவாக இருந்தாலும் அகால மரணம் என்பது கூடுதல் துக்கத்தையும், ஒரு கணம் தன்னோடு பொருத்திப்பார்த்து தன் வாழ்க்கைக்கும் உத்திரவாதம் இல்லையென்ற அச்சத்தையும் கொடுத்துவிடுகின்றது.

கொளுத்தும் வெயில் மதியத்தில் அந்த வீட்டின் முன்பு நிரம்பியிருந்த கூட்டமும் பரபரப்பும் அது ஒரு எதிர்பாராத மரணம் என்பதாக எனக்கு உணர்த்தியது. அந்த இடத்தைக் கடக்கும்பொழுது யாரேனும் தெரிந்த முகங்கள் தெரிகின்றதா எனப் பார்ப்பதும், இறந்தது யாராக இருக்கும் என்று யோசிப்பதுமாக இருந்தேன். ஒருவேளை கூட்டம் குறைவாக இருந்திருந்தால் நானும் யாரோவென அதைப்பற்றி அவ்வளவாக யோசிக்காமலே கூட இருந்திருக்கலாம்.

கடந்து செல்லும் ஒருவீதியில் நிகழ்ந்த மரணம் குறித்து இத்தனை பேசவேண்டுமா எனத் தோன்றலாம். காரணம் இருக்கின்றது. அடுத்த சில நாட்களில் பந்தல் பிரிக்கப்பட்டது. பந்தல் பிரிக்கப்பட்ட தினத்திலிருந்தே மரணம் குறித்தான நினைவுகள் மறதிக்குள் மூழ்கத் துவங்கின.

இரண்டு நாட்கள்தான் கடந்திருக்கும். அதே வீட்டின் வாசலில் மீண்டும் பந்தல். கார்கள், கூட்டம், ஆத்மா வாகனம் என இன்னொரு மரணத்தை உணர்த்தியது. எந்தத் தொடர்புமற்றுக் கடந்து போகும் எனக்கே அயர்ச்சியாக இருந்தது. போனவாரம் பந்தல் போட்டிருந்தது உண்மையா அல்லது கனவா என நொடிப்பொழுதிற்கு சந்தேகம் வந்தது. அதே வீட்டில் அடுத்த மரணமா, அல்லது அந்த வீட்டின் பின்பக்கம், மாடியில் என வேறு வீடுகள் இருக்கின்றதா என்றும் சந்தேகம் வந்தது. யாரையாவது கேட்டுத் தெரிந்துகொண்டேயாக வேண்டுமென மனசு பரபரத்துத் தொலைந்தது. எத்தனையோ வீதிகளில் எத்தனை சாவு வீட்டு பந்தல்களைப் பார்த்தாலும், இரண்டு நாள் இடைவெளியில் மீண்டும் போடப்பட்ட பந்தல் மனதை விட்டு மறையமாட்டேன் என்கிறது.

மரணம் குறித்து எவ்விதமாய் யோசித்தாலும் தலைக்குமேல் போதிமரமொன்று கிளை விரிப்பதுவும், மனதிற்குள் பயமேற்படுவதும் ஒருங்கே நிகழ்ந்துவிடுகின்றன. மரணத்திற்கு பின்னான வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை அறிய முடியாததே மரணம் குறித்த அத்தனை பயங்களுக்கும் காரணமென்று நினைக்கிறேன். அந்த பயத்தின் பொருட்டே மரணத்தைக் கண்டு மருண்டோடுகிறோம். அது வந்துவிடக்கூடாதென்று எதையெதையோ பற்றுகிறோம். எத்தனை சாமிகளை வேண்டுகிறோம்.

தனக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களின் மரணத்தை அது நிகழும்போது உடனிருப்பதும், நிகழ்ந்த சில நிமிடங்களில் உணர்வதுமென்பதும்தான் உலகின் ஆகக் கடும் கொடுமையாக இருக்கமுடியும்.

உயிர் பிரிந்த கணத்தில் உடலிலிருந்து சூடு வெளியேறி குளிர் ஆக்கிரமிக்கும் தருணம் அச்சமும், அவ்ளோதானாவெனும் சந்தேகமும் நிரம்பியது. கண்ணெதிரே மரணம் நிகழ்ந்த சில நிமிடங்களில் அந்த உடலை ஏந்தும் ஒரு அவல நிலைக்கு ஒருமுறை தள்ளப்பட்டேன். நான் கைகளில் ஏந்திக் கிடத்தியபோது ’கொரட்’ என்ற சப்தம் மட்டும் ஒரேயொருமுறை மெலிதாய்க் கேட்டது. விரல்களை மடக்கியவாறு நெஞ்சில் கை வைத்துவிட்டு, உள்ளங்கை வைக்கும்போது உடலின் கதகதப்பு அப்படியே உள்ளங்கையில் ஒட்டிக்கொண்டது. உடல் குளிரத் துவங்கியது. உள்ளங்கை சுடத் தொடங்கியது. அந்தச் சூடு அவ்வளவு எளிதில் என்னைவிட்டுப் போய்விடவில்லை.

காலம் கொஞ்சம் கொஞ்சமாக கையை குளிரச்செய்துகொண்டிருந்த நாட்களில் அது அக்னி வெயிலின் ஒரு மதியப்பொழுது. இலக்கற்ற அரட்டையும், எதுவரையிலெனத் தீர்மானிக்காத மென் நடையுமாய் இரண்டு நண்பர்களுடன் அந்த ஏரிக்கரை மீது ஊர்ந்து கொண்டிருக்கிறேன்.

பெயர் சொல்லத் தெரியா மரம் செடி கொடிகள் இரு பக்கத்திலிருந்தும் கூடி கூடாரம் அமைத்திருக்கின்றது. இருபக்கங்களிலிருந்தும் வளைந்த மரங்கள் கூட்டு வண்டியின் கூரைபோல் குனிந்திருக்கின்றன. காலம் காலமாய் விழுந்த தழை இழை காய் கனி பூ என பாதையெங்கும் மெதுமெதுப்பாய். முள் கிடக்கும் சாத்தியங்கள் ஏராளம். மொத்தமான செருப்பு என்பதால் பயமிருக்கவில்லை. அவ்வளவாக நிலத்தைக் கவனித்து எட்டு வைக்கவில்லை. அப்போது ஏனோ பார்க்கத் தோன்றியது. நடக்கும் வழியில் குருவிக்குஞ்சொன்று கீழே கிடந்தது. இறக்கை முளைக்கா பச்சிளம் குருவிக்குஞ்சு. கண்ணில் பாயும் அதன் மென்மை தொடுவதற்கே பயத்தைத் தருகிறது.

என்ன செய்ய? அப்படியே விட்டுவிடவா? எடுத்து ஓரமாக வைக்கவா? எதாவது கிளையில் வைக்கவா? எப்படி இங்கு வந்திருக்கும்? கேள்விகளோடு எடுத்து கையில் ஏந்துகிறேன். அதுவரை உணரா ஒரு சூடு. அது வெயிலின் சூடல்ல. நிழலில்தான் கிடந்தது. சூடு உள்ளங்கையில் கொதிப்பாய் ஊடுருவுகிறது. ஒருபோதும் நான் உணர்ந்திராத சூடு. அந்த குருவிக்குஞ்சின் நடுக்கம் போலிருக்கும் துடிப்பு உயிரெங்கும் பரவுகிறது.

சிறுவனாய் இருந்த காலத்தில் மரம் ஏறி கூடுகளிலிருக்கும் முட்டை, குஞ்சுகளைக்கூட பார்த்ததாக, எடுத்ததாக ஞாபகம். சமீபத்தில்… சமீபத்தில் என்ன சமீபத்தில், 20-30 ஆண்டுகளாக இப்படி ஒரு குஞ்சைக்கூட பார்த்ததில்லை. சுற்றிலும் பார்த்துவிட்டு மேலே அண்ணாந்து பார்த்தால் தலைக்கு மேலே ஒரு குருவிக்கூடு தெரிகிறது. கூட்டிலிருந்து விழுந்திருக்கலாம் என்பது புரிகிறது. "கூடு இருக்கு, கூட்லையே வெச்சுறலாமா?" எனக் கேட்க, கண்ணன் கடுமையாக மறுக்கிறார்.

”அவ்ளோதான்… இனிமே தாய்க்குருவி அதை சேர்க்காது”

ஏனென்று ஆராயவோ விவாதிக்கவோ அப்போது தோணவில்லை, நேரமுமில்லை.

“என்னவோ நடக்கட்டும்யா, கூட்ல வெச்சுடுவோம். சேர்த்தா சேர்த்துக்கட்டும்… இல்லைனாலும் சரி.. இப்படியே விடவோ, ஓரமாப்போடவோ வேணாம். கூட்ல வெச்சிடுவோம்” எனச் சொல்லிவிட்டு எட்டி அந்தக் கிளையைப் பிடிக்க முயற்சிக்கிறேன். எட்டவில்லை. கண்ணனைக் கை நீட்டச்சொல்லி அவர் கையில் கிடத்திவிட்டு, நாலெட்டு ஓடிவந்து குதித்து கிளையைப் பிடிக்கிறேன். கூடு விழுந்துவிடக்கூடாதே என்றும் பயம். கிளை ஆடியதில் தாய்க்குருவி பறந்தோடுகிறது. அப்படியே பதமாக வளைத்து வசமான இடம் வந்ததும் கூட்டில் குருவிக்குஞ்சை விருகிறோம். கூட்டில் இன்னொரு குஞ்சும் இருப்பது தெரிகிறது. சேர்த்துக் கொண்டு கூட்டில் கூட்டாய் வாழ்வதும், கூடுவிட்டு பறந்தேகுவதும் இனி அவர்கள் பாடு. எங்கு துடைத்தாலும் அந்த குருவிக் குஞ்சின் சூடு உள்ளங்கைவிட்டுப் போகவேயில்லை.

குருவிக்குஞ்சுக்காகத் துடித்த என் பெருங்கருணை குறித்து எனக்கே ஆச்சரியமாக இருக்கின்றது. அதே தினத்தில் மதிய சமையலுக்காக வீட்டில் கொடுத்துவிட்டு வந்த கோழிக்கறியிலிருந்து வெளியேறியிருக்கும் உயிர் பற்றி மறந்துவிடும் மனநிலை வாய்த்தது குறித்தெல்லாம் ஆச்சரியப்படவேயில்லை நான்.

ஈரோடு கதிர்- தொடர்புக்கு kathir7@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

18 hours ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

மேலும்