பக்தி இலக்கிய கவிஞர்
பக்தி இலக்கியத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவரும் தனது வாழ்நாள் முழுவதும் அன்பையும், பக்தியையும் போதித்தவருமான சைதன்ய மகாபிரபு (Chaitanya Mahaprabhu) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# கிழக்கு வங்காளத்தில் நாதியா என்ற கிராமத்தில் பிறந்தார் (1486). தந்தை நன்கு கற்றறிந்த வித்வான். விஷம்பர் என்பது இவரது இயற்பெயர். நிமாயி என்று செல்லப் பெயரிட்டு அழைத்தனர். இந்தக் குழந்தை அழும்போது யாராவது கைகளைத் தட்டிக்கொண்டே புனித நாமங்களை பாடினால் உடனே அழுகையை நிறுத்திவிடுமாம்.
# இதைக் கண்டு அதிசயித்துப் போன அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் குழந்தையை வேண்டுமென்றே அழவைத்து பிறகு இறைவனின் நாமங்களைப் பாடி அதன் அழுகையை நிறுத்துவதில் ஆனந்தம் கொள்வார்களாம்.
# பாலப் பருவத்திலேயே ராமர், கிருஷ்ணர் மீது பக்தி பாடல்களை மனமுருகிப் பாடுவார். இளம் வயதிலேயே அப்பா காலமாகிவிட்டார். சமஸ்கிருத பாடசாலை ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார். அம்மாவைக் கவனித்துக்கொண்டு, 24 வயதுவரை குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தார்.
# 1509-ல் பீகாரில் கயா என்ற இடத்தில் ஈஷ்வர்புரி என்ற துறவியை சந்தித்தார். அவர் போதித்த ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் இவரது வாழ்க்கையை மாற்றியது. துறவறம் மேற்கொண்டார். ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மகாபிரபு என அழைக்கப்பட்டார். அன்று முதல் ஸ்ரீகிருஷ்ணர் பக்தியில் தன்னையே மறந்தார்.
# அன்றாடம் கிருஷ்ண பகவானை நினைத்து தன்னை ராதாவாக எண்ணிக்கொண்டு அவர் மீது மோகம் கொண்டு பக்திப் பாடல்களைப் பாடினார். ராதா-கிருஷ்ணன் மீது ஏராளமான பாடல்களை இயற்றினார். துறவறம் மேற்கொண்டாலும் தன் தாயாரின் விருப்பத்துக்கு இணங்கி வெகுகாலம் ஜகந்நாத் பூரியையே தலைமையிடமாக கொண்டு செயல்பட்டார்.
# பலர் இவரது சீடர்களாக மாறினர். சீடர்களுடன் சேர்ந்து தெருவெங்கும் டோலக், மிருதங்கம், தாளம், ஜால்ரா ஆகிய வாத்தியக் கருவிகளை இசைத்துக் கொண்டு உரத்த குரலில் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்திப் பாடல்களை பாடிக் கொண்டே நடனம் ஆடிச் செல்வார்.
# ஸ்ரீமத் பாகவதத்தையும் பகவத் கீதையையும் பிரச்சாரம் செய்தார். தற்போது உலகம் முழுவதும் மகாமந்திரமாகப் போற்றப்பட்டு வரும் ‘ஹரே-கிருஷ்ண, ஹரே-கிருஷ்ண, கிருஷ்ண- கிருஷ்ண, ஹரே- ஹரே, ஹரே-ராம ஹரே-ராம ராம-ராம ஹரே ஹரே’ என்ற 16 வார்த்தைகள் கொண்ட கீர்த்தனை இவர் வழங்கியதுதான்.
# இவரைப் பின்பற்றுபவர்கள் இவர் விஷ்ணுவின் மறு அவதாரம் என்றனர். இவரது அன்னை தன் மகனை நித்யானந்த சொரூபமாகவும் பலராமராகவும், ஸ்ரீ கிருஷ்ணராகவும் கண்டதாக கூறப்படுகிறது. ஏராளமான குணப்படுத்த முடியாத நோய்களால் பீடிக்கப்பட்டவர்களை இவர் குணப்படுத்தியதாக இவரைப் பற்றி எழுதப்பட்ட நூல்களில் கூறப்பட்டுள்ளது. இவருடைய போதனைகள் ‘ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருத்’ என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
# அசிந்த்ய பேதாபேத்வாத் என்ற தத்துவத்தை உருவாக்கியவர். வாழ்க்கையில் 18 ஆண்டுகள் இவர் ஒடிசாவில் கழித்தார். தென் இந்தியா, பிருந்தாவனம் ஆகிய இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டார். பல இடங்களுக்கும் சென்று தனது கிருஷ்ண பக்திக் கோட்பாடுகளை பிரச்சாரம் செய்தார். இவரது வாழ்வு, போதனைகள் குறித்த பல நூல்களை இவரது சீடர்கள் எழுதியுள்ளனர்.
# இவை பெரும்பாலும் சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. இறை நேசத்தைப் பரப்ப வந்த அவதார புருஷராக கொண்டாடப்பட்ட கிருஷ்ண சைதன்ய மகாபிரபு, 1534-ல் ஜகன்னாதரின் சிறிய மூர்த்தியை அரவணைத்தவாறே உயிர் நீத்தார். அப்போது அவருக்கு வயது 48தான்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago