ஓர் அரங்கத்தில் நாட்டிய நிகழ்ச்சி. ‘சிலப்பதிகாரத்தின் முடிவில் ஓர் ஆரம்பம்’- தலைப்பு. கண்ணகி ஒருத்தி. இன்னொரு கண்ணகி இரண்டாமவள்.
சிலம்பு திருடியவன் கோவலன் என்று அவசர முடிவெடுத்து அவன் தலையைச் சீவச் சொல்லி இப்போது, ‘யானோ அரசன்; யானே கள்வன் என்று பாண்டிய மன்னனும், கோப்பெருந்தேவியும் செத்து வீழ்ந்தபின் மதுரையை மொத்தமும் தீக்கிரையாக்கினாள் கண்ணகி என்று சொல்கிறது சிலப்பதிகாரம்.
இன்னொரு கண்ணகி -கண்ணகி மீது குற்றம் சுமத்துகிறாள். குற்றம் புரிந்தவன் செத்து மடிந்த பின், மற்ற உயிர்க்கேன் தண்டனையோ; உந்தன் இழப்பினில் ஊரை எரிப்பது எந்த விதத்திலும் நெறிமுறையோ! மற்ற உயிர்க்கு இங்கு தீங்கு வராமல் உன்னை எரித்திங்கு காட்டிடுவேன். இன்னொரு கண்ணகி என்று விளங்கிட கற்பு நெருப்பினை மூட்டிடுவேன்!’ என்று ஆடி கண்ணகியை எரித்து சிலையாக்கி விடுகிறாள்.
இளங்கோவடிகள் எழுதிய நூலால் விளைந்தது இந்த சிந்தனையே- புதுச்சிந்தனையே -பூந்தமிழ்கற்ற புலவர்கள் எல்லாம் பொருத்தருள்க- என்று மேடையின் பின்னணியிலிருந்து ஹீரோ அரவிந்தன் ‘மைக்’கில் கூறுவதுடன் நாட்டிய நாடகம் நிறைவு பெறுகிறது.
அரங்கிலிருந்து அத்தனை பேரும் கிளம்பிப் போயும் சிலையாக சிந்தனை வயப்பட்டு அங்கேயே உட்கார்ந்திருக்கிறாள் கண்ணம்மா- அரவிந்தனாக சிவகுமார் -கண்ணம்மாவாக சரிதா -மையப் பாத்திரங்களில்..
தண்டிக்கிற உரிமை தனிமனிதனுக்கு இல்லேங்கறப்போ கண்ணகிக்கு மட்டும் எப்படி - ஆனா, நான் கண்ணகி கட்சி. அவ மதுரையை மட்டும் எரிச்சா- நான் உலகத்தையே எரிச்சிருப்பேன். இந்த உணர்வுதான் கண்ணம்மா பாத்திரம். புடவைத் தலைப்பில் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டு போவாள்.
அதிலிருந்து கடிதப் போக்குவரத்து- அவள் முதலில் எழுதுகிறாள். ‘வணக்கம்’ முதல் வரியை எழுதும் முன், முகவரியை எழுத எண்ணினேன். பிறகுதான் வாழ்த்துகின்ற இதயத்திற்கு விசாலாம்தான் முக்கியமே தவிர விலாசம் முக்கியமல்ல என்று தெரிந்து கொண்டேன்.
புஷ்பங்கள் கைதட்டி கூப்பிடாமலே, வண்டுகள் வருவது போல் -உங்கள் நடன அரங்கை நோக்கி நகர் தானாகவே நகர்ந்து, நகர்ந்து வருகின்றது. காரணம் அபிநயம் என்ற சொல்லை நீங்கள் அதிசயம் என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறீர்கள் -என அவள் எழுத, ‘படித்தேன் பார்த்தேன் கடிதம்! அடடா வரிகள் அமுதம்!’ பேப்பர் அரங்கம் முழுதும் உன் பேனா முனையின் நடனம்’ என இவன் பதில் எழுதுவான். காதல் மலர்ந்தது. கண்ணம்மா வீட்டுக்கு போய் பெண் கேட்டான் அரவிந்தன்.
இது திடீர் காதல்னு எல்லாம் சொல்ல முடியாது. உங்க பொண்ணோட கவிதைகளை ரசிச்சேன். இப்ப அவளைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன் என்று கூறி இருபக்கம் பேச்சு வார்த்தை நடந்து திருமணம் நடந்தேறுகிறது. இந்த நடன ஆசிரியரின் மாணவி ஆனந்தி. அரவிந்தனை உருகி உருகி காதலிப்பவள். ஆனால் அது ஒரு தலைக்காதல்.
கல்யாணப் பத்திரிகையை வாங்கிய ஆனந்தி உங்களுக்காக நான் அனுதாபப்படறேன். இந்த கல்யாணம் உங்களுக்கு நிம்மதியை கொடுக்கப் போறதில்லே என்று ஒரு குண்டைத் தூக்கிப் போடுவாள்.
எங்க அரவிந்தனுக்கு மனைவியா வர நீ கொடுத்து வச்சிருக்கணும் என்று ஹீரோ அக்காள் சொல்வாள். நான் இந்த வீட்டுக்கு வர நீங்களும்தான் கொடுத்து வச்சிருக்கணும் என்று சிரித்துக் கொண்டே கண்ணம்மா சொன்னது லேசாகப்பற்றிக் கொள்கிறது.
அக்கா வீட்டில் விருந்துக்கு அழைக்கிறார்கள். திடீரென்று மின்சாரத்தடை ஏற்படுகிறது. மெழுகுவர்த்தி கொளுத்திக் கொண்டு வந்து வைத்தாள் சகோதரி. அது சிறு குழந்தையின் உருவத்தில் வடிவமைக்கப்பட்ட மெழுகுவர்த்தி. அதன் தலையில் நெருப்பு எரிய எரிய குழந்தை உருகி உருக்குலைவதைப் பார்த்து பூகம்பம் வெடித்தது போல கூச்சலிட்டு என்ன கொடூரமான ரசனை உங்கக்காவுக்கு - என்று கத்தி விட்டு சாப்பிடாமல் வெளியேறி விடுகிறாள் கண்ணம்மா.
நடுராத்திரியில் வேர்த்து விறுவிறுக்க ஸ்கிப்பிங் செய்தாள். மனதை அமைதிப்படுத்த இப்படிச் செய்கிறேன் -என் உணர்ச்சிகளை நீங்க புரிஞ்சுக்க மாட்டீங்கறீங்க. யூ டோண்ட் லவ் மீ - என்பாள்.
உன்னை நேசிக்கிறேங்கிறதுக்காக நேரம் காலம் தெரியாம உன்னை நான் கொஞ்சிகிட்டே இருக்கணும்னு நெனச்சா அது சுத்த நான்சென்ஸ் என்பான்.
உடம்பு உரசலுக்கும் உதட்டுக் கொஞ்சலுக்கும் மட்டுமே ஆசைப்படற வெறும் பகட்டு பெண்ணல்லா நான். அதை முதலில் புரிஞ்சுக்குங்க. ரெண்டு பேரும் மோத ஆரம்பித்து அடங்கி விடுவார்கள்.
பகல் உணவு வேளை. ‘சாப்பிடலாம் வா!’ மாமனார். ‘அவர் வரட்டும். அரவிந்தன் அவரோட சாப்பிடறேன்!’ -அவள் ‘புருஷனை எப்படீடி நீ பேர் சொல்லி கூப்பிடலாம்?’ -மாமியார். ‘அய்யோ, அவரை அளவுக்கதிகமா நான் நேசிக்கிறேன். அதனாலதான் பேர் சொல்லி கூப்பிடறேன்’ -கண்ணம்மா.
ரிகர்சல் ஹாலில் டெலிபோன் மணி அடிக்கிறது. ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த அரவிந்தன் போனை எடுத்தான். ‘அரவிந்தா‘ நாம இந்தியாவில இருக்கறமா? வெளிநாட்டிலா’ -அம்மா. ‘உனக்கென்னம்மா பிரச்சனை?’ அவன். ‘உன் பெண்டாட்டி உன்னை பேர் சொல்லி கூப்பிடறாடா!’ ‘அவ புருஷனைத்தானே பேர் சொல்லி கூப்பிட்டா -உங்க புருஷனை கூப்பிடலியே!?’
‘‘என்னடா பேசறறே?’’
‘இத பார். நான் ஒண்ணும் தெண்டச்சோறு சாப்பிட்டு திண்ணையில தூங்கல. ஆயிரம் வேலை இருக்கு போனை வை!’’
பத்தடி நகர்ந்தான். மீண்டும் போன் அடித்தது.
‘‘என்னம்மா!’’ கோபமாய்க் கேட்டவன்- படாரென்று சாந்தமாகி, ‘கண்ணம்மாவா? என்னம்மா?’’ என்றான்.
‘‘நீங்க என்னை லவ் பண்றீங்களா? ஆமான்னா எவ்வளோவ் ப்ளீஸ் சொல்லுங்க!’’- கண்ணம்மா.
‘‘மாமியாளும், மருமகளும் சேர்ந்து ஏன் உயிரை வாங்கறீங்க? போனை வை!’’- என்று கத்தி விட்டு ரிசீவரை வைத்து விடுவான்.
இரவு வீட்டுக்குப் போனவன் ‘‘சாப்பிடலாம் வாங்க!’’ மனைவி அழைக்கிறாள்.
‘‘சாப்பிட்டாச்சு’’ - இவன்
‘‘எங்கே?’’
‘‘ஹோட்டல்ல’’
‘‘ஏன் அப்படி?’’
‘‘அப்படித்தான். எனக்கு நிறைய வேலை இருக்கு. டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்’’ -உடையை கழற்றி லுங்கி கட்டிக் கொண்டு ‘பேன்’ சுவிட்ச் போடுவான். தலைக்கு மேலே காற்றாடி சுற்றும் போது படக், படக் சத்தம். ஒரு கவர் நூலில் தொங்கிக் கொண்டிருந்தது. எடுத்தான் -பிரித்தான்- படித்தான்.
‘என் தலைவா! உன் பெயரை ஒரு பேப்பரில் எழுதி அதைத் தடவிப்பார். அதில் ஈரப்பசை இருக்கும் ஏனெனில் உன் திருநாமம் என் உதட்டு எச்சில்களால் ஒரு நாளைக்கு ஆயிரம் முறைகளுக்கு மேல் குளிப்பாட்டப்பட்டதல்லவோ’ -பின் குறிப்பு இதைப் படித்ததும் உன் மூக்கின் மேல் நாற்காலி போட்டு அமர்ந்திருந்த கோபம் எழுந்து இறங்கி நடந்து போயிருக்க வேண்டுமே’ படித்ததும் நெகிழ்ந்து விடுவான்.
கார்த்திகை தீபத்திருநாள். கண்ணம்மா தாயார் பலகாரம் செய்து கொண்டு வந்திருப்பாள். அலட்சியமாக அவரை நடத்துவார் மாமியார். என் அம்மா கொண்டு வந்த பலகாரம் எங்கே என்பாள் கண்ணம்மா. கூவம் சாக்கடையில் கொட்டீட்டோம். உங்க வீடு சாக்கடைப் பக்கத்தில்தானே இருக்கு. ஈ, கொசு எல்லாம் அதில் உட்கார்ந்திருக்கும். அதனால எடுத்து வீசிட்டோம்.
துக்கம் தொண்டையில். கண்களில் நீர். அன்றிரவு மாமியாரை கொசு கடிக்கும். உடனே புதுக்கவிதை உதயமாகி விட்டது.
‘கொசுவே உனக்கு கோடி நமஸ்காரம். வீட்டுக்குள் பறக்கும் விமானமே, என் மாமியார் மேனி என்ன உனக்கு மீனம்பாக்கமோ, ராத்திரியில் அங்கு இறங்கி ரத்தச்சோறு உண்ணுகிறாயே. அது என்ன சாமியார் ரத்தமா, சுத்தமாய் இருக்க? ஆஃப்டர் ஆல் மாமியார் ரத்தம். அதில் கொழுப்பு அதிகம்..!’
ஒரு ஞாயிறு இரவு கோல்டன் பீச் போவார்கள். டைனிங் ஹாலில் - ஒருவன் கண்ணடித்து கூப்பிட்டு கண்ணம்மாவுக்கு முத்தமிடுவதாக பாவனை செய்வான். புலிபோல பாய்ந்து டேபிளில் உள்ள பிளேட்களையெல்லாம் தூக்கி அவன் மீது வீசி அடித்து துவம்சம் செய்து விடுவாள்.
மனோதத்துவ டாக்டரிடம் கூட்டிப் போவான். நல்லா கவிதை எழுதுவியாமே; 2 கவிதை சொல் என்பார் டாக்டர்.
‘காலிருக்கும் கட்டில்கள் ஓடுவதில்லை. காலில்லா கடிகாரங்கள் ஓடுகின்றன. பல்லிருக்கும் சீப்பு கடிப்பதில்லை. பல்லில்லாத செருப்பு கடிக்கிறது. படியிருக்கும் ஏணிகள் ஏறுவதில்லை. படியில்லாத விலைவாசிகள் ஏறுகின்றன’
‘ஓவியம் கூட வரைவியாமே. எங்கே ஒரு படம் வரைஞ்சு காட்டு..!’
சிலுவையில் அறையப்பட்ட பெண் ஓவியம்.
‘என்னம்மா இது?’
‘இந்தியாவுல கணவர்களாகவும், மாமியார்களாகவும் பெண்கள் இப்படித்தான் சிலுவையில் அறையப்படுகிறார்கள்’
கண்ணம்மா திறமை கண்டு நெகிழ்ந்து விட்ட மனோதத்துவ டாக்டர் புத்தி சுவாதீனத்துக்கும் -சித்த பிரமைக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடுதான் இருக்கு. யாரு, எப்ப அந்தக் கோட்டை தாண்டுவாங்கன்னு சொல்ல முடியாது. எங்காவது சுற்றுலா தலங்களுக்கு கூட்டீட்டு போய் வாங்க. செரியாப் போயிரும்!’
போய்த் திரும்புவார்கள்.
மாமியார் ஒரு நாள் கண்ணம்மாவின் வேலைக்காரப் பெண்ணை மிரட்டி,, அவளுக்கு உண்மையில் என்ன வியாதி? ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்று கேட்டு அடிப்பாள்.
இந்த கொடுமையைப் பார்த்த கண்ணம்மா -அவளை ஏன் அடிக்கறீங்க. எங்கிட்டவே கேளுங்க. நான் என் கணவன், என் கவிதை, என் பாரதி.. இதுதான் என் உலகம். அழகை ஆராதிப்பேன். தீமையை எதிர்ப்பேன். அப்பாவி பெண்களுக்கு யாராவது தீங்கிழைச்சா தீக்கனலா மாறிடுவேன். இப்ப இந்த பொண்ணை அடிச்ச உங்களை - என்று அரிவாள் மணையை எடுத்து ஓங்க, அரவிந்தன் வந்து அவளை அறைந்து மிரட்டி மாடிக்கு கூட்டிச் சென்று மாத்திரை கொடுத்து தூங்கச் செய்வான்.
நடுநிசியில் பெரிய குங்குமப்பொட்டு வைத்து கருப்பு புடவை அணிந்து மாமியார் அறைக்கதவைத் தட்டுவாள்- மன்னிப்புக் கேட்க வந்தேன் என்பாள். இல்லை. இவளுக்கு பேய் புடிச்சிருக்கு. என் கொல்ல வந்திருக்கா - என்று தாய் கதற -அவளை மாடிக்கு அழைத்துப் போவான் -இருக்கிற பொருள்களையெல்லாம் அடித்து நொறுக்குவாள். அம்மா பேய் என்று சொன்னாள். ஒரு வார்த்தை நீங்க எதிர்த்து பேசலே. யூ டோண்ட் லவ் - என்று ஆரம்பிக்க- குளியல் அறைக்குள் போட்டு பூட்டி விடுவான் கணவன்.
இதுபோன்ற ஹிஸ்டரிக்கலாக, கத்திக் கூச்சலிடும் பல காட்சிகள் படம் பார்ப்போரை சங்கடப்படுத்தியிருக்கும் என்று இப்போது நினைக்கிறேன்.
இனிமேல் இவளோடு வாழ முடியாது என்று விவாகரத்து நோட்டீஸ் தயார் செய்து மாமனார் வீட்டுக்குப் போனால் அவள் தன் வயிற்றில் 3 மாதக்குழந்தை வளரும் செய்தி சொல்லி அவன் முடிவை மாற்றி விடுவாள்.
சுற்றுலா சென்ற இடத்தில் கண்ணம்மாவின் சிறுவயசுத் தோழியை சந்திக்கிறார்கள். திருச்சியில் பக்கத்து வீட்டில் குழந்தைப் பருவம் முதல் வாழ்ந்த அந்த தோழி மூலம் -கண்ணம்மாவின் அப்பா கொடூரமானவன் -கருவுற்ற மனைவி மீது சந்தேகப்பட்டவன் -ஒரு இரவு, பிறந்த குழந்தையை தூக்கி ஓடுகின்ற ரயில் முன் தண்டவாளத்தில் வீசி எறிந்து விட்டு -சிறுவயது கண்ணாம்வையும் தோழியையும் கத்தி முனையில் மிரட்டி வெளியே சொன்னால் கண்ணை நோண்டி விடுவேன் என்று பயமுறுத்தியிருக்கிறான்.
மனோநிலை பாதிக்கப்பட்டதற்கான காரணத்தை இப்படி விளக்குகிறார் டைரக்டர்.
தன் வயிற்றில் கருவுற்றிருந்த குழந்தையைக் கொன்றுவிட அவள் முயன்ற போது -அப்பா சிறுவயதில் தூக்கி ரயில் பாதையில் வீசப்பட்ட அதே குழந்தை இப்போது உன் வயிற்றில் வளருகிறது என்று நம்ப வைத்து, சமாதானப்படுத்துகிறான் அரவிந்தன்.
சின்னக்கண்ணம்மா, உலகத்தை பார்க்க ஆசைப்படறா. சீக்கிரம் ஒரு டாக்ஸி பிடிச்சுட்டு வாங்க என்று கணவனிடம் சொல்லி நர்சிங் ஹோம் போகிறாள். அங்கும் கடைசியாக ஒரு புதுக்கவிதை சொல்கிறாள்.
‘கடவுளும் குழந்தையும் ஒன்று. காரணம் இருவருமே கர்ப்பகிரகத்திலிருந்துதான் வெளியே வருகிறார்கள்!’ -நர்சிங் ஹோமில் கண்ணம்மா.
வீட்டில் குளியில் அறையில் ஷேவிங் செய்து கொண்டிருக்கிறான் ஹீரோ. போன். ஆஸ்பத்திரியிலிருந்து. எது- அவசரமா -சிசேரியனா - நான் கையெழுத்துப் போடணுமா -இதோ நான் வந்திட்டேன். வேகமாகப் புறப்பட்டான்.
மீண்டும் போன். ‘துக்கச் செய்தி’... குழந்தையா? தாயா? -அதிர்ச்சியான செய்தி. கண்ணம்மா போய் விட்டாள். ரிசீவர் கையிலிருந்து நழுவி கீழே விழுந்தது.
மனைவியை மகிழ்விக்க 10 அடி உயரம் 15 அடி அகலம் அவள் முகத்தை மட்டும் பெரியதாக்கி சுவர் முழுவதும் ஒட்டி வைத்திருந்த புகைப்படத்தின் அருகே போனான். ஒரு தெளிந்த நெஞ்சம் தேடுகிறது பிராயச்சித்தம். ஆண்டவனே! என்னை அழைத்துக் கொள்ள வேண்டுகிறேன்- கண்ணம்மா. நர்சிங் ஹோம் செல்லும் முன் அவள் எழுதி வைத்திருந்தாள்.
இடி விழுந்து நொறுங்கிய மரமாக எல்லாம் முடிந்து விட்டது என்று அழக்கூட தெம்பில்லாமல் மண்டி போட்டு தரையில் சரிந்தான் அரவிந்தன்.
நாடக அரங்கம். 1000 நாற்காலிகளுக்கு நடுவே அவன் மட்டும் தனியாக... ஆனந்தி வந்தாள். இப்படி என்னை ஏமாத்திட்டு போவான்னு நான் நினைக்கவே இல்லே. ‘மை லைஃப் ஈஸ் ஏஸ் எம்டி எஸ் திஸ் ஹால்’ என்பான். திருமணம்ங்கற இன்ஸ்டிட்யூஷன் மேல நீங்க வச்சிருக்கற மரியாதை- உங்க மனைவி மேல நீங்க வச்சிருக்கற அன்பு என்னை சிலிர்க்க வைக்குது மாஸ்டர்.
‘ஐ ஸ்டில் லவ் யூ!’ என்று சொல்லி விட்டுப் போவாள்.
படம் வெளியான பின்பு படம் பார்த்த பல இளம் பெண்கள் எனக்கு போன் செய்து அரவிந்தன் மாதிரி எனக்கு ஒரு மாப்பிள்ளை கிடைக்கணும்ன்னு ஆசீர்வாதம் பண்ணுங்க சார் என்று கேட்டார்கள். அவ்வளவு பெரிய தாக்கத்தைக் கொடுத்தது அக்னி சாட்சி.
தான் உருவாக்கிய 100 படங்களில் கே.பி.,க்கு பிடித்தவை 5 படங்கள். அதில் ஒன்று அக்னிசாட்சி. உயிரைக் கொடுத்து உருவாக்கினார். எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 6 மாதங்கள் படுக்கையில் விழுந்து விட்டார். சிங்கம் சிலிர்த்து எழுந்து சிந்து பைரவியைக் கொடுத்து சிகரம் தொட்டது.
---
அனுபவிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago