அபராஜித்தா-ஈஸ்வர் திருமண உறுதி வார்த்தை 22.04.2021 அன்று எங்கள் இல்லத்தில் நடைபெற்றது. அபராஜித்தா, அகில இந்திய ஸ்க்வாஷ் -விளையாட்டு சேம்பியன். அப்துல்கலாம் நரேந்திர மோடி ஜெயலலிதா ஆகியோரிடம் பரிசும் ஆசியும் பெற்றவர். உலகின் பெரும்பாலான நாடுகளுக்குச் சென்று ஸ்க்வாஷ் போட்டிகளில் விளையாடியவர். ஈஸ்வர் இங்கிலாந்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்ற இளைஞர்.
அபராஜித்தா ஈரோடு பழனியப்பனின் மகன் வழி பேத்தி. பழனியப்பன் சாதாரண மனிதராக ஈரோட்டிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை வந்து 1964-ல் பிரிசிஷன் அண்ட் சயின்டிபிக் -என்ற ஆங்கில மருந்து தயாரிக்கும் கம்பெனியை துவக்கியவர். பெரும் போட்டிகளுக்கிடையே கடுமையாக உழைத்துப் பெயர் எடுத்தவர். இன்று தமிழ்நாடு முழுவதும் அவரது சீடர்கள் 30 பேருக்கு மேல் மருந்து கம்பெனி துவக்கி நடத்துகிறார்கள்.
திரைப்படத்துறையில் அவருக்கு நிறைய நண்பர்கள் உண்டு. படவிநியோகம் கூட செய்திருக்கிறார். பைனான்ஸ் கூட செய்திருக்கிறார். என்னுடைய நீண்ட கால நண்பர். கடற்கரையில் அதிகாலை சுமார் 20 நண்பர்களோடு ஒரு மணி நேரம் நடை பயிற்சி செய்வார். சனி, ஞாயிறுகளில் அத்தனை நண்பர்களுக்கும் காலை டிபன் வாங்கித் தருவார்.
1993- ஜூன் 2-ந்தேதி அவர் மகன் பாலுவுக்கும், சுமதிக்கும் திருச்செங்கோட்டில் திருமண ஏற்பாடு செய்திருந்தார். நான் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.
ஜூன் 1-ந்தேதி இரவு நீலகிரி எக்ஸ்பிரசில் புறப்பட்டேன். அதே ரயிலில் டிஐஜி சரவணபெருமாள்- மகள் கார்த்தியாயினி- சிவாஜி தம்பி மகன் கிரியும் நானும் பயணம் செய்தோம்.
ஈரோட்டில் இறங்கி,‘சுமங்கலி’ சந்துரு காரில் அங்கிருந்து திருச்செங்கோடு 9 மணிக்குள் சென்று முகூர்த்தத்தில் கலந்து கொள்ள முன்னரே பேசி ஏற்பாடு செய்திருந்தேன்.
‘சுமங்கலி’ சந்துரு 1970-ல் முதன் முதல் என்னை பரணி ஸ்டுடியோ படப்பிடிப்பில் பார்த்தபோது, எடுத்த புகைப்படத்தை இன்னும் பத்திரமாக வைத்துள்ளார். 1977-ல் அவரது சொந்த பட்டு ஜவுளிக்கடை திறப்பு விழாவுக்கு அழைத்தார். திறப்பு விழாவுக்கு செல்வதில்லை என்று மறுத்து விட்டேன். அவருக்கு அதிக கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் பற்றும், பாசமும்தான் அதிகமாகி விட்டது. 50 ஆண்டுகால நட்பு. ரசிகன் நண்பனாகி, உடன் பிறப்பாகி விட்டார். அவருக்கு தெரியாமல் ஈரோட்டுக்குள் நுழைய முடியாது. ஈரோட்டில் அவர் வீட்டைத்தவிர வேறு எங்கும் தங்க முடியாது. கார்த்தி-ரஞ்சனியை மணக்க சிபாரிசு செய்தவர்களில் அவர் முக்கியமானவர். ஈரோட்டில் ராமாயணம், மகாபாரதம் உட்பட எல்லா உரைகளும் அவர் வீட்டிலிருந்து போய் நிகழ்த்தியவை.
இரவு 9.15-க்கு கிளம்பிய நீலகிரி எக்ஸ்பிரஸ் அரக்கோணம், காட்பாடி தாண்டி ஜோலார்பேட்டையில் நின்றது.
1960-களில் ஏ.சி.கம்பார்ட்மெண்ட் அதிகம் இருக்காது. ஓவியக்கல்லூரியில் படித்த நாட்களில் கோவையிலிருந்து சென்னை ரயில் டிக்கெட் 10 ரூபாய் 50 பைசா. மாணவர் கட்டணச் சலுகையின்படி ரூ5.25 கொடுத்து டிக்கெட் வாங்கி 4 அணா சீட் ரிசர்வேஷன் செய்து விடியும் வரை உட்கார்ந்து கொண்டே பயணம் செய்வேன். பர்த்துக்கு நம்மால் செலவு செய்ய முடியாது.
அதிகாலை 2 மணி 4 மணியளவில் ரயில் எந்த ஸ்டேஷனில் நின்றாலும் சாயா, சாயாஆ, காபிஈஈ.. என்று பிளாட்பாரத்தில் குரல் கேட்கும்.
இப்போது ஏ/சி பெட்டிகுள்ளேயே வெஜிடபிள் சாண்ட்விச், முட்டை சாண்ட்விச், வெஜிடபிள் பிரியாணி, ஆம்லட், குளிர்பானங்கள், காபி, டீ எல்லாம் தருகிறார்கள்.
எனவே பிளாட்பாரத்தில் அன்று சத்தம் ஏதும் எழவில்லை. 1958-லிருந்து ரயில் பயணம் செல்கிறேன். ‘பர்த்’தில் ஏறிப்படுத்தாலும் ஆழ்ந்த தூக்கம் எனக்கு வராது. கண்ணை மூடிக் கொண்டே ரயில் நிற்கும் போதெல்லாம், இது அரக்கோணம், இது காட்பாடி என்று ஊகித்துக் கொள்வேன்.
இப்போது ஆழ் மனதில் ஜோலார்பேட்டை என்று சொல்லியது. 10 நிமிடத்தில் ரயில் புறப்பட வேண்டும். ஆனால்
ஏனோ புறப்படவில்லை. கதவைத் திறந்து பிளாட்பாரத்தில் இறங்கிப் பார்த்தேன். ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தது. கார்டுவிடம் என்ன ஆயிற்று என்று கேட்டேன். சாமல்பட்டி ரயில் நிலையத்தில் பம்பாய்-கொச்சி குர்லா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு இந்த பிளாட்பாரத்தில் இருந்த கூட்ஸ் ரயில் பெட்டிகள் மீது மோத மிகப் பெரிய விபத்து ஏற்பட்டு விட்டது. அதே இடத்தில் 23 பேர் மரணமடைந்து விட்டனர். என்ற அதிர்ச்சியான செய்தியைச் சொன்னார்.
ஏன் நம் ரயில் நிற்கிறது என்று கேட்டேன். இந்த தண்டவாளத்தில்தான் விபத்து. டிராக்கில் கிடக்கும் பெட்டிகளை எல்லாம் கிரேன் வைத்து தூக்கி அப்புறப்படுத்தினால்தான் ரயில்கள் அந்தப் பாதையில் போக முடியும். உடனடியாக நடக்கிற காரியமில்லை. ஒரு நாள், இரண்டு நாள் கூட ஆகலாம் என்றார்.
திருச்செங்கோடு திருமணத்திற்கு இனி எப்படி போவது? பதட்டமாகி விட்டது. நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்த டிஐஜி சரவணப்பெருமாளை எழுப்பி நடந்ததைச் சொன்னேன். கீழே வந்து ரயிலைப் பார்த்தார்.
புகை கக்கி, விசில் அடித்து, சக்கரங்கள் வழுக்கிச் சுழன்று புறப்பட எத்தனிக்கும் எஞ்சினுடன், ரயில் மலைப்பாம்பு ஒன்று செத்துக் கிடப்பது போல் ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருந்தது.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து திருப்பத்தூர் ஸ்டேஷனுக்கு போன் போட்டார். அது வேலை செய்யவில்லை.
‘என்ன செய்யலாம்?’ என்றார்.
‘என்னை கணக்கில் வைக்காதீங்க. நான் கட்ட வண்டி, குதிரை வண்டி, சைக்கிள் கிடைச்சாக்கூட புறப்பட்டு போயிடுவேன். நீங்க பெரிய அதிகாரி அப்படியெல்லாம் போக முடியாது!’ என்றேன்.
ஒரு வழியாக அதிகாலை 4.30-க்கு திருப்பத்தூர் போலீஸ் ஸ்டேஷன் லைன் கிடைக்க, அங்கிருந்து ஒரு ஜீப் வந்து எங்களை ஏற்றிப் போனது. அரை மணி நேரத்தில் திருப்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்திருந்தோம்.
இங்கிருந்து சேலம் 10 கிலோமீட்டர். சேலம் செல்ல எந்த வாகனமும் கிடைப்பதாகத் தெரியவில்லை. இருந்த டாக்ஸி, ஆட்டோ, குதிரை வண்டிகள் எல்லாம் விபத்து நடந்த இடத்தில் அடிபட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போக சாமல்பட்டி போய் விட்டன. கடைசிக்கு பஸ் உள்ளே இடம் கிடைக்காவிட்டாலும் மேலே ஏறி -லக்கேஜ் வைக்கும் கேரியரில் உட்கார்ந்தாவது சேலம் போயே தீருவது என்று முடிவு செய்து பஸ்ஸூக்கு காத்திருந்தேன்.
எதிர்பாராமல் ஒரு டப்பா டாக்ஸி கிடைத்தது. சரவணப் பெருமாள். அவர் மகள் இருவருடன் நானும் ஏறிக் கொண்டேன்.
எந்த நேரத்திலும் காரை விட்டு சக்கரங்கள் கழன்று ஓடி விடுமோ என்ற பயத்துடன் 20 கிலோமீட்டர் வேகத்தில் ஊறிக் கொண்டே சென்ற டாக்ஸியில் ஒரு வழியாக காலை 10.30க்கு சேலம் சென்றடைந்தோம்.
சேலத்தில் சரவணப்பெருமாளின் நண்பர் பரமசிவம் வீட்டிற்கு சென்று குளியல் முடித்து தயாரானோம். பரமசிவம் துணைவியார், பொங்கல் வடை, பூரிக்கிழங்கு என்று சிற்றுண்டி வகை, வகையாகச் செய்து பரிமாறி அன்பினால் திக்குமுக்காட செய்து விட்டார்.
அவரே தன் சொந்தக்காரைக் கொடுத்து திருச்செங்கோடு அனுப்பி வைத்தார். இது என்பக்கக் கதை. ஜோலார்பேட்டையில் ரயில் நின்று போன விஷயம் எப்படியோ சுமங்கலி சந்துருவுக்கு தெரிந்து விட்டது. அகாலநேரம் என்றும் பாராமல் இரவு 2 மணிக்கு சென்னைக்கு போன் செய்து என் மனைவியை எழுப்பி, ரயில் நின்று விட்டது. அதனால் மாமா சென்னை திரும்பிக் கொண்டிருப்பார் என்று சொல்லியிருக்கிறார்.
அதற்கு என் மனைவி -உங்க மாமாவைப் பத்தி நீங்க தெரிஞ்சுகிட்டது அவ்வளவுதான். நான் அந்த மனுஷங்கூட கிட்டத்தட்ட 20 வருஷமா வாழ்ந்துகிட்டிருக்கேன். அவராவது திரும்பி வர்றதாவது. எறும்பு இருக்கே அது சின்ன உருவம்தான். ஆனா அதோட சுறு, சுறுப்பு. லட்சியம், மனுஷங்க எல்லோர்கிட்டவும் இருக்காது. ஏதாவது ஒரு சின்ன பொருளை தூக்கிட்டு, சாரி, சாரியா எறும்புகள் ஒண்ணு பின்னாடி ஒண்ணு வரிசையா போகும். எதிர்தரப்பில் தண்ணீர் சிந்தியிருந்தா அதை சுத்திப்போகும். மரக்கட்டை குறுக்கால கிடந்தா, அந்த மரக்கட்டை மேல ஏறிப் போகும். நெருப்பு எரிஞ்சிட்டிருந்தா- எச்சரிக்கையோட தூரமாகவே சுத்திப் போகும். அதாவது தான்
எங்கே போய்ச்சேரணுமோ அதுக்குத் தடையா எது இருந்தாலும், அதையெல்லாம் சமாளிச்சு நினைச்ச எடத்துக்குப் போயே தீரும். அந்த எறும்பு மாதிரி உங்க மாமா. அவர் பிளான் பண்ணி கிளம்பீட்டா, யாரும் அதைத் தடுக்கவே முடியாது. கொஞ்சம் லேட்டானாலும் திருச்செங்கோடு கல்யாணத்துக்கு போயே தீருவாரே தவிர அவராவது திரும்பி வர்றதாவது - என்று சொல்லியிருக்கிறார்.
சரி, பழனியப்பன் நமக்கும் அழைப்பிதழ் கொடுத்திருக்காரு. எப்படியும் போகணும்ன்னு சந்துரு திருச்செங்கோடு சென்று முகூர்த்தத்தில் கலந்து கொண்டு விட்டு, நண்பர்களுடன் அளாவளாவி விட்டு பகல் உணவை முடித்துப் போக சாவதானமாக உட்கார்ந்திருந்த போது எங்கள் கார் கல்யாண மண்டப வாசலில்...
‘அக்கா சொன்னது சரியாப் போச்சு!’ என்று என்னைப் பார்த்தவுடன் சிரித்துக் கொண்டே சொன்னார் சந்துரு. மணமக்களை வாழ்த்தி உணவு முடித்து, சந்துரு காரில் ஈரோடு சென்று சூர்யாவினுடைய நண்பர் ரவி-அமுதாவை திருமண மண்டபத்தில் வாழ்த்தி விட்டு சந்துரு காரை அவர் மகன் சுரேஷ் ஓட்ட கோபி புறப்பட்டோம்.
எனக்குத் திருமணமானதிலிருந்து புஞ்சைப் புளியம்பட்டியில் நிரந்தர நண்பர்களாக இருந்தவர்கள் குப்புசாமி முதலியார், லிங்கப்பகவண்டர், பழனிசாமி, பொன்னுசாமி நாயுடு, டாக்டர் துரைசாமி ஆகியோர். இன்று இரவு மாமியார் வீட்டில் தங்குகிறேன் என்றால் மாலை 5 மணியிலிருந்து, இரவு 10 வரை அரட்டைக்கச்சேரி அரசியல், இலக்கியம், ஆன்மீகம் என்று வாதம் எதிர் வாதம் சூடாக நடக்கும். இதில் குப்புசாமி அ்ண்ணன், பாசம் மிக்கவர் துக்ளக், ஆனந்தவிகடன், இந்தியன் எக்ஸ்பிரஸ் எல்லாம் படிப்பவர்.
என் மீது பாசம் அல்ல பக்தி வைத்திருப்பவர். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ‘பைபாஸ் சர்ஜரி’ செய்ய அவர் வந்திருந்தபோது சிவகுமாரைப் பார்க்காமல் ஆபரேஷன் தியேட்டருக்குள் வர மாட்டேன் என்று குழந்தை மாதிரி பிடிவாதம் பிடித்தாராம்.
படப்பிடிப்பிலிருந்து உடனே என்னால் செல்ல முடியவில்லை. எப்படியோ சமாதானம் செய்து, சர்ஜரி செய்து முடித்து விட்டார்கள். இரவு 10 மணியானாலும், அவரைப் பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நான் போகும்போது உண்மையிலேயே இரவு 10 மணி ஆகி விட்டது. என்னைப் பார்த்ததும் -உணர்ச்சி மேலிட்டு குமுறி அழ ஆரம்பித்து விட்டார். ரத்தம் நரம்புகள் வழியே சீறிப்பாய்வதை அவர் கைகளைப் பிடித்தபோது உணர்ந்தேன்.
அந்த மனிதர் மகன் அருணாசலம்-மகேஸ்வரி திருமணம் கோபி முத்துமகாலில் அன்று நடைபெற்றது. காரிலிருந்து நான் இறங்குவதைப் பார்த்ததும் தன் உடல்நலத்தைப் பற்றிக்கூட கவலைப்படாமல் காரை நோக்கி ஓடி வந்தார். கட்டி அணைத்து கூட்டிப் போய் மணமக்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டு சாப்பிட்ட பின்னரே அனுப்பி வைத்தார்.
‘சுமங்கலி’ சந்துருவின் அப்பாவும் ஈரோட்டிலிருந்து சென்னைக்கு 40 ஆண்டுகளுக்கு மேல். வேன்களில் பால்டின்களை ஏற்றி அனுப்பி பால் வியாபாரம் செய்தவர்.
கொங்கு மக்கள் சுயதொழிலை நம்பி வாழ்பவர்கள் அங்கு அரசியல், தலைவன், தொண்டன், ஜால்ரா இவை அதிகம் எடுபடாது.
உடம்பில் பலம் இருக்கும் வரை ஓடாய்த் தேய்ந்து உழைத்து குடும்பத்தை தூக்கி விட்டு, ஓய்வெடுக்கும் போது பால்ய நண்பர்கள் நாலு பேர் நட்பும் பழங்கதை பேச நேரமும் கிடைத்து விட்டால் கடைசி காலம் எங்களைப் போன்றோருக்கு சொர்க்கம்தான். (பின் குறிப்பு: ஈரோடு பழனியப்பனும், அவர் மகன் -திருச்செங்கோட்டில். திருமணம் செய்த பாலுவும் இப்பபோது உயிருடன் இல்லை)
----
அனுபவிப்போம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago