எம்ஜிஆர் 100 | 10 - எம்ஜிஆரும் இந்திரா காந்தியும்

By ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. சென்ற ரயில் வழி நெடுக மக்களின் உற்சாகமான வரவேற்பு காரணமாக, 10 மணி நேரம் தாமதமாக மதுரை சென்றது என்றால் இப்போது நம்ப முடிகிறதா? ஆனால், 43 ஆண்டுகளுக்கு முன் உண்மையில் அப்படிப்பட்ட அதிசயம் நடந்தது. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1973-ம் ஆண்டில் அப்போது மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து மாநில அரசு மீது புகார் கொடுக்க முடிவு செய்தார்.

அதற்காக, சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரைக்கு கிளம்பினார். இரவு நேரம் என்றாலும் வழியெங்கும் மக்கள் காத்திருந்தனர். திருச்சியில் இருந்து ஆங்காங்கே மக்கள் வெள்ளம் ரயிலை வழியில் நிறுத்தியது. எம்.ஜி.ஆரும் தான் இருந்த ரயில் பெட்டியின் கதவைத் திறந்து மக்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் ரயிலுடன் மக்கள் ஓட்டமும் நடையுமாக பக்கவாட்டிலும் ரயிலுக்கு முன்னாலும் செல்ல ஆரம்பித்து விட்டனர். மக்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்று இன்ஜின் டிரைவரும் ரயிலை மெதுவாக இயக்க ஆரம்பித்தார். ரயில் மரவட்டையாக ஊர்ந்து சென்றது.

துரை வந்த இந்திரா காந்தியோ ஏற்கெனவே, திட்டமிட்டபடி எம்.ஜி.ஆரை சந்தித்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட வேண்டும். ரயில் ஊர்ந்து சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் இந்திரா காந்தியை சந்திக்க முடியாது என்பதால் எம்.ஜி.ஆர். ஒரு முடிவுக்கு வந்தார். கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து காரில் மதுரை சென்று இந்திரா காந்தியை சரியான நேரத்தில் சந்திக்க திட்டமிட்டார்.

கொடைரோடு ஸ்டேஷனில் இறங்கி காரில் செல்ல ஏற்பாடுகள் நடக்கும்போது, விஷயம் அறிந்து ரயில் இன்ஜின் டிரைவர் பதறிப் போய்விட் டார். டிரைவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் நேரே எம்.ஜி.ஆர். இருக்கும் ரயில் பெட்டிக்கு வந்தனர். ‘‘கொடைரோடில் இருந்து மதுரை வரை வழி நெடுக மக்கள் உங்களுக்காக காத்திருக்கின்ற னர். நீங்கள் ரயிலில் இல்லையென்றால் நிலைமை விபரீதமாகிவிடும். நீங்கள் ரயிலிலேயே வருவது தான் ரயிலுக்கு பாதுகாப்பு. எனவே, தயவு செய்து ரயிலிலேயே பயணத்தை தொடருங்கள்’ என்று கேட்டுக் கொண்டனர்.

நிலைமையை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். ரயிலிலேயே பயணத்தை தொடர முடிவு செய் தார். ஆனாலும், அதிமுக கட்சியின் முக்கியஸ்தர் களை இந்திரா காந்தியிடம் அனுப்பி வரமுடியாத நிலைமையையும் அவரிடம் விளக்கச் சொன் னார். வழியெங்கும் மக்களின் ஆரவார வரவேற்பால் காலை 7 மணிக்கு மதுரைக்கு வரவேண்டிய ரயில், மாலை 5 மணிக்கு வந்தது.

எம்.ஜி.ஆருக்கு நேரு குடும்பத்தின் மீதும் இந்திரா காந்தியின் மீதும் மிகுந்த அபிமானம் உண்டு. இந்திராவும் எம்.ஜி.ஆருக்கு மதிப்பு அளித்து வந்தார். 1977- ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக - இந்திரா காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டது. மதுரையில் நடந்த பிரம்மாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் எம்.ஜி.ஆரும். இந்திரா காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர்.

அரசியல் காற்று அவ்வப்போது திசை மாறுவதால் எதிரணியில் இருக்க வேண்டி இருந்தாலும் இருவரும் பரஸ்பரம் கொண்ட அன்பும் மரியாதையும் என்றும் மாறியது இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டு எம்.ஜி.ஆர். சென்னை தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டபோது, அவரை பார்ப் பதற்காகவே டெல்லியில் இருந்து பிரதமர் இந்திரா காந்தி பறந்து வந்தார். அவர் அமெரிக்கா செல்வதற்காக மத்திய அரசு சார்பில் எல்லா உதவிகளையும் செய்தார்.

எம்.ஜி.ஆருக்கும் இந்திரா காந்திக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. எம்.ஜி.ஆர் பிறந்த அதே 1917-ம் ஆண்டில்தான் இந்திரா காந்தியும் பிறந்தார். பிறப்பு முதல் கடைசி வரை எம்.ஜி.ஆருக்கும் 7-ம் எண்ணுக்கும் தொடர்பு உண்டு. அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் ஆண்டுகள், தேதிகள் மற்றும் அவற்றின் கூட்டுத் தொகைக்கும் 7-க்கும் தொடர்பு இருக்கும்.

எம்.ஜி.ஆர் பிறந்த தேதி 17, பிறந்த ஆண்டு 1917, முதன்முதலில் எம்.எல்.ஏ. ஆன ஆண்டு 1967, அப்போது அவர் சார்ந்திருந்த திமுக ஆட்சியைப் பிடித்த ஆண்டு 1967, அவர் அதிமுகவை தொடங்கிய தேதி 17, எம்.ஜி.ஆர். முதல்முறையாக முதல்வரானது 1977, அவர் பயன்படுத்திய அம்பாசிடர் கார் எண் 4777, இதன் கூட்டுத் தொகை 7. எம்.ஜி.ஆர். மறைந்தது 24-12-1987, இதன் கூட்டுத் தொகையும் 7-தான்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆரை சந்திப்பதற்காக வந்ததுதான் இந்திரா காந்தி கடைசியாக தமிழகம் வந்தது. அடுத்த சில நாட்களில் அவர் கொல்லப்பட்ட துயரம் நடந்தது. அதேபோல, எம்.ஜி.ஆர். கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி, பிரதமர் ராஜிவ் தலைமையில் சென்னையில் நடந்த நேரு சிலை திறப்பு விழா.

சென்னை மருத்துவமனையில் எம்.ஜி.ஆரை சந்தித்து நலம் விசாரித்த இந்திரா காந்தி அவரிடம் கூறினார்... ‘‘நீங்கள் எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்தவர். இந்த சோதனையில் இருந்தும் மீண்டு வருவீர்கள்’’ என்றார். அவர் சொன்னது பலித்தது. அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக முதல்வராக சென்ற எம்.ஜி.ஆர்., உடல் நலம் தேறி அங்கிருந்தபடியே, தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகவே வந்தது வரலாறு.



1967-ம் ஆண்டு முதல் 5 முறை சட்டப் பேரவைத் தேர்தல்களில் எம்.எல்.ஏ-வாக தொடர்ந்து எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார். 1977-முதல் நடந்த தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்று 3 முறை ஆட்சியைக் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார். துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக முதல்முறை பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டபோதும், உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குச் சென்றதால் 1984-ல் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டபோதும் பிரசாரத்துக்கு செல்லவில்லை. இரண்டு தேர்தல்களில் படுத்துக்கொண்டே ஜெயித்தார் எம்.ஜி.ஆர்.



- தொடரும்...
படங்கள் உதவி: ஞானம், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்