திரைப்படச்சோலை 47: இனி ஒரு சுதந்திரம்

By செய்திப்பிரிவு

நாட்டு விடுதலைக்காகப் பல்லாயிரக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். திருப்பூர் குமரன், குண்டடிபட்டு சாய்ந்தாலும் கொடியைத் தன் கையிலிருந்து விடவில்லை. அந்தக் குமரனின் போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கிக் குண்டை முழங்கால் பகுதியில் வாங்கி, உயிர் தப்பி ஊனமாகிப் போன தியாகி சுந்தரமூர்த்தி என்ற கற்பனைக் கதாபாத்திரத்தின் கதை.

சுதந்திரமடைந்தபின் தாமதமாகத் திருமணம் செய்து மிகத்தாமதமாக ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொடுத்துவிட்டு மனைவி இறந்து விடுகிறாள். அணைக்கட்டு கட்டப்போகிறோம் என்று சொல்லி அரசாங்கம் தியாகியின் 15 ஏக்கர் நிலத்தை எடுத்துக்கொண்டது. கலெக்டரிடம் கையெழுத்தாகி பணம் கைக்கு வரும் முன்பு, அந்த ஃபைல் ஆபீஸில் மாயமாய்ப் போய்விட்டது. அதைத் தேடித் தரும்படி கேட்டு கலெக்டர் ஆபீஸுக்கு வந்து போனதிலேயே பஸ் சார்ஜ் ரூ.2 ஆயிரம் ஆகிவிட்டது. இன்னும் ஃபைல் கிடைத்தபாடில்லை.

ஹவாய் செருப்பின் முன்பக்க வார் அறுந்து போனதால் செருப்பில் வாரைக் கோத்து அடிப்பக்கம் பின்னூசி குத்திப் பயன்படுத்துகிறார் தியாகி.

அன்றைக்கு ஒரு இளைஞர் ரிக்சா ஓட்டி வந்தான். அதில் ஏறி கலெக்டர் ஆபீஸ் போய் இறங்கினார். 5 நிமிடத்தில் அதே இளைஞன் உடைமாற்றி எதிரே வந்தான். எம்.ஏ., படிச்சிட்டு வேலை தேடி அலையறேன். இன்னிக்கு கலெக்டர் ஆபீஸில் குமாஸ்தா வேலைக்கு இன்டர்வியூன்னு சொன்னாங்க. போறதே போறோம்; ஒரு சவாரியை ஏன் விடணும்னு ரிக்சாவில் உங்களை ஏத்திக்கிட்டு வந்தேன். பட்டதாரிக்கு இப்ப ரிக்சாதான் சோறு போடுது என்றான்.

கலெக்டர் ஆபீஸ் வாசலில்

உணர்ச்சிவசப்பட்ட தியாகி அந்த இளைஞன் ராஜாவைப் பக்கத்திலிருந்த அரச மரத்துப் பிள்ளையார் அருகே அழைத்துச் சென்று திருஷ்டி சுத்தி தேங்காய் உடைப்பார்.

உனக்கு சீக்கிரமே வேலை கிடைச்சு உன் புண்ணியத்திலாவது அந்த ஃபைலை கண்டுபிடிச்சு கலெக்டர் கையெழுத்து வாங்கிக் குடு. பணம் கிடைச்சவுடனே சீக்கிரம் எம் பொண்ணு கண்ணம்மாவுக்கு கல்யாணத்தைப் பண்ணி வச்சிட்டு, காந்தி கிராமம் போய் கடைசி மூச்சு வரைக்கும் கைராட்டை நூற்றே காலந்தள்ளுவேன்!’ என்பார்.

ஆனால், சந்தர்ப்பவாதியான, நேர்மை என்றால் என்னவிலை என்று கேட்கும் ராஜா, குமாஸ்தா வேலை கிடைத்தவுடனே லஞ்சம் வாங்கத்துணிந்து விடுவான். அதுவும் தியாகியிடத்திலேயே. சம்சாரம் செத்துப் போனதுக்கப்புறம், தாலிய வித்து வந்த காசில, மளிகைக்கடை பாக்கி போக 90 ரூபாதான் இருக்கு என்று கொடுப்பார். பரவாயில்லை என்று அதையும் வாங்கிக் கொள்வான் ராஜா.

இப்படி அப்பாவி மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வாங்கிய லஞ்சப் பணத்தை அமைச்சருக்குக் கொடுத்து ரெவின்யூ இன்ஸ்பபெக்டராக பதவி உயர்வு பெறுவான்.

கவர்மென்ட் தனக்குச் சேர வேண்டிய பணம் ரூபாய் 40 ஆயிரத்தை வாங்க சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முத்துக்காளையுடன் சேர்ந்து ஆரம்பிப்பார் தியாகி.

ரெவின்யூ ஆபிஸரான ராஜா நாளைக்கு மினிஸ்டர் வர்றாரு. அதுக்குள்ளே பந்தலைப் பிரிச்சுட்டு இடத்தை காலி பண்ணச் சொல் என்று போலீஸ் சூப்பிரண்ட்டிடம் சொல்வான்.

உண்ணாவிரதம் இருந்த கூட்டம் அசையவில்லை. தடியடியில் இறங்குகிறது போலீஸ். அமைதியான முறையில் போராடிய தியாகி முதுகில் ஐபிஸ் அதிகாரி லத்தி பட்டதும் பொங்கி எழுந்துவிடுவான் ஒரு கான்ஸ்டபிள். தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் குடிகார அப்பனுக்கு மகனாகப் பிறந்த அவனைப் படிக்க வைத்து போலீஸில் சேர்த்தவர் தியாகி.

சுற்றிலுமிருந்த போலீஸைத் துவைத்துக் காயப்போட்டு விடுவான் கான்ஸ்டபிள். சார் நீங்களும் ஹரிஜன். நானும் ஹரிஜன். இந்த மாதிரி தியாகிகள் நமக்குச் சுதந்திரம் வாங்கிக் குடுக்கலேன்னா, ஏதாவது ஒரு குப்பை மேட்டு பக்கத்தில கோமணத்தைக் கட்டிட்டு நாமெல்லாம் எருமை மேச்சிட்டிருப்போம்.

நயவஞ்சகன் வலையில்

ஒரு சுதந்திரப் போராட்ட த் தியாகியை ஒரு சாதாரண ஐபிஎஸ் அதிகாரி அடிக்கலாம்னா, ஒரு சாதாரண கான்ஸ்டபிள் அவரை அடிச்சா தப்பில்லே. இந்த காக்கி உடை அதுக்கு எடைஞ்சலா இருந்தா இப்பவே கழட்டி வீசிடறேன் என்று யூனிபார்மைக் கழட்டி எறிந்துவிட்டு பட்டாபட்டி டிராயரோடு தியாகி காலைத் தொட்டு கும்பிட்டுத் திரும்பிப் பார்க்காமல் போவான்.

நாகேஷுக்கு 'திருவிளையாடல்' தருமி வேஷம் போல சத்யராஜ் இந்த வேடத்தில் கலக்கி விடுவார். முத்துக்காளை பூமி மேட்டுல இருக்கு. கிணத்தில் வற்றாத தண்ணீர். நல்ல விவசாயம். அதைப் பார்த்து பொறாமைப்பட்ட பண்ணையார் -கீழ்மட்டத்தில் உள்ள பூமியை விலைக்கு வாங்கி அதில் போர் போட்டு முத்துக்காளை கிணற்றுக்குப் போக வேண்டிய நீரோட்டம் இவர் கிணற்றுக்கு வரும்படி செய்துவிடுவார்.

முத்துக்காளை கிணறு வற்றி விடும். பண்ணையாரிடம் வந்து கிணத்து தண்ணிக்கு காசு தர்றேன். என் பூமிக்கும் கொஞ்சம் தண்ணி விடுங்க என்று கேட்பான். பேசாம உங்கப்பா மாதிரி பூமிய எனக்கு குடுத்திட்டு கிளம்பு என்பார்.

நிலத்தடி நீர் மட்டம் பார்க்கும் தியாகியை அழைத்துக் கிணற்றுக்குள் இறங்கி- எந்த இடத்தில் நீரோட்டம் உள்ளது என்று பார்த்து சொல்லச் சொல்வான் முத்துக்காளை.

தியாகி சொன்ன இடத்தில் 3 அடிக்கு குழியடித்து வெடிமருந்து வைத்து வெடிக்கச் செய்வான். துரதிஷ்டவசமாக அது வெடிக்கும்போது கிணற்றுக்குள் அகப்பட்டு அவன் உடம்பிலிருந்து செந்நீரும், கிணற்றிலிருந்து தண்ணீரும் கலந்து ஓட அநியாயமாக பலியாகி விடுவான்.

லஞ்சம் கொடுத்துக் கொடுத்தே கலெக்டராகப் பதவி உயர்வு பெற்ற பிறகும் தான் ஒரு சாதாரண பியூன் என்று சொல்லி ஏமாற்றி தியாகி மகளை மயக்கி, தனிமையில் தாலிகட்டி, அவளைத் தாய்மை அடையச் செய்து விடுவான் ராஜா.

மண்ணுக்குள்ள இருக்கிற நீரைக் கண்டுபிடிக்க முடிஞ்ச என்னால என் பொண்ணு மனசுக்குள்ளே என்ன இருக்குன்னு கண்டுபிடிக்க முடியலியே என்று வேதனைப்பட்டு, மகள் கண்ணம்மாவை கலெக்டர் ஆபீஸ் அழைத்துச் சென்று அந்த பியூனைக் காட்டச் சொல்வான்.

தூண்டில் அகப்பட்ட மீன்

பியூன் வேடம் போட்டவன் இப்போது கலெக்டராகி, அவன் அறையில் பதுங்கிக் கொண்டிருப்பான். இந்த கலெக்டர்தான் தன் மகளைக் கெடுத்தவன் என்று அறியாமல் அவரிடமே போய் பியூனைப் பற்றி புகார் கொடுப்பார் தியாகி.

நடந்தது நடந்து போச்சு. யாருக்கும் தெரியாமக் கருவைக் கலைச்சிட்டு, ஒரு நல்ல பையனா பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சிடலாம். நானே ஒரு பையனைப் பார்க்கிறேன் என்பான் கயவன் ராஜா.

மகதான் தப்பு பண்ணிட்டா என்னையும் தப்புப் பண்ணச்சொல்றியா, சாகற வரைக்கும் மனசாட்சியோட இருந்திட்டுப் போறேன் என்பார் தியாகி.

ஊரை அடித்து உலையில் போட்ட பண்ணையாருக்கு, தியாகி மகள் கண்ணம்மாவைக் ராஜா கெடுத்து குழந்தைக்குத் தாயாக வைத்தது தெரிந்தும், சிறுவயதில் இதை விட அதிக ஆட்டம் போட்டவன் நான். என் மகளை நீ கல்யாணம் பண்ணிக்க என்று பத்திரிக்கை அடித்து விடுவான்.

பிரசவ ஆஸ்பத்திரியில் பியூன் என்று சொல்லி தன்னை ஏமாற்றிய ராஜா தன் தோழியை மணக்கப் போகிறான் என்று அழைப்பிதழ் பார்த்து அதிர்ச்சியடைந்த கண்ணம்மா, குழந்தையோடு கல்யாண மண்டபத்திற்கு ஓடி ராஜாவின் காலடியில் குழந்தையை வைக்கிறாள்.

‘தகப்பன் பேர் தெரியாத குழந்தையைக் கையில எடுத்திட்டு தோழி கல்யாணத்துக்கு வந்திருக்கிற நீ உண்மையிலேயே தைரியசாலி நீ யாரும்மா?’ என்றான். மனசாட்சியை சாட்சியா வச்சு என் கழுத்தில தாலி கட்டிட்டு இப்ப நான் யாருன்னு கேக்கறியா?

இந்தக் குழந்தைக்கு ஒரிஜினல் அப்பன் இருப்பான்; அவங்கிட்ட போயி இதெல்லாம் கேளு- என்று ஈவிரக்கமில்லாமல் சொல்ல, மானத்தை இழந்து வாழ்வதை விட சாவதே மேல் என்று மரத்தில் தூக்கு மாட்டி உயிரை மாய்த்துக் கொள்கிறாள் கண்ணம்மா.

கலெக்டர் வீடு, சிறுவன் கையில் குழந்தை. தாத்தா நியாயம் கேட்கப் போகிறார்.

‘என்னய்யா வேணும்?’

‘இந்தக் குழந்தைக்கு அப்பன் வேணும்; அதுக்கு ஒரு வழி சொல்லு!’

‘நாட்டில் நிறைய அனாதை இல்லங்கள் இருக்கு. அங்க போங்க!’’

‘அப்பனும் செத்துப் போனாத்தான்டா குழந்தை அனாதையாகும். நீதான் குத்துக்கல்லு மாதிரி உசிரோட இருக்கியே!’

‘முன்ன பின்ன தெரியாத ஒருத்தன் படுன்னதும், படுத்திட்டா. அவ குழந்தைக்கு நான் எப்படி தகப்பனாக முடியும்? டோண்ட் வேஸ்ட் மை டைம்!’ என்று உள்ளே போக முயன்றான்.

ராஜா

அவனை இழுத்து வாயிற்படியில் தள்ளிக் குரல் வளையை நசுக்க தியாகி முயல, போலீஸ் அவரை அடித்து துவம்சம் செய்கிறது. சிறுவன் உயிர்போக கத்துகிறான். -‘தாத்தாவை அடிக்காதீங்க!’ என்று. ஒரு கட்டத்தில், ‘அந்த ஆளை உட்டுடுங்கப்பா பாவம் பைத்தியம். பொண்ணு தறுதலையாயிட்டா. இவன் பைத்தியமாயிட்டான்!’ என்று சொல்லக் கேட்ட வேகத்தில், கண் இமைக்கும் நேரத்தில் கான்ஸ்டபிள் துப்பாக்கியைப் பறித்து கலெக்டர் உடலைத் துளைத்து விடுகிறார் தியாகி.

ஒரு மூட்டைப் பூச்சியை கொல்றதைக்கூட பாவம்னு நினைக்கிற என்னைப் போய் கொலை செய்ய வச்சுட்டியேடா. 40 வருஷமா ரத்தத்தில் ஊறிப் போன ஒரு தத்துவத்தை நாலே வருஷப் பழக்கத்தில் நாசம் பண்ணிட்டியேடா’ என்று சரிகிறார். தியாகி - சிவகுமார், கலெக்டர் -ராஜா, கண்ணம்மா -ரேகா, முத்துக்காளை -வாகை சந்திரசேகர், அரசியல்வாதி -வினுசக்கரவர்த்தி.

நீ உயிரோடு இருக்கக் கூடாது

படம் தயாரானதும் சிவாஜிக்குத் திரையிட்டுக் காட்டினோம்.‘கப்பலோட்டிய தமிழன்’னு ஒரு படத்தில் நடிச்சேன். வெள்ளைக்காரனை எதிர்த்து 2 கப்பலோட்டின மனிதன் கடைசில பெரம்பூர் பக்கம் பெட்ரோல் வண்டி தள்ளி பொழைச்சாராம்.

‘அந்த விடுதலைப் போராட்ட தியாகி வேடத்தில் நடிச்சேன். தமிழ்நாட்டு ஜனங்க பட்டை நாமத்தை என் நெத்தியில் போட்டுட்டாங்க... நீ சுதந்திர போராட்ட தியாகியா நடிச்சிருக்கே. நாமக்கட்டிய கொழைச்சிட்டு இருக்காங்க. தயாரா இரு!’ என்றார். அவர் வாக்கு பொய்யாகுமா?

---

அனுபவிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்