காட்டுக்குள் பெயரளவுக்கே கரோனா சோதனை: கலங்கி நிற்கும் பழங்குடி கிராமங்கள்

By கா.சு.வேலாயுதன்

புகை நுழையாத இடத்தில்கூட போலீஸ் நுழையும் என்பது பழமொழி; அது கரோனாவுக்கும் பொருந்தும் போலிருக்கிறது. காடுகளின் குவியலின் நடுவே 130 குடும்பங்களுடன் அனாமத்தாகக் கிடக்கும் குழிப்பட்டி பழங்குடி கிராமம் இதைத்தான் முன்மொழிந்திருக்கிறது.

பொள்ளாச்சி ஆழியாற்றில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அப்பர் ஆழியாறு. இங்கே மேலும் கீழும் நோக்கினால் குவிந்து கிடப்பது ஆனைமலைக் காடுகள். புலிகள் காப்பகமாக வனத்துறையால் பாதுகாக்கப்படும் இந்தக் காடுகளின் இடையிடையே 4 கிலோ மீட்டர் முதல் 12 கிலோ மீட்டர் வரையில் மாவடப்பு, காட்டுப்பட்டி, குருமலை, கருமுட்டி, குழிப்பட்டி என வரும் பழங்குடி கிராமங்கள் (செட்டில்மென்ட்) துரும்புகளாகக் கிடக்கின்றன.

யானை, சிறுத்தை, புலி, மான்கள், கரடி என வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த இந்த பழங்குடி கிராமங்களில் மட்டும் 500 குடும்பங்கள் இருக்கின்றன. இவர்கள் பாரம்பரியமாக இங்கேயே இருக்கிறவர்கள். ஆனால், நிலப்பட்டா கிடையாது. சாலை, குடிநீர் வசதி கிடையாது. இந்த கிராமங்களுக்குச் செல்வதனால் 407 வேன், ஜீப், டிராக்டர்களில்தான் செல்ல முடியும். அதுவும் ஆபத்தான பயணம்.

அதிலும் குழிப்பட்டி தொலைவில் அடர் கானகத்தில் உள்ள கிராமம். இந்த கிராம மக்கள் முதியவர்கள், கர்ப்பிணிகள் நோய்வாய்ப்பட்டாலோ, இதர விஷயங்களுக்கோ வெளியூர் செல்லத் தொட்டில் கட்டித்தான் 11 கிலோ மீட்டர் தூக்கிச் சென்று அப்பர் ஆழியாறுக்கு (காடாம்பாறை பிரிவு) வருவார்கள். அங்கிருந்தும் பேருந்து வசதி கிடையாது. வேன், ஜீப்புகளை வரவழைத்துத்தான், வால்பாறை, பொள்ளாச்சி, உடுமலைக்கோ செல்ல இயலும். இவர்கள் திருமூர்த்தி மலை அணை வழியாக நடை பயணமாகவும் போகலாம். அப்படிச் சென்றால் 12 கிலோ மீட்டர் மலைகளிலும், 4 கிலோ மீட்டர் தரையிலும் நடக்க வேண்டும்.

இந்த குழிப்பட்டி கிராமத்தில்தான் கடந்த ஒரு மாதமாகப் பலருக்கும் அடுத்தடுத்து காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இங்குள்ள பழங்குடியினச் செயல்பாட்டாளர்கள் மூலம் தகவல் திருப்பூர் ஆட்சியருக்குச் செல்ல, உடனடியாக அவர்கள் அனைவருக்கும் கரோனா சோதனை நடத்தவும், காய்ச்சல், சளி அறிகுறி இல்லாதவர்களுக்குத் தடுப்பூசி போடவும் சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதையடுத்து குழிப்பட்டிக்குச் சென்ற உடுமலை எரிசனம்பட்டி மருத்துவக்குழு, குழிப்பட்டியில் காய்ச்சல் கண்டிருந்த 40 பேருக்கு கோவிட் டெஸ்ட் எடுத்து மருந்து மாத்திரைகளைக் கொடுத்துள்ளதோடு, அக்கம்பக்கக் கிராமங்களான கருமுட்டி, மாவடப்பு, குருமலை, காட்டுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கும் சென்று சோதனை நடத்தியுள்ளனர். இதில் மாவடப்பு கிராமத்தில் 2 பேருக்கும், குருமலையில் ஒருவருக்கும் என மொத்தம் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதிப்பட்டவர்களை உடுமலைக்கு அழைத்துச் சென்று முறையாக சிகிச்சை தர வேண்டியது சுகாதாரத் துறையினரின் பணி. அவர்களோ அப்பர் ஆழியாறு பகுதிக்கு வாகனத்தை அனுப்பி, தொற்று பாதிக்கப்பட்டவர்களை வரச் சொல்லி தகவல் அளித்துள்ளனர். அவர்களோ காட்டுக்குள்ளிருந்து 4-5 மைல் தூரம் நடந்து வர முடியாது என்று அவரவர் வீடுகளில் முடங்கிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அவர்களை எப்படியாவது கொண்டுவந்து மருத்துவமனையில் சேர்க்க, இப்பகுதித் தன்னார்வலர்களிடம் சுகாதாரத்துறை அலுவலர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இதே நேரத்தில் இந்தப் பழங்குடி கிராமங்களில் பெயரளவுக்கே கரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டிருக்கிறது. நன்றாக தொண்டை மற்றும் மூக்குக்குள் விட்டு சளி எடுக்கப்படவில்லை. அதை முறையாகச் செய்திருந்தால் இன்னமும் பலருக்குத் தொற்று கண்டுபிடித்திருக்கலாம். தவிர சமீபத்தில் காய்ச்சல் கண்டு குணமானவர்களுக்கெல்லாம் வலுக்கட்டாயமாகத் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள் என்ற புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்குச் சென்றுள்ளன. அதையடுத்து மறுபடியும் இக்கிராமங்களில் வீடு வீடாக கரோனா சோதனை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தந்த பழங்குடியினச் செயல்பாட்டாளர் தன்ராஜிடம் பேசினோம்.

அவர் கூறும்போது, ‘‘மொத்தமா மூன்று வாரம் முன்னால் குழிப்பட்டியில் மட்டும் 50- 60 பேர் காய்ச்சல் வந்து குணமாகியிருக்காங்க. அதை அப்பவே எங்ககிட்ட வந்து சொன்னாங்க. கீழே ஆஸ்பத்திரிக்குப் போக பயமாயிருக்கு. எங்களைப் புடிச்சு கேம்ப்ல வச்சிருவாங்க. ஜெயில்ல வச்சிருவாங்கன்னு வெகுளித்தனமா பேசினவங்க, மருத்துவர் குழுவை ஊருக்குள்ளேயே அனுப்பி டெஸ்ட் எடுங்கன்னு கோரிக்கை வச்சாங்க. அதுக்கு நாங்க முயற்சி பண்ணினோம். அது நடக்கலை. வனத்துறை இந்த காய்ச்சல் விவகாரத்தையே வெளில தெரிவிக்காம டாக்டர்களை வரவிடாம செஞ்சாங்க.

நாலு நாளைக்கு முன்னால மக்கள் மறுபடியும் இப்பவும் 40 பேருக்கு மேல எங்க ஊர்ல காய்ச்சல்னு சொல்லவும் மறுபடி முயற்சி எடுத்தோம். இந்த நேரத்தில் குழிப்பட்டியிலிருந்து ஒரு பெண்மணி உடுமலைப்பேட்டை பெரிய ஆஸ்பத்திரிக்கு பிரசவத்திற்கு போயிட்டாங்க. அங்கே அவங்களுக்கு வழக்கமா செக் பண்ற மாதிரி டெஸ்ட் எடுத்ததில் பாசிட்டிவ்னு வந்துருச்சு. அப்பவும் குழிப்பட்டியில் டாக்டர் குழுவை வச்சு கோவிட் சோதனை நடத்தலாம்னு பார்த்தால் வனத்துறையினர் ‘இல்லையில்லை. 10 நாளைக்கு முன்னாடியே மலையிலிருந்து கீழே வந்துருச்சு. அதனால கீழ்நாட்டுலதான் தொற்று பரவியிருக்கு’ன்னு அடிச்சுப் பேசினாங்க.

கிராமத்துல 40 பேர் காய்ச்சல், சளியோட இருக்கும்போது அவங்களுக்கு டெஸ்ட் எடுக்கதறதுல இவங்களுக்கு என்ன சங்கடம்னு உடனே இந்த விஷயத்தை திருப்பூர் கலெக்டருக்கு பெட்டிஷன் எழுதினோம். 2 தடவை அவர்கிட்ட பேசிட்டேன். உடனே சப்-கலெக்டர்கிட்ட சொல்லி, ஒரு மருத்துவர் குழுவை குழிப்பட்டிக்கு அனுப்பி டெஸ்ட் எடுத்ததில் 40 பேருக்குக் காய்ச்சல், சளி இருந்திருக்கு. அவங்களுக்கு கரோனா சோதனை எடுத்துட்டு, மருந்து மாத்திரைகள் குடுத்திருக்காங்க. தவிர 60 நபர்களுக்கு கோவிட் நோய்த் தடுப்பூசியும் போடப்பட்டிருக்கு. அதில் குழிப்பட்டி, குருமலையில் 3 பேருக்குத் தொற்று உறுதி செய்திருக்கிறார்கள்.

முதலில் இதுவே 5 பேருக்கு என்று சொன்னவர்கள் பிறகு 3 பேருக்கு என்று மாற்றிச் சொல்கிறார்கள். குழிப்பட்டியில்தான் பாதிப்பு அதிகம். ஆனால், அங்கே தொற்று ஏதுமில்லை என்று தகவல் வந்திருக்கிறது. அங்கே மருத்துவர் குழு பெயரளவிற்கே சோதனையிட்டிருக்கிறது. அதனால்தான் பாசிட்டிவ் ரிசல்ட் வரவில்லை. பாசிட்டிவ் கேஸ் அதிகமானால் அவர்களை எல்லாம் காடுகளிலிருந்து நடத்தி உடுமலைக்கு ஆஸ்பத்திரி கொண்டுபோய்ச் சேர்ப்பதில் நிறைய சிரமங்கள் உள்ளதாலேயே இப்படி மேலோட்டமான சோதனையை ஊழியர்கள் நடத்துகிறார்கள் என்பதையும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். அப்படி கஷ்டமானால் அந்தந்த ஊரிலேயே இவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கலாமே என யோசனை தெரிவித்தும் உள்ளோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!’’ என்று தன்ராஜ் தெரிவித்தார்.

ஏற்கெனவே வால்பாறை, கல்லாறு பழங்குடியின செட்டில்மென்ட்டில் காய்ச்சல் கண்டு தனக்குத்தானே வைத்தியம் செய்து குணமானவர்கள், மற்ற பழங்குடியின கிராமங்களுக்கு கரோனா அச்சுறுத்தலை அளித்துக் கொண்டிக்கின்றனர். மாவடப்பு, குருமலையில் கரோனா தொற்று உறுதியாகியிருக்க, இப்பகுதி பழங்குடி கிராமங்கள் அனைத்திலும் கரோனா பீதி கடுமையாகவே பரவியுள்ளது.

வால்பாறை பழங்குடி கிராமங்களுக்குள் மக்களுக்கு ஏற்பட்ட சளி, காய்ச்சல் இப்படி கரோனா அச்சத்தைப் பரப்பியிருக்க, நீலகிரி மலைக்காடுகளிலும் இதே நிலை ஏற்பட்டிருக்கிறது என்கிறார் கூடலூரைச் சேர்ந்த பழங்குடியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தலைவர் செல்வராஜ்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கரோனா பாதிப்பில் மக்கள் சேவை செய்த பலர் இறந்துவிட்டனர். மசினக்குடியில் 6- 7 பேர் இறந்திருக்காங்க. பந்தலூர் தாலுக்கா, குந்தலாடி பனியாஸ் கிராமத்தில் 40 பேருக்கு மேல் தொற்று பாதிப்பு. இவர்கள் கர்நாடகாவில் இஞ்சி விவசாயத்திற்குச் செல்பவர்கள். அங்கேயே தங்கி வேலை செய்பவர்கள். அதில் அவர்கள் தொற்றுக்கு மாட்டிக்கிட்டாங்க. இப்ப ஊரே மாட்டிடுச்சு. பனியாஸ் முந்தி அவங்க எல்லாம் காட்டுக்குள்ளே தனித்தனியா இருந்தாங்க. இப்ப அவங்களையெல்லாம் ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட பகுதியில் காலனி மாதிரி கொண்டு வந்துட்டாங்க. இதுல இப்ப 44 பேருக்கு ஒரே நேரத்தில் கோவிட் பாசிட்டிவ் வந்தது. எல்லோரும் மீண்டுட்டாங்க.

முன்னாடி சொந்தமா வைத்தியம் செஞ்சு பார்த்தாங்க. முடியலை. அப்புறம் ஆஸ்பத்திரி போய்த்தான் குணப்படுத்தினாங்க. அதேபோல பாண்டியாறு டேன்டீ ஏரியா நாடுகாணி, தேவாலா பகுதிகள்ல 45 பேர்க்கு பாதிப்பு. ஊர் பூரா கரோனாதான். முந்தி எல்லோரையும் டெஸ்ட் எடுத்தாங்க. இப்ப டெஸ்ட் எடுக்கறதைக் குறைச்சுட்டாங்க. அதனால பாதிப்பு குறைஞ்சிடுச்சு.

கூடலூரில் மட்டுமே பழங்குடியினர் குடும்பங்கள் சுமார் 15 ஆயிரம் இருக்கும். அதுல பாதிக்குப் பாதி குடும்பங்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கு. ஒரு பக்கம் வேலையில்லை. வருமானமில்லை. அதனால் வறுமை. அரசாங்கம் கொடுத்த ரூ.2 ஆயிரம், ரேஷன் பொருட்களில்தான் அவர்கள் உயிரைச் சுமந்துட்டு இருக்கிறாங்க. இவர்களுக்கு இன்று அன்றாட வாழ்க்கையே கொடுமையாக இருக்கு. அரசுதான் பார்த்து எதையாவது செய்யணும்’ என்று செல்வராஜ் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

8 hours ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

மேலும்